கலைக்களஞ்சியம்/ஆன்டிபயோடிக்குகள்

விக்கிமூலம் இலிருந்து

ஆன்டிபயோடிக்குகள் (Antibiotics) : காளான்களையும் பாக்டீரியாவையும் போன்ற நுண்ணுயிர்களால் வெளிவிடப்பட்டு, பாக்டீரியாவின் வளர்ச்சி, வளர்சிதை மாற்ற இயக்கம், பெருக்கம் ஆகியவைகளைக் கட்டுப்படுத்தும் இயல்புள்ள பொருள்கள் இவ்வாறு அழைக்கப்பெறுகின்றன. இவற்றுள் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்டