கலைக்களஞ்சியம்/அதிர்ச்சிச் சிகிச்சை
அதிர்ச்சிச் சிகிச்சை (Shock Treatment) அதிர்ச்சியை உண்டாக்கிச் சில பைத்தியக் கோளாறுகளைக் குணப்படுத்தலாம் என்று அண்மையில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதிர்ச்சியை உண்டாக்க மருந்துகளைப் பயன்படுத்துவதுண்டு. ஆனால் மின்சாரத்தினால் விளைவிக்கும் அதிர்ச்சியே மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
அதிர்ச்சிச் சிகிச்சை முறையை முதன் முதலில் தொடங்கியபொழுது இன்சுலினைப் பயன்படுத்தினர். ஆனால் அதிர்ச்சி உண்டாக்குவதற்கு வேண்டிய அளவு இன்சுலினைப் பயன்படுத்தியபோது சில நோயாளிகள் இறந்துவிட்டனர். மெட்ரசால் (Metrazol )என்னும் மருந்தைக் கொடுப்பதால் மரணம் ஏற்படுவது குறைந்தாலும், கடுமையான இழுப்பு (Fits) உண்டாகிறது. இக்காரணங்களால் இப்போது மின்சாரத்தையே அதிர்ச்சிச் சிகிச்சைக்குப் பயன் படுத்துகிறார்கள்.இதனால் எவ்வித ஆபத்தும் உண்டாவதில்லை. மின்சார அதிர்ச்சி உண்டாகும்போது நோயாளி உடனே நினைவிழந்துவிடுவார். சிறிது நேரம் இழுப்புக் காணும். அதன்பின் விழிக்கும்போது சிகிச்சை செய்த விஷயம் நினைவுக்குவராது. அப்போது உளநோய் மருத்துவர் அவருடன் பேசி அவருடைய மனக்கோளாற்றை நீக்கிவிடுவார்.மின்சார அதிர்ச்சிக்குப் பிறகு செய்யும் உளச் சிகிச்சையே மிகுந்த பயன் தருவதாயிருக்கிறது.