கலைக்களஞ்சியம்/அரிசி

விக்கிமூலம் இலிருந்து

அரிசி : உலக மக்களுள் செம்பாதியினரின் தலையாய உணவுப்பொருள், ஆண்டுதோறும் 21 கோடி ஏக்கரில் பயிராகிப் பத்தேமுக்கால் கோடி டன் அரிசி விக்கிறது. அரிசி விளையும் நிலத்தில் 95% தென்கிழக்கு ஆசியாவில் உள்ளது. எஞ்சிய நிலம் அமெரிக்க ஐக்கிய நாடுகளிலும், எகிப்திலும், இத்தாலியிலும், ஸ்பெயினிலும் உள்ளது. ஏக்கர் ஒன்றுக்கு இத்தாலி (2863 ராத்தல்), ஸ்பெயின் (2671), ஜப்பான் (2952) ஆகிய நாடுகளில் மிகுதியாகவும், எகிப்து (1890), கொரியா (1593), அமெரிக்கா (1390). ஜாவா (1034) ஆகிய நாடுகளில் ஈடுத்தரமாகவும், தாய்லாந்து (888), பர்மா (816), இந்தியா (772) ஆகிய நாடுகளில் குறைவாகவும் விகாகிறது.

ஆசிய காடுகளில் மிகுந்த நிலத்தில் பயிரான போதிலும், பர்மா, இந்தோ -சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகள் தான் வெளிநாட்டுக்கு அரிசி ஏற்றுமதி செய்யக்கூடிய நிலையில் உள்ளன. உலகத்துக்குத் தேவை மிகுதி; புதிதாகப் பயிர் செய்யக்கூடிய நிலப்பரப்புக் குறைவு. அதனால், இப்போது பயிராகும் நிலத்தில் விளைவைப் பெருக்கவேண்டியது இன்றியமையாததாகும். இது செறிவு முறை வேளாண்மையைக் கையாண்டால் நடை பெறுவதாகும்.

அரிசியின் தோற்றம் : உணவுப் பயிர்களில் செல் மிகப் பழமையானது. பண்டைக் காலமுதல் இந்தியா, சீனா, இந்தோ-சீனா ஆகியவற்றில் பயிர் செய்யப்பட்டு வந்திருக்கிறது என்பதற்குப் பழைய நூல்களில் ஆதாரங்கள் உள்ளன. தானியங்களுள் பெரும்பாலானவை போல இதுவும் புல் குடும்பத்தைச் சேர்ந்ததாகும். நெல்என்னும் தானியச் சாதியில் 23 இனங்கள் உள்ளன. அவற்றுள் இரண்டே பயிர் செய்யப்படுவன. எஞ்சியவை காட்டுப் புற்களாகவே இருந்து வருவன. பயிர் செய்யப்படும் இனங்களுள் ஒரைசா சதைவா (Oryza sativa) என்பது நெற்பயிராகும் நாடுகளில் எல்லாம்

நெல்

1. கிளை. 2. கதிர். 3. சிறு கதிர் = ஒரு நெல்

4. சிறு கதிரின் பாகங்கள்: அடியிலிருந்து முறையே முதல் உமி (மலடு). இரண்டாம் உமி (மலடு). மூன்றாம் உமி (பூவுள்ளது) இம் மூன்றும் பூக்காம்பிலைகள். நான்காவது. பூவின் உறுப்புக்களை மூடியிருக்கும் பதர். இதனைச் சிலர் பூக்காம்புச் சிற்றிலை யென்பர். சிலர் பூவின் புறவிதழ் என்பர். நடுவில் இரண்டு செதில்கள். இவற்றைச் சிலர் மற்றொரு பூக்காம்புச் சிற்றிலை யென்பர், சிலர் அகவிதழ்கள் என்பர். இவற்றிற்குமேல் ஆறு மகரந்தக் கேசரங்கள். உச்சியில் சூலகம். ஒரே விதையுள்ள சூலறையும் இறகு போன்ற இரண்டு சூல் முடிகளும்.

5. விதையின் பாகங்கள் : a. முளை வேர், b. முளைக் குருத்து. c. கேடகம் போன்ற முளையிலை. d. முளைசூழ் தசை. இவற்றை முற்றிலும் சூழ்ந்திருக்கும் கரிய கோடு விதையின் வெளியுறையையும் கனியின் தோலையும் குறிப்பது. அதற்குப் புறம்பே பூவின் உமியும் பதரும்; கீழே மலட்டுமிகளும் சிறு கதிரின் மஞ்சரித் தண்டும் தெரிகின்றன.

6. தானிய மணியின் நெடுக்கு வெட்டின் சிறு பகுதி. சுமார் நூறு மடங்கு பெரிதாகக் காட்டுவது. (பிளைத்து பிளைத்து. காக்ஸ் என்பவர்களது 'உணவுகள்' என்னும் நூலைத் தழுவியது). a. கனித்தோல். b. விதையின் வெளியுறையும். முளைசூழ் தசையின் ஊன் மணியடுக்கும். a, b இரண்டும் தவிட்டில் வந்துவிடும். c. முளை சூழ்தசையின் பெரும்பகுதியாகிய மாவணுக்கள்.

