கலைக்களஞ்சியம்/அலங்கார சாஸ்திரம்
அலங்கார சாஸ்திரம் : அலங்காரம் என்ற சொல்லிற்கு நன்றாய்ச் செய்வது, அழகுபடுத்துவது என்று பொருள் ; உடலையும் உருவத்தையும் அழகுபடுத்துவது போலவே, சொல்லை அழகுபடுத்துவதற்கும் அலங்காரம், அணி என்ற பெயர்கள் ஏற்படுகின்றன. சமஸ்கிருத இலக்கியத்தில் முதனூலாயிருக்கும் ரிக் வேதம் முழுவதிலும் சொல்லை அழகுபடுத்தும் முறை கள் கையாளப்படுகின்றன; சொல்லினிமை பயக்கும் ஓசையணிகளும் (சப்த அலங்காரம்) பொருளணிகளும் (அர்த்த அலங்காரம்) காணப்படுகின்றன.
சமஸ்கிருதத்தில் முதற் காப்பியம் என்று கருதப்படும் வால்மீகி ராமாயணத்தில் காப்பிய முறைகளும் அணிகளும் உணர்ச்சிகளும் மலிந்து கிடக்கின்றன. முக்கியமாய், இரு கிரவுஞ்சப் பறவைகள் விளையாடிக்கொண்டிருந்தபோது, அவற்றுள் ஒன்றை அடித்து வீழ்த்திய வேடனின் கொடுஞ்செயலைக் கண்டு மனம் உருகி, வால்மீகி ரிஷி எதைச் சொன்னாரோ, அது காவிய இலக்கணங்கள் எல்லாம் பொருந்தியதான முதல் சுலோகமாக ஏற்பட்டது என்ற கதையும் அலங்கார ஆராய்ச்சியில் தலையமிசமாய் விளங்குகிறது. காப்பியத்திற்கு உயிரூட்டும் முக்கியமான தத்துவம், ரசம், உணர்ச்சி என்று ஆராய்ச்சியாளரால் வகுக்கப்பட்ட கொள்கைக்கு மூலமும் இராமாயணத்திலேயே குறிக்கப்பட்டதாய்க் கருதப்படுகிறது. இராமாயணத்தைப்போலவே காப்பியமாய்க் கருதப்படும் மகாபாரதத்திலும் சொல்லின் இனிமை, பொருள் பொலிந்திருக்கும் தன்மை முதலிய குணங்களை வியாசர் கூறுகிறார். கி. பி. 4ஆம் நூற்றாண்டிற்கு முன்பே அலங்கார சாஸ்திரத்திற்கு இலக்கான பெருங்காப்பியங்களும், அதற்கு உறுப்புக்களான சில அமிசங்களும் காணப்படுகின்றன.
வேதத்திற்குப் பொருள் உரைத்தவருள் ஒருவரான யாஸ்கர், நிருக்தம் என்ற நூலில் உவமையணியைக் குறிக்கும் சொற்களையெல்லாம் தொகுத்திருப்பதோடு, தம்முன்னிருந்த, கார்க்கியர் கூறிய உவமையின் இலக்கணத்தையும் பிரிவுகளையும் தந்திருக்கிறார் ; யாஸ்கர் எழுதியது சுமார் கி. மு. 700-ல். பின் கி. மு. 500 அளவில் சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் வகுத்த பாணினி, உவமையணியின் உறுப்புக்களைச் சொல்லியிருக்கிறார். வேதாந்த சூத்திரங்களில் வேதவாக்கியங்களை ஆராயும் போது உவமை, உருவகம் என்ற இரண்டு அணிகளும் கூறப்படுகின்றன. பரத முனிவர் 36 அத்தியாயங்கள் கொண்ட தம் நாட்டிய சாஸ்திரத்தில், 15 முதல் 18ஆம் அத்தியாயம் வரையில் அலங்கார சாஸ்திர விஷயங்களை விளக்குகிறார். பின்னால் சிறப்புற்ற சாந்தமென்ற ஒன்பதாவது ரசத்தைப் பரதர் குறிப்பிடாது, சிருங்காரம், வீரம், ஹாஸ்யம், ரௌத்திரம், கருணம், பயானகம், அற்புதம், பீபத்ஸம்' என்ற எட்டு ரசங்களைச் சொல்லுகிறார். பின்னர் இவ்வெட்டிற்கும் உரியனவாக எட்டு உறுதியான மனோநிலைகள், இம்மனோ நிலையில் ஒருவர் இருக்கும்போது ஏற்படும் உணர்ச்சி அலைகளான 33 சஞ்சாரி பாவங்கள், இந்நிலைகளிலிருக்கும்போது உணர்ச்சி மேம்பாட்டால் உடலில் ஏற்படும் மாறுபாடுகளான 8 சாத்வீக பாவங்கள் ஆகிய இவற்றை வருணிக்கிறார். தொல்காப்பியத்திலுள்ள மெய்ப்பாட்டியலையும் பரதநாட்டிய சாஸ்திரத்தின் இப்பகுதிகளையும் ஒத்து ஆராயலாம். பரதர் சொல்லும் அணிகளுள் சொல்லணி, பொருளணி இரண்டும் உண்டு. சொல்லணியில் பல பிரிவுகளுடன் யமகமும், பொருளணிகளுள் உவமை, உருவகம், தீபகம் என்ற மூன்றும் உதாரணங்களுடன் விளக்கப்படுகின்றன. பரதருக்குப் பிறகு எழுதப்பெற்ற இரண்டு அலங்கார நூல்கள் நமக்குக் கிடைத்துள்ளன ; இவை தனியாக அலங்காரத்திற்கென நாட்டியத்தை விலக்கிக் காப்பியத்தை மட்டும் வருணிக்கும் முதனூல்கள். இவை பாமகர் எழுதிய காவ்யாலங்காரம், தண்டி எழு திய காவ்யாதர்சம் என்பன. இவ்விரு ஆசிரியரும் பின்னெழுந்த ஆசிரியர்களால் அலங்கார சாஸ்திரத்தின் மூல புருஷர் என்று போற்றப்படுபவர்கள்.
