உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அல்லி

விக்கிமூலம் இலிருந்து

அல்லி : நீரில் வாழும் பலவகையான செடிகளை அல்லி என்று ஒருவாறு சொல்லிவிடுவதுண்டு. எனினும் ஆம்பல், கழுநீர், குவளை, நெய்தல், உற்பலம், குமுதம் முதலிய பல பெயர்களால் வழங்குவதும், நீர்ப் பூண்டுகளிலெல்லாம் அழகுக்கும் மென்மைக்கும் இணையற்று விளங்குவதும், மனிதனுடைய கண்ணையும் நெஞ்சையுங் கவர்ந்துள்ளதும், மிகப் பழைய காலந்தொட்டே எகிப்து, சீனம், இந்தியா முதலிய நாடுகளின் சிற்பங்களிலும் ஓவியங்களிலும் இடம் பெற்றுள்ளதும், உலகப் பேரிலக்கியங்களிலெல்லாம் கொண்டாடப்பட்டுள்ள துமான அல்லி அல்லது அல்லித்தாமரை என்பது அணங்கு அல்லது அரமகள் எனப் பொருள்படும் நிம்பியா (Nymphaea) என்னும் சாதியைச் சேர்ந்த செடிகளையே பொதுவாகக் குறிக்கும். அல்லி உலகத்தைச் சுற்றிலும், அயன மண்டலத்திலும் வட தென் சமதட்பவெப்ப வலயங்களிலுமுள்ள பல இடங்களிலே குளம், குட்டை , சுனை முதலிய ஆழமில்லாது அமைதியாகத் தெளிந்துள்ள நன்னீர் நிலைகளிலே பெரும்பாலும் செழித்து வாழ்கிறது. சேறும் வண்டலும் நிறைந்த கலங்கல் நீர் இதற்கு உதவாது. மெல்ல ஓடும் ஆறுகளின் ஓரங்களிலும் இதைக் காணலாம். நெய்தல் நிலச் சமவெளிகளிலும், கழிமுகத்துக்கு அருகிலுள்ள நிலங்களிலும், அவற்றையடுத்த கழிகளிலும், கூவல்களிலும் உள்ள சற்று உவர்ப்பான நீரிலும் சில இனங்கள் இருக்கின்றன. சதுப்பு நிலங்களிலும் இரண்டொரு வகைகள் தென்படுகின்றன. ஹங்கேரியிலுள்ள வெந்நீர் ஊற்றுக்களிலும் ஓரினம் நிலைத்திருக்கிறது. அல்லி பெரும்பாலும் கடல் மட்டத்திற்கு

அல்லி
(இலையும் கனியும்)

1. உதிராத சில இதழ்களுடன்கூடிய கனி
2. கனி : நெடுக்கு வெட்டு
3. கனி : குறுக்கு வெட்டு
4. பத்திரி கவிந்த விதை
5. விதை நீக்கிய பத்திரி

6. பத்திரி நீக்கிய விதை

அதிக உயரமில்லாத இடங்களில் வாழும் சாதி. ஆயினும் காச்மீரம் முதலிய நாடுகளில் சுமார் 4500-5000 அடியுயரத்திலும் சில இனங்கள் காணப்படுகின்றன. நியூசீலந்திலும், வட அமெரிக்காவின் பசிபிக் சமுத்திரக் கரையையடுத்த சரிவுகளிலும் இந்தச் சாதி காணப்படுவதில்லை. இந்தியாவிலே பலவேறு வகைகள் மிகச் செழிப்பாக வளர்கின்றன.

அல்லிச் சாதியில் சுமார் நாற்பது இனங்கள் உண்டு. அவற்றில் சில உலக முழுவதும் பரவியுள்ளவை. ஆதலால் அத்தகைய இனங்களில் பல உள்ளினங்களும் வகைகளும் உண்டு. இரண்டினங்களின் கலப்பால் உண்டான கலப்பினங்கள் இயற்கையிலேயே காணப்படுகின்றன. விஞ்ஞானிகளும், தோட்டக் கலைஞரும் பல புதிய கலப்பினங்களைப் படைத்தும் இருக்கின்றனர். இவை தட்ப வெப்பங்களைத் தாங்குதல், ஆண்டு முழுவதும் வளர்ந்து பூவிடுதல் முதலிய பண்புகள் உடையன. நிறத்திலும் மணத்திலும் சிறந்த மலர்கள் இக்கலப் பினங்களில் உண்டு. அல்லியிலை, காய் முதலியவற்றின் பாசில்கள் கீழைக் கிரிட்டேஷஸ் காலத்துப் பாறை அடுக்குக்களில் ஐரோப்பாவில் அக்ப்பட்டிருக்கின்றன.

