உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அனுன்சியா

விக்கிமூலம் இலிருந்து

அனுன்சியா (Annunzio 1863-1938) சிறந்த இத்தாலியக் கவிஞரும், நாவலாசிரியரும். போர் வீரருமாவர். அவர் பள்ளியில் படிக்கும்போதே தாம் எழுதிய பாடல்களைத் தொகுத்து வெளியிட்டார். அதைத் தொடர்ந்து வெளியிட்ட பியாசீர் என்னும் நாவல் மக்களிடம் பெருமதிப்புப் பெறலாயிற்று. அவர் 1893-ல் வெளியிட்ட பாடல்களே அவருடைய பாடல்களுள் மிகச் சிறந்தன. இதே காலத்தில் நாடகங்களும் இயற்றி வந்தார். இவை சிறந்தனவாக இருப்பினும் உயர்ந்த சோக நாடகங்கள் என்று கூறுவதற்கில்லை. முதல் உலக யுத்தம் எழுந்தபோது அவர் செய்த சொற்பொழிவுகள் மக்களிடை நாட்டுப்பற்றைப் பெருக்கெடுத்தோடுமாறு செய்தன. அதுவரை சுகபோகங்களில் மூழ்கி நின்ற கவிஞர் போரின்போது சேனையில் சேர்ந்து, இறுதியில் விமானியாகி வியத்தகு சேவை செய்தார். அப்போது ஒரு கண் இழந்தார். அவருடைய போர்ப்பாடல்கள் மிகுந்த அழகு வாய்ந்தன என்பர். 1924-ல் அவர் 'இளவரசர்' பட்டம் பெற்றார். பாசிச இயக்கத்தை ஆதரித்தார்.