கலைக்களஞ்சியம்/அந்தகக்கவி வீரராகவ முதலியார்

விக்கிமூலம் இலிருந்து

அந்தகக்கவி வீரராகவ முதலியார் : இவர் பிறவியிலேயே கண்ணிழந்தவர் ; காஞ்சிபுரத்துக்கருகிலுள்ள பூதூரிலே சைவ வேளாளர் மரபில் தோன்றிய வடுகநாத முதலியார் என்பவரின் மகனார்; காஞ்சியிலே கலை பயின்றவர். இவருக்கு யாழ்ப் பயிற்சியும் உண்டுபோலும். இவர் நினைவாற்றல் மிக்கவர் என்பதைக் 'கவிவீர ராகவன் கச்சியிலே தன் நெஞ்சம் ஏடெனக் கற்றான் ஒருமுத் தமிழையுமே' எனப் பரராச சிங்கன் என்னும் அரசன் புகழ்வதால் அறியலாம். இவர் சிறந்த கவிஞர். இவர் செய்யுட்கள் சொற்சுவையும் பொருட்சுவையும் உடையவை.

இவர் சோழ நாடு சுற்றிய பின்னர், ஈழ நாட்டிற்குச் சென்றார். அப்போது அங்கே பரராச சிங்கன் அரசாண்டு வந்தான். அவன் இவர் புலமையைப் பாராட்டி யானையும் வள நாடும் பொன்னும் அளித்தான்.

இவர் பாடிய நூல்கள் : திருவாரூர் உலா, சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ், திருக்கழுக்குன்றப் புராணம், சேயூர்க் கலம்பகம், சந்திரவாணன் கோவை, கயத்தாற்றரசன் உலா. இவர், மற்றும் சீட்டுக் கவிகளும் பலருக்கு விடுத்துள்ளார்; பல தனிப் பாடல்களும் பாடியுள்ளார். இவர் காலம் பதினாறாம் நூற்றாண்டென்பர்.

இவரியற்றிய நூல்களில் திருவாரூர் உலா நிறைந்த பொருளும் இனிமையும் உடையது. சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ் சொற்சுவை மிகுந்தது.

திருவாரூர் உலா திருவாரூர்ப் பெருமான் திருவிளையாடல், திருவாரூர் வரலாறு முதலியவை கூறப்பட்டிருப்பதுடன், மடக்கு, சிலேடை ஆகிய சொல்லணிகளும், தொனிப் பொருள்கள் போன்ற சிறப்புக்களும் உடையது ; இனிய நடையினது; பெண்களின் பருவ இயல்புகள் சுவை பெறக் கூறப்படுவது.