பாமகர் தம் நூலின் பெயருக்கேற்ப, இலக்கணமும் உதாரணமும் கூறி, அலங்காரங்களை விரிவாய் விளக்குகிறார். சப்த-அலங்காரத்தில் அனுப்ராசம், யமகம் இரண்டையும், அந்த அலங்காரத்தின் 7 வகைகளையும் சொல்லுகிறார். 37 அணிகளையும் உருவகம், தீபகம், உவமை என்று பரதர் தந்த மூன்றிலிருந்து துவக்கி, விளக்கி, இவ்வணிகள் பரதருக்குப்பின் வளர்ந்த முறையை இவர் நன்கு சுட்டிக் காட்டுகிறார். இவற்றைத் தவிர 3 அணிகளைப் பிறர் கூறுவதாயும், தாம் அவற்றை அணிகளாவதற்கு வேண்டிய எழிலற்றவையாகக் கருதுவதாயும் சொல்லுகிறார். பண்டைய அலங்கார நூல்களில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியவை, ரசமும் உணர்ச்சியும். இவற்றை நாடகத்தின் மூலம் நடிகர் நேரே நமக்குத் தருவதால், இவை நாடகத்திற்கே இயற்கையாக உரியவை எனலாம். ஆனால் நாம் படித்தே சுவைக்கப்படுவதான காப்பியத்திலோ அச்சுவைகளை யெல்லாம் சொல்லின் மூலமே நாம் அனுபவிக்கவேண்டி யிருப்பதால், சுவை(ரசம்) காப்பியத்தில் சொல்லிற்கு அழகை ஏற்று உறுப்பாக அமையும். ஆதலால் எட்டு அல்லது ஒன்பது சுவைகளும் ரசவத்அலங்காரம் என்ற அணிவகுப்பைச் சாரும். அணிகளுக்குப் பொதுவாயுள்ள இலக்கணம் என்ன என்பதையும் பாமகர் கூறுகிறார். உலகில் நாம் பேசும் பேச்சு மிகவும் சாமானியமான முறையில் இருக்கிறது ; காப்பியத்திலோ அதே சொல்லும் பொருளும் தனித்த அழகுடன் காணப்படுகின்றன. ஆகையால் அலங்காரம் என்பது உலக இயற்கையைத் தாண்டிக் கவிகளால் மொழியில் அழகுபட ஏற்றப்படுவது எனலாம்.
பாமகர் தமது நூலைக் கி. பி. 700 அளவில் எழுதியிருக்கலாம். அவருடைய நூலுடன் நெருங்கிய தொடர்பும், ஒற்றுமை வேற்றுமைகளையும் கொண்ட, நூல் தென்னிந்தியாவில் காஞ்சியில் பல்லவருடைய ஆதீனத்தில் தண்டி எழுதிய காவ்யாதர்சம். தென்னாட்டில் இலங்கைவரைக்கும் அலங்காரத்திற்கு முதனூலாசிரியராக இவர் கொண்டாடப்பட்டது, இவருடைய நூலைத் தழுவித் தமிழில் எழுந்த தண்டியலங்காரம் என்ற நூலிலிருந்தும், கன்னடத்தில் எழுந்த கவிராஜமார்க்கத்திலிருந்தும், சிங்களத்தில் எழுந்த ஸிய-பஸ்-லகார என்ற நூலிலிருந்தும் தெளிவாகும். காவ்யாதர்சம் 4 அத்தியாயங்களைக்கொண்டது. முதலில் காவியத்தின் பொது விலக்கணம் பிரிவு முதலியனவும், இரண்டாவதில் 35 பொருள் - அணிகளும், மூன்றாவதில் சொல்-அணியான யமகத்தின் வகைகளும், கடினமான சித்திர காவிய பந்தங்களும், நான்காவதில் காப்பிய இழுக்குக்களும் கூறப்படுகின்றன. ஐந்தாம் அத்தியாயம் ஒன்று மிருந்ததாகத் தெரிகிறது.
