கலைக்களஞ்சியம்/ஆக்ரா பல்கலைக் கழகம்
ஆக்ரா பல்கலைக் கழகம் : 1921-ல் இயற்றப்பட்ட அலகாபாத் பல்கலைக் கழகச் சட்டத்தின்படி அலகாபாத் பல்கலைக் கழகமானது பல கல்லூரிகள் இணைக்கப்படாமல் தனியான குருகுலவாசக் கலைக் கழகமாக அமைக்கப்பட்டது. அதனால் அலகாபாத் பல்கலைக் கழகத்திலிருந்து பத்து மைல் சுற்றுவட்டாரத்துக்கு அப்பாலுள்ள கல்லூரிகளை இணைப்பதற்காக 1927-ல் உத்தரப் பிரதேசச் சட்டசபை ஒரு சட்ட மியற்றியது. அதன் பயனாக ஆக்ரா பல்கலைக் கழகம் அமைக்கப்பெற்றது. அதன் அதிகார வரம்பு உத்தரப் பிரதேசம், மத்திய இந்தியா, குவாலியர், அஜ்மீர்-மேர்வாரா, இராஜபுதனம் ஆகிய பகுதிகள்வரை எட்டியிருந்தது. அண்மையில் இராஜபுதனப் பல்கலைக் கழகம் நிறுவப்பெற்றுவிட்டதால் இராஜபுதனத்திலுள்ள கல்லூரிகள் அப்பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுவிட்டன. ஆக்ரா பல்கலைக் கழகம் தொடங்கியபோது அதில் பதினான்கு கல்லூரிகள் இணைந்திருந்தன. இப்போது அவற்றின் தொகை அறுபத்திரண்டாகும். இக்கழகத்தில் முதலில் கலைகள், விஞ்ஞானம், சட்டம், வாணிபம் ஆகிய துறைகள்மட்டு மிருந்தன. பின்னால் விவசாயம், மருத்துவம், கால்நடை விஞ்ஞானம், பொறியியல் ஆகிய துறைகளும் அமைக்கப்பட்டன.