கலைக்களஞ்சியம்/ஆதிசேஷன்

விக்கிமூலம் இலிருந்து

ஆதிசேஷன் புராணங்களிற் கூறப்பெறும் கத்துருவின் மகன். நாகன். மந்தர கிரியைப் பெயர்த்துத் தேவர்க்கு உதவினான். பிரமன் ஆணையால் பாதாள வுலகத்தின் தலைமை பூண்டான். வலிமையில் வாயுவுடன் போட்டியிட்டுத் தோற்றான். திருமாலுக்குப் பாயலாகவும் இருக்கையாகவும் குடையாகவும் உதவுகிறான். பதஞ்சலியாகப் பிறந்து தவம் செய்தான். அதிக புத்தியுடையவன். எல்லாக் கலைகளும் அறிந்தவன். அமுதகலசம் இருந்த இடத்தை நக்கி நாப்பிளவு பட்டான். சிவன் தலையில் இருந்தபோது செருக்குக் கொள்ள, அவர் இழுத்து எறிய, ஆயிரம் பிளவுபட்டுப் பின்னர்த் தவம் செய்து ஆயிரம் தலைகள் பெற்றான்.