தண்டிக்கும் பாமகருக்கும் முக்கியமான வேற்றுமைகள் இரண்டு : காப்பிய நடை தனித்ததோர் அழகுடன் உலக நடையிலிருந்து வேற்றுமைப்பட்டிருப்பதால், காப்பியம் முழுவதுமே வக்ர-உக்தி என்றார் பாமகர். ஆனால் தண்டியோ இயற்கைக்கு அதிகமாக மாறுபடாத சுபாவவர்ணனை என்பதைத் தனியே விலக்கி, காப்பியச் சொல்லைச் சுபாவ-உக்தி, வக்ர-உக்தி என்று இரு பிரிவுகளாக்கி, முதற் பிரிவில் சுபாவ-உக்தி அல்லது இயற்கை நவிற்சி என்ற அணி ஒன்றையும், வக்ர-உக்தி என்ற பிரிவில் உவமை முதலாய அணிகள் அனைத்தையும் வகுத்துக் கூறினார்.
அக்காலக் கவிகள் கையாண்ட நடையையொட்டி, அக்காலத்தில் காப்பியங்களை வைதர்ப்பம், கௌடம் என்று இருவிதமாகப் பிரித்துப் பேசிவந்தனர். தட்சிணத்தில் விதர்ப்ப தேசத்தில் கவிகள் மிகைப்படக் கூறாமலும் சொல்லணிகளை அதிகமாக வழங்காமலும், தொடர் நடையை மிகையாகக் கையாளாமலும், எளிதில் பொருள் ஏற்படாத அரும்பதங்களை அதிகம் சேர்க்காமலும், மிகைப்பட்ட கற்பனைகள் செய்யாமலும் எழுதிய தெளிவான இனிய நடையை வளர்த்தனர். இதிலிருந்து இந்நடை வைதர்ப்பம் என்று பெயர் பெற்றது. இதைத் தண்டி தம் காப்பியமான தசகுமார சரிதத்திலும், இலக்கண நூலான காவ்யாதர்சத்திலும் கையாண்டு, சீரிய காப்பிய நடையாய்ப் போற்றிப் பேசுகிறார். இதற்கு எதிராகக் கிழக்கே கௌடம் என்ற வங்காள தேசத்தில் கவிகள், மிகைப்படக் கூறுதல், நீண்ட தொடர் நிலை, புலமையைக் காட்டும் கடினமான சொற்கள் ஆகிய இவைகளைக் கொண்ட நடையைக் கையாண்டதால் அந்நடைக்குக் கௌடம் என்று பெயர் வந்தது. இதைத் தண்டி கண்டிக்கிறார். பாமகரோ, “நடை என்று ஒரு பாகுபாட்டை நாம் கற்பித்துக்கொண்டு, எல்லா வைதர்ப்பமும் மேல், எல்லாக் கௌடமும் கீழ் என்று சொல்வது தவறு. பொருட் பொலிவும் சொல்லழகும் பொருந்திய எந்த நடையும் காப்பியத்திற்கு ஏற்றதே” என்று சொல்லுகிறார்.
இதற்குப் பிறகு சில நூற்றாண்டுகள் அலங்கார சாஸ்திரம் காச்மீர தேசத்தில் விசேஷமாக ஆராயப்பட்டு மேன்மேலும் வளர்க்கப்பட்டது. இன்று அலங்கார சாஸ்திரத்தின் சிறப்பான அமிசங்களாகக் கொண்டாடப்படும் முக்கியமான சீரிய கொள்கைகளை யெல்லாம் நமக்குத் தந்தது காச்மீர தேசமே. காச்மீரத்தை ஆண்ட ஜயாபீட மகாராஜன் (கி. பி. 779-813) இலட்சம் தீனாரங்கள் சம்பளம் கொடுத்து, உத்படர் என்ற புலவரைத் தன் சபாபதியாக வைத்திருந்தான். அவனது தூண்டுகோலின்மேல் உத்படர் நாட்டிய சாஸ்திரத்திற்கு முதல் உரையையும், பாமகர் எழுதிய காவ்யாலங்காரத்திற்கு ஓர் உரையையும், தாமே அலங்காரங்களை முக்கியமாய் விளக்கும் காவ்யாலங்கார சாரசங்கிரகம் என்ற புது நூலையும் எழுதினார். இவற்றில் மூன்றாவது நூல்மட்டும் தற்போது கிடைத்திருக்கிறது. ஜயாபீடனுக்கு மந்திரியாயிருந்த வாமனர் என்பவர் உத்படரிடமிருந்து வேறுபட்ட முறையில் சூத்திரங்களும் உரையுமாகத் தம் காவ்யாலங்கார சூத்திரங்களை எழுதினார். உத்படர் பாமகரைப் பின்பற்றினார். வாமனர் தண்டியைப் பின்பற்றினார். வாமனர் தம் நூலில் விசேஷமாக ஆராய்ந்து, சாஸ்திர வளர்ச்சிக்கு அளித்த கொள்கைகள் நான்கு : முதலில் பாமகர், தண்டி இருவரும் குணம், அலங்காரம் என்ற இரண்டு