கலைக்களஞ்சியம்/அமெரிக்கா

விக்கிமூலம் இலிருந்து

அமெரிக்கா : மேற்கு அர்த்தகோளத்தின் நிலப்பரப்பின் பெரும் பகுதி இப் பொதுப்பெயரால் வழங்குகிறது. இந் நிலப்பரப்பிற்கு 16 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பெயர் வழங்கி வந்துள்ளது. இது ஏறக்குறைய முக்கோண வடிவுள்ள இரு நிலப்பரப்புக்களை உடையது. இவ் விரு நிலப்பரப்புக்களையும் பானமா பூசந்தி இணைக்கிறது. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இவற்றை அடுத்துள்ள தீவுகள் ஆகியவற்றின் மொத்தப் பரப்பு சு. 1,60,00,000 ச. மைல்.

புவியியல் அமைப்பில் இவ் விரு கண்டங்களும் பலவகைகளில் ஒத்துள்ளன. இரு கண்டங்களிலும் வட கிழக்கில் பழங்கால அடிப்படைப் பாறைகள் காணப்படுகின்றன. தென் கிழக்கிலுள்ள மேட்டு நிலங்கள் இரு கண்டங்களிலும் நிலப்பரப்பு அண்மையில் உயர்ந்தெழுந்ததால் தோன் றியவை. இவற்றில் கடற்கரையோரமாகப் படிகப் பாறைகளும், உட்புறத்தில் விகாரமடைந்த பழம்பிராணி யுகப் பாறைகளும் காணப்படுகின்றன. புவியின் மேற்பொருக்கில் நிகழ்ந்த மடிப்புக்களும் எரிமலை இயக்கமும் தோற்றுவித்திருக்கும் உயரிய மலைகள் இக்கண்டங்களின் மேற்கே உள்ளன. மேடுகளின் இடையில் மையத்தில் ஒன்று சேரும் தாழ் நிலங்கள் இரு கண்டங்களிலும் உள்ளன. இவ்விரு கண்டங்களும் ஒரேவகையான புவியியல் மாறுதல்களுக்கு உட்பட்டிருக்கவேண்டும் என்பதை இவ்வொற்றுமைகள் தெளிவாக்குகின்றன. கிழக்கு அர்த்தகோளத்தின் மேற்கு விளிம்பும், அமெரிக்கக் கண்டங்களின் கிழக்கு விளிம்பும் வடிவத்திலும் புவியியல் அமைப்பிலும் ஒத் திருப்பது, ஒரே நிலப்பரப்பாக இருந்த பெருங் கண்டத்

என்ற திலிருந்து ஒரு பகுதி பிரிந்து, மேற்கு நோக்கிச் சென்று இக்கண்டங்களாகியது என்ற கொள்கைக்கு இடந்தருகிறது.

வட அமெரிக்காவில் பிரிட்டனுக்குச் சொந்தமான கானடா பிரிட்டிஷ் வட அமெரிக்கா என்றும், அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குத் தெற்கே, 19 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகள் வென்று, இக்காலத்தில் பல இராச்சியங்களாகப் பிரிந்துள்ள பிரதேசம் லத்தீன் அமெரிக்கா என்றும், மெக்சிகோவிற்கும், தென் அமெரிக்காவிற்கும் இடையிலுள்ள நாடுகள் மத்திய அமெரிக்கா என்றும் அழைக்கப் பெறுகின்றன.

(வட அமெரிக்காவைப் பற்றியும், தென் அமெரிக்காவைப் பற்றியும் தனிக் கட்டுரைகள் பார்க்க. முக்கியமான அமெரிக்க நாடுகளுக்கும் தனிக் குறிப்புக்கள் பார்க்க.)