காணப்படும். ஒரைசா கிளாபெரிமா (O. glaberrima) என்னும் இனம் மேற்கு வெப்பமண்டல ஆப்பிரிக்காவில் மட்டும் பயிராகின்றது. ஒரைசா சதைவாவில் இடம், பருமன், முதிரும் பருவம் முதலியவற்றைப் பொறுத்துப் பல வகைகள் உள்ளன.

நெல் முதன் முதல் எங்கே தோன்றியது என்பதைப் பற்றி உறுதியாக உரைக்க முடியாதெனினும், ஒரைசாசதைவா முதன்முதல் தோன்றியது இந்தியாவிலும் இந்தோ சீனாவிலுந்தான் என்பதில் ஐயமில்லை. இந்தியாவிலேயே அதன் காட்டுவகை காணப்படுகிறது. அதனுடன் அதன் பலவகைகள் இந்தியாவில் காணப்படுவனபோல வேறெங்கும் காணப்படவில்லை. இந்தியாவிலுள்ள காட்டுவகை அங்குள்ள பயிராகும் வகையை ஒத்திருக்கிறது. இக் காட்டுவகை காணப்படும் நிலப்பரப்பிலேயே பண்டைக்கால முதல் நெற்பயிர் செய்யப்பட்டு வருகிறது. இக்காட்டுவகையிலிருந்தே பயிர் செய்யும் வகை (ஒரைசா சதைவா) தோன்றியதாகக் கூறப்படுகிறது. இந்தியாவிலுங்கூட சென்னை இராச்சியத்திலும், ஒரிஸ்ஸா இராச்சியத்திலுமே ஏராளமான வகைகள் காணப்படுவதால் இவ்விராச்சியங்களே அரிசியின் பிறப்பிடம் என்று கூறலாம்.

ஒரைசா சதைவாவில் இந்திக்கா என்றும் ஜப்பானிக்கா என்றும் இரண்டு வகைகள் உண்டு. இந்திக்கா இந்தியா முதலிய அயன் நாடுகளிலும், ஜப்பானிக்கா ஜப்பான் முதலிய உப அயன் நாடுகளிலும் பயிராகின்றன. இந்திக்கா குறைந்த விளைவு தரும். ஆனால், தண்ணீர்த் தட்டு முதலிய வசதிக் குறைவுகள் ஏற்பட்டாலும் தாங்கும் ஆற்றலுடையது. ஜப்பானிக்கா மிகுந்த விளைவு தரும் ; உரமிட்ட அளவுக்கு விளையும்; உமியின் நிறை குறைவாயிருக்கும். ஜப்பானிக்காவை இந்திக்கா விளையும் இடங்களில் பயிரிட்டால் தக்க பயன் தருவதில்லை.

நெற்பயிர் செய்தல்: நெல் அயனமண்டலப் பயிராதலால் அதற்கு மிகுந்த வெப்பநிலையும் நீரும் தேவை. அது வளரும்போது 70-100° பா. வெப்பம் வேண்டும். மேட்டுப் பூமியில் 25-30 அங்குல மழையுள்ள விடத்தில் புன்செய்ப் பயிராகவும், பள்ளத்தாக்கானதும் 200 அங்குலம் மழை அல்லது அதற்கு மேற்பட்ட மழையுள்ளதுமான இடத்தில் நன்செய்ப் பயிராகவும் இது விளையும். இது மணல் சேர்ந்த குறு மண், குறு மண், களி, ஆழங்குறைந்த சரளை ஆகிய மண்களிலும், அமில மண், கார மண் ஆகிய மண்களிலும் பயிர் செய்யப்படுகிறது. நிலவளம், நீர்வளத்தைப் பொறுத்து இரண்டு மூன்று ஆண்டுகட்கு ஒரு தடவையாகவோ, அல்லது ஆண்டுக்கு இரண்டு மூன்று தடவைகளாகவோ பயிராகலாம். கடல் மட்டத்திலும், கடல் மட்டத்துக்குக் கீழும், கடல் மட்டத்துக்குமேல் 3000-5000 அடி உயரத்திலும் பயிர் செய்யலாம். சில வகைகள் கோடையிலும், சில வகைகள் குளிர்காலத்திலும் பயிராகும். சில 80 நாளிலும் சில 200 நாளிலும் விளையும். இவ்வாறு பலவகையான வேறுபாடுகள் இருப்பதனாலே ஏறக்குறைய எண்ணாயிரம் நெல் வகைகள் காணப்படுகின்றன.