அமிசங்களும் பயன்படும் அளவில் ஒன்றென்றும், குணத்தை அலங்காரம் என்று கொள்ளலாம் என்றும் கருதியதையும், உத்படர் மேலும் திண்ணமாய்ச் சொன்னதையும் மறுத்து விளக்கிக் காட்டினார். இரண்டாவதாக வாமனரே முதலில் குணங்களைச் சப்தத்தின் குணம், அர்த்தத்தின் குணம் என்று பாகுபாடு செய்து, தனியே உதாரணங்களுடன் விளக்கினார். மூன்றாவதாக, அலங்காரம் என்ற சொல்லிற்கு மொத்தமாகப் பொருள் சொல்லும்போது சௌந்தரியம் (அழகு) என்று வாமனர் சொல்லியது, பண்டையிந்தியக் கலையாராய்ச்சிக்கே முக்கியமான கொள்கையைக் கொடுத்தது. நான்காவதாகத் தண்டியை முக்கியமாகப் பின்பற்றி, அவர் சொல்லிய காவிய நடைகளையே தலைமை பெற்ற அமிசமாக விளக்கப்புகுந்த வாமனர் நடையே (ரீதி) காப்பியத்தின் உயிர் என்றார். தண்டி புகழ்ந்த வைதர்ப்ப நடையை வாமனரும் புகழ்ந்து, தண்டி சொல்லிய இரண்டு நடைகளுக்குமேல் பாஞ்சால தேசத்தில் வழங்கும் மூன்றாவது நடையொன்றையும் சொன்னார். இவற்றைத் தவிர அவரது நூலிலுள்ள வேறு சில கருத்துக்களும் பிற்கால ஆராய்ச்சிக்கு உதவின.
இவர்களையடுத்து ருத்ரடர், ருத்ரபட்டர் என்று இரு அணியாசிரியர்கள் தோன்றினர். ருத்ரடர் தாம் சொல்லப்போகும் 66 அலங்காரங்களுக்கும் அடிப்படையாய் நான்கு பிரிவுகளைக் கொடுத்தார். உள்ளது உள்ளபடியே சொல்லும் அணிகளைக் கையாளும் முதற் பிரிவுக்கு 'வாஸ்தவம்' என்று பெயர். உவமையை அடிப்படையாகக்கொண்டு எழும் அலங்கார வகைகள், ஔபம்யம் என்ற இரண்டாம் பிரிவு ; மிகைப்படக்கூறல் என்ற அதிசயத்தை ஆதாரமாகக் கொண்ட அணிகள் மூன்றாம் பிரிவு; சிலேடையைக் கொண்டு வளர்ந்த அணிகள் நான்காம் பிரிவு. காப்பியத்திற்கும் நாடகத் திற்கும் வேற்றுமை யுண்டாதலால், ரசம் என்ற சுவை நாடகத்திற்கே முக்கியமானது ; அது காப்பியத்தில் அணியாகவே கருதப்பட வேண்டும் என்ற கொள்கைக்கு எதிராக ருத்ரடரும், ருத்ரபட்டரும் இவ்வேற்றுமையைப் புறக்கணித்து, ரசங்களைக் காப்பியத்திலும் கையாண்டு, ரச விஷயங்களை விரிவுபட உரைத்து, அவற்றைக் காப்பியங்களில் கையாளும் முறையையும் விளக்கியது காப்பிய ஆராய்ச்சியில் மிகவும் முக்கியமானதொரு கட்டமாகும்.
கவிகள் செய்யும் பிரயோகங்களில் முதற்பொருளல்லாது சொற்களுக்கு மேன்மேல் பொருள்கள் தோன்றுகின்ற விஷயம் உத்படர், வாமனர் ஆகியோர்க்குப்பின் முக்கியமாக ஆராயப்பட்டது. முதலில் வரும் பொருள் முக்கிய அர்த்தம் எனவும், இதைத் தரும் ஆற்றல் முக்கிய-விருத்தி அல்லது அபிதா-சக்தி எனவும் கூறப்படும். இதன்மேல் எழும் பொருள் இலக்கணை, குறிப்பு என்ற ஆற்றல் மூலம் வரும் இலக்கியார்த்தம். காப்பியத்தின் உட்பொருளான ரசம் என்ற உணர்ச்சியைச் சொற்களின் முதலாற்றலின் மூலம் தெரிவிக்கவே முடியாது. சிருங்காரம் என்று சொன்னால், அச்சொல்லிலிருந்து காதற்சுவை ஏற்படாது. அச்சுவையை எழுப்பும் பல அமிசங்களைச் சொன்னால், அவற்றுடன் தொடர்பு கொண்ட இச்சுவை தொனிக்கும். இவ்வுண்மை கொஞ்சம் கொஞ்சமாகத் தலையெடுத்து, ரசிகர்களுக்கிடையே பேசப்பட்டு, அணிகளைப் பற்றிய பழங் கொள்கைகளையே நம்பிவந்த சிலரால் பரிகசிக்கப்பட்டுக் கடைசியில் பெரும்பாலானவரால் ஒப்புக் கொள்ளவும்பட்டது.