அமெரிக்க ஆதிவரலாறு : 'புதிய உலகம்' என்று சொல்லப்படும் மேற்கு அர்த்தகோளம், வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என்ற இரு கண்டங்கள் கொண்டது. 1492 ஆம் ஆண்டு, கொலம்பஸ் அட்லான்டிக் சமுத்திரத்திலுள்ள சில தீவுகளைக் கண்டுபிடித்தபோது, அவற்றை இந்தியாவின் ஒரு பாகமெனக் கருதினான் ; ஆகவே, தான் கண்ட மக்களை இந்தியர் என்று அழைத்தான். ஆனால் ஆமெரிகோ வெஸ்பூச்சி இத்தாலிய மாலுமிதான் கொலம்பஸ் கண்டுபிடித்தது ஒரு புதிய உலகமென்று கூறினான். ஆகவே அவ்வுலகம் 'அமெரிக்கா' என்று அவன் பேரால் அழைக்கப்பட்டது. இவ்வாறு பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியிலிருந்து அமெரிக்கா என்று அக்கண்டம் பெயர் பெற்றது.

அமெரிக்காக் கண்டங்களின் பழங்கால மக்கள் ஆசியாக் கண்டத்து மக்களென்றும், அந்தக் கண்டத்தின் வட கிழக்குப் பாகத்திலிருந்து பேரிங் ஜலசந்தி வழியாக வட அமெரிக்காவில் குடிபுகுந்தனரென்றும், இவர்கள் மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறமுடைய மக்களாக இருந்தன ரென்றும் பழங்கால வரலாற்றுச் சின்னங்களிலிருந்து தெரிகிறது. ஆதியில் மனித குலமே அமெரிக்காக் கண்டங்களில் தோன்றவில்லை யென்று அறிகிறோம். அக்கண்டங்களில் பழங்காலத்தில் காணப்பட்ட மக்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தனரென்று எல்லோரும் கருதுகிறார்கள். ஆனால், எங்கிருந்து எவ்வழியாக அமெரிக்காவில் குடிபுகுந்தனர் என்பது பற்றிக் கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. அட்லான்டிக் கடலின் வடபாகத்திலுள்ள ஐஸ்லாந்து, கிரீன்லாந்து, லாப்ரடார் வழியாக ஆசியாக் கண்டத்து மக்கள் அமெரிக்காவின் வடபாகத்தில் குடியேறி இருக்கலாமென்று சிலர் கருதுகின்றனர். ஏனெனில் அவ்வழியாகத்தான் லைப் எரிக்சன் (Leif Ericson) என்பவன் கி. பி. பத்தாவது நூற்றாண்டில் ஐரோப்பாவின் வடபாகத்திலிருந்து புறப்பட்டு, அமெரிக்காவின் வடபாகத்தை அடைந்தான். ஆனால், அது பனி உறைந்து கிடக்கும் கடினமான வழியாக இருந்தபடியால், பழங்கால மனிதர் அப்பாதை வழியாக ஆசியாவிலிருந்து அமெரிக்காவில் குடிபுகுந்திருக்க முடியாது.

இப்பொழுது அட்லான்டிக் சமுத்திரமாக இருக்கும் கடல், பழைய காலத்தில் அட்லான்டிஸ் (Atlantis) என்ற ஒரு நிலப்பரப்பாக இருந்ததெனப் பிளேட்டோ என்னும் கிரேக்க அறிஞர் கூறுவதால், ஆசிய மக்கள் ஆப்பிரிக்காவுக்கு வந்து, இந்த அட்லான்டிஸ் நிலப்பரப்பின் வழியாகத் தென் அமெரிக்காவிலும் மத்திய

அமெரிக்காவிலும் குடியேறியிருக்கலா மென்று சிலர்

(Upload an image to replace this placeholder.)