இந்தியாவில் நெற்பயிர் : இந்தியாவில் பயிராகும் மொத்த நிலப்பரப்பில் 30% ஆகிய ஏழரைக் கோடி ஏக்கரில் நெற்பயிர் நடந்து வருகிறது. இந்தியாவிலேயே நெற்பயிராகும் நில அளவு மிகுதி. இங்குச் சராசரி ஆண்டு விளைவு 2.2 கோடி டன் அரிசி. பெரும்பாலும் கிழக்குக் கங்கைப் பள்ளத்தாக்கிலும், தென்னிந்தியாவிலும், வடகிழக்கு இந்தியாவிலும், கடற்கரைப் பகுதிகளிலுமே இது விசேஷமாகப் பயிராகின்றது. 80 அங்குல மழையுள்ள இடத்தில் இதுவே முதன்மையான பயிர். 30-80 அங்குல மழையுள்ள இடத்தில் முக்கியப் பயிர்களில் இதுவும் ஒன்று. 30 அங்குலத்துக்குக் குறைந்த மழையுள்ள இடத்தில் பாசன உதவிகொண்டும் குறைவாகவும் பயிரிடப்படுகிறது. சென்னை இராச்சியத்திலும், மேற்கு வங்காளத்திலும், அஸ்ஸாமிலும், பம்பாயிலும் சராசரி ஏக்கர் விளைவு 1000-1177 ராத்தலாகும். பீகார் முதலிய மற்ற இசாச்சியங்களில் ஏறக்குறைய 800 ராத்தலாகும். (1948 -51 புள்ளிகள்).

இந்திய மக்களுக்கு ஆண்டுதோறும் இரண்டரைக் கோடி டன் அரிசி தேவை. ஆனால் விளைவது இதில் ஏறக்குறைய 90% தான். எஞ்சிய 10% பிற நாடுகளிலிருந்து வரவேண்டும். ஆனால் முன்போல் இப்போது பர்மாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கில்லை. அதனால் இந்தியா நெற்பயிர் விளைவு விகிதத்தைப் பெருக்குவது இன்றியமையாது வேண்டப்படுவதாகும்.

நெற்பயிர் செய்யும் வகைகள்: நெற்பயிரானது நன்செய்ப் பயிர், புன்செய்ப் பயிர் என இருவகைப்படும். புன்செய்ப் பயிராக விதைத்தபோதிலும் பின்னர் மழை மிகுதியாகப் பெய்தபின் நன்செய்ப் பயிராக ஆவதுமுண்டு. நெற்பயிர்க் காலம் முழுவதிலும் போதுமான நீர் கிடைக்கும் தாழ்ந்த பூமிகளில் விளைவது நன்செய்ப் பயிர். இந்தப் பயிருக்கு 140-170 நாட்களில் விளையும் நெல் வகைகளை விதைப்பர். புன்செய்ப் பயிர் எப்போதும் மழை நீர் கொண்டே விளையவேண்டியது. அதற்கு 90-120 நாளில் விளையும் நெல் வகைகளை விதைப்பர். நன்செய்ப் பயிர் நீர்வளம் பெறுவதால், புன்செய்ப் பயிரிலும் மிகுதியாக விளைவு தரும்.

நெல் விளையும் பகுதிகளில் அதை ஆண்டு முழுவதும் விதைத்தாலும், பெரும்பாலான இடங்களில் விதைப்பதற்கு மூன்று பருவங்களே ஏற்றவை. 'சம்பா' என்று தென்னாட்டிலும்,'ஆமன்' என்று வடநாட்டிலும் சொல்வது, ஜூன் ஜூலையில் விதைத்து நவம்பர் டிசம்பரில் அறுவடையாகும். கார், குறுவை என்று தமிழ்நாட்டிலும், ஆவுஸ், பியாலி என்று வடநாட்டிலும் சொல்வது மே ஜூனில் விதைத்துச் செப்டம்பர்- அக்டோபரில் அறுவடையாகும். பிசானம், நவரை என்று தமிழ்நாட்டிலும், போரோ, தாளுவா என்று வடநாட்டிலும் சொல்வது நவம்பர் டிசம்பரில் விதைத்து, மார்ச்சு ஏப்ரலில் அறுவடையாகும்.

சம்பாப் பயிரை நாற்றுவிட்டு நடுவார்கள்; கார் காலத்தில் 90-110 நாளில் விளையும் நெல் வகைகளை விதைப்பர். இந்த இரண்டு வகை நெல்லும் விளையும் பகுதிகள் சிலவே.

பயிர்செய் முறைகள்: நெல்லுக்கு மிகுந்த நீரும் ஈரமான தட்பவெப்ப நிலையும் வேண்டும். சம்பாப் பயிரைத் தென்மேற்குப் பருவமழை தொடங்கினதும் குளிர்ந்த பகுதிகளில் விதைக்கவும், மழை மிகுந்த இடங்களில் நடவும் செய்வர். நடவு நட்டுப் பயிர் செய்வதே விதைத்துப் பயிர் செய்வதைவிட மிகுந்த விளைவு தரும். விரைவில் விளையும் வகைகளை விதைப்பர். நீண்ட நாள் சென்று விளையும் வகைகளை நடுவர். விதைப்பதானால் ஏக்கருக்கு 80-100 ராத்தலும், நடுவதானால் ஏக்கருக்கு 30-40 ராத்தலும் வித்துத் தேவையாகும்.