இதை ஏற்றுக்கொள்ளும்படி தூண்டி, இதன் உருவம், பாகுபாடு, உதாரணம் ஆகியவற்றை ஏற்றபின், மற்ற அமிசங்கள் இருக்கவேண்டிய தன்மை ஆகியவற்றை எடுத்துரைத்தவர் ஆனந்தவர்த்தனாசாரியர் என்ற அறிஞர். இவர் காச்மீரத்தில் அவந்திவர்மனின் (கி. பி. 853-883) சபையில் இருந்த கவி ; இவர் நூல் த்வன்யாலோகம் ; இது உலக இலக்கிய ஆராய்ச்சி நூல்களில் ஒன்றாகும் சிறப்பு வாய்ந்தது. எந்த ரசம் காவியத்திற்கு ஆன்மா போன்றதோ, அந்த ரசம் தொனி வாயிலாகவே அனுபவமாகிறது!. ரசத்தைப்போல் எந்த அபிப்பிராயமும், அணியும் நேரே வெளிப்படையாய்ச் சொல்லப்படாமல் தொனிக்கும்படி மறைத்துக் கூறப்பட்டால் சிறப்பான அழகு கொள்கிறது. ரசத் தொனியை ஆன்மாவாகக் கொண்டபின் குணம், அணி, நீதி என்னும் இவற்றின் தன்மை, இவை கையாளப்பட வேண்டிய முறை, ஓர் எழுத்திலிருந்து முழுநூல் உட்பட ஒரு ரசமோ ஒரு பெருங் கொள்கையோ தொனிக்கும்படி மகாகவிகள் செய்யும் முறை, ரசத்தை வருணிக்க வேண்டிய முறை, கதாபாத்திரங்களின் தன்மை, கவியின் வருணனைக்கு உயிராயிருக்கும் ஔசித்தியம் (பொருத்தம்) என்ற சிறப்பு, சாந்தம் என்ற ஒன்பதாவது ரசத்தின் தேவை, பெருமை முதலிய வேறு பல பிரச்சினைகளையும் ஆனந்தவர்த்தனர் ஆராய்ந்து, தம் நூலைச் சுவை தேறுவோருக்குக் கிடைத்த புதையல் போல் எழுதியிருக்கிறார்.
ஆனந்தவர் த்தனரின் தொனியைப்பற்றிய கொள்கை காவிய வுலகில் மட்டுமல்லாது சாஸ்திர வுலகிலும் ஒரு புரட்சியை விளைவித்தது. ஏனெனில் அதுவரையில் சொல்லிற்கு அபிதை, லட்சணை என்று இரண்டு ஆற்றல்களே உண்டென்று எல்லா சாஸ்திரங்களும் கொண்டிருந்தன. இவற்றைக் கடந்ததொரு பொருள் தோன்றுவதானால் அது சாஸ்திரத்தில் ஏற்றுக்கொண்டிருக்கும் அனுமானம் என்ற தர்க்க முறையின் மூலம் ஏற்படுவதாக இருக்கவேண்டுமே யல்லாது புதிதாக இதற்கென்று இல்லாத ஆற்றலொன்றைச் சொல்லிற்குக் கற்பிக்கக் கூடாது என்று பலர் வாதித்தும், ஆனந்த வர்த்தனரைக் கண்டித்தும் வந்தனர்.
ஆனந்தவர்த்தனரைப் பட்டநாயகர், மகிமபட்டர் ஆகிய இருவர் வன்மையாகக் கண்டித்தனர். பட்டநாயகர் பெரிய ஆராய்ச்சியாளர் என்பது இவர் தம் நூலில் விளக்கிய வேறு சில பிரச்சினைகளிலிருந்து தெரிகிறது. உதாரணமாகச் சட்டத்திற்கும், விருத்தாந்தத்தைத் தெரிவிக்கும் நூலிற்கும் உள்ள வேறுபாட்டை இவர் ஆராய்கிறார். சட்டத்தில் (வேதத்தில்) சொல்லிற்கே முதன்மை. விருத்தாந்த நூலில் (ஆக் கியானத்தில்) பொருளுக்கே முதன்மை. காப்பியத்திலே சொல்லும் பொருளும் எந்த வகையில் அழகுபடக் கவியால் தரப்படுகின்றனவோ, அவ்வழகிய வகை (வியாபாரம்) முக்கியமாகும். முகுளபட்டர் என்றவரும் தொனியை ஒப்புக்கொள்ளாது இலக்கணையோடு நின்ற ஆசிரியர். இவர் எழுதிய சொல்லாற்றல் நூல் அபிதா விருத்தி மாத்ருகா என்பது. குந்தகர் என்ற மற்றோர் ஆராய்ச்சியாளர் வக்ர-உக்திக்கு ரசம், தொனி, இவற்றிற்கு அவசியமான ஔசித்தியம் எல்லாவற்றையும் இணைத்து, வக்ரோக்தி ஜீவிதம் என்ற தம் நூலை எழுதினார். சாகித்தியம், ரீதி முதலிய பழைய மரபுகளுக்கு இவர் தம் விளக்கத்தின் மூலம் புத்துயிர் அளித்தார். முகுளபட்டரின் சீடரான பிரதீகாரேந்துராஜர் உத்படரின் காவ்யாலங்கார சாரசங்கிரகத்திற்கு உரை எழுதி, அதில் இலக்கணை யென்ற ஆற்றலே போதுமானது என்று கருதினார். ரசத்தை அனுபவிக்கும் விஷயத்தில் பாவிகம் என்ற குணத்தின் உதவியைப்பற்றி இவர் சொல்லியிருப்பது முக்கியமான கருத்தாகும்.
