கலைக்களஞ்சியம்/அரசாங்க அமைப்பு
அரசாங்க அமைப்பு: ஒவ்வொரு அரசாங்கத்திலும் நிருவாகப் பகுதி, சட்டமியற்றும் பகுதி, நீதிப் பகுதி ஆகிய மூன்று பகுதிகளும் உண்டு. இந்தப் பகுதிகளும், அவற்றின் அமைப்பும், அதிகாரங்களும், ஒன்றற்கொன்று உள்ள தொடர்பும், இங்கிலாந்தைத் தவிர ஏனைய நாடுகளிலெல்லாம் அரசியலமைப்புச் சட்டத்தில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. இங்கிலாந்திலும் அரசாங்கத்தின் சில அமிசங்கள் சட்ட வாயிலாக அமைக்கப் பட்டிருக்கின்றன. நிருவாகப்பகுதி என்பது நிரந்தர நிருவாக ஆட்சி, பார்லிமென்டுப் பொறுப்பாட்சி என்று இரண்டு வகைப்படும். அமெரிக்க ஐக்கிய நாடுகளில் நடைமுறையில் உள்ளது நிரந்தர நிருவாக ஆட்சி; இங்கிலாந்தில் பழக்கத்திலிருப்பது பார்லிமென்டுப் பொறுப்பாட்சி. ஜனநாயக முறையைப் பின்பற்றும் நாடுகளில் பெரும்பாலானவை பார்லிமென்டுப் பொறுப்பாட்சி முறையையே மேற்கொண்டுள்ளன. இந்திய அரசியற் சட்டம் இம்முறையையே ஏற்றுக்கொண்டுள்ளது.
இம்மூன்று பகுதிகளைத் தவிர, இராச்சிய அலுவல்களை நிருவகிக்கும் அதிகாரப்பகுதி என்பதொன்று உண்டு. முற்காலங்களில் இவ்வதிகாரப் பகுதியை அரசாங்கத்தின் ஒரு பகுதியாகக் கருதவில்லை. நிரந்தர அதிகாரப்பகுதியினரே அரசாங்கத்தின் அன்றாட அலுவல்களைப் பார்ப்பவர்களாகையாலும், அரசாங்க அலுவல்கள் இக்காலத்தில் மிகவும் வளர்ந்துவிட்டமையாலும், அதிகாரப் பகுதி அரசாங்கத்தின் நான்காம் பகுதி என்று இப்போது கருதப்படுகிறது.
அமெரிக்க நிருவாகப் பகுதியின் தலைவரான ஜனாதிபதியே உலகத்தில் அதிகாரத்திலும் செல்வாக்கிலும் மிகுந்தவர்; இவர் பெரும்பான்மைக் கட்சித் தலைவர். துரோகக் குற்றச் சாட்டின்றி, வேறுவிதமாக இவரைப் பதவியினின்றும் நீக்க முடியாது. தரைப்படை, கடற்படை விமானப்படைகளுக்கெல்லாம் இவரே தலைமைச் சேனாதிபதி. இவருக்குச் சட்டசபையில் இடமில்லை. இவர் சட்டசபைக்குப் பொறுப்பாளி இல்லை. இங்கிலாந்திலுள்ள அரசாங்கம் அரசியல் அமைப்பிற்கு உட்பட்ட முடியாட்சி : மன்னரே அரசாங்கத்தின் தலைவர். ஆயினும், அவருடைய அதிகாரம் மந்திரிசபையின் மூலமே செலுத்தப்படுகிறது. அவருக்குத் தனியுரிமைகளும் சலுகைகளும் பல உளவாயினும், சம்பிரதாயங்களால் அவரது அதிகாரத்திற்குப் பல கட்டுப்பாடுகள் ஏற்பட்டுள்ளன. வால்ட்டர் பேஜாட் (Walter Bagehot) என்னும் ஆங்கில ஆசிரியர் இங்கிலாந்து மன்னருக்கு மூன்று தனி உரிமைகள் உண்டு என்று கூறுகின்றார். அவை முக்கியமான விஷயங்களில் 1. மந்திரிகள் மன்னரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்; 2. மந்திரிகளுடைய நிருவாக அலுவலில் தேவை யிருப்பின், அவர்களுக்கு மன்னர் ஊக்கமளித்து ஈடுபாடு உண்டாக்கவேண்டும்; 3. அவர்கள் தவறான முறையில் நடந்துகொண்டால், அவர்களை எச்சரிக்கவேண்டும் என்பவையே. பார்லிமென்டில் பெரும்பான்மைக் கட்சியின் தலைவரை ஒரு மந்திரிசபை அமைக்கும்படி கேட்பது. மன்னருடைய உரிமை, அக்கட்சித் தலைவரே பிரதம மந்திரி. அரசியல் அதிகாரம் அவருக்கே மிகுதியாக உண்டு.