கருதுகின்றனர். ஆனால், அட்லான்டிஸ் என்ற நிலப்பரப்பு ஒன்று இருந்ததென வரலாற்று ஆராய்ச்சியாளர் நம்பவில்லை. பிளேட்டோ சில சமயங்களில் தம்முடைய

கற்பனா சக்தியினால் கதைகள் புனைவதுண்டு. அட்லான்டிஸ் நிலப்பரப்பு, அந்தக் கதைகளுள் ஒன்றெனக் கொள்வாரும் உண்டு. மேலும் அட்லான்டிஸ் நிலப்பரப்பு இருந்ததென்று பிளேட்டோவுக்கு முன்னர் வாழ்ந்த ஹோமர், ஹெசியடு, எகிப்து வரையிலும் சுற்றுப் பிரயாணஞ் செய்த ஹெரடோட்டஸ் முதலிய கிரேக்க அறிஞர் எவரும் சொல்லவில்லை. ஆகவே, ஆசிய மக்கள் அமெரிக்காவில் குடிபுகுந்தது நாற்பது மைல் அகலமுள்ள பேரிங் ஜலசந்தி வழியாகவே இருந்திருக்க வேண்டுமென்று கொள்வதுதான் சிறப்புடையதெனத் தோன்றுகிறது.

அமெரிக்கப் பழங்கால மக்களின் நாகரிகம், அவர்கள் வசித்துவந்த பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. கிரீன்லாந்திலிருந்து அலாஸ்கா வரையிலுள்ள பிரதேசத்தில் வசித்த மக்கள் கோடைக்காலத்தில் வேட்டையாடி வாழ்ந்தனர். அவர்களுடைய உடைகள் தோலினால் செய்யப்பட்டவை. அவர்கள் கல்லால் செய்த கருவிகளைக் கையாண்டனர். சக்கரமில்லாமல் மட்பாண்டஞ் செய்யவும், விலங்கினங்களின் கொம்புகளில் ஓவியந் தீட்டவும் அவர்கள் அறிந்திருந்தனர்.

வட அமெரிக்காவின் மத்தியபாகத்தில் ஆறுகள் இருப்பதால், அந்தப் பாகத்திலும், கடற்கரையோரங்களிலும் மீன் பிடித்தலை முக்கியமான தொழிலாக மக்கள் கொண்டனர். இப்பிரதேசம் காடடர்ந்தது. ஆகவே, மரத்தால் வீடுகள் கட்டப்பட்டன; படகுகள் செய்யப்பட்டன; அழகிய சிற்பப் பொருள்களும் செதுக்கப்பட்டன. இப்பிரதேசத்து மக்கள் கூடை முடைவதில் கைதேர்ந்தவர்கள். களிமண் வைத்துக் கூடையிலிருக்கும் இடைவெளிகளை அடைத்ததனால், கூடைகளைத் தண்ணீர் வைத்துக்கொள்ளும் பாத்திரங்களாகப் பயன்படுத்த முடிந்தது. இந்தப் பிரதேசத்தின் ஆற்றங்கரைகளில் சோளம் பயிரிடப்பட்டது. மண் வீடுகள் அழகாகக் கட்டப்பட்டு, மக்கள் கிராமங்களில் வசித்தனர்.

அமெரிக்கப் பழங்கால மக்கள் உபயோகித்து வந்த கருவிகள், கட்டின மண்மேடுகள், பிரமிடுகள், பல அறைகள் அடங்கிய கட்டடங்கள் அமைந்த கிராமங்கள் முதலியவற்றிலிருந்து இவர்கள் நாகரிகம் நமக்குத் தெரியவருகின்றது. எம். வீ. சு.

வட அமெரிக்க இந்தியர்: அமெரிக்கா கண்டு பிடிக்கப்பட்ட காலத்தில் இவர்களுடைய தொகை ஏறக்குறைய 45 இலட்சமாகும். இவர்களுள் 10 இலட்சம் பேர் இப்போது கானடா, ஐக்கிய நாடுகள் என்று வழங்கும் பகுதிகளிலும், பெரும்பாலோர் இப்போது மெக்சிகோ, மத்திய அமெரிக்கா என்று வழங்கும் பகுதிகளிலும்

அமெரிக்க இந்தியர்-நாட்டியம்
உதவி : அ. ஐ.நா. செய்தி இலாகா, சென்னை.

