உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அயோடின்

விக்கிமூலம் இலிருந்து

அயோடின் (Iodine) : [குறியீடு I; அணுவெண் 53; அணுநிறை 126·92]. இது உப்பீனிகளில் கடைசித் தனிமம். கடற்பாசிகளைச் சுட்டுச் சாம்பலாக்கி, அதிலுள்ள காரங்களைப் பிரிப்பதில் ஈடுபட்டிருந்த கோர்ட்வா (Courtois) என்ற அறிஞர் இதை முதலில் கண்டறிந்தார். இதைத் தனியே பிரித்து, இது ஒரு தனிமம் எனக் காட்டிய பெருமை கே-லூசாக் என்னும் ரசாயன அறிஞரைச் சாரும்.

தோற்றம்: தனிநிலையிற் கிடைக்காத இது கடற்பாசிகளில் ஓரளவு உள்ளது. காலிச்சே (Caliche) என்ற வெடியுப்புக் கனியத்தில் இது சிறிதளவு உள்ளது. இக்கனியத்திலிருந்து இது பிரித்தெடுக்கப்படுகிறது.

தயாரிப்பு: காலிச்சேயிலிருந்து வெடியுப்பைப் பிரித்த பின்னர், எஞ்சும் திரவத்தைப் பன்முறை கழுவினால் இதிலுள்ள அயோடினின் அடர்வு அதிகமாகிறது. அயோடேட்டு வடிவில் உள்ள இதைக் கார்பன் டைசல் பைடைக் கொண்டு குறைத்துத் தனி நிலையிற் பெறலாம். கடற்பாசியிலிருந்து இதைப் பிரிக்கப் பாசிகளைச் சேகரித்து, உலர்த்தி, எரித்துப் பெறும் சாம்பலை நீரிற் கழுவினால் அதிலுள்ள மற்ற உப்புக்களிற் பெரும் பான்மையானவை படிகமாகப் பிரியும். எஞ்சியுள்ள திரவத்துடன் கந்தகாமிலத்தையும் மாங்கனிச டையாக்சைடையும் சேர்த்து வாலைவடித்தால் அயோடின் தனியே பிரியும்.

இயல்புகள்: கருநீல வடிவான படிகங்களில் இது கிடைக்கிறது. இதன் ஆவி நீல நிறமானது. நீரில் சிறிது கரையும். குளோரோபாரம், கார்பன்டைசல்பைடு,சாராயம் முதலிய கரைப்பான்களில் இது கரையும். இது பொட்டாசியம் அயோடைடு கரைவில் மிக அதிகமாகக் கரைகிறது.

அயோடின் நேரடியாக ஹைடிரஜனுடன் கூடுவதில்லை. அனால் பாஸ்வரம், குளோரின், புளோரின் முதலியவற்றுடன் கூடும். தனி நிலையிலுள்ள அயோடின் மாப்பொருளுடன் சிறப்பான ஒரு நீலநிறத்தைத் தரும். இம்மியளவே உள்ள அயோடின் அதைப்போல் 5000.000 மடங்கு நீரிற் கரைந்திருந்தாலும் இச்சோதனையால் அதைக் கண்டறியலாம்.

பயன்கள்: இதில் பெரும்பகுதி மருத்துவத்திற்குப் போட்டோத் தொழிலிலும், சாயங்களின் தயாரிப்பிலும், சில தொழில்களில் ஊக்கியாகவும் இது பயனாகிறது.

கூட்டுக்கள்

ஹைடிரஜன் அயோடைடு (HI) : அயோடைடுகளைக் கந்தகாமிலத்துடன் வினைப்படுத்தி இதைப் பெற் இயலாது. ஏனெனில் அப்போது தோன்றும் ஹைடிரஜன் அயோடைடு ஆக்சிகரணிக்கப்பட்டுவிடும். அயோடின் கரைந்த நீருடன் பாஸ்வரத்தை வினைப்படுத்தி இதைப் பெறலாம். பல உலோகங்களின் உப்புக்களுடன் பொட்டாசியம் அயோடைடை வினைப்படுத்தி அவற்றின் அயோடைடுகளைப் பெறலாம். இவற்றுள் பல சூட்டினால் சிதையும் இயல்புள்ளவை. அம்மோனியம், பொட்டாசியம் அயோடைடுகள் மருத்துவத்திலும், வெள்ளி அயோடைடு போட்டோத் தொழிலிலும் பயனாகின்றன.

ஆக்சைடுகளும் ஆக்சி அமிலங்களும்: பின்வரும் ஆக்சைடுகளும் ஆக்சி அமிலங்களும் அயோடி னுக்கு உண்டு என அறியப்பட்டுள்ளது.

IO2 (அயோடின் டையாக்சைடு) HIO (ஹைப்போ அயோடிக் அமிலம்)
I4O9 இல்லை
I2O3 (அயோடின் பென்டாக்சைடு) HIO3 (அயோடிக் அமிலம்)

இவற்றுள் அயோடின் பென்டாக்சைடு முக்கியமானது. இது வெண்மையான படிகம். நீரிற் கரைந்து இது அயோடிக அமிலத்தைத் தரும். கார்பன் மானாக்சைடுடன் இது வினைப்பட்டால், அயோடின் வெளியாகிறது. ஆகையால் இவ்வினையைப் பயனாக்கிக் கார்பன்மானாக்சைடைக் கண்டறிய இது பயன்படுகிறது.

அயோடினின் ஆக்சி அமிலங்களில் ஹைப்போ அயோடச அமிலம் என்று ஒன்று உள்ளதா என்பதே தெளிவாக அறியப்படவில்லை. ஆகையால் அயோடிக அமிலம் ஒன்றே முக்கியமானது. அயோடின் கரைந்த நீரின் வழியே குளோரினைச் செலுத்தி இதைப் பெறலாம். இது வெண்மையான படிகம். இது சிறந்த ஆக்சிகரண இயல்புள்ளது. இதன் உப்புக்களில் பொட்டாசியம் அயோடேட்டு ஒரு வெண்மையான படிகம். இதன் கரைவு வாயைக் கொப்பளிக்கும் மருந்தாகப் பயனாகிறது. சோடியம் அயோடேட்டு முடக்கு வாதத்திற்கு மருந்தாகப் பயன்படுகிறது. எஸ். ரா.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அயோடின்&oldid=1454245" இலிருந்து மீள்விக்கப்பட்டது