கலைக்களஞ்சியம்/ஆந்திரப் பல்கலைக் கழகம்

விக்கிமூலம் இலிருந்து

ஆந்திரப் பல்கலைக் கழகம் 1926ஆம் ஆண்டில் அமைந்ததாகும். அது முதலில் கல்லூரிகளை இணைத்துத் தேர்வு நடத்தும் கழகமாக பெஜவாடாவில் இருந்தது. அதன்பின் 1929-ல் அச்சட்டம் திருத்தப்பெற்று, மாணவர் உறையும் வசதியுள்ள பல்கலைக் கழகமாக ஆயிற்று. கடலுக்கு அருகில் குன்றின் மீதுள்ள வால்டேர் பட்டணத்தை அதன் தலைமைத் தலமாக்கினர்.

ஆந்திரப் பல்கலைக் கழகத்தில், பல்கலைக் கழகக் கலை வாணிபக் கல்லூரியும், ஜெய்ப்பூர் விக்கிரமதேவ் விஞ்ஞான, தொழில் நுட்பக் கல்லூரியும், எர்ஸ்கைன் இயற்கை விஞ்ஞானக் கல்லூரியும், பல்கலைக் கழகச் சட்டக் கல்லூரியும் இருக்கின்றன. பட்டம் பெற்ற பின் ஆராய்ச்சி செய்ய இங்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சர்க்கரை, மருந்து வகைகள், ரசாயனப் பொருள்கள் உற்பத்தி செய்வதன் பயன்முறைப் பௌதிக வியல், வானிலையியல் ஆகியவை கற்றுக் கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

இந்தப் பல்கலைக் கழகக் கல்லூரிகள் தவிரக் கழகத்துடன் இணைந்தனவாக இரண்டு மருத்துவக் கல்லூரிகளும் ஒரு பொறியியற் கல்லூரியும், ஒரு விவசாயக் கல்லூரியும், நான்கு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளும் ஆகிய எட்டுத் தொழிற் கல்லூரிகள் இருக்கின்றன. கழகத்துடன் இணைந்த பதின்மூன்று முதல்தரக் கல்லூரிகளும், பத்து இரண்டாந்தரக் கல்லூரிகளும் இருக்கின்றன. கீழ்நாட்டுக் கலைக்குரிய பத்துப் பாடசாலைகள் கழகத்தின் அங்கீகாரம் பெற்றுப் பட்டப் பரீட்சைகளுக்குக் கல்வி போதிக்கின்றன.