அல்லி இரட்டைவிதையிலைத் தாவரம். நிம்பியேசீ குடும்பத்தைச் சேர்ந்தது. இது பலபருவச் (Perennial) செடி. இதன் தண்டு கிழங்கு வடிவானது. சேற்றில் புதைந்திருக்கும். நீர்நிலை வற்றிச் செடி காய்ந்து போனாலும், கிழங்கில் உயிர் நிலைத்திருக்கும். திரும்ப நீர் வந்ததும் கிழங்கிலுள்ள குருத்துக்கள் வளர்ந்து புதிய இலைகளும் பூக்களும் உண்டாகும். கிழங்கிலிருந்து வேர்கள் சேற்றுக்குள் வளரும். அவற்றில் வேர்த்துய்கள் இல்லை.

இலைகளும் பூக்களும் நீண்ட காம்புள்ளவை. காம்பு சில அங்குல முதல் 16, 18 அடி நீளமிருக்கும். நீர்மட்டம் சற்று உயர்ந்தால் இந்தக் காம்புகள் நீளும். இதனால் நீருக்கு மேலேயே இலையும் பூவும் இருக்கும். நீர்மட்டம் தாழ்ந்தால் காம்பு அலகுடன் பொருந்தும் கோணம் மாறுபட்டு, இலை நீரின் மேலேயே மிதக்கும். 'நீரளவேயாகுமாம் நீராம்பல்,' 'வெள்ளத்தனைய மலர் நீட்டம்.' இந்தக் காம்புகளினுள்ளே காற்றுக் குழாய்களுண்டு. அந்தக் குழாய்களுக்குள்ளே அங்கங்கே நட்சத்திர வடிவமான உயிரணுக்களாலான மயிர்கள் இருக்கும். கால்சியம் ஆக்ஸலேட்டுப் படிகங்களும் அவற்றில் காணும். இந்தக் காம்புகளையே அல்லிக் கொடி என்று சொல்லுகிறோம். இலைகள் பெரும்பாலும் நீரின்மீது மிதப்பவை. நெருக்கமாக வளரும் இடங்களில் சில அங்குலம் நீர்மட்டத்துக்கு மேலும் நிற்பதுண்டு. அவை வட்டமாகவோ, அண்ட வடிவமாகவோ இருக்கும். அவற்றின் அடி ஆழமான பிளவுள்ள இருதய வடிவானது. இலைக்காம்போடு இலையலகு கேடகம்போலப் பொருந்தியிருக்கும். அலகு இரண்டு அங்குல முதல் இரண்டு அடிவரையில் அகலமுள்ளது. இந்த மிதக்கும் இலைகளிலே மேற்பக்கத்தில் தான் இலைத்தொளைகளும் கிராதியணு அடுக்கும் உண்டு. நீரோடு படிந்திருக்கும் கீழ்ப்புறத்தில் இலைத்தொளை இருப்பதில்லை. இந்தச் சாதாரண இலையன்றி நீருக்குள்ளேயே இருக்கும் இலை களும் இருக்கின்றன. அவை மிக மெல்லியவை; எளிதில் கிழிந்து போகக்கூடியவை. சில சமயங்களில் நீருக்கு மேலே வளர்ந்து நிற்கும் ஒருவகை இலையும் உண்டு. அதில் இலையின் கீழ்ப்புறத்திலும் விளிம்புக்கு அருகே சில இலைத்தொளைகள் காண்பதுண்டு. ஒரு செடியிலே ஒரு சமயத்தில் 10-15 இலைகள் இருக்கலாம்.