பொதுவாக அரசியல் அமைப்புக்கள் இருவகைப்படும். எளிதில் மாற்ற முடியா அமைப்புக்கள் என்றும். எளிதில் மாற்றக்கூடிய அமைப்புக்கள் என்றும் அவற்றைப் பாகுபாடு செய்யலாம். அன்றியும் எழுதியிட்ட அமைப்புக்கள் என்றும், எழுதா அமைப்புக்கள் என்றும் அவற்றைப் பிரிக்கலாம். அவற்றுள், எளிதில் மாற்ற முடியாதவை அமெரிக்க, இந்திய அரசியலமைப்புக்களைப் போன்றவை. எளிதில் மாற்றக்கூடிய அமைப்பிற்கு உதாரணம் இங்கிலாந்து அரசியல் அமைப்பு. இதுவே முக்கியமான பாகுபாடு. ஆயினும், எழுதியிட்ட அமைப்புக்கள் என்றும், எழுதா அமைப்புக்கள் என்றும் செய்யப்படும் பாகுபாடு அத்துணை ஒழுங்கான பாகுபாடன்று. ஏனெனில், எழுதா அமைப்பாகிய இங்கிலாந்து அரசியல் அமைப்பிலும் இயற்றிய சட்டங்கள் சில உண்டு. எழுதியிட்ட இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலும் சில சம்பிரதாயங்கள் உண்டு. ஆகையால், இப்பாகுபாடு பயன்படுவதன்று. மேலும் ஒற்றையாட்சி அரசாங்கங்கள் என்றும், கூட்டாட்சி அரசாங்கங்கள் என்றும் பாகுபாடு உண்டு. இங்கிலாந்து, ஸ்வீடன், கிரீசு முதலிய முடியாட்சி நாடுகளில் நடைபெறுவது ஒற்றையாட்சி. அமெரிக்கா, கானடா முதலிய நாடுகளின் அரசியல் அமைப்புக்கள் கூட்டாட்சி அமைப்புக்கள். இந்திய அரசியல் சட்டமும் சோவியத் அரசியல் சட்டமும் கூட்டாட்சி முறையைப் பின்பற்றியவை என்று கூறப்படுகின்றன.
பொதுவாக ஜனநாயக ஆட்சிமுறையில் நாம் காணக் கூடிய அமிசங்கள் சில உண்டு. அவை : குடியொப்பம், குடிகளே சட்டமியற்றல், பிரதிநிதித்துவம் நீக்கல் முதலியனவாம். இவற்றில் குடியொப்பம் முதலிய அமிசங்கள் சுவிட்சர்லாந்து அரசியல் சட்டத்தில் இடம் பெற்றுள்ளன. அரசாங்க அதிகாரப் பிரிவினை எதேச்சாதிகாரத்திற்கு ஒரு முக்கியமான தடை என்றும் கருதப்படுகிறது. இவ்வதிகாரப் பிரிவினை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் முழுவதும் நடைமுறையில் இருந்து வருகிறது. இங்கிலாந்திலும் இம்முறை நடைபெறுவதாக மான்டெஸ்க்யூ கருதினாராயினும், பார்லிமென்டு அங்கத்தினர்களிற் சிலரே மந்திரிசபையை அமைத்து, அரசாங்க நிருவாகத்தையும் மேற்கொள்ளுவதால் அதிகாரப் பிரிவினை இங்கிலாந்து முழுவதிலும் பழக்கத்திலிருப்பதாகக் கொள்ள முடியாது.