வாழ்ந்திருந்தார்கள். இப்போதும் பெரும்பாலோர் தென் பகுதிகளிலேயே காணப்படுகிறார்கள். இப்போது கானடாவிலும் ஐக்கிய நாடுகளிலும் உள்ளவர்கள் 5 இலட்சம் பேரே. ஆனால் மெக்சிகோவில் 80 இலட்சம் பேர் இருக்கிறார்கள்.

மக்கள் அமெரிக்காவில் ஏறக்குறைய 20 ஆயிரம் ஆண்டுகளாக வாழ்ந்து வந்திருப்பதாகவும், இவர்கள் பேரிங் ஜலசந்தி வழியாக வட அமெரிக்காவுக்கு வந்த ஆசிய மக்களே என்பதாகவும் அறிஞர்கள் கருதுகிறார்கள். அமெரிக்க இந்தியர்கள் கறுத்த நீண்ட மயிரும், கறுத்த கண்களும், பரந்த முகமும், தலையும், உடம்பில் குறைந்த மயிரும் உடைய மங்கொலாயிடு இனத்தவராக இருப்பது இக்கருத்துக்கு ஆதாரமாக இருக்கிறது.

வட அமெரிக்க ஆதிக் குடிகளிடையே இருநூறு மொழிகளுக்குக் குறையாமல் காணப்படுகின்றன. இவை 54 மொழிக்குடும்பங்களைச் சேர்ந்தவை என்று அறிஞர் கூறுகின்றனர்.

பண்பாட்டு வேறுபாட்டை வைத்து, வட அமெரிக்க இந்தியர்களை ஏழு பிரிவினராகப் பிரித்துளர். தென் கோடியிலிருந்தவர்கள் கரீப் மக்களும் ஆராவக் மக்களுமாவர். அதையடுத்து வடக்கே குவாட்டெமாலா, ஹாண்டுராஸ், யுக்கட்டான் ஆகிய பகுதிகளிலிருந்தவர்கள் மாயர்கள் (Mayans). மெக்சிகோவில் ஆஸ்டெக் மக்கள் வசித்தனர். இந்தப் பகுதியிலேயே ஆதி இந்திய மக்களுள் மிகுந்த நாகரிகம் படைத்த மக்கள் காணப்பட்டனர். இவர்கள் விவசாயம், பட்டணங்கள், உலோகத் தொழில், கோவில்கள், புரோகிதம், லிபி, வானவியல், கணிதவியல் ஆகியவற்றை உடையவர்களாயிருந்தார்கள்.

இதைவிடக் குறைந்த நாகரிகம் உடையவர்கள் தென் மேற்குப் பகுதியில் இருந்தார்கள். ஹொஹோக்காம் மக்கள் நீண்ட பாசனக் கால்வாய்கள் அமைத்திருந்தனர். பீடபூமியிலிருந்த புவெப்லோ இந்தியர்கள் கிராமங்கள் அமைத்தனர். அழகான சித்திரங்களுடையமட்கலங்கள் செய்தனர். உயரிய சமூக அமைப்பும் நிறுவினர்.

வட அமெரிக்க இந்திய மாதும் குழந்தையும்
உதவி : அ.ஐ. நா. செய்தி இலாகா, சென்னை.

மிசிசிப்பிக்குக் கிழக்கே நாசிஸ் என்னும் மக்கள், வகுப்புக்களையுடைய சமூக அமைப்பு உடையவராயிருந்தனர். வடமேற்கே இருந்த இரோகோயர் பல குழுவினரைச் சேர்த்து,இரோகோயி சங்கம் அமைத்துக்கொண்டிருந்தனர். இந்தச் சங்கத்தாரே பிரெஞ்சுக்காரர்களுடனும் பிரிட்டிஷாருடனும் தொடக்கத்தில் போர் புரிந்தவர்களுள் தலையாயவர்.

