உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அம்மீட்டர்

விக்கிமூலம் இலிருந்து

அம்மீட்டர் (Ammeter) : மின்னோட்டத்தையும் மின்மட்டத்தையும் அளவிட இக்கருவி பயன்படுகின்றது. இதுவும் வோல்ட் மீட்டரும் தத்துவத்திலும் அமைப்பிலும் மின்னோட்ட மானியை (த. க.) ஒத்தவை. ஆனால் மின்னோட்டத்தை அளவிடச் சுற்றோடு தொடராக மானியை இணைக்கவேண்டும். இதனால் அளவிடப்படும் மின்னோட்டம் பாதிக்கப்படாமல் இருக்க, மானியின்

அம்மீட்டர்


உதவி : சென்கோ, சிகாகோ

மின் தடை குறைவாக இருக்க வேண்டும். ஆகையால் அம்மீட்டரின் மின்தடை குறைவாக இருக்குமாறு அமைக்கப்படுகிறது. மின்மட்டத்தை அளவிட, எந்த இரு இடங்களுக்கிடையேயுள்ள மின் மட்டத்தை அளவிட வேண்டுமோ, அவ்விரண்டிற்கும் இணையாக மானி இணைக்கப்படும். இதனால் சுற்றின் நிலை பாதிக்கப்படாதிருக்க, மானியில் மிகக் குறைந்த மின்னோட்டமே பாயவேண்டும். ஆகையால் அதன் மின்தடை அதிகமா யிருக்குமாறு அமைக்கப்படும். இக்காரணத்தால் வோல்ட் மீட்டரின் தடை அதிகமாக இருக்குமாறு அமைக்கப்படும்.

இயங்கு சுருள் கருவிகள் (Moving coil instruments) : இக்காலத்தில் இவ்வகைக் கருவிகளே அதிகமாக வழங்குகின்றன. சாதாரண மின்னோட்ட மானியின் அமைப்பையே இதுவும் உடையது.

இயங்கு சுருள் அம்மீட்டர்

இதிலுள்ள சுருள் உறுதியான வச்சிர முனைகளில் பொருத்தப்பட்டு இயங்குகிறது. சுருளுடன் பொருத்தப்பட்ட முள்ளொன்று ஓர் அளவையின் மேல் நகர்ந்து, அதன் விலக்கத்தைக் காட்டும். இதன் அளவை ஆம்பியர்களிலோ வோல்ட்டுகளிலோ குறிக்கப்பட்டிருப்பதால், இதைக் கொண்டு நேரடியான அளவுகளைச் செய்ய முடிகிறது. சுருளின் விலக்கத்தைக் கட்டுப்படுத்த, மெல்லிய வில்லொன்று இருக்கும். மிக உறுதியாகவும் நுணுக்கமுள்ளதாகவும் இக்கருவியை அமைக்கலாம். ஆகையால் இது பல துறைகளில் பயன்படுகிறது. ஆனால் இவ்வகை மானியில் ஒரு குறையுண்டு. இது மாறு மின்னோட்ட அளவுகளிற் பயன்படாது.

தேனிரும்புக் கருவிகள் : மின்சாரம் பாயும் கம்பிச் சுருளின் அருகே ஒரு தேனிரும்புத் துண்டு வைக்கப்பட்டால், அதில் காந்தத்துவம் தூண்டப்பட்டு, அது சுருளால் விலக்கப்படுகிறது. இவ்வியக்கத்தைப் பெரிதாக்கி, அதிலிருந்து மின்னளவுகளைச் செய்யலாம். இதுவே தேனிரும்பு மானிகளின் தத்துவம்.

பொதுவாக வழங்கும் மானியில் இரு தேனிரும்புக் கருவிகள் இணையாக அருகருகே அமைந்திருக்கும். அவற்றுள் ஒன்று நிலையாகப் பொருத்தப்பட்டிருக்கும். இன்னொன்று இயங்கி, அத்துடனுள்ள ஒரு முள்ளையும் இயக்கவல்லது. இவ்விரு கம்பிகளும் சுருளின் அச்சிற்கு இணையாக இருக்கும். சுருளில் மின்சாரம் பாய்ந்தால் இரு கம்பிகளும் காந்தங்களாகின்றன. இதனால் அவற்றிடையே விலக்கம் தோன்றி, இயங்கும் கம்பி விலகுகிறது.

தேனிரும்பு அம்மீட்டர்

இவ்விலக்கத்தைக் காட்டும் அளவை மின்னோட்டத்தை அளவிடுகிறது.

இக்கருவி மிக எளிய அமைப்புக் கொண்டது. இது மலிவானது. ஆனால் இதில் பல பிழைகள் நேர வழியுண்டு. ஆகையால் திருத்தமான அளவுக்கு இது பயன்படாமல் இருந்தது. ஆனால் தற்காலத்தில் வழங்கும் புதுவகைக் காந்தவியற் கலவைகளை இக்கருவியில் பயன் படுத்துவதால், இப்பிழைகளைத் தவிர்த்து, மிகத் திருத்தமான கருவியாகச் செய்யலாம்.