கலைக்களஞ்சியம்/அந்தி ஒளி
Appearance
அந்தி ஒளி சூரியனது மறைவிற்குப்பின் காணப்படும் ஒளி. வைகறையிலும் சூரியன் தோன்றுமுன் இத்தகைய ஒளி இருக்கும். காற்று மண்டலத்தின் மேற்பகுதிகளில் சூரிய ஒளி பிரதிபலித்துப் புவியை அடைவதால் இவ்விளைவு தோன்றுகிறது. காற்று மண்டலத்தில் நிகழும் ஒளிக்கோட்டமும், ஒளிச்சிதறலும் இதற்கு ஓரளவு காரணமாகின்றன. சூரியன் அடிவானத்திற்கு 18° கீழே செல்லும்வரை அதன் ஒளியை இவ்வகைகளில் காற்று மண்டலம் புவிக்கு அனுப்புகிறது. ஆகையால் அந்தி ஒளி உள்ள நேரம் அட்சரேகையையும் பருவத்தையும் ஒட்டி வேறுபடும். பூமத்தியரேகைப் பகுதிகளில் இது ஏறக்குறைய ஒரு மணி நேரம் இருக்கும். உயர்ந்த அட்சரேகைப் பகுதிகளில் இது அதிக நேரம் இருக்கும். துருவ மண்டலத்தில் கோடையில் சூரியன் அடிவானத்தினின்று 18°-க்குக் கீழே செல்லாமலே இருக்கும் இடங்களில் இரவு முழுவதும் அந்தி ஒளி இருக்கும்.