வடமேற்குக் கடற்கரையில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் வாழ்ந்தவர்கள் குவாக்கியூட்டல்,ஹெய்டா, டிலிங்கிட் என்போராவர். இவர்கள் மரத்தில் செதுக்குச் சித்திரம் செய்வதில் சிறந்தவர்கள். காலிபோர்னியா, நெவாடா, யூட்டா சமவெளிகள் ஆகியவற்றில் இருந்தவர்கள் வேடர்களாகவும் உணவு சேகரிப்போராகவுமிருந்தார்கள்.

வடகோடியில் ஆர்க்டிக் சமுத்திரக் கரையிலிருந்த எஸ்கிமோக்கள் தொழில் நுட்பமறிந்த வேடர்களாயிருந்தபடியால் கஷ்டமான சூழ்நிலையிலும் நிலைத்து நிற்பவர்களாயிருந்து வருகிறார்கள். ஜா. அ.

தென் அமெரிக்க இந்தியர் : இவர்களைப் பற்றி அறியக்கூடிய சாசனங்களுள் பெரும்பாலானவை ஸ்பானியர் 1532-ல் பெரு நாட்டைவென்ற காலத்தனவாகும். அப்போது கரிபியன் தீவுகள் உட்படத் தென் அமெரிக்கா முழுவதும் ஏறக்குறைய தொண்ணூறு இலட்சம் மக்களே இருந்தார்கள். இவர்களுள் பெரும்பாலோர் சிலி, பொலிவியா, பெரு, ஈக்வடார், கொலம்பியா ஆகியவற்றிலும் 'கரிபியன் தீவுகளிலுமே காணப்பட்டனர்; ஆமெசான் பள்ளத்தாக்குக் காடுகளிலும், தென் ஆர்ஜென்டீனாச் சமவெளியிலும் மிகவும் குறைவாக இருந்தார்கள். இப்போது பொலிவியா, பெரு, ஈக்வடார் ஆகிய ஆண்டீஸ் மலையிலுள்ள குடியரசு நாடுகளிலேயே இந்தியர் நெருக்கமாக வாழ்ந்து வருகிறார்கள். ஆமெசான் நதி தீரத்தின் எளிதில் எட்டாத பகுதிகளில் தவிர, ஏனைய பகுதிகளிலெல்லாம் இந்தியர்கள் குறைவாகக் காண்பதால் அவர்கள் அருகியிருக்கவேண்டும்; அல்லது மற்ற இனங்களுடன் கலந்து போயிருக்கவேண்டும்.

தென் அமெரிக்காவில் மனிதன் நீண்ட காலத்துக்கு முன்பே இருந்தான் என்று கூறுவதற்குரிய தொல் பொருளியல் சான்று மிகவும் குறைவாகவே இருந்து வருகிறது. ஐயாயிரம் ஆண்டுகட்குமுன் பெரு நாட்டில் விவசாய நாகரிகம் இருந்ததாகத் தெரிந்தபோதிலும், இதுவரை கண்டுபிடித்துள்ள சான்றுகள் ஐயாயிரம் ஆண்டுத் தொன்மைக்கே ஆதாரமாக இருக்கின்றன. தென் அமெரிக்க ஆதிக்குடிகள் வடஅமெரிக்காவிலிருந்து வந்தவர்கள் என்பதே இப்போது பெரும்பான்மையோரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள கருத்தாகும். ஆயினும் வரலாற்றுக் காலத்துக்கு முன் மக்கள் ஓஷியானியாவிலிருந்து மேற்குத் தென் அமெரிக்காவுக்கு வந்திருக்கலாம் என்று கூறுவதற்குரிய சான்றுகள் பல அண்மையில் சேகரிக்கப்பட்டுள்ளன.