தொனிக் கொள்கையை மறுப்பவர்களுக்கு விடையளித்துத் தொனிக் கொள்கையை நன்கு உறுதிப்படுத்திய மகான் ஒருவர் காச்மீரத்தில் பத்தாம் நூற்றாண்டில் தோன்றினார். காச்மீர சைவாசாரியருள் தலைசிறந்தவரும், சைவசமயத்தில் கணக்கற்ற நூல்கள் எழுதியவருமான அபிநவகுப்தர் என்னும் இவர் நாட்டிய சாஸ்திரத்துக்கு ஓர் உரை எழுதிப் பின் தம் குருவாகிய தோதர் எழுதிய காவிய கௌதுகம் என்ற அலங்கார நூலிற்கு ஓர் உரை இயற்றி, மூன்றாவதாக இந்துராஜர் சொல்லிக் கொடுத்தபடி த்வன்யாலோகத்திற்கும் லோசனம் என்ற ஓர் உரை எழுதினார். அவ்வுரையில் தொனியை விசேஷமாக ஆராய்ந்து, எதிர்ப்பிற்கு மறுப்புக்களைத் தந்து, ஆங்காங்குக் காவிய, தத்துவ ஆராய்ச்சிகளின் சீரிய கொள்கைகளையும் விளக்கங்களையும் தந்து, அலங்கார இலக்கணத்தில் ஆனந்தவர்த்தனரைப் போல் முதன்மை இடத்தைப் பெற்றார்.
தொனியை அனுசரித்தும் ஆதரித்தும் பின்னால் காச்மீரத்தில் எழுதியவருள் அபிநவகுப்தரின் சீடர் க்ஷேமேந்திரர் குறிப்பிடத்தக்கவர். கவி பாட விரும்புபவனுக்கு வழிகளையும் அவர் காட்டியுள்ளார். காவியத்திற்கு ரசந்தான் ஆன்மா. ஆனால் ஔசித்தியம் ஒன்றே அதைச் சரிவரக் காப்பியத்தில் நிருவகிக்கக் கூடுமானதால் ஔசித்தியம் காப்பியத்தின் உயிர் ஆகும். ரசத்தைக் காண்பிக்கும்போது பாத்திரங்களின் கண்களும் நடத்தையும் ரசத்திற்கு ஒட்டியிருக்க வேண்டும். கவியின் நடை, அவர் கையாளும் அலங்காரம் ஆகிய எல்லாம் ரசத்திற்குப் பகையின்றி அதை விளக்கு வதாயிருத்தலே இப்பொருத்தமாகும். மம்மட பட்டர் 11ஆம் நூற்றாண்டில் எழுதிய காவியப் பிரகாசத்தில் நாடகத்தைத் தவிர மற்ற அமிசங்கள் அனைத்தும் தொனி மரபைத் தழுவி விளக்கப்பட்டுள்ளன. இதற்குச் சுமார் 70 உரைகள் இயற்றப்பட்டுள்ளன என்பதிலிருந்து இதை எவ்வளவு முக்கியமான நூலாகக் கருதி வந்தனர் என்பது விளங்கும். அணிகள் ஒவ்வொன்றிற்கும் இலக்கணம் கூறி, ஆராய்ந்து, அவற்றினிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அலசி ருய்யகர் என்றவர் அலங்கார சர்வஸ்வம் என்ற நூலை இயற்றினார். பின்னால் இதுபோல் அலங்காரங்களை விளக்கிய நூல்களுக்கெல்லாம் துணையாக உள்ள நூல் இதுவே.
காச்மீரத்திற்கு வெளியே இந்தச் சாஸ்திரத்தை வளர்த்தவருள் முதலில் கான்யகுப்ஜ அரசரின் அவையைச் சார்ந்த ராஜசேகரரைச் சொல்லவேண்டும். இவர் காலம் 9வது நூற்றாண்டின் இறுதி, 10வது நூற் றாண்டின் துவக்கம். இவர் ஆனந்தவர்த்தனர் சொன்னதையும், மற்ற எல்லா விவரங்களையும் ஒன்று சேர்த்து, ஆங்காங்குப் பல அமிசங்களைப் புதுமாதிரியில் விளக்கி, காவியமீமாம்சை என்ற மிகப் பெரிய நூல் ஒன்றைத் தொகுத்தார். ஆனால் இதன் முதலிலுள்ள ஓர் அத்தியாயமே இன்று நமக்குக் கிடைத்திருக்கிறது. இவர் அவந்திசுந்தரி என்ற தம் மனைவியின் அபிப்பிராயங்களை ஆங்காங்குச் சொல்லியிருக்கிறார்.