இந்திய அரசியல் சட்டம் போன்றவற்றில் ஜனாதிபதிக்கு ஏராளமான அதிகாரங்கள் இருப்பதாகக் காணப்படினும்,உண்மையில் அவருடைய அதிகாரத்தையெல்லாம் செலுத்துபவர் பெரும்பான்மைக் கட்சித் தலைவரான பிரதம மந்திரியே, இந்தியாவிலும், அ. ஐ. நாடுகளிலும் உதவி ஜனாதிபதி மேல்சபை அக்கிராசனராக இருப்பதோடு, ஜனாதிபதி இல்லாத காலத்தில் அவருக்குப் பதிலாகச் சில அலுவல்களைக் கவனிப்பார். இந்திய அரசியல் சட்டம் அமெரிக்க முறையைப் பின்பற்றி எழுதிய சட்டமாயினும், பிரிட்டிஷ் பார்லிமென்டு ஆட்சி முறையையும் மேற்கொண்டுள்ளது. ஜனநாயக நாடுகளிலேயே அரசியல் அமைப்புச் சட்டங்கள் மூலம் ஆட்சி நடைபெறுவதாகக் கூறுவது மரபு ; ஏனெனில், இச்சட்டங்களில் எதேச்சாதிகாரத்திற்கு வரம்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது; தனியாள் ஆட்சிக்குத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ஆகையால், பூரண ஆதிக்க ஆட்சி நாடுகளில் நடைபெறும் ஆட்சி அரசியல் அமைப்பாட்சியாகக் கருதப்படுவதில்லை.
குடிகளுக்கு அரசியலில் ஒரு செல்வாக்கு இருப்பதாக அவர்களுக்கு அளிக்கப்படும் வாக்குரிமை, அவர்களால் தெரிந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் ஆட்சி, அரசாங்கத்தின் மூன்று பிரிவுகளாகிய நீதி, நிருவாகம், சட்டசபை ஆகிய மூன்றும் ஒன்றற்கு ஒன்று கொண்டுள்ள தொடர்பு என்பவை ஜனநாயக் அரசாங்க அமைப்புக்களில் காணப்படும் முக்கியமான அமிசங்கள். தவிர, சுதந்திரத்தோடு இயங்கும் அரசியற் கட்சிகள் ஜனநாயக அமைப்பில் உள்ள ஒரு முக்கிய அமிசம். இது பிரிட்டிஷ், பிரெஞ்சு அரசியல் அமைப்புக்களில் காணப்படுவது. பல கட்சிகளும் சுதந்திரத்தோடு இயங்காத நாடுகளில் பூரண ஜனநாயகம் இருப்பதாகக் கருதமுடியாது.
எழுதாச் சட்டம் என்று சொல்லக்கூடிய பொதுச் சட்டம் (Common Law) இங்கிலாந்தில் நடைமுறையிலிருக்கிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திலும் இம்முறையைப் பின்பற்றவேண்டிய பல விஷயங்களைப்பற்றி வெளிப்படையாக அரசியல் அமைப்பில் கூறவில்லை. சில அமிசங்கள் நிலைமைக்குத் தகுந்தபடி சம்பிரதாயங்கள் மூலமாக வளரவேண்டும் என்பது இந்திய அரசியல் சட்டத்தை அமைத்தவர்களுடைய கருத்து. ஜனநாயக ஆட்சி நடைபெறும் நாடுகளில்கூட நிருவாகச் சட்டம் என்று ஒருவகைச் சட்டம் ஏற்பட்டுள்ளது. இது நிருவாக சம்பந்தமான விஷயங்களில் ஏற்படக்கூடிய சில பிரச்சினைகளை ஆலோசித்து முடிவு செய்ய ஏற்பட்டுள்ள மன்றங்கள் வாயிலாக நடத்தப்படும்.