தென் அமெரிக்க இந்தியர்களிடையே எண்பது மொழிக் குழுக்களுக்கு மிகுதியாகக் காணப்படுகின்றன. அவர்களிடையே பூஜியர்கள் போன்ற வேடர்களின் பண்பாடுமுதல் இன்கா மக்கள் போன்ற விவசாயிகளின் பண்பாடுவரை பலதிறப்பட்ட பண்பாடுகள் காணப்படுகின்றன. ஆயினும் பொதுவாகப் பார்க்குமிடத்துத் தென்பகுதியில் நாடோடிகளும், ஆமெசான் வடிநிலத்தில் அரை நாடோடிகளும், ஆண்டீஸ் பகுதிகளிலும் கரிபியன் பகுதிகளிலும் ஊர்கள் அமைத்துக்கொண்டுள்ள விவசாயிகளும் வாழ்ந்து வருகிறார்கள்.

தென் அமெரிக்காவிலிருந்த ஆதிக்குடிகளின் நாகரிகங் களுள் சிறந்தது இன்கா நாகரிகமாகும். பார்க்க: இன்கா நாசரிகம். ஆ. ஆர். ஹோ.

அமெரிக்கக் கடற்கரைத் தீவுகள் : வட அமெரிக்க, தென் அமெரிக்கக் கடற்கரையோரங்களில் பல தீவுகள் அமைந்துள்ளன. இவற்றை இக்கண்டங்களின் கிழக்குக் கடற்கரையோரமுள்ள தீவுகள் என்றும்,

மேற்குக் கடற்கரைப் பக்கத்திலுள்ள தீவுகள் என்றும்

(Upload an image to replace this placeholder.)

பகுக்கலாம். ஆயினும் கிழக்குப் பாகத்தில் உள்ள

அட்லான்டிக் சமுத்திரத்தில்தான் முக்கியமான தீவுகள் உள்ளன. இவற்றில் பல கரிபியன் கடலில் அமைந்துள்ளன. இவைகளுள் பெரிய தீவுகளுக்குப் பெரிய ஆன்டிலீஸ் தீவுகள் என்றும், சிறிய தீவுகளுக்குச் சிறிய ஆன்டிலீஸ் தீவுக்கூட்டங்கள் என்றும் பெயர். இத்தீவுகளில் பல ஆங்கிலேய சாம்ராச்சியத்திலும், சில பிரெஞ்சு, டச்சு ஆட்சியிலும், மற்றும் சில சுதந்திரக் குடியரசு நாடுகளாகவும் இருக்கின்றன. இவைகளுக்கு மேற்கு இந்தியத் தீவுகள் என்ற பொதுப் பெயரும் உண்டு. இவற்றில் ஆங்கில சாம்ராச்சியத்தைச் சேர்ந்த தீவுகள் பெர்முடா, பகாமா, பார்படோஸ் (Barhados), ஜமெய்க்கா, லீவர்டு (Leeward) தீவுகள், விண்டுவர்டு (Windward) தீவுகள், டிரினிடாடு (Trinidad), டோபாகோ முதலியவை.

பெர்முடாத்தீவைப் பதினாறாம் நூற்றாண்டில் ஜுவான் பெர்முடாஸ் என்பவன் கண்டுபிடித்தான். இத்தீவைச் சார்ந்து, சுமார் 360. மிகச் சிறிய தீவுகள் உள்ளன. இத்தீவுகள் இயற்கைக் காட்சிகளும், வசிப்பதற்கு ஏற்ற தட்ப வெப்ப நிலைகளும் உள்ளவை. அமெரிக்கர்களுக்கும் ஐரோப்பியர் களுக்கும் குளிர்கால உறைவிடங்களாக விளங்குகின்றன; பிரிட்டனுக்கு அடங்கிய குடியேற்ற நாடாக இருந்தபோதிலும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குரிய கடற்படைத் தளங்களும் ஆகாயவிமானத் தளங்களும் இங்கே உண்டு.

பகாமாத் தீவுகள் : இங்கு ஒரு கவர்னர் உண்டு. இவருக்கு உதவி செய்ய ஒன்பதுபேர் அடங்கிய நிருவாக சபையும், 29 பேர் அடங்கிய சட்ட சபையும் இருக்கின்றன.