பூக்கள் இலைகளைப்போலவே கிழங்கிலிருந்து தனித்தனியாக எழுகின்றன. ஓரங்குல முதல் பன்னிரண்டு பதினான்கு அங்குலம் வரையில் விட்டமுள்ளவை. ஒரு பூவில் புறவிதழ் நான்கும், அகவிதழ்கள் பலவும், மகரந்த கேசரங்கள் மிகப்பலவும், சூலிலைகள் பலவும் உண்டு. பூத்தண்டின் நுனியிலே ஆதானமானது கிண்ணம்போல ஆகிச் சிறிதளவோ, பாதியளவோ, முழுவதுமோ சூலகத்தைச் சுற்றி அதனோடு ஒன்றாக ஒட்டி வளர்கின்றது. இதனால் இதழ்களும் மகரந்தக் கேசரங்களும் சூலகத்தின் புறச்சுவரிலிருந்து தோன்றுவதுபோலக் காண்கின்றன. இவற்றையெல்லாம் ஒடித்து எடுத்துவிட்டால் இவை திருகலான சுருள் முறையிலே ஆதானத்திலிருந்து உண்டாவது நன்றாகத் தெரியும். பல இனங்களிலே புறவிதழ்கள் படிப்படியாக அகவிதழ்களாக மாறுவதும், அகவிதழ்கள் படிப்படியாக மாறி மகரந்தக் கேசரங்களாவதும் காணலாம். இது பூவின் உறுப்புக்களெல்லாம் பிறவித்தானத்தில் ஒத்தவை (Homologous) என்பதைக் காட்டுகிறது. சூலகத்தில் பல அறைகளுண்டு. அறைகளின் உட்புற மெல்லாம் கேழ்வரகு அல்லது கடுகுபோன்ற நுண்மையான விதைகள் ஒட்டிக்கொண்டிருக்கும். பூவின் நடுவில் சூலகத்தின் உச்சி சற்றுக் குழிந்து கிண்ணம்போலத் தோன்றும். அதில் சூல்முடிகள் ஆரைகள் போலச் சுற்றாக அமைந்து கசகசாக் காய்போலக் காணும். கனி ஒரு மெதுவான சதைக்கனி. நீருக்குள் முதிரும். விதைகள் எண்ணிறந்தவை. விதையைச் சூழ்ந்து கொண்டு பத்திரி ஒரு பைபோல இருக்கும்.

மலர்தல் : அல்லி சாதாரணமாக ஆண்டில் பெரும் பகுதியில் பூவிட்டுக் கொண்டிருக்கும். ஆயினும் மழைக்காலத்தில் மிகுதியாகப் பூக்கும். ஒவ்வொரு இனத்திற்கும் பூக்கள் மலர்வதற்கும் கூம்புவதற்கும் உரிய நேரம் உண்டு. பூப் போதவிழும் நேரம் சாதாரணமாக ஒழுங்காக இருக்கும். வெப்ப வலயத்தில் உள்ளவை குளிர் காலங்களில் சற்று மெல்ல அலரும். ஒவ்வொரு பூவும் ஒன்று அல்லது இரண்டு முதல் ஐந்து அல்லது ஏழு நாட்கள் வரையில் பகலிலோ இரவிலோ தொடர்ச்சியாக ஒவ்வொரு நாளும் மலர்ந்தும் குவிந்தும் வரும். ஒருநாளுக்கு ஒருநாள் ஒரு மணி நேரம் பிந்தி. மலரும் ; முந்தி மூடிக்கொள்ளும். பிறகு பூவானது பூக்காம்பு சுருண்டு கொள்ளுவதனாலே நீருக்குள்ளே இழுத்துக்கொள்ளப்படும். இதழ் முதலியவை தாமரையில் உதிர்வது போல் உதிர்வதில்லை. நீருக்குள் விதைகள் முதிர் கின்றன. அவை முற்றிலும் முதிர ஆறு முதல் பத்து வாரமாகும். பிறகு காய் முதிர்ந்து உடைகிறது. விதைகள் நீரின்மேல் வந்து மிதக்கின்றன. விதைகளைச் சுற்றியிருக்கும் பத்திரி மிதவைபோல உதவுகிறது. இந்த நிலையில் விதைகள் பரவுகின்றன. சில மணி நேரத்தில் பத்திரி அழுகிப்போகும். அப்போது விதை நீருக்குள் அழுந்திச் சேற்றில் படியும்.