நாற்றங்கால்: விதைப்பதற்குமுன் நிலத்தில் சாணமும் தழையுமாக உரமிட்டுப் பண்படுத்தி, ஏக்கருக்கு 400-500 ராத்தல் வித்தை நெருக்கமாக விதைப்பர். உண்டாகும் நாற்றை 13-15 ஏக்கர் நிலத்தில் நடலாம். முப்பது நாளிலிருந்து ஐம்பது நாள் வரைக்கும், நெல்வகையின் வயதைப் பொறுத்து நாற்றைப் பிடுங்கி நடுவர். சில பகுதிகளில் நெல்லை ஒருநாள் ஊறவைத்து அதன்பின் விதைத்து நீர் பாய்ச்சுவர். இந்த முறையை மழை பெய்யக்கூடிய இடங்களிலும் பாசன வசதிகள் உள்ள இடங்களிலும் மட்டுமே கையாளலாம்.

நிலத்தைப் பண்படுத்தல்: நிலத்தில் வரப்பை உயரமாக்கி, நீர் பாய்ச்சிப் பன்முறை உழுது சேறாக்கி, நாற்றை இரண்டு மூன்றாகச் சேர்த்து 6-9 அங்குல தூரத்தில் நடுவர். நீர் எப்போதும் நிலத்தில் நின்று கொண்டிருக்கவேண்டும். இடையிடையே பழைய நீரை வடித்துவிட்டுப் புது நீரைப் பாய்ச்சுவர். நட்டது முதல் அறுக்கும்வரை 60-70 அங்குல மழை தேவை யாகும்.

களை எடுத்தல்: விதைத்துப் பயிராகும் பூமியில் களை மிகுந்து தோன்றும். இரண்டு மூன்று தடவை களை எடுப்பர். சில பகுதிகளில் விதைத்து இரண்டு மாதமானதும் 2-3 அங்குல நீர் நிற்கும்போது சிறு கலப்பை கொண்டு உழுவர்; பெண்கள் ஏரின்பின் சென்று நாற்றைச் சீர் செய்வர். இந்த முறையில் களையும் நீங்கும்; பயிரும் நெருக்கம் குறையும்.

அறுவடை: கதிர் முதிர்ந்ததும் தாள் பழுத்துச் சிறிதே பசுமையாயுள்ள வேளையில் அறுவடை யாகும். அறுத்த கதிர்கள் இரண்டு மூன்று நாள் வயலில் கிடந்து உலர்ந்தபின் எடுத்துக் கொண்டுபோய்ச் சூடடிப்பர். சில பகுதிகளில் காளைகளைக் கொண்டு சூடடிப்பர். சில பகுதிகளில் தாள்களைத் தரையிலோ பலகையிலோ அடிப்பர்.

அரிசியைச் சேமித்தல் : சூடடித்துத் தூய்மை செய்தபின் நெல்லை உலர்த்தி, மண், வைக்கோல், மூங்கில்பத்தை, பருத்திவளார், சோளத்தட்டை முதலியவற்றால் செய்த குதிர்களில் சேமித்து வைப்பர். ஈரத்துடன் சேமித்தால் நெல்லில் பூச்சி விழும். பூஞ்சாணம் பிடிக்கும். சிறிது காலம் சேமித்த பின்னரே உண்ணலாம். சேமித்த நெல்லில் சில மாறுதல்கள் ஏற்படுகின்றன. அந்த அரிசியே வேகும்போது மிகுந்த நீர் ஏற்று, மிகுந்த நேரம் வெந்து குழையாமலும், விரைவில் உலர்ந்து கட்டியாகாமலும் இருக்கும்.

சிறந்த நெல் வகைகள் : இந்தியாவில் சராசரி விளைவு குறைவாதலால் மிகுந்த விளைவு தரக்கூடிய நெல் வகைகள் உண்டாக்குவதற்கு ஆராய்ச்சிகள் நடைபெற்றதன் பயனாக 284 புது வகைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நீர்மிகுதி, நீர்வறட்சி, நோய், பூச்சி ஆகியவற்றை எதிர்க்கக் கூடிய ஆற்றலுடையனவாயும் மிகுந்த விளைவும் ஊட்டமும் தருவனவாயுமுள்ள வகைகளை உண்டாக்க முயன்று வருகின்றனர்.

உரமிடல்: இந்தப் புது வகைகளும் உரம் நிறைய இட்டாலே மிகுந்த விளைவு தரும். 3000 ராத்தல் அரிசியும் 3000 ராத்தல் வைக்கோலும் தரும் நிலம் 48 ராத்தல் நைட்ரஜனையும், 23 ராத்தல் பாஸ்பாரிக அமிலத்தையும், 41 ராத்தல் பொட்டாஷையும் பயன் படுத்திக் கொள்கிறது. இந்தியாவிலுள்ள நிலங்களில் பொட்டாஷ் குறைவில்லை. நைட்ரஜன் மிகவும் குறைவு.

