உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆட்டங்களும் விளையாட்டுக்களும்

விக்கிமூலம் இலிருந்து

ஆட்டங்களும் விளையாட்டுக்களும் (Games & Sports): எல்லா நாடுகளிலும், எல்லாக் காலங்களிலும், எல்லா வயதுகளிலும் மக்கள் ஆட்டத்திலும் விளையாட்டிலும் பொழுதைக் கழிப்பதில் மகிழ்ச்சி பெற்று வந்திருக்கிறார்கள். (இதன் காரணம் பற்றி விளையாட்டும், விளையாட்டு மருத்துவமும் என்ற கட்டுரை பார்க்க).

பழங்கால ஆட்டங்கள் : உடல் நலத்தை உயர்வாகக் கருதிய பழங்கால மக்களது ஆட்டங்களில் உடற்பயிற்சியே முக்கிய நோக்கமாக இருந்தது. இளைஞர்களுக்கு வலிமையும் உள்ளத் துணிவும் அளித்து, அவர்களைப் போர் வீரர்களாகப் பழக்குவதற்காகவே பழங்கால அரசர்கள் ஆட்டங்களுக்கும் விளையாட்டுக்களுக்கும் ஆதரவளித்தனர். இதனால் விற்போர், மற்போர், சிலம்பம் போன்ற விளையாட்டுக்கள் தோன்றின. மற்றும், பெண்களும் செல்வரும் அதிகச் சிரமமின்றி விளையாடும் சொக்கட்டான், பந்தாட்டம் போன்றவைகளும் எல்லா நாடுகளிலும் வழக்கத்தில் இருந்தன.

பழங்கால விளையாட்டுகள் பல மதச் சடங்குகளையும் ஈமச் சடங்குகளையும் ஒட்டி நடைபெற்றன. இந்திய நாட்டில் இன்றும் பல பகுதிகளில் ஈமச் சடங்குகளின் போது மற்போர், சிலம்பம் போன்ற விளையாட்டுக்களை ஏற்பாடு செய்கிறார்கள். அஸ்ஸாம் மலையிலுள்ள நாகர்கள் இழுபோர்ப் போட்டிகளால் பயிர்கள் தழைக்கும் என்றும், பந்தாட்டங்களால் மழை பெய்யும் என்றும் நம்புகிறார்கள். பழங்காலக் கிரேக்கர்கள் ஒலிம்பிக் பந்தயங்களுக்கு மிக விரிவான சடங்குகளை வகுத்திருந்தார்கள். இந்தியாவில் சில பண்டிகைகளின் போது மட்டும் நிகழும் ஆட்டங்கள் உள்ளன. பழங்கால ஆட்டங்கள் பெரும்பாலும் மதச்சடங்குகளின் ஒரு பகுதியாகவே பிறந்தன என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

பழங்காலத்தில் இந்திய நாட்டில் மற்போரும், விற்போரும், கத்திச் சண்டையும், சிலம்பமும் முக்கியமான ஆட்டங்களாக விளங்கின. மஞ்சுவிரட்டு, கோழிச் சண்டை, பன்றிச் சண்டை, ஆட்டுச் சண்டை போன்ற விளையாட்டுக்கள் பண்டிகைகளில் முக்கியமான அமிசமாக இந்நாளிலும் விளங்குகின்றன. கரகம் ஆடுதல், பொய்க்கால் குதிரை போன்ற சில ஆட்டங்கள் கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களின் முக்கியமான பகுதிகளாக விளங்குகின்றன. பலபேர் இருந்தாடும் பந்தாட்டங்கள் இந்திய நாட்டு வழக்கத்தில் இருந்தன. கோலி விளையாட்டு எப்போதும் சிறுவர்களது கருத்தைக் கவர்ந்து வந்துள்ளது. குதிரைமீதிருந்து ஆடும் பந்தாட்டம் பல நூற்றாண்டுகளாகவே அரசர்களது பொழுதுபோக்காக இருந்துவந்துள்ளது. கிட்டிப்புள், கிட்டிப்பந்து ஆகிய பழைய விளையாட்டுக்கள் தற்காலத்தில் முக்கியமான விளையாட்டான் கிரிக்கெட்டை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. சடுகுடு, கண்ணாம்பூச்சி முதலிய வேறு பல விளையாட்டுக்களும் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ளன.

வீட்டினுள் இருந்து விளையாடும் விளையாட்டுக்களில் சதுரங்கம் முக்கியமானது. உலகமெங்கும் பரவியுள்ள இவ்விளையாட்டு இந்திய நாட்டில் ஆதியில் தோன்றியது. சீட்டாட்டம் என்பது சீனாவில் தோன்றியது எனக் கருதப்பட்டாலும் நெடுங்காலத்திற்கு முன்னரே திருமாலின் பத்து அவதாரங்களைச் சித்திரமாகத் தீட்டிய சீட்டுக்களைக் கொண்ட விளையாட்டு இந்தியாவிலும் வழக்கத்தில் இருந்துள்ளது. மகளிர் விளையாட்டுக்களான அம்மானை, கழங்கு, கும்மி, கோலாட்டம் ஆகியவையும் மிகத் தொன்மையானவை. சாழல், தோணோக்கம், உந்தியார் என்னும் பலவகையான மகளிர் விளையாட்டுக்கள் இருந்திருக்கின்றன. சொக்கட்டான் விளையாட்டுக்கள் பல வடிவங்களில் இந்தியாவில் வழங்கின.

