உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அமினோ - அமிலங்கள்

விக்கிமூலம் இலிருந்து

அமினோ - அமிலங்கள் : ஒரு கார்பாக்சில் தொகுதியையும், ஒரு அமினோ தொகுதியையும் கொண்ட கூட்டுக்கள் அமினோ - அமிலங்கள் எனப்படும். புரோட்டீன்களை அமிலங்களாலோ, காரங்களாலோ, என்சைம்களாலோ நீர் முறித்தால் அமினோ அமிலங்கள் தோன்றும். தாவரங்களின் உயிரணுக்கள் எளிய பொருள்களிலிருந்து இவற்றைத் தயாரிக்கின்றன. அமினோ அமிலங்களிலிருந்து புரோட்டீன்கள் தோன்றுகின்றன. இதனால் இவை உயிர்ப்பொருள் ரசாயனத்தில் முக்கியமானவை. இதுவரை இருபத்து மூன்று அமினோ அமிலங்கள் பெறப்பட்டுள்ளன. இவற்றைத் தொகுப்பு முறைகளாலும் தயாரிக்கலாம்.

அமினோ அமிலங்களைப் பின்வரும் வகைகளாகப் பகுக்கலாம்:

1. அலிபாடிக அமினோ அமிலங்கள் : கிளைசீன் (Glycine), அலனீன் (Alanine), லைசீன் (Lycine), குளுடமிக அமிலம் (Glutamic Acid) , ஆர்கினைன் (Arginine) என்பவை இவ்வகையில் முக்கியமானவை.

2. அரோமாடிக அமினோ அமிலங்கள்: இவற்றுள் டைரோசின் (Tyrosine), தைராக்சீன் (Thyroxin) என்பவை முக்கியமானவை.

3. பலவினச் சுற்று அமினோ அமிலங்கள் : இவற்றுள் டிரிப்டோபன் (Tryptophan), ஹிஸ்ட்டிடீன் (Histidine) என்பவை முக்கியமானவை.

4. கந்தகத்தைக் கொண்ட அமினோ அமிலங்கள் : இவற்றுள் சிஸ்டின் (Cystine) என்பது முக்கியமானது.

அமிலங்களில் உப்பீனிகளை ஈடுசெய்து பெறப்படும் கூட்டுக்களை அம்மோனியாவுடன் வினைப்படித்தி இவற்றைத் தயாரிக்கலாம். ஆல்டிஹைடுகளையும் கீடோன்களையும் ஹைடிரோசயனிக அமிலத்துடனும் அம்மோனியாவுடனும் வினைப்படுத்தி இவற்றைத் தயாரிப்பதுண்டு.

இயல்புகள்: இவை நீரிற் கரையும் படிகங்கள். இவை கரிமக் கரைப்பான்களிற் கரைவதில்லை. நைட்ரச அமிலத்துடன் இவை வினைப்பட்டு, நைட்ரஜனை வெளிவிட்டு ஆல்கஹாலைத் தோற்றுவிக்கும்.

இரு அமினோ அமிலங்களை ஒன்று சேர்த்து, முதலாவதன் கார்பாக்கிலிகத் தொகுதியும், இரண்டாவதன் அமினோ தொகுதியும் நீர் மூலக்கூற்றை அகற்றி ஒன்று கூடுமாறு செய்யலாம். இத் தொகுப்பு வினை மிக மிக்கியமானது. உதாரணமாக அல்னீன் என்ற அமிலமும், கிளைசீன் என்ற அமிலமும் பின்வருமாறு கூடி, அல்னைல் கிளைசீன் (Alanyl Glycine) என்ற கூட்டையளிக்கின்றன.

H2N.CH(CH3)COOH + HHN CH2COOH
அலனீன் கிளைசீன்

H2N. CH (CH3).CO. NH. CH2. COOH
அல்னைல் - கிளைசீன்

இவ்விரு பொருள்களின் கருக்களையும் CO-NH என்ற பெப்டைடு தொகுதி இணைக்கிறது. ஆகையால் இவ்வினை பெப்டைடு இணைப்பு எனப்படும். இவ்வகையில் பத்தொன்பது அமினோ அமிலங்கள் வரை இணைந்து நீண்ட சங்கிலி போன்ற கூட்டுக்களை அளிக்கலாம். விலங்குகளிலும் தாவரங்களிலும் உள்ள புரோட்டீன்கள் சங்கிலிக் கூட்டுகளேயாகும். தொகுப்பு முறையால் இத்தகைய இணைப்புகளைச் செய்து, பாலிபெப்டைடுகள் என்ற கூட்டுக்கள் தயாரிக்கப்பட்டு ள்ளன.இவை இயற்கைப் புரோட்டீன்களைப் பல பன்புகளில் ஒத்தவை.நீர்த்த தாது அமிலங்களுடன் இவற்றை நெடுநேரம் கொதிக்க வைத்தால், இவை மீண்டும் அமினோ அமிலங்களாக முறிகின்றன.

பாலிபெப்டைடுகளைத் தயாரிக்கப் பல முறைகள் வழங்குகின்றன. உப்பினியேற்றிய கொழுப்பு எஸ்டரால் வினைப்படுத்தினால் தொகுப்பு விளைவு நிகழ்ந்து ஓர் எஸ்டர் தோன்றும். இதை நீர் முறிந்து அம்மொனியா வுடன் வினைப்படித்தினால் டைபெப்டைடு தோன்றும். இதை அமிலக் குளோரைடாக மாற்றி, மேற்கூறிய வகையிலேயே டிரைபெப்டைடு முதலிய பாலிபெப்டைடுகளாக மாற்றலாம். இவ்வகையில் பதினெட்டு அமினோ அமிலத் தொகுதிகள் வரை கொண்ட பாலிபெப்டைடுகளைத் தயாரிக்கலாம். பாலிபெப்டைடுகளின் தயாரிப்பை வெற்றிகரமாகச் செய்தவர்களில் எமில் பிஷர் என்ற அறிஞரும் ஒருவர். பாலிபெப்டைடு ஆராய்ச்சி, பிளாஸ்டிக்குகள், நைலான் போன்ற பல புதுப்பொருள்கள் தோன்ற உதவியுள்ளது.

நமது வயிற்றிலுள்ள என்சைம்கள் உணவிலுள்ள புரோட்டீன்களை இத்தகைய பெப்டைடுகளாக முறிக்கின்றன. எஸ். ர.