உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அத்தர்

விக்கிமூலம் இலிருந்து

அத்தர் பூவிலிருந்து எடுக்கும் வாசனைப் பொருளுக்குப் பொதுப் பெயர் ; ரோஜாப் பூவிலிருந்து வாலை வடித்து எடுக்கும் எண்ணெய்க்குத்தான் இந்தப் பெயர் சிறப்பாக வழங்குவது. அத்தர் பூசவும் தெளிக்கவும் குளிக்கவும் உதவும்; பலவித வாசனைப் பண்டங்கள் செய்வதில் பயன்படுகிறது. இது பல்கேரியா, பிரான்சு, சிரியா, ஈரான், துருக்கி, இந்தியா முதலிய நாடுகளில் செய்யப்படுகிறது. பல்கேரியாவில் சோபியா நகரத்திலிருந்து நூறு மைலுக்கு அப்பால் உள்ள ஓர் இடம் ரோஜாப் பள்ளத்தாக்கு எனப்படும். அதில் இரண்டு லட்சம்பேர் ரோஜா இதழ்களைக் கொய்வதற்கும் ஏற்றுமதி செய்வதற்கும் வேலை செய்கிறார்கள். ரோஜா இதழைப் பெரிய தொட்டிகளில் நீரில் போட்டுக் காய்ச்சி வாலை வடிப்பார்கள். பல தடவை வடித்த ஆவி நீரை ஒன்று சேர்த்து இரண்டாம் முறை வடிப்பார்கள். அப்போது அத்தர் எண்ணெய் போல மிதக்கும். நீரின் மேலே மிதக்கும் எண்ணெயை மேலோடு வடித்தெடுத்துக் கண்ணாடிக் குடுவைகளில் சேர்த்து வைப்பார்கள். சுமார் 340 ரோஜாவிலிருந்து ஒரு ராத்தல் இதழ் கிடைக்கும். இதில் எத்தனையோ ஆயிரம் இதழ்கள் இருக்கும். அத்தனை ஆயிரம் இதழிலிருந்தும் இரண்டு துளி அத்தரே கிடைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அத்தர்&oldid=1455866" இலிருந்து மீள்விக்கப்பட்டது