குளிர்காலத்தில் பனிக்கட்டி அதிகமாகத் தோன்றும் பிரதேசங்களில் அவற்றிற்கே தனிப்பட்ட ஆட்ட வகைகள் உண்டு. பனிக்கட்டிப் பரப்பின்மேல் சறுக்குவதும், குதிப்பதும், நடனமாடுவதும், பாய்மரங்கள்

பனிச் சறுக்கல்

உதவி : கார்வே தூதர் அலுவலகம், புது டெல்லி.

கொண்ட வண்டியில் சறுக்கிச் செல்வதும், நாய்கள் பூட்டிய வண்டிகளைப் பந்தயம் விடுவதும் இவற்றுள் சில, பந்துகளைக்கொண்டு விளையாடப்பெறும் பனிக்கட்டி ஹாக்கி என்ற விளையாட்டு ஒன்றுண்டு. நார்வே, கானடா, சுவிட்ஸர்லாந்து, அமெரிக்க ஐக்கிய நாடுகள், ரஷ்யா, ஜப்பான் ஆகிய நாடுகளில் இவை அதிகமாக விளையாடப்பெறுகின்றன.

பழங்கால எகிப்தியர்களிடையே மற்போரும் குதியாட்டமும் வழக்கத்தில் இருந்தன. அம்மானை விளையாட்டை அக்காலத்து மாதர் மிக உயர்வாக மதித்தனர். குறுந்தடிகளைக்கொண்டு ஆடப்பட்ட சிலம்பமும் அக்காலத்தில் வழக்கத்தில் இருந்தது. பழங்காலச் சீனர்கள் பலவகையான ஆட்டங்களில் திறமை மிக்கவர்களாக இருந்தார்கள். தற்காலத்தில் ஜப்பானி லிருந்து மற்ற நாடுகளுக்குப் பரவியுள்ள ஜூ-ஜிட்சு என்ற மற்போர் முறை சீனாவில் தோன்றியது, அக்காலத்தில் குத்துச்சண்டையும் காற்பந்தாட்டமும் அங்கு வழக்கத்திலிருந்தன.

கிரேக்க நாகரிகம் உன்னத நிலையில் இருந்தபோது அங்கு மிகப் பெரிய ஆட்டப்பந்தயங்கள் நடைபெற்றன. இவை மதச்சார்புள்ளவை. இவற்றுள் ஒலிம்பிக்

மற்போர்
உதவி: பிரிட்டிஷ் கவுன்சில், சென்னை.

பந்தயங்கள் மிக முக்கியமானவை. நாட்டினை ஒற்றுமைப்படுத்தவும், வெற்றியைக் கொண்டாடவும் முதலில் இந்த விழாக்கள் ஏற்படுத்தப்பட்டன. பந்தயத்தின் அதிகாரிகளும், அதில் ஈடுபடும் இளைஞர்களும் பல மாதங்களுக்கு முன்னாலிருந்தே சடங்கு முறையிலும் ஆட்ட விதிகளிலும் பயிற்சி பெற்றனர். இவற்றில் ஓட்டம், மற்போர், குத்துச்சண்டை, குதித்தல் முதலிய பல பந்தயங்கள் நடைபெற்றன. இவற்றில் வெற்றி பெறுவோர்க்கு இலை மகுடம் சூட்டிப் பெருமைப்படுத்தினர். இப்பந்தயங்கள் பல நாட்கள் நடைபெறும். இதைக் காண நாடே திரண்டு வந்தது. தற்காலத்தில் நடைபெறும் உலக ஒலிம்பிக் பந்தயங்களில் நடைபெறும் சடங்குகளும் ஏற்பாடுகளும் பழங்கால்க் கிரேக்க முறையைப் பின்பற்றுகின்றன. பார்க்க; ஒலிம்பிக் ஆட்டங்கள்.

தற்கால ஆட்டங்கள்: பழங்காலத்திலிருந்தே விளையாடப்பெறும் ஆட்டங்களைத்தவிர மேனாட்டு ஆட்டங்கள் பல இந்திய நாட்டில் இப்போது வழக்கத்திற்கு வந்துள்ளன. திறந்த வெளி விளையாட்டுக்களில் பாட்மின்டன், கைப்பந்து, வாலிப்பந்து (Volleyball), டென்னிஸ், வளைய டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து, ஹாக்கி முதலிய பந்தாட்டங்கள் இந்திய நாட்டின் பல பகுதிகளில் விளையாடப்பெறுகின்றன. மலையாளத்தைப் போன்ற நீர் வசதியுள்ள இடங்களில் பழங்காலத்திலிருந்தே படகுப் போட்டிகள் நிகழ்ந்து வந்துள்ளன. கால்பந்து, டென்னிஸ், பாட்மின்டன், ஹாக்கி ஆகிய ஆட்டங்களில் நடைபெறும் சர்வதேசப் பந்தயங்களில் இந்தியா கலந்துகொள்கிறது. இந்தியக் கால்பந்து கோஷ்டியினர் பல நாடுகளை வெல்லும்

கூடைப்பந்து விளையாட்டு
உதவி: பிரிட்டிஷ் கவுன்பில், சென்னை. கூடைப் பந்து விளையாட்டு உதவி: ஆர்ஜன்டீனா தூதர் அலுவலகம், புது டெல்லி.

