கலைக்களஞ்சியம்/அதிவீரராம பாண்டியர்

விக்கிமூலம் இலிருந்து

அதிவீரராம பாண்டியர் : ஏறக்குறைய 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையில் மதுரையில் ஆட்சி செலுத்தி வந்த பாண்டியர் பெருமை அந்நூற்றாண்டின் பிற்பகுதியில் சிதைவுற்றது. டெல்லி யரசரின் தளகர்த்தர் மாலிக்காபரின் படையெடுப்பாலும், விஜயநகர வேந்தரின் தளபதி கம்பண வுடையாரின் போர்களினாலும், பாண்டியர் குடி சிதறுண்டது. அக்குடியினரின் ஒரு கிளையினர் திருநெல்வேலிப் பகுதியைத் தம் வசப்படுத்தித் தென் காசியில் இருந்துகொண்டு அதனை ஆண்டு வந்தனர்.

இக்கிளையினர், மதுரையில் ஆண்டுவந்த விஜயநகர நாயக்க மன்னர்களுக்கு அடங்கியிருந்ததாகத் தெரிகிறது. இவர் களுள் ஒருவரே அதிவீரராம பாண்டியர். இவர், “கோ ஜடிலவர்மன் திரிபுவன சக்கரவர்த்தி கோனேரின்மை கொண்டான் திருநெல்வேலிப் பெருமாள் வீரவெண்பா மாலையான் தன்மப்பெருமாள குலசேகரதேவர் நந்தனாரான அழகம் பெருமாள் அதிவீரராமரான ஸ்ரீவல்லபதேவர்” என்று கல்வெட்டொன்றில் அழைக்கப்படுகிறார். ஸ்ரீவல்லபன் என்னும் பெயர், சீவலன் என்றும் சிதைந்து வருகிறது. இவரைப் பற்றிச் சீலவமாறன் கதை என்ற ஒரு நூலும் உண்டு. இவருக்கு இராமன், வீரமாறன் என்ற வேறு பெயர்களும் உண்டு.

வீரவெண்பாமாலை சூடிய தந்தையின் மைந்தரான இவ்வரசர், புலவரைப் போற்றியும், தாமே கவிபாடும் திறமை பெற்றும் விளங்கினார். சேறை ஆசு கவிராசர், திருவண்ணாமலைப் புலவர் சிதம்பரநாதர், புதுக்கோட்டை நைடதம் இராமகிருஷ்ணர் முதலியோர் இவரால் ஆதரிக்கப்பெற்றோர். ஆசு கவிராச சிங்கம் என்ற சேறை ஆசுகவிராசரைக் காளத்திநாதர் கட்டளைக் கலித்துறை என்ற நூலைப் பாடும்படி செய்வித்தவர் இவரே என்றும் கூறுவர். இவர்களே யல்லாமல் சிவந்த கவிராசர் என்ற ஒரு புலவரும் இவருடைய அவையை அலங்கரித்தனர்.

இவர் சிவ பக்தியிலும் சிறந்திருந்தார். தென்காசிப் பெரிய கோயிற்கு மேல்பால் இவர் தம் தந்தை பெயரால் ஒரு சிவாலயத்தைக் கட்டினார். இதனருகில் ஒரு திருமால் கோயிலும் இவரால் கட்டப்பட்டது. இதனால் இவருடைய பொது நோக்கு விளங்கும். இவர் 1564 முதல் 1603வரை அரசுகட்டிலில் இருந்தார். இவருக்குப் பின் பட்டமெய்தியவர் இவருடைய பெரிய தந்தையின் குமாரரான வரதுங்க பாண்டியராவார்.

அதிவீரராம பாண்டியர் இயற்றியனவாகக் கூறப்படும் நூல்கள், நைடதம், காசிக் காண்டம், கூர்ம புராணம், கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, கருவை வெண்பாவந்தாதி, கருவைக்கலித்துறையந்தாதி, வெற்றிவேற்கை என்பனவாகும். இவற்றையன்றிக் கொக்கோகம் என்ற காம நூலையும், இலிங்க புராணம் என்றதையும் இவர் பாடினர் என்பர்.

நைடதம் : 'நைடதம் புலவர்க் கௌடதம்' என்ற ஒரு பழமொழி உண்டு. தமிழ் கற்கப் புகுவோர் தாம் கற்கவேண்டிய நூல்களுள் நைடதம் ஒன்றாக இருக்கவேண்டுமென்றிருந்த காலமொன்றிருந்தது. இந்நூல் இருபத்தெட்டுப் படலங்களையும், 1172 விருத்தங்களையும் கொண்டுள்ளது. வடமொழியிலே ஸ்ரீ ஹர்ஷர் என்றவர் பாடிய நைஷதம் என்ற நூலொன்று உண்டு. அந்நூல் நளனுடைய கதையை முழுதும் பெற்றதில்லை. அம்மொழியிலேயே நளோதயம் என்ற ஒரு நூலும் உண்டு. நளனுடைய வரலாறு மகாபாரதத்திலும் உள்ளது. தமிழில், 'வெண்பாவிற் புகழேந்தி ' என்று பாராட்டப்படுகின்ற புகழேந்திப் புலவர் நளவெண்பா என்ற நூலைப் பாடியிருக்கிறார். இவற்றையெல்லாம் ஆதாரமாகக் கொண்டு, அதிவீரராமர் தம் நூலைப் பாடினார். தமிழிலுள்ள சிந்தாமணி, கம்ப ராமாயணம் போன்ற பெரு நூல்களையெல்லாம் இவர் நன்கு கற்றவராதலின், அந்நூல்களிலுள்ள கருத்துக்களும் உவமைகளும் சுவைகளும் தம் நூலுள் அமையும்படி இவர் தம் காவியத்தை யாத்தார்.