ஜனநாயக அரசியல் அமைப்பில் மந்திரிசபை மிகவும் முக்கியமான உறுப்பு. இம் மந்திரிசபை பெரும்பாலும் கீழ்ச்சபையின் பெரும்பான்மைக் கட்சியோர் கருத்துப்படியே அமையும். இல்லாவிடில் மந்திரிசபை அரசாங்கம் நடத்த முடியாது. மந்திரிசபைக்குக் கூட்டுப் பொறுப்பு உண்டு. ஒவ்வொரு மந்திரியின் செயலுக்கும் மந்திரிசபை முழுவதும் பொறுப்பேற்றுக் கொள்ளும். கூட்டுப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளாத மந்திரிகள் ராஜிநாமா செய்துவிட வேண்டும். மந்திரிசபையால் கொண்டுவரப்படும் மசோதாக்களைப் பார்லிமென்டு பெரும்பாலும் நிராகரிப்பதில்லை. மந்திரிசபை ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதால் அவர்களுக்குப் பார்லிமென்டின் நம்பிக்கை யிருக்கவேண்டும். ஆயினும் மந்திரிசபையைப் பார்லிமென்டிற்கு அடங்கிய ஓர் உறுப்பாகக் கருத முடியாது.
ஜனநாயக ஆட்சி வெற்றிகரமாக நடைபெறுவதற்குப்பு பொறுப்புள்ள எதிர்க்கட்சி இருப்பது நல்லது. இங்கிலாந்தில் இக்கொள்கை முழுவதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அன்றியும் அங்கு எதிர்க்கட்சித் தலைவருக்குச் சம்பளமும் உண்டு. பிரான்சிலும் பார்லிமென்டு ஆட்சியே நடைபெறுகிறதாயினும், இங்கிலாந்திலுள்ள சில சம்பிரதாயங்கள் அங்கில்லை. பிரான்சின் ஜனாதிபதிகள் ஏழாண்டு காலம் பதவி வகிப்பர். அவரை இரு சபை அங்கத்தினர்களும் ஒருங்கு சேர்ந்து தேர்ந்தெடுபர். பல கட்சி அங்கத்தினர்களும் சேர்ந்தே பிரான்சில் மந்திரி சபை அமைக்க முடியும். ஏனெனில், இங்கிலாந்திலிருப்பது போல இருபெருங் கட்சிகள் அங்கு இல்லை. அங்கு ஏறத்தாழச் சம பலமுள்ள பல கட்சிகள் இருக்கின்றன. ஆகவே, கூட்டு மந்திரி சபைகளே அமைகின்றன. சில கட்சிகள் ஒன்று சேர்ந்து எதிர்த்தால் மந்திரி சபை கவிழ்ந்துவிடும். ஆயினும், அதை நல்ல ஜனநாயக முறை என்று கருதலாம். அடிக்கடி அரசாங்கம் மாறுவதால் பிரதம மந்திரிக்கு மந்திரிசபை மீதும், மந்திரிசபைக்குப் பார்லிமென்டுமீதும் மிகுந்த ஆதிக்கம் ஏற்பட்டுவிடாது. பார்லிமென்டே வலுமிகுந்த அரசியல் உறுப்பாக இருக்கும். நிலையான அரசாங்கம் நீடித்து இருக்க இயலாது என்று சிலர் காரணங்கண்டு, பிரெஞ்சு முறையை இழித்து உரைப்பர் உறுதியான ஒரு திட்டத்தை மேற்கொண்டு நிறைவேற்ற முடியாது என்பதும் அதன் குறைபாடுகளில் ஒன்று என்பர். ஆயினும், மந்திரிசபை அடிக்கடி மாறுவதால், வெளிநாட்டு உள்நாட்டுக் கொள்கைகள் கூடவே மாறுகின்றன என்று கருத முடியாது. பிரெஞ்சு மக்கள் இம்மாறுதல்களால் பாதிக்கப்படுவதாகக் கருத இடமில்லை.1946-ல் இயற்றியமைக்கப்பட்ட புதுப் பிரெஞ்சு அரசியல் சட்டத்தில் நிலையான மந்திரிசபை அமைப்பதற்கும், சட்டசபை பொறுப்போடு தன் அலுவல்களைச் செய்ய இயலுமாறும் சில சிறப்பான ஷரத்துக்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பிரெஞ்சு அரசியல் சட்டப்படி. நிருவாகப் பகுதியால் கொண்டுவரப்படும் மசோதாக்கள் சட்டசபையால் நிராகரிக்கப்படினும், மந்திரிசபை ராஜிநாமா செய்யவேண்டியதில்லை. மந்திரிசபை அங்கத்தினர்களிடையே கூட்டுப் பொறுப்பு இல்லை. மந்திரிசபை அங்கத்தினர்களில் ஒருவர் மற்றொருவருடைய மசோதாக்களை எதிர்க்கலாம்.