தேவையான நைட்ரஜனின் அளவு, கரிம உரங்கள், கரியற்ற உரங்கள் ஆகியவற்றின் தராதரங்கள், உரமிட வேண்டிய காலமும் முறையும், அம்மோனியம் சல்பேட்டு இடைவிடாது போடுவதால் நிலம் பெறும் வளத்தின் அளவு ஆகியவற்றைக் குறித்து ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. நட்டு ஒரு திங்கள் ஆனபின் 100-200 ராத்தல் அம்மோனியம் சல்பேட்டைப்போட்டால், ஏக்கருக்கு 300-500 ராத்தல் நெல் கூடுதலாகக் கிடைக்கும். கரிம உரங்களையும் கரியற்ற உரங்களையும் தக்க வண்ணம் போட்டால் நிலத்தின் வளம் கெடாமலே மிகுந்த விளைவைப் பெறலாம்.

செம்பைச் செடியையாவது சணற் செடியையாவது பயிராக்கி, நாற்று நடுமுன் உழுது புதைத்துவிட்டால், இதுவே மிகவும் குறைந்த செலவில் நல்ல பயன் தரும் உரமாகும். இந்த முறை விரைவாகப் பரவிவருகிறது.

இரண்டு முறைப் பயிர்: பொதுவாக ஒரு முறை விளைவு எடுத்ததும் பூமியைத் தரிசாகப் போட்டுவிடுவது வழக்கம். சில பகுதிகளில் நெல் அறுவடை செய்தபின் பச்சைப் பயறு, உளுந்து, கொள்ளு, கடலை போன்ற விரைவில் உண்டாகும் அவரைக் குடும்ப வகைகளைப் பயிராக்குவர். இவ்வாறு நெல்லையும் இவ்வவரை வகைகளையும் மாறி மாறிப் பயிரிடுவது நெற்பயிருக்கு நல்லதாதலால் இந்த முறையைக் கையாள்வது நல்லது. மிகுந்த குளிர் இல்லாத பகுதிகளில் ஆண்டில் இரண்டு முறை நெற்பயிர் விளைவிக்கப்படும். சென்னை இராச்சியத்திலும், மற்றத் தென்னிந்திய இராச்சியங்களிலும், பாசனவசதியுள்ள பகுதிகளில் நெல்லையும், நிலக்கடலையையும் மாறி மாறிப் பயிரிடுதல் நன்றாம். இவ்வாறு சிறந்த உரங்களையும் மாறி மாறிப் பயிரிடும் முறைகளையும் பயன்படுத்தினால் நெல் விளைவைப் பெருக்கலாம்.

சென்னையில் நெற்பயிர்: சென்னை இராச்சியத்தில் நெற்பயிராகும் நிலம் ஒரு கோடியே மூன்று லட்சம் ஏக்கர். அதில் விளையும் அரிசி 71 இலட்சம் டன்; அதனால் சராசரி விளைவு ஏக்கருக்கு 1133 ராத்தல் அரிசியாகும். நெல் பயிராகும் நிலத்தில் 90%-ல் நடவு முறையில் பயிர் செய்யப்படுகிறது. 75% நிலத்திற்கு வாய்க்கால், குளம், கிணறு முதலியவற்றிலிருந்து நீர் பாய்ச்சப்படுகிறது.

நெற்பயிர் நடைபெறும் பகுதிகளில் (1) கோதாவரி, கிருஷ்ணா, காவேரி தீரங்கள் பாசன வசதியுடையவை. (2) கிழக்குக் கடற்கரை மாவட்டங்கள் மழையும் கிணற்று நீரும் கொண்ட விவசாயம் உடையது. (3) நடு மாவட்டங்களும், தென் மாவட்டங்களும், மழையும் குளத்துநீரும் கொண்டு விவசாயம் நடத்துபவை. (4) மேற்குக் கடற்கரையில் 100 அங்குல மழைக்கு மிகுதியாதலால் முற்றிலும் மழை நீர் கொண்டே பயிர் செய்வர்.

நீர் வசதியைப் பொறுத்து ஆண்டில் ஒரு முறையோ இரண்டு முறையோ பயிரிடுவர். சில இடங்களில் மூன்று முறை நடைபெறுவதுண்டு. சில இடங்களில் மட்டுமே நெல் அறுத்தபின் அவரை வகைகளைப் பயிரிடுகின்றனர். சில பகுதிகளில் நெல் பயிரிடுவதற்கு முன்போ அல்லது பின்போ கேழ்வரகையாவது கம்பையாவது பயிரிடுவர். கோதாவரி, கிருஷ்ணா, கோயம்புத்தூர், திருச்சி மாவட்டங்களில் மேட்டுப் பூமிகளில் நெல் பயிரிட்டபின் மஞ்சள் கரும்பு முதலியவைகளைப் பயிரிடுகிறார்கள்.