பார்படோஸ் தீவு 1627-ல் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது.

ஜமெய்க்காத் தீவு 1494-ல் கொலம்பஸால் கண்டு பிடிக்கப்பட்டு, ஸ்பானிய சாம்ராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1665 ல் ஆலிவர் கிராம்வெல் காலத்தில் ஸ்பெயின் அரசனிடமிருந்து ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டது. 1944-ல் ஏற்பட்ட புதிய அரசியல் திட்டத்தின்படி அரசாளப்படுகிறது. இந்தத் தீவில் ஒரு கவர்னர் மூலமாகப் பிரிட்டன் ஆட்சி செலுத்துகிறது. கவர்னருக்கு உதவி செய்ய 32 அங்கத்தினர்கள் அடங்கிய ஒரு சட்டசபை யுண்டு. 1941-ல் பிரிட்டன், ஜமெய்க்கா தீவில் விமானத் தளங்களை அமைப்பதற்கு அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அனுமதி கொடுத்து, 50 யுத்தக் கப்பல்களைப் பெற்றது. ஜமெய்க்காவிற்கு வட கிழக்கிலுள்ள கேயன் தீவுகளும் குவானோ தீவுகளும் ஜமெய்க்காவோடு சேர்க்கப்பட்டுள்ளன.

விண்டுவர்டு, லீவர்டு தீவுகள் : இவை அட்லான்டிக் சமுத்திரத்தில் தெற்கு வடக்காக வியாபித்துள்ளன. இவைகளுள் சில தீவுகளுக்குத் தனித்தனி அரசியல் அமைப்பு உண்டு, வேறுபட்ட சட்டசபைகளும், சட்டங்களும், வியாபார வரிகளும் நிலைபெற்றுள்ளன. இத்தீவுகளுக்குப் பொதுவான நீதிமன்றம் ஒன்றுண்டு. ஆங்கில நாணயமாகிய பவுண்டு ஸ்டர்லிங் இங்கே வழங்குகிறது.

டிரினிடாடு தீவு தென் அமெரிக்காவிலுள்ள ஆரினாக்கோ நதியின் முகத்துவாரத்தருகில் உள்ளது. 15ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்டு, 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பானியர்களால் குடியேறப்பெற்றது. பிரெஞ்சுப் புரட்சி ஏற்பட்ட காலத்தில் பிரெஞ்சுக்காரர்கள் குடியேறினர். 1797-ல் ஆங்கிலேயரால் கைப்பற்றப்பட்டு, 1802-ல் ஆமியன்ஸ் உடன்படிக்கையின்படி ஆங்கிலேயருக்குச் சொந்தமாயிற்று. டொபாகோ தீவும் டிரினிடாடு தீவோடு சேர்த்து ஆளப்படுகிறது.

அமெரிக்காவிற்குச் சொந்தமான தீவுகள் போர்ட்டோரிகோவும் வர்ஜின் தீவுகளுமாகும். போர்ட்டோரிகோவை ஸ்பெயின் நாட்டிடமிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகள் கைப்பற்றின. அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு அடங்கியிருந்தபோதிலும் நாட்டின் பிரதிநிதிகளால் ஆளப்படுகிறது. இந்நாட்டில் கட்டாயக் கல்வி அமலில் உள்ளது. வர்ஜின் தீவிகளுக்கு டேனிஷ் மேற்கிந்தியத் தீவுகள் என்ற பெயர் வழங்கிவந்தது. இவை டென்மார்க் தேசத்திடமிருந்து அமெரிக்கர்களால் விலைக்கு வாங்கப் பெற்றவை.

பிரெஞ்சு மேற்கிந்தியத் தீவுகள் : குவாடலூப் (Guadaloupe), மார்ட்டினிக் (Martinique) இரண்டும் பிரெஞ்சு ஆட்சியில் அடங்கியுள்ளன.

