உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அரவிந்தாச்சிரமம்

விக்கிமூலம் இலிருந்து

அரவிந்தாச்சிரமம்: அரவிந்தர் புதுச்சேரியில் வந்து நிலைத்தபோது பல அரிய அன்பர்களும் அங்கு வந்து கூடினர். அரவிந்தாச்சிரமம் எழுந்தது. மற்றும் பல சாதகர் ஒருங்கு சேர்ந்தனர். அது ஒரு புது உலகமாக வளர்ந்து வந்தது. அரவிந்தரின் யோகக் கனவுகளை அன்னை யென்று ஆச்சிரம சாதகர் போற்றும் ஒரு பிரெஞ்சுமாது நனவாக்க உதவினர். அன்னையே ஆச்சிரமும் ஆச்சிரமமே அன்னையுமாயின. அரவிந்தர் பணியே அங்குத் தெய்வ வழிபாடாயிற்று. அன்னை பணியே யோகமாயிற்று. உலகத்தின் பல வேறிடங்களிலிருந்து மக்கள் ஆச்சிரமத்தைப் பார்க்கவும் அங்கு உறையவும் விரும்பி வந்தனர். அங்குச் சாதி மதப் பேச்சே கிடையாது. எல்லோரும் ஒரே குலமாக வாழ்ந்து வருவாராயினர். தூய உணவு, தூய உடை, தூய காற்று, தூய வாழ்வு அங்குண்டு. இரு பாலார்க்கும் வேண்டிய சுதந்தரம் உண்டு. அவரவர் புலமையை வளர்க்கப் பலவிதமான தொழில் துறைகளும் அங்கு அமைக்கப்பட்டுள்ளன.