உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/அழுத்த மின்சாரம்

விக்கிமூலம் இலிருந்து

அழுத்த மின்சாரம் (Piezo-electricity) : சில மின்கடத்தாப் பொருள்களை விகாரத்திற்குட்படுத்தினால் அவற்றுள் மின்னேற்றங்கள் பிரிந்து அவை துருவகரிக்கும். அவை இவ்வாறு துருவகரிக்கும் திசையும், மின்னேற்றங்களின் அளவும், பொருளில் நிகழும் விகாரத்தின் தன்மையையும், விகாரத்தை விளைவிக்கும் விசையின் திசையையும் பொறுத்திருக்கும். இது அழுத்த மின் விளைவு எனப்படும். இவ்விளைவை 1880-ல் பியர் கியூரி கண்டு பிடித்தார். இவ்விளைவு படிகக்கல், டூர்மலின், ராஷல் உப்பு முதலிய பல படிகங்களில் காணப்படுகின்றது. இப்படிகங்களில் சில திசைகளில் ஒரு விசை தொழிற்பட்டால் விகாரம் நிகழும் திசைகளுக்கு இணையாக இவை துருவகரிக்கும். இத்திசைகள் படிகத்தின் அழுத்த மின் அச்சுகள் எனப்படும்.

இதற்கு மறுதலையான விளைவும் நிகழ்கிறது. அதாவது, படிகத்தின் இரு முகங்களுக்கிடையே மட்ட வேற்றுமை யொன்று தொழிற்பட்டால் இதில் விகாரம் நிகழ்கிறது. இதனால் இப்படிகத்தின் பருமன் மாறும். ஆகையால் மாறு, மட்ட வேற்றுமை யொன்றை இதன் இரு முகங்களுக்கிடையே தொழிற்படுத்தினால் இது அதிர்கிறது. இவ்வாறு அதிரும் படிகத்தின் அதிர்வெண் மாறுமின்னோட்டத்தின் அதிர்வெண்ணுக்குச் சமமாக இருக்கும். ஆகையால் மின்னோட்டத்தின் அதிர்வெண் படிகத்தின் இயற்கை அதிர்வெண்ணுக்குச் சமமாக உள்ளவாறு அமைத்தால் அனுநாதம் (த. க.) நிகழ்ந்து, படிகம் அதிகமான வீச்சுடன் அதிரும். இதனால் இதற்கு எதிரான வினையும் நிகழ்ந்து மின் அதிர்வுகள் வலிவடைகின்றன. இவ்விளைவு ரேடியோத் துறையில் பெரிதும் பயனாகிறது. ரேடியோ அலைகளின் அதிர்வெண்ணைத் திட்டப்படுத்தவும், அலைபரப்பிகளின் அதிர்வெண் மாறாது கட்டுப்படுத்தவும் படிகக்கல் படிகங்கள் பயனாகின்றன. இவ்விளைவை வேறு வகையிலும் பயன்படுத்தலாம். விரைவாக மாறும் அழுத்தங்களை அளவிடவும், ஆழங்காணும் கருவிகளிலும், மிகையொலி அலைகளைத் தோற்றுவிக்கவும் இவை பயன்படுகின்றன. ராஷல் உப்புப் படிகங்கள் படிக மைக்ரபோனில் பயனாகின்றன.