சில தீவிரமான மசோதாக்கள் சட்டமாகாமல் இருக்கச் சில காலம் ஒத்திப் போடுவதே மேல்சபைகளின் பொதுவான அலுவல். கூட்டாட்சி நாடுகளில் தனிப்பட்ட நிலையங்களுக்கும் ஆட்களுக்கும் பிரதிநிதித்துவம் அளிப்பதற்கு இவை வேண்டியிருக்கின்றன. கீழ்ச் சபைக்கும் மேல்சபைக்கும் ஏற்படக்கூடிய முரண்பாடுகளைத் தீர்க்க, ஏறத்தாழ எல்லா அரசியல் சட்டங்களிலும் முறைகள் விவரிக்கப்பட்டிருக்கின்றன.
அரசாங்கத்தின் மூன்றாவது பகுதியான நீதி இலாகாவின் கடமைகள், சட்டசபை இயற்றும் சட்டங்களுக்கு விளக்கம் கூறுவதும், தங்கள் முன்வரும் வழக்குக்களுக்குச் சட்டப்படித் தீர்ப்புச் செய்வதுமேயாம். கூட்டாட்சி நாடுகளில் உள்ள உச்ச நீதிமன்றங்களுக்குக் கூட்டாட்சிக்குட்பட்ட உறுப்புராச்சியங்களுக்கிடையே ஏற்படும் விவகாரங்களைத் தீர்த்துவைக்கும் பொறுப்பும் உண்டு. இவ்வுயர்ந்த பொறுப்புக்களையுடைய நீதிப்பகுதி பூரண சுதந்திரமுடையதாக இருக்கவேண்டும். ஆகையால், நீதிபதிகள் நிருவாகப்பகுதியால் நியமிக்கப்படுபவர்களாயினும், நியமனம் ஆன பிறகு அவர்களை எளிதில் நீக்க முடியாதவாறு பல விதிகள் ஏற்பட்டுள்ளன. இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி அடிப்படை உரிமைகளை நிருவாகப்பகுதி, சட்டசபை ஆகியவற்றின் ஆக்கிரமிப்பினின்றும் பாதுகாக்கும் பொறுப்பு நீதி இலாகாவைச் சேர்ந்தது. அ.ஐ. நாடுகளிலும் இந்தியாவிலும் சட்டசபைகள் இயற்றும் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாகாமல் இருக்கின்றனவா என்று தீர்மானிக்கும் பொறுப்பும் நீதிப் பகுதிக்கு உண்டு.
அரசாங்கத்தின் அமைப்பும் அதன் பகுதிகளும் அவற்றின் கடமைகளும் பொறுப்புகளும் உரிமைகளும் ஆட்சி முறையைப் பொறுத்து நாட்டிற்கு நாடு வேறுபடுகின்றன. வீ. வெ.