கலைக்களஞ்சியம்/ஆசெல்லி, காஸ்பரோ
Appearance
ஆசெல்லி, காஸ்பரோ (1581-1626) இத்தாலிய உடற்கூற்று விஞ்ஞானி. பேவியா ஊரில் உடற்கூற்றுப் பேராசிரியராக இருந்தார். குடலிலுள்ள பாற்குழல்களைக் (Lacteals) கண்டுபிடித்தவர். உணவு சிறுகுடலில் செரிமானமாகும்போது அதிலுள்ள கொழுப்புப் பொருள்கள் கூழ்ப்பால்போல ஆகும். அந்தக் கூழ்ப்பால் குடற்பால் (Chyle) எனப்படும். அது பாற்குழல்களில் உறிஞ்சப்பட்டு அவற்றின் வழியாக மார்பறை நாளத்திற்குக் (Thoracic duct) கொண்டுபோகப்படும். இந்த ஆராய்ச்சியை இவர் நாயின் உடலைச் சோதனை செய்து அறிந்து தி லாக்டிபஸ் (De Lactibus) என்னும் நூலில் எழுதினார்.