மாளவத்தில் முதலில் தொனியைப் புறக்கணித்து, ரசத்தைப் பழங் கொள்கைப்படி விளக்கிய நூல்கள் எழுதப்பட்டன. இவற்றுள் 10ஆம் நூற்றாண்டின் இறுதியிலிருந்த தனஞ்சயன் நாடக வகைகளை மட்டும் விவரித்து எழுதிய தசரூபகம் முதன்மை பெற்றது. பிற்காலத்தெழுந்த நாடக இலக்கண நூல்களெல்லாம் இதைத் தழுவினவையே. இந்நூலில் சாந்தம் ஒரு ரசமாகக் கொள்ளப்படவில்லை. 11ஆம் நூற்றாண்டில் ஆண்ட போஜராஜன் சரஸ்வதீ கண்டாபரணம், சிருங்காரப் பிரகாசம் என்ற இரு நூல்களை எழுதினான். போஜன் சமரச மார்க்கத்தை அனுசரித்துப் பழைய கொள்கைக்கும் தொனிக்கும் விரோதமின்றி ஒரு கலப்புக் கொள்கையைக் கடைப்பிடிக்கிறான். ரசம் என்று சொல்லப்படும் தத்துவம் ஒன்றே; சிருங்காரம், வீரம் என்று பல பெயர்களால் இது வழங்கப்படுவது இதனுடைய இறுதி நிலையல்ல; நடு நிலையில் ஏற்படும் தோற்றங்கள் ; இந்நடுநிலையில் தோன்றும் ரசத்தோற்றங்கள் எட்டு, ஒன்பது மட்டுமல்ல; எல்லா உணர்ச்சிகளுமே இந்த நடுநிலையில் ரசமெனப்படலாம்; இவை எல்லாம் சிருங்காரம் என்ற ஒரு தத்துவத்தில் ஒன்றுபடுகின்றன. இங்கே சிருங்காரம் என்றால் ஆண் - பெண் காதல் அன்று; ஒவ்வொரு உயிருக்குள்ளும் உள்ள தன்னைப் பற்றியதும் தன் சிறப்பிற்கெல்லாம் வித்தாயிருப்பதுமான அபிமானம், 'தான்' என்றதோர் உணர்ச்சி. இஃதில்லாமற் போனால் ஒருவரும் நாகரிகமுள்ளவராயிருக்க முடியாது ; சிருங்கம் என்றால் உச்சி; அதற்கு மனிதனைக் கொண்டுபோவதால் சிருங்காரம் உள்ளத் தேர்ச்சியின் உயர்வேயாகும்.இதற்குப் பிறகு பெரும்பாலும் முன்சொன்ன ஆசிரியரைத் தழுவிப் பல நூல்கள் இயற்றப்பட்டன. அலங்காரங்களை விசேஷமாக விளக்கிய பிற்கால நூல்களுக்கு ஆதாரமாய் ஜயதேவர் சந்திராலோகம் என்ற நூலை 13ஆம் நூற்றாண்டில் இயற்றினார்.
தென்னிந்தியாவில் இதை வளர்த்த நூல்களுள் குறிப்பிட வேண்டியவை ஒட்ர தேசத்தில் எழுந்த ஏகாவளியும், சாகித்திய தர்ப்பணமும் ஆகும். ஏகாவளியை நரசிம்ம ராஜன் காலத்தில் 1300 அளவில் வித்தியாதரர் எழுதினார். இதிலுள்ள உதாரணங்கள் அனைத்தும் கவியை ஆதரித்த நரசிம்ம ராஜனைப் புகழ்வதாகும். இந்த முறையைப் பின்பற்றிப் பிற்காலத்தில் ஒவ்வோர் அரசன் சபையிலும் ஓர் அலங்கார நூல் எழுதப்பட்டது. காகதீய அரசன் வீரருத்திரனைப் புகழும் பிரதாபருத்திர யசோபூஷணம் இத்தகையதே. இது ஆந்திர தேசத்தில் 1300 அளவில் ஓரங்கலில் வித்தியா நாதர் என்பவரால் எழுதப்பட்டது. ஏகாவளி இலக்கிய நாடகத்தையும் சேர்த்துச் சாகித்திய தர்ப்பணம் என்ற நூல் விசுவநாதர் என்ற கவியால் 14ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இது மிகவும் நிலைபெற்ற நூலாகும். விசுவநாதர் காவியமென்பது ரசத்தை ஆன்மாவாகக்கொண்ட வாக்கியம் என்கிறார்.