இந்நூல் மிகுந்த பொருட்செறிவும் சுவையமைதியும் உடையது. இயற்கைக் காட்சிகளும், பாத்திரங்களின் மனோபாவங்களும் மிகச் சுவைபட இதில் அமைந்துள்ளன. எனினும், இந்நூலிலுள்ள தொடக்கம்போல் இடையும் முடிவுமில்லாதது ஒரு பெருங்குறையாகும். இது நூற்குற்றங்கள் பத்தனுள் சென்று தேய்ந்திறுதல் என்று கூறப்படும். இக்குறை யிருப்பினும், நைடதம் நம் தமிழ் நூல்களுள் மிகச் சிறந்தவற்றுள் ஒன்றாக மதிக்கப்படும் பெருமை வாய்ந்திருக்கிறது.

கூர்ம புராணம் : இது வடமொழியிலுள்ள பதினெண் புராணங்களுள் ஒன்று. இது பூர்வ காண்டம், உத்தரகாண்டம் என்ற இரு பிரிவுகளை யுடையது. இவ்விரு காண்டங்களையும், அவற்றின் 96 அத்தியாயங்கள் உட்படத் தமிழில் மொழிபெயர்த்து, 3,717 திருவிருத்தங்களில் ஆசிரியர் நூலை அமைத்துள்ளார். பூர்வ பாகம் உலகத்தோற்றம், மூர்த்திகளின் இயல்பு, சிவ புராணம், ஸ்ரீ ராம சரிதம், ஸ்ரீ கிருஷ்ணன் வரலாறு, உலக நிலை முதலியவற்றையும், உத்தரபாகம், இல்லறம், கருமங்கள், சிவ பூசை முதலிய பலவற்றையும் உரைப்பன. பாடல்கள் எளிமையும், ஓசை யினீமையும், ஓட்டமும் பெற்று விளங்குகின்றன.

காசிக்காண்டம் : இது கங்கைக் கரையிலுள்ள காசியின் பெருமையை உரைப்பது. பதினெண் புரானங்களுட் சிறந்ததான ஸ்காந்த புராணத்திலுள்ள சங்கர சங்கிதைக்குட்பட்ட காண்டங்களுள் ஒன்றான காசிக் காண்டத்தின் மொழிபெயர்ப்பாகவே இஃது அமைந்துள்ளது. இதுவும் பூர்வகாண்டம், உத்தரகாண்டம் என்ற இரு பெரும் பிரிவுகளையும், 100 அத்தியாயங்களையும், 2.525 திருவிருத்தங்களையும் கொண்டுள்ளது. இது மொழிபெயர்ப்பு நூலானதால், ஆசிரியர் தம் கற்பனைகளை இங்கே அமைக்கவில்லை. செய்யுட்கள் சொல் இனிமையும் ஓசையும் பெற்றிருக்கின்றன.

கருவை நூல்கள் : கரிவலம்வந்தநல்லூர் என்றது கருவை என்று மருவி வழங்கி வருகிறது. இங்கு எழுந்தருளியுள்ள சிவபிரானின் திருநாமங்கள், களவீசன், முகலிங்கன், பால்வண்ணன் என்றுபலவாறுகூறப்படுகின்றன. பதிற்றுப்பத்தந்தாதி, வெண்பாவந்தாதி, கலித்துறையந்தாதி என்ற மூன்று நூல்களை இவ்வூர்க்கு ஆசிரியர் யாத்துள்ளனர். பதிற்றுப்பத்தந்தாதி, அதன் எளிமையாலும், பக்திச் செறிவாலும் திருவாசகத்தைப் போல் மனத்தை உருக்குவதாக அமைந்திருப்பதால் அதனைக் குட்டித் திருவாசகம் என்பர். மாணிக்க வாசக சுவாமிகள் தம் அனுபவங்களையெல்லாம் தம் திருவாசகத்தில் செறித்திருப்பதுபோல, நம் ஆசிரியரும் இக்கருவை நூலிற் செறித்திருக்கிறார். இந்நூல்களில் சிவபிரானைப் பற்றிய பல கதைகளும், கருவைத் தலச் சிறப்புக்களும், வழிபாட்டு முறைகளும் காட்டப்பெற்றிருக்கின்றன. தம்முடைய பக்தியையும் சிவபிரானிடம் தாம் செய்யும் அடிமைத்திறத்தையும் இவற்றில் அவர் அமைத்திருக்கிறார். பாடல்கள் மிக எளியவை.

நறுந்தொகை அல்லது வெற்றிவேற்கை ஒரு நீதி நூல்; 136 அடிகளையுடையது. இது 9 பகுதிகளையுடையதாய். உலகத்தார் அறிய வேண்டும் இன்றியமையா நீதிகளை, மிக எளிய சொற்களில், படிப்பவர் மனத்திலே ஊன்றுமாறு செறிவுடன் யாக்கப்பட்டுள்ளது. இந்நூலும், கொக்கோகம், இலிங்க புராணம் ஆகிய நூல்களும் இவருடையன என்று கூறுவாரும், பிறருடையன எனக் கூறுவாருமாக ஆராய்ச்சியாளர் இருதிறத்தினராய் இருக்கின்றனர். ரா. வி.