கலைக்களஞ்சியம்/ஆக்லந்து பிரபு

விக்கிமூலம் இலிருந்து

ஆக்லந்து பிரபு (1784-1849) பென்டிங் பிரபுவுக்குப் பிறகு, 1836-ல் இந்தியாவிற்குக் கவர்னர் ஜெனரலாக வந்தவர். ரஷ்யாவும் பாரசீகமும் ஆப்கானிஸ்தானத்தில் காலூன்ற முயல்வதாகக் கருதி, ஆக்லந்து பிரபு ஆப்கானிஸ்தானத்தில் அனாவசியமாகத் தலையிடத் தொடங்கினார். அப்போது ஆப்கானிய மன்னராக இருந்த டாஸ்ட் முகம்மது ஆங்கிலேயர்களுக்கு இணங்கிவராததால் ஆப்கானிஸ்தானத்தின்மீது படையெடுக்க ஆக்லந்து தீர்மானித்தார். தோஸ்த்து முகம்மது ஓடி விட்டாராயினும், மற்ற ஆப்கானியர்கள் செய்த தொந்தரவால் ஆங்கிலப்படை மிகுந்த நஷ்டத்தோடு திரும்ப வேண்டியதாயிற்று. ஆங்கிலத் தளபதி மெக்நாட்டன் கொலையுண்டார். 16,000 வீரர்களில் ஒருவனே எஞ்சினான். ஆப்கானிஸ்தானத்தின் உள்நாட்டு விஷயத்தில் இவ்வாறு தலையிட்டது ஆக்லந்து செய்த பெருந்தவறு என்று கூறப்படும். இவர் காலத்தில் கர்நூல் ஆங்கிலேயர் ஆட்சிக்குள் வந்தது. அமைதிக் கால ஆட்சிக்கு ஏற்றவராயினும், போரை வெற்றிகரமாக நடத்தத் திறமையற்றவர். இவர் ஆட்சியில் கம்பெனிக்கு மிகுந்த நஷ்டமுண்டாயிற்று. தே. வெ. ம.