வட ஆர்க்காடு, சேலம், தென் ஆர்க்காடு, செங்கற்பட்டு ஆகிய மாவட்டங்களில் கிணற்றிலிருந்து நீர் இறைத்தே நெல்லைத் தோட்டப் பயிராக உண்டாக்குகிறார்கள். கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணையாறு, காவேரி, பெரியாறு, தாமிரபரணி தீரங்களில் பாசன முறையிலேயே பயிராகிறது. நீர் பாய்ச்சிப் பயிர் செய்வது வேறு பல் பகுதிகளிலும் நடைபெறுகின்றது.

சென்னை இராச்சியத்தில் நெற்பயிர் செய்யும் பருவங்கள் மூன்று : (1) தென்மேற்குப் பருவமழைக் காலம் (ஜூன்- செப்டம்பர்), (2) வடகிழக்குப் பருவமழைக் காலம் (அக்டோபர்-ஜனவரி), (3) கோடைக்காலம் (பிப்ரவரி-மே).

விசேஷ விவசாய முறைகள்: (1) ஊடு விவசாயம் : தஞ்சாவூர் மாவட்டத்தில் மூன்று திங்கட் பயிராகிய குறுவை நெல்லை ஏழு திங்கட் பயிராகிய ஓட்டடன் நெல்லுடன் ஒன்றுக்கு நாலாகக் கலந்து, நாற்று உண்டாக்கி, 25 நாள் வயதான நாற்றை, பல நாற்றுக்களை ஒன்றாகச் சேர்த்து ஆறு அங்குலத் தொலைவில் நடுவார்கள். குறுவையைச் செப்டம்பர் அக்டோபரில் அறுத்துவிட்டு, நிலத்தைக் கிளறிவிட்டு, அதன் அரிதாளை மண்ணில் புதையச் செய்வர். ஒட்டடனைப் பிப்ரவரியில் அறுப்பர்.

(2) உப்பு நிலத்துப் பயிர், (a) மலையாளத்தில் 'கைப்பாடு ' முறை: மேற்குக் கடற்கரையில் ஆறுகள் கடலில் சேருமிடங்களில் உப்புநீர் எதிர்த்து வருவதால் அங்குள்ள நீரும் உப்புடையது. மார்ச்சுத் திங்களில் மண்ணைக் குவித்துவைத்து, ஜூன் திங்களில் பருவமழை ஆரம்பித்தபின், சில குறிப்பிட்ட நெல்வகைகளை முளைக்கவைத்து விதைப்பார்கள். நாற்று 15 அங்குல உயரம் வளர்ந்ததும் மண் குவியலைச் சிறு துண்டுகளாக வெட்டி விட்டு, அவற்றில் நாற்றுக்களை நட்டு, அவை 9 அங்குலத் தொலைவில் இருக்கும்படி செய்து நீர் பாய்ச்சி வருவார்கள். நல்ல விளைவு காணும்.
(b) கடற்கரை உப்பு நிலங்கள்: கடல் நீர் பெருகும் நிலங்களில் அணைபோல் கட்டி, வந்த கடல் நீர் போக வழிவிட்டுப் பின் நல்ல நீர் பாய்ச்சி,உப்பைக் கரைந்து போகுமாறு செய்வர். இத்தகைய நிலங்களில் வண்டல், கரிம உரங்கள், நகரக் கலப்புரம் முதலியவற்றை நிறையப்போட்டுப் பண்படுத்துவர். இத்தகைய நிலங்களுக்குச் சிலாசத்துப் போன்ற ரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துவது நல்லது. உவர்கொண்டான், களர்சம்பா, தெல்லதோக என்னும் நெல் வகைகளைப் பயிரிடுதல் பயன் தருவதாகும்.

(3) மேற்குக் கடற்கரை கோல் முறை:- மேற்குக் கடற்கரைப் பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதுண்டு. கடல் நீர் வராதபடி அணை போட்டு, வந்த நீரை இறைத்துவிட்டுச் 'சீரா' என்னும் மூன்று திங்கட் பயிரை, விதையை முளைக்க வைத்து, ஜனவரியில் விதைத்து, இரண்டு மூன்று முறை நீர் பாய்ச்சுவர்.

(4) ஆழ்ந்த நீர் நெல் வகைகள்: மேற்குக் கடற்கரையிலுள்ள கரிங்கோரா அல்லது பெட்லா என்னும் பகுதியில் மழை நீர் மட்டம் குறையும் ஆகஸ்டுத் திங்களில் நீண்ட காலக் குட்டாடன் நெல்லைப் பயிர் செய்து ஜனவரியில் அறுப்பர்.

