கலைக்களஞ்சியம்/அப்துர் ரசாக்
அப்துர் ரசாக் விஜயநகர இராச்சியத்தை இரண்டாம் தேவராயர் ஆண்ட காலத்தில், பாரசீகத்திலிருந்து இந்தியாவுக்கு அரச தூதராகக் கி.பி. 1442-ல் வந்தவர்; கள்ளிக்கோட்டையில் 1442-43-ல் ஆறு மாத காலம் அந்நாட்டுத் தலைவரான ஜாமொரினின் ஆதரவில் தங்கி இருந்தார். பிறகு தேவராயர் வேண்டுகோளுக்கிணங்கி, ஜாமொரின் இவரை விஜயநகரத்திற்கு அனுப்பினார்.
இவர் விஜயநகரத்தில் 1443-ல் சுமார் ஏழு மாதம் இருந்தார்; அதைப் பற்றிப் பல அரிய குறிப்புக்கள் எழுதியுள்ளார். அவற்றிலிருந்து அந்த இராச்சியம் கிருஷ்ணா நதியிலிருந்து குமரி வரையில் பரவி யிருந்ததெனவும், அந்நாட்டு மன்னரிடம் ஆயிரத்துக்கு மேற்பட்ட யானைகளும், பதினொரு லட்சம் வீரர்களும் கொண்ட பெரும்படை இருந்ததென்றும் தெரிகிறது. “தலை நகரம் இணையற்றது. மிகுந்த புகழையும் பெருமையையும் இந்நகர் பெற்றுள்ளது ; ஏழு அரண்களை உடையது. ஏழாவது கோட்டைக்குள் அரசனுடைய அரண்மனை அமைந்திருக்கிறது. அதை அடுத்து நான்கு பெரிய கடை வீதிகளும், பல மாளிகைளும் விளங்குகின்றன. ஊரெங்கும் ரோஜாப்பூ விற்கப்படுகிறது. இப்பூவின் மீது இவ்வூர் மக்களுக்கு மிகுந்த ஆசையுண்டு” என்று இவர் குறிப்பிட்டிருக்கிறார். எஸ். ஆர். பா.