கியூபாத் தீவு: இதை 1492-ல் கொலம்பஸ் கண்டு பிடித்தான். 1898ஆம் ஆண்டு வரையில் ஸ்பானிய ஆட்சியில் அடங்கி, ஒரு குடியேற்ற நாடாக இருந்தது. அ. ஐ. நாடுகளின் உதவியால் சுதந்திரமடைந்தது. 1900-ல் ஏற்பட்ட அரசியல் திட்டத்தின்படி ஒரு குடியரசு அரசியல் இங்கு நடைபெறுகிறது. பிரதிநிதிகள் சபையொன்றும், செனெட் சபையொன்றும் இருக்கின்றன. தலைவரும் உபதலைவரும் உண்டு.

ஹேட்டி : இக்குடியரசு ஹிஸ்பானியோலாத் தீவின் மேற்குப் பகுதியில் உள்ளது. 1677ஆம் ஆண்டிலிருந்து பிரெஞ்சுக் குடியேற்ற நாடாக இருந்தது. டெஸ்ஸாலின்ஸ் என்ற தலைவருடைய உதவியால் 1804-ல் சுதந்திரம் அடைந்தது, அவர் இரண்டு ஆண்டுகள் அரசாட்சி செலுத்தினார். பிறகு இத்தீவு ஒரு குடியரசாயிற்று.

டாமினிகன் குடியரசு: ஹிஸ்பானியோலா தீவின் பெரும்பாலான மேற்குப் பகுதிக்கு டாமினிகன் குடியரசெனப் பெயர். இப்பகுதியிலும் பிரெஞ்சுக்காரர் குடியேறி யிருந்தனர். 1808-ல் ஆங்கிலச் சேனையின் உதவியால் டாமினிகன் மக்கள் பிரெஞ்சுக்காரர்களை வெளியேற்றினர். மறுபடியும் இப்பகுதி ஸ்பானிய ஆட்சியின் கீழ் வந்து, பிறகு 1821-ல் சுதந்திரம் பெற்றது. ஹேட்டி நாட்டு மக்கள் 1822 முதல் 1844 வரை இந்நாட்டைக் கைப்பற்ற முயன்றனர். ஆனால் அவர்கள் எண்ணம் ஈடேறவில்லை. பின்னர் இந்நாடு ஒரு குடியரசாகி, 1947-ல் ஏற்பட்ட அரசியல் திட்டத்தின்படி, அரசாளப்படுகிறது.

மேற்கூறிய தீவுகளன்றியும் இன்னும் பல தீவுகள் அமெரிக்கக் கடற்கரை யோரமாக இருக்கின்றன. அவற்றில் தென் அமெரிக்காவின் தெற்குப் பக்கத்தில் அட்லான்டிக் சமுத்திரத்தில் உள்ள பாக்லண்டு தீவுகள், தெற்கு ஜியார்ஜியாத் தீவு, தெற்கு ஆர்க்னீத் தீவு முதலியன பிரிட்டிஷ் ஆட்சியில் அடங்கியுள்ளன. தென் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் உள்ள வெல்லிங்டன் தீவு, சிலோ தீவு, ஜுவான் பர்னாண்டஸ் தீவுகள், செயின்ட்பெலிஸ் தீவு முதலியவை சிலி நாட்டைச் சேர்ந்தவையாகும். சின்சு தீவுகள் பெரு என்ற நாட்டுடன் இணைக்கப்பட்டு உள்ளன. கலாப்பகாஸ் என்ற தீவு ஈக்வடார் நாட்டைச் சேர்ந்தது. வட அமெரிக்காவின் மேற்குக் கடற்கரையில் பெவில்லாகிக்டஸ், குவாடலூப், வான்கூவர், சார்லட் முதலிய தீவுகள் உள்ளன. (முக்கியமான தீவுகளைப் பற்றிய மற்ற விபரங்களுக்குத் தனிக் கட்டுரைகள் பார்க்க.) ஏ. கி