தென்னிந்தியாவிலுள்ள அல்லியினங்களில் நிம்பியா ஸ்டெல்லேட்டஸ் என்னும் நீலம் அல்லது நீலோற்பலம் என வழங்கும் கருநெய்தல் ஒன்று. இதை ஆம்பல் என்பதுமுண்டு. கருங்குவளை, பானல் என்பதுமிதுவே. இதன் இலைகள் மேலே பச்சையாகவும் கீழே நீலமான ஊதா நிறமாகவும் இருக்கும். பூ 3-7 அங்குல விட்டமுள்ளது. வெளிர் நீல நிறமானது. அருமையாகச் சிவப்புக் கலந்தும், வெண்மையாகவும்கூட இந்தப் பூ இருக்கும். பூ மூன்று நாட்கள் தொடர்ந்து பூக்கும். காலை 8 மணிக்கு மலர்ந்து பகல் 2 மணிக்குமேல் மாலை வருவதற்கு முன் மூடிக்கொள்ளும். பூவின் மொக்கு அண்டவடிவமாக இருக்கும். புறவிதழ்களிலே மிக நுண்ணிய கரும்புள்ளிகள் உண்டு. அகவிதழ்கள் 11-14; அடிப்பாகம் மங்கலான வெண்மையுள்ளது. கேசரம் 34-54 ; நீல முனையுள்ளது, கேசரத்தாளும் கேசரப்பைகளும் வெளிர்மஞ்சள் நிறம்.

வெள்ளல்லி, வெள்ளாம்பல் எனப்படும் நிம்பியா லோட்டஸ் என்னும் உட்சாதியைச் சார்ந்த நிம்பியா பியூபெசென்ஸ் மற்றொன்று. இது குமுதம் எனப்படுவது. இலை அண்டவடிவுள்ள ஊதா கலந்த பச்சை. கீழ்ப்புறத்தில் மயிர் செறிந்திருக்கும். பூ நடுத்தரமான அளவுள்ளது. வெண்மை நிறமுள்ளது. அகவிதழ்கள் அண்டவடிவமானவை. அகவிதழ்ச் சுற்றுக்கும், கேசரச் சுற்றுக்கும் நடுவே சிறிது இடைவெளியுண்டு. புறவிதழ் பச்சை நிறம் ; அகவிதழ் 19-20; வெண்மை ; சிலவற்றில் வெளியிதழ்களில் சற்று வெளிர் சிவப்பு நிறமும் தோன்றும். கேசரங்கள் சுமார் 100; மஞ்சள் நிறம். பூ இரவில் சுமார் 7-30 மணிக்குத் தளையவிழும். மறுநாள் காலையில் 11 மணி வரையில் அலர்ந்திருந்து மூடிக் கொள்ளும். இவ்வாறு ஒவ்வொரு பூவும் நான்கு இரவு பூக்கும். பூ நீர்மட்டத்துக்கு மேலே சுமார் 3-12 அங்குலம் வந்திருக்கும்.

செங்கழுநீர், செவ்வல்லி, செவ்வாம்பல், செங்குவளை, காவி, அரக்காம்பல் என்றழைக்கப்படும் நிம்பியா ரூப்ரா மூன்றாவது இனம். இலை சிவப்புக் கலந்த பழுப்பு; முதலிற் செம்பு நிறமாக இருந்து பிறகு பச்சையாகும்; கீழ்ப்புறம் மயிருள்ளது ; 12-18 அங்குலம் குறுக்களவுள்ளது. பூ ஆழ்ந்த ஊதா கலந்த சிவப்பு என்னும் அரக்கு நிறமுள்ளது ; 6-10 அங்குல விட்டமுள்ளது. இரவு 8 மணிக்குப் போதவிழ்ந்து மறுநாள் காலை 11 மணிக்குக் குவியும். மூன்று அல்லது நான்கு நாள் இவ்வாறு தொடர்ந்து மலரும். புறவிதழ்கள் மங்கலான ஊதா கலந்த சிவப்பு. அகவிதழ்கள் 12-20; குறுகியிருக்கும் அண்டவடிவு; இதழ் நுனி வட்ட மானது. கேசரங்கள் சுமார் 55. அவையும் செந்நிறமானவை. பிறகு பழுப்பு நிறமாக மாறும். இந்த இனத்தில் ரோஜா நிறம் முதல் கருஞ்சிவப்பு வரையில் பல நிற மாறுபாடுகள் தோன்றும். இது மலரும்போது முழுவதும் கிடைமட்டமாக மலராமல் சற்று ஏறக் குறைய 10° குவிந்து நிற்கும்.