நெல் அரைத்தல்: நெல்லை அரைத்து அரிசியாக்கும்போது, அரிசி சேதப்படாமலும், தூயதாகவும், ஊட்டப் பொருள்கள் கெட்டுப் போகாமலும் இருத்தல் வேண்டும். அரிசியாக்குவதற்குப் பழைய முறை கை உலக்கையாலோ, ஏற்ற உலக்கையாலோ குத்துவதாகும். ஏற்றத்தை வடநாட்டார் தேங்கி என்பர். இக்காலத்தில் எந்திரங்கள் ஏற்பட்டுள்ளன. அவை குத்தும் எந்திரம் என்றும், அரைக்கும் எந்திரம் என்றும் இரண்டு வகைப்படும். அரைக்கும் எந்திரமே குத்தும் எந்திரத்தை விட மிகுந்த வேலைத்திறமையுடையது. நாட்டில் விளையும் நெல்லில் 60-70% கையால் குத்தப்படுகிறது. இந்த முறையில் கிடைக்கும் அரிசி சேதமடைவது குறைவு. அதில் ஊட்டப் பொருள் மிகுதி.

இந்தியாவின் தெற்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் புழுங்கலரிசியும், வட இந்தியாவில் பச்சரிசியும் விரும்பப்படுகின்றன. புழுங்கலரிசி செய்வது பண்டைக் காலமுதல் நடந்து வருவது. அப்படிச் செய்வதால் உமி நீக்குவது எளிது ; அரிசி உடைவதில்லை ; அரிசி குறைவாகவே சேதமாகும் ; அரிசியில் பூச்சிகள் எளிதில் பற்றுவதில்லை. பச்சரிசி தயாரிக்கும்போது கருவும் தவிடும் பிரிந்து விடுவதால் அவற்றிலுள்ள வைட்டமின் பீ, புரோட்டீன்கள், தாதுப் பொருள்கள் ஆகிய முக்கிய ஊட்டப் பொருள்கள் போய்விடுகின்றன. அரிசியைப் புழுக்கும்போது இப்பொருள்கள் அரிசியின் உட்பாகத்திற்குச் சென்றுவிடுகின்றன.

புழுங்கலரிசி செய்வதற்காக நெல்லை 12-24 மணி அளவு நீரில் ஊறவைத்துப் பின் வேகவைத்துப் பின்னர் உலர்த்திக் குத்துவார்கள். எந்திரம் வைத்திருக்கும் சிலர் நீரில் வேகவையாமல் நீராவியில் வேகவைப்பார்கள். வேகவைக்கும் முறை வேறுபாட்டினால், சில முறைகளில் வேகவைத்துக் கிடைக்கும் அரிசி நிறம் குன்றியதாயும் நாற்றமுடையதாயுமிருக்கும். இந்தக்கெட்ட குணங்கள் உண்டாகாதவாறு புழுக்குவதற்காகச் சில புது முறைகளை வகுத்துள்ளனர். ஆயினும் ஒருமுறை நெல் ஊறிய நீரை மறுபடியும் ஊறவைக்க பயன்படுத்தாதிருந்தால் போதும்; இந்தக் கெட்ட குணங்கள் தோன்றா. எந்திரத்தால் அரைத்த அரிசிக்கு வைட்டமின்களும் தாதுக்களும் ஊட்டிப் போஷணை உடையதாகச் செய்யலாம்.

அரிசியை வேகவைத்துச் சோறாக்கி உண்பதுடன், அவல், அரிசிப்பொரி, நெற்பொரி முதலிய வகையாகவும் செய்து உண்பதுண்டு.

(1) அவல்: நெல்லைப் பத்து நிமிஷம் கொதிநீரில் ஊறவைத்து எடுத்து,10 மணிநேரம் குளிர்ந்த நீரில் ஊற வைத்துப் பின் நீரை வடித்துவிட்டு மண் சட்டியில் போட்டு வறுத்தால் நெல் வெடிக்கும். அதை உரலில் போட்டு இடித்துப் புடைத்தால் அவல் கிடைக்கும். அவல் மெல்லியதாக இருந்தால் எளிதில் ஊறும்; உண்ண உதவும். அவல் செய்ய வெள்ளை அரிசியையும் சிவப்பு அரிசியையும் பயன்படுத்தலாம். அவலைப் பலவிதமாக உண்ணலாம்; நல்ல சத்துள்ள உணவு.

(2) நெற்பொரி: பெருநெல்வகையில் பழைய நெல்லை நன்றாக உலர்த்தி எடுத்து, அடுப்பில் காயும் சட்டியிலுள்ள மணலில் சிறிது சிறிதாக இட்டுக் கிளறினால் நெல் வெடித்து, அரிசி பருத்து வெளியே சிதறும். அதைப் புடைத்துச் சுத்தம் செய்தால் பொரி கிடைக்கும். ஒரு படி அரிசி கிடைக்கும் நெல்லிலிருந்து 8 படி பொரி கிடைக்கும். இதைக் கொண்டு செய்யும் கஞ்சி நோயாளிகளுக்கு ஏற்றது.