சைக்கிள் பந்தயம்
உதவி: பிரிட்டீஷ் கவுன்சில், சென்னை

 அளவுக்குத் திறமை பெற்றிருக்கிறார்கள். ஹாக்கியில் இந்தியாவை இதுவரை எந்த நாடும் வென்றதே இல்லை என்ற பெருமை இந்தியருக்கு உண்டு. இந்திய நாட்டுக் கிரிக்கெட் கோஷ்டிகள் வெளிநாடுகளில் பிரயாணம் செய்வதும், பிறநாட்டுக் கோஷ்டிகள் இங்கு வருவதும் இப்போது அடிக்கடி நடந்து வருகின்றன. இந்திய நாட்டுக் கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் ராஞ்சி, டுலீப் சிங்ஜி, பட்டௌடி, நவாப், சி. கே. நரயுடு போன்றவர்கள் முன்னர் உலகப் புகழ்பெற்று விளங்கியதுபோலவே அமர்நாத், மர்ச்சன்ட், ஹசாரே, மன்காட் போன்ற பலர் தற்காலத்தில் புகழ்பெற்றிருக்கிறார்கள். இந்திய நாட்டு ஹாக்கி விளையாட்டுக்காரரான் தயான்சந்து உலகப்புகழ் பெற்றவர்.

வீட்டிற்குள் விளையாடும் ஆட்டங்களில் மேசைப் பந்து, சதுரங்கம் போன்ற ஆட்டங்களில் இந்தியா சர்வதேசப் பந்தயங்களில் போட்டியிருக்கிறது. பிலியட்ஸ், காரம் போன்ற ஆட்டங்களும் விளையாடப் பெறுகின்றன. சீட்டாட்டம் நகரங்களிலும்

உயரம் தாண்டல்
உதவி: பிரிட்டிஷ் கவுன்சில், சென்னை.

நாட்டுப்புறத்திலும் அனைவரும் விரும்பும் ஆட்டங்களில் ஒன்று, (முக்கியமான ஆட்டங்களைப்பற்றித் தனிக் கட்டுரைகள் பார்க்க)

ஆட்டங்களின் பயன்: ஆட்டங்கள் உடலுக்கும் உள்ளத்திற்கும் பயிற்சி அளித்து, அவற்றிற்கு நலந்தருகின்றன. கலைத்துப்போன உடலும் உள்ளமும் ஆட்டங்களால் புது வலிமை பெறுகின்றன. ஆட்டங்கள் இளைஞர்களுக்குக் கட்டுப்பாட்டையும், நன்னடத்தையையும், ஒருமையுணர்ச்சியையும் பொதுரவு உணர்ச்சியையும், சமூக ஒற்றுமையையும் கற்பிக்கின்றன. ஆட்டங்களில் தலைமைபெறும் ஒருவனை பிறருக்கு வழிகாட்டி அவர்களை நடத்திச் செல்லும் திறமையையும் மனத் துணிவையும் பெறுகிறான். வெற்றியடையும்போது வீண் பெருமை கொள்ளாமலும், தோல்வியுறும்போது நம்பிக்கை இழக்காமலும் ஆட்டங்களில் ஈடுபடும் ஓர் இளைஞன் தன் பிற்கால வாழ்க்கையிலும் இதே மனப்பான்மையைக் கொண்டு வெற்றி பெற அவை உதவுகின்றன.

தொழில் வளர்ச்சியினால் நகரங்கள் வளர்ந்துவிட்டன; வாழ்க்கையின் வேகம் அதிகமாகிவிட்டது. எந்திரங்களின் முன்னேற்றத்தால் ஒருவன் செய்யும் வேலையில் மாறுதலே இல்லாமற் போய்விடுகிறது. இக் காரணங்களால் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஓய்வு கொடுப்பதன் தேவை முன்னிலும் அதிகமாகிவிட்டது. நாள்தோறும் சற்று நேரத்தையாவது திறந்த வெளியிற் கழிக்க வேண்டியது இப்போது இன்றியமையாததாய்விட்டது. ஆகையால், தற்கால வாழ்க்கைக்கு ஆட்டங்களும் விளையாட்டுக்களும் இளைஞர்களுக்கு மட்டுமல்லாமற் பெரியோர்க்கும் முக்கியமானவைகளாகும். இதையுணர்ந்தே அரசாங்கங்களும், நகராண்மைக் கழகங்களும், தொழில் நிலையங்களும் ஆட்டங்களுக்குப் போதிய வசதி செய்துதரவும், அவற்றில் ஈடுபடுவோர்க்கு ஆதரவுதரவும் முற்படுகின்றன.