அல்லி வகைகள் தோட்டங்களிலுள்ள குளங்களிலும் தொட்டிகளிலும் விரும்பி வளர்க்கப்படுகின்றன. கிழங்கிலும் விதையிலுமுள்ள மாப்பண்டம் பல நாடுகளில் உணவுப் பொருளாகப் பயன்படுகிறது. அல்லிக்காயையும் விதையையும் பச்சையாகவும் தின்பதுண்டு. அல்லியின் பூ, கொடி, இலை, கிழங்கு, காய் எல்லாம் மருந்தாகப் பயன்படும்.

அல்லிக் குடும்பம் நிம்பியேசீ (Nymphaeaceae) எனப்படும் இரட்டைவிதையிலைத் தாவரங்கள். அயனமண்டலத்திலும் சமதட்ப வெப்ப வலயங்களிலும் வாழ்பவை. இக் குடும்பத்தில் 8 சாதிகளும் 50 இனங்களுமுண்டு. இவை நீரில் அல்லது சதுப்பு நிலத்தில் வாழ்பவை. தண்டு மட்டத்தண்டுக் கிழங்கு அல்லது கிழங்கு. அது சேற்றில் புதைந்திருக்கும். இலைகள் நீரில் மிதப்பவை, அல்லது நீருக்குள்ளழுந்தியிருப்பவை, நீருக்கு வெளியில் காற்றில் வளர்பவை. பூக்கள் தனித்தவை, சாதாரணமாகப் பெரிதாக இருக்கும். பல வித அமைப்புள்ளவை. இந்தச் செடிகளில் ஒருவித பால் உண்டு. புல்லி 3-5, அல்லி 3-பல, கேசரம் 6-மிகப்பல, சூலிலை 3-பல. அல்லி கேசரங்கள் திருகல் அமைப்பின. இவற்றினிடையே படிப்படியான மாறுதல்களைக் காணலாம். கபோம்பா வெப்ப அமெரிக்காவில் உள்ள நீர்ப்பூண்டு. மிதக்கும் இலைகள் கேடக வடிவின. நீருக்குள்ளிருக்கும் இலைகள் பலபிரிவின. பூவின் உறுப்புக்கள் அடுக்குக்கு மூன்றாக அமைந்துள்ளன. சூலகம், சூலறைகள் முற்றிலும் பிரிந்தது. தாமரை (நிலம்பியம்)யிலும் சூலகத்தின் அறைகள் பிரிந்திருப்பினும் ஒரு பொகுட்டின்மேல் அழுந்தியிருக்கின்றன. இது ஆசியாவிலும் தென்கிழக்கு ஆஸ்திரேலியாவிலும் உண்டு. இதன் விதைகளைச் சிலவிடங்களின் உணவாகக் கொள்கின்றனர். நூபார் (Nuphar) வட சமதட்ப வெப்ப, வடதட்ப வலயங்களில் இருப்பது. அல்லி (நிம்பியா) அயனமண்டலம், வட தென் சமதட்ப வெப்ப வலயத்தில் பரவியிருப்பது. யூர்யேல் தென்கிழக்கு ஆசியாவிலுள்ளது. சூலகம் உள்ளடங்கியது. இதன் விதையும் வேரும் சீனத்தில் உணவாகப் பயன்படுகின்றன. விக்டோரியா என்னும் சாதியில் மூன்று இனங்களுண்டு. அயனமண்டல அமெரிக்காவில் வளர்வது. விக்டோரியா ரீஜியா அமேசான் ஆற்றிலுள்ளது. மிகப் பெரிய இனம். இலை ஆறு ஏழு அடி அகலமிருக்கும். ஓரம் தட்டுப்போல மேல் வளைந்திருக்கும். விதைகளை வறுத்து உண்கிறார்கள். அல்லி, தாமரை, விக்டோரியா முதலியவற்றைப் பற்றித் தனிக் கட்டுரைகளுண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/அல்லி&oldid=1454353" இலிருந்து மீள்விக்கப்பட்டது