கலைக்களஞ்சியம்/அதிர்வு
அதிர்வு (Vibration) : பௌதிகத்தில் அதிர்வு என்பது முன்னும் பின்னும் நிகழும் இயக்கத்தைக் குறிக்கும். குறிப்பிட்ட ஆவர்த்தத்தில் மாறும் வேறுவகைப் பௌதிக அளவுகளையும் அதிர்வு என்றே குறிப்பார்கள். மின்சார அல்லது காந்தப் புலத்தில் சீரான மாறுதல்கள் குறிப்பிட்டதொரு காலத்தில் திரும்பத் திரும்ப நிகழ்ந்தால், அவற்றை அதிர்வு என்றே குறிப்பது வழக்கம். மீள்சக்தியுள்ள பொருளொன்று விகாரமடைந்தால் அது திரும்பவும் தன் பழைய வடிவத்தை அடைய முயலும்போது அதிர்வு நிகழ்கிறது. அதன் ஒவ்வொரு துகளும் தனது சராசரி நிலையிலிருந்து பெயர்ந்திருக்கும். ஒவ்வொரு கணத்திலும் இப்பெயர்ச்சியின் அளவு காலத்தைச் சார்ந்திருக்கும். துகளின் உச்சப் பெயர்ச்சி அதிர்வின் வீச்சு எனப்படும்.
ஓர் ஊடகத்தில் ஓரிடத்தில் இத்தகைய அதிர்வு நிகழும்போது அதை அவ்வூடகம் மற்ற இடங்களுக்கும் கடத்த வல்லதாயின் அலை இயக்கம் தோன்றும்.
அதிர்வுகளை இயற்கை அதிர்வுகள் எனவும், செயற்கை அதிர்வுகள் எனவும் இருவகையாகப் பிரிக்கலாம். பூகம்பம் இயற்கை அதிர்விற்கு ஓர் உதாரணமாகும். சுழலும் எந்திரங்களால் நிகழும் அதிர்வு செயற்கையானது. செயற்கை அதிர்வுகளால் பெரும்பாலும் தொல்லை நேர்ந்தாலும் சில சமயங்களில் இவை மருத்துவம் போன்ற துறைகளில் பயனாவது முண்டு.