16ஆம் நூற்றாண்டில் வங்காளத்தில் சைதன்னியரின் மதத்தைப் பின்பற்றிய சில அணியாசிரியர்கள் கிருஷ்ண பக்தியை முக்கியமாகக் கொண்டு, கண்ணன்பாலுள்ள சிருங்காரத்திற்கு மற்ற ரசங்களை அங்கமாகச் செய்து நூல்களை எழுதினர். இவர்களுக்குள் உஜ்வல நீலமணியையும், பக்தி ரசாம்ருதசிந்துவையும் எழுதிய ரூபகோ சுவாமியும், அலங்கார கௌஸ்துபம் எழுதிய கவிகர்ண பூரகோசுவாமியும் முக்கியமானவர்கள்.
தமிழ் நாட்டில் எழுந்த அணியாசிரியர்களுள் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பைய தீட்சிதர் என்ற மகா புருஷர் சிறந்தவர். இவர் சொற்களின் ஆற்றலைப் பற்றி விருத்தி வார்த்திகம் என்றும், நாடகத்தைப் பற்றி லக்ஷண ரத்னாவளி என்றும், அலங்காரங்களைப்பற்றி நுட்பமான சர்ச்சைகளைச் செய்யும் சித்திர மீமாம்சை என்ற முடிவு பெறாத நூலையும், ஜயதேவரின் சந்திராலோகத்தைத் தழுவி அலங்காரங்களை விளக்குவதும், அதிகமாகப் படிக்கப்படுவதுமான குவலயானந்தம் என்ற நூலையும் இயற்றினார். இவரிடம் வேறு காரணத்தால் சினங்கொண்டு, இவருக்கடுத்த தலை முறையில் காசியிலிருந்த ஆந்திரரான ஜகந்நாத பண்டிதர் அலங்கார சாஸ்திரத்திலேயே கடைசியாக எழுந்த தனிப்பட்ட அரிய கருத்துக்களையும் கொள்கைகளையும் கொண்டதான ரசகங்காதரம் என்ற முடிவு பெறாத நூலை இயற்றினார். லௌகிக மகிழ்ச்சிக்கு மாறுபட்டதான தனிப்பட்ட ஆனந்தத்தைப் பயக்கும் பொருளைத் தெரிவிக்கும் சொற்சிற்பமே காவியம் ஆகும் என இவர் இலக்கணம் கூறினார் என்பர். உயிரின் இயற்கைத் தன்மையான அறிவும் இன்பமும் விளங்குவதற்குத் தடையாயிருக்கும் ஆவரணமலமானது காவியத்தி னாலும் நாடகத்தினாலும் விலகும். அம்மல நீக்கத்தினாலே வெளிப்படும் சிதானந்தமே ரசம் என்று இவர் ரசானுபாவத்தை விளக்கினார். அணிகள் ஒன்றுக் கொன்று நெருங்கிய தொடர்புகொண்டு கணக்கற்று வளர்ந்ததனால் ஒன்றோடொன்று கலப்பில்லாமல் இவற்றிற்கு இலக்கணம் கூறுவது முக்கியமான காரியமாயிற்று. இதை ருய்யகர் முதற்கொண்டு அப்பைய தீட்சிதர் வரை பலர் நன்கு நிறைவேற்றியிருந்தாலும், தருக்க சாஸ்திர முறையைக் கையாண்டு இலக்கணங்கள் கூறியவருள் விசுவேசுவரரே முக்கியமானவர். இவர் இப்பணியைத் தம் அலங்கார கௌஸ்துபத்தில் ஆற்றியுள்ளார்.
இந்தச் சாஸ்திரத்திற்கு அலங்காரம் என்பதும் சாகித்ய மென்பதும் முக்கியமான பெயர்கள். ஆதியில் அலங்காரங்களே அதிகமாக இவ்வாராய்ச்சியில் ஆராயப்பட்டதால் அலங்கார சாஸ்திரமெனப்பெயர் ஏற்பட்டது.
அலங்காரங்கள் சொல்லணி, பொருளணி என இரு வகைப்பட்டதும், பொருளணிகள் மூன்றில் ஆரம்பித்து நூறுவரைக்கும் வளர்ந்ததும் ஒருவாறு மேலே சொன்னதிலிருந்து தெரியவரும். சொல்லணி ஓசையின்பத்தைத் தரும் ஒரே எழுத்தையோ, எழுத்துத் தொடரையோ ஒருதரத்திற்குமேல் உபயோகப்படுத்துவதாகும். இது அனுப்பிராசம், யமகம் என இருவகைப்படும். பொருளணியில் மிகவும் பிரசித்தமானதும் கவியின் கற்பனைச் சக்திக்கே அறிகுறியானதும் உவமை. உவமையை அடிப்படையாகக் கொண்ட அணிகள் உருவகம் முதலியன. இதுபோல வேற்றுமை (விரோதம்) கொண்டும், தொடராய்ச் சொல்வது, மிகைப்படக்கூறுவது, இரண்டு பொருள்படக் கூறுவது (சிலேடை) முதலியன மற்ற அலங்காரங்களை வளர்க்கும் அமிசமாகும். பார்க்க : அணி. வே. ரா