கலைக்களஞ்சியம்/ஆ
ஆஒலி இது தமிழ் நெடுங்கணக்கிலும் இந்திய நாட்டுப் பிறமொழிகளின் நெடுங்கணக்கிலும் வரும் இரண்டாம் எழுத்து; இரண்டாம் உயிர்; நெடில். அகரம்போல அங்காத்தலால் பிறப்பது. மாத்திரை அல்லது உச்சரிப்பின் நேரம் அகரத்தைப்போல் இதற்கு இரண்டு மடங்கு ஆம் என்பது இலக்கண நூல் மரபு; ஆனால், வழக்கில் பெரிதும் குறைந்துவரும். மாத்திரையால் மட்டுமன்றிச் சுரத்தாலும், நா முதலியவை சிறிது முறுக்கிக்கொண்டு நிற்பதாலும் அகரத்தினும் இது வேறாம்.
'aa' என்று இதனை எழுதுவர் ஒலி நூலார். அ-ஆ என்று ஒலித்துக் காண்க. இது நெகிழ்ந்து போகாமைக்கு அளவெடுப்பது பழைய வழக்கம். நெகிழ்ச்சியைத் தடுப்பதற்கோ, வற்புறுத்தற்கோ அகரம் ஆகாரமாகவும் மாறும். பல, சில > பலாஅம், சிலாஅம்; நில > நிலா. இங்கு அகரமே முதல் வடிவம் என்பாரும் உண்டு. அ + அ =ஆ என வடமொழியில் வரும் தீர்க்க சந்தி வடசொற்களில் நேராகவும், குள + ஆம்பல்= குளா அம்பல் ; மர + அடி = மராஅடி என்பன போன்ற தமிழ்ச் சொற்களில் மருஉ வழக்காகவும் வழங்கும்.
ஆ என்பது போவான் போவா 0 எனப் பேச்சு வழக்கில் மூக்கொலிப்பு உயிராகவும், குசுகுசு என்று பேசும்போது மெய்யாகவும், அழுகை முதலியவற்றில் உள் வாங்குயிர்ப்பொலியாகவும் வரும். æ என்ற ஒலி, யா எனத் தமிழில் மொழிக்கு முதலாக எழுதப்படுவது ஆ என வருவதும் உண்டு; (ஆனை, ஆண்டு).ஐ என்பது விளிப்பெயரில் ஆய் என்றாகி (தந்தை தந்தாய்) ஆ என்ற ஒலி பெறும். சேய்மை விளியில் ஈற்றுமுன் அகரம் ஆ என நிற்கும்; (முருகன், முருகா). சீதா என்ற வடமொழி சீதை எனத் தமிழில் ஆகும்போது ஈற்று ஆகாரம் ஐ என ஒலிக்கும். வருவாம் > வருவோம் என்று, ஆம் விகுதியின் ஆகாரம் ஈற்றிலுள்ள மகரத்தின் உதட்டுச் சாயல் பெற்று ஓகாரமாகும்.
பொருள்: வியப்பு, இரக்கம், இகழ்ச்சி, துன்பம் என்றவற்றின் குறிப்பாக ஆ வரும்; அப்போது அளபெடுத்தலும் உண்டு. ஈற்று வினா இடைச்சொல்லாக வும் either-or என ஆங்கிலத்தில் வருவதுபோன்ற விகற்ப இடைச்சொல்லாகவும், வரையிலும் (ஆசந்திரார்க்கம் சூரிய சந்திரர் உள்ள வரையிலும்) என்ற பொருளில் வரும் வடமொழி உபசர்க்கமாகவும், உடன்பாட்டு இறந்தகால வினையெச்ச விகுதியாகவும், (உண்ணா-உண்டு) எதிர்மறை இடைநிலையாகவும்,(உண்ணாத) படர்க்கைப் பலவின்பால் எதிர்மறை வினைமுற்று விகுதியாகவும், உளதாதல், நிகழ்தல், மேன் மேல் வளர்தல், முடிவு, ஒழிவு, ஒப்பு, உண்டாக்கல், கட்டுதல், அமைதல் முதலிய பொருளில் வரும் வினைப் பகுதியாகவும், ஆச்சா மரத்தின் பெயராகவும் வரும். பெற்றம், மரை, எருமை என்பனவற்றின் பெண்பாற் பெயராகத் தொல்காப்பியர் காலத்தில் வழங்கியது பின்னர் எருதையும் உணர்த்தலாயிற்று. ஆன்மாவிற்குப் பசு என்னும் பெயரிருத்தலின் ஆ என்பதும் அதனைக் குறிக்கும். சாரியையாகவோ, பழைய உடன்படு மெய்யாகவோ வந்த னகரத்தை ஆ வோடு சேர்த்து ஆன் எனப் பின்னர்க் கொண்டமைத்த அமைப்பும் (Back formation) உண்டு.
வடிவம்: அகரத்தின் பின் நடுவே குறுக்காக எழுந்த படுக்கை நேர்க்கோடு சிலபோது கீழாக வளைந்து, பின் அடியில் கீழ் விலங்காக அமைந்தது. உயிர்மெய் எழுத்தில் ஆகாரக் குறியாக எழுத்தின் தலையின் வலப்பக்கம் நேர்க்கோடு ஒன்று குறுக்காகச் சென்றது. பின்னர் மெய் எழுத்தினை அடுத்து வளையமாக நின்றது. ஆனால் வட்டெழுத்தில் படுக்கைக் கோடாகவே நிலைத்து விட்டது.
வட்டெழுத்துக்களில் ஆ கீழ்க்கண்டவாறு வேறுபட்டு வளர்ந்தது. இங்கே, மூன்றினை இடம் வலமாகத் திருப்பி வைத்தது போன்ற தொடக்கப் பகுதி (ξ) மூன்று போலவே எழுதப் பெற்றுப் பின் சிறுத்துவரக் கீழ் வளைவாக அமைந்த பகுதி சிறப்பிடம் பெற்று வளர்ந்துவரக் காண்கிறோம்.
ஆ என்பது பழைய தமிழிசை மரபில் "ச" என்ற சுரத்தின் அறிகுறியாகவும் இன்றைய வழக்கில் “ஆகமொத்தம்“ என்பதன் அறிகுறியாகவும் வழங்குகிறது. தெ. பொ. மீ.