(3) அரிசிப்பொரி : நன்றாகப் புழுக்கிய நெல்லிலிருந்து கிடைக்கும் அரிசியுடன் சிறிது உப்புச் சேர்த்து நெற்பொரி செய்வதுபோல் செய்தால் அரிசிப்பொரி கிடைக்கும். இது அரிசி உருவமாகவும் உப்பிக்கொண்டு மிருதுவாகவும் இருக்கும். ஒரு படி அரிசி எட்டுப்படி பொரியாகும்.

அரிசியின் ஊட்டம்: அரிசியானது கோதுமை, சோளம் முதலிய தானியங்களைப் போலவே ஊட்டமுடையதேயாயினும், தவறான முறையில் நெல்லை அரைப்பதாலும், அரிசியை வேகவைப்பதாலும் ஊட்டச் சத்துக்களில் பெரும்பகுதி கெட்டுப்போகிறது. அரிசியைத் தீட்டும் அளவுக்கும் அதன் ஊட்டம் குறைந்துவிடுகிறது.

புழுங்கலரிசியைக் கைக்குத்தல் முறையில் தயார் செய்தால் ஊட்டங் குறைவதில்லை. அந்த அரிசியை நீரில் களையும்போதும் ஊட்டங் கெடுவதில்லை. அரிசியை வேகவைத்துக் கஞ்சியை வடித்தாலும் வைட்டமின் பீ கெட்டுவிடும். பருமனாயும் சிவப்பாயுமுள்ள அரிசி வகைகள் மற்ற வகைகளைவிட மிகுந்த ஊட்டம் உடையன.

நெற்பயிர் நோய்கள் பல காளான்களால் உண்டாவன. அவற்றுள் முக்கியமானவை இரண்டு.

1. கொள்ளை நோய்: பிரிகுலேரியா (Piricularia) மிகுந்த கேடு விளைக்கும். சென்னை இராச்சிய விவசாய இலாகா ஆராய்ச்சியின் பயனாக இந்நோயை எதிர்க்கக் கூடிய இரண்டுவகை நெல் (Co. 25; Co.26) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

(2) ஹெல்மிந்தோஸ்போரியம் (Helminthosporium) நோய் விளைவைக் குறைத்துவிடும். 1% போர்டோ கலவையைத் தெளித்து நோயைத் தடுக்கலாம்.

நெற்பயிரில் பூச்சிகள் விழுந்தும் கேடு செய்கின்றன. இவற்றுள் பலவற்றை டீ.டீ.டி. (D. D. T.) மருந்தைத் தெளித்துக் கொன்று சேதத்தைக் குறைக்கலாம். இவை தவிர, எலியும் நண்டும் நெற்பயிருக்குக் கேடு விளைக்கும்.

நெல்லை வண்டும் அந்தும் கெடுத்துவிடும். அதனால் அதை அடிக்கடி உலர்த்தவும், அதைப் போட்டிருக்கும் குதிர்களில் டீ.டீ.டி. மருந்து தெளிக்கவும் வேண்டும்.

அரிசி வியாபாரம்: உலகத்தில் விளையும் பத்தரைக் கோடி டன் அரிசியில் ஒரு சிறு பகுதியே வியாபாரமாகின்றது. உலகத்தில் அரிசி உண்பவர்க்குப் போதுமான அரிசி வேண்டுமானால் இன்னும் ஆண்டு தோறும் 136 இலட்சம் டன் கூடுதலாக விளைவிக்கப்பட வேண்டும்.

உலகத்தில் நெல் விளையும் நாடுகளுள் இந்தியாவிலேதான் அது மிகுந்த நிலப்பரப்பில் விளைவிக்கப்படுகிறது. ஆயினும், உண்பதற்குப் போதுமான நெல் கிடையாதிருக்கும் நாடுகளுள் பெரியது இந்தியாவே. அதனால், இந்தியா வேண்டிய நெல்லை அன்னிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யவேண்டியதாக இருக்கிறது. ஆனால் இறக்குமதி செய்யாமல் இந்தியாவிலேயே விளைவிப்பதே நல்லது. ஆண்டுதோறும் 32 இலட்சம் டன் அரிசி கூடுதலாக விளைவிக்கவேண்டும். அதற்காகக் கூடுதலான நிலத்திலும் பயிர் செய்யவேண்டும்; கூடுதலாக விளையும்படியும் செய்யவேண்டும். கூடுதலான நிலத்தில் விளைவிக்க விரும்பினால், பாசன வசதிகளைப் பெருக்கவும் டிராக்டர்களைக் கொண்டு தரிசுகளைப் பண்படுத்தவும் வேண்டும். கூடுதலாக விளையச் செய்ய விரும்பினால், பாசன வசதி செய்வதுடன், சிறந்த வகை நெல்லை உண்டாக்கிக் கொடுக்கவும் உரங்களை மிகுதியாகப் பயன்படுத்தவும் வேண்டும். என். பா.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அரிசி&oldid=1454289" இலிருந்து மீள்விக்கப்பட்டது