கலைக்களஞ்சியம்/அர்பன்
அர்பன்: ரோமன் கத்தோலிக்கப் போப் ஆண்டவர்களில் எட்டுப் பேருக்கு இப்பெயருண்டு. அவர்களில் தலையானவர்கள் மூவருக்குத் தனிக் கட்டுரைகள் தரப்பட்டுள்ளன.
அர்பன் II பிரெஞ்சுக்காரர்; 1088 முதல் 1099 வரை போப்பாக இருந்தவர். சிலுவைப் போர்களை இவர் ஆதரித்தார்; ஆயினும் கிறிஸ்தவர்கள் எருசலேமைக் கைப்பற்றுவதைக் காணுமுன் இறந்து போனார்.
அர்பன் VI 1379 முதல் 1389 வரை போப்பாக இருந்தார். இவர் காலத்தில் போப்பின் இருப்பிடம் அலிக்னானிலிருந்து ரோமிற்கு மாற்றப்பட்டதை எதிர்த்துப் பிரெஞ்சு பிஷப்புக்கள் VII-ம் கிளெமன்ட் என்பவரை அலிக்னானில் போப்பாக நியமித்துக் கொண்டார்கள். இப்பிளவு சுமார் 50 ஆண்டுகளுக்குத் தொடர்ந்திருந்தது. VII-ம் கிளமென்டை அர்பன் சமயவரம்பினின்று நீக்கினார். 1381-ல் சார்லஸ் என்னும் துராசோ மன்னனால் சிறையிடப்பட்ட VI-ம் அர்பன் ஜெனோவாவிற்குத் தப்பியோடினார். 1389-ல் ஒரு கோவேறு கழுதை மீதிருந்து கீழே விழுந்ததால் உண்டான காயங்களால் இறந்தார்.
அர்பன் VIII (1568-1644) 1623 முதல் 1644 வரை போப்பாக இருந்தார்; உற்றார் உறவினர்களுக்கு அதிகச் சலுகை காட்டியதாக இவர்மேல் புகார் ஏற்பட்டது. பிரெஞ்சு கார்டினலும், அரசியல் நிபுணருமான ரிஷலூ இவர் கொள்கைகளை எதிர்த்தார். முப்பது ஆண்டுப்போரில் இவர் பிரான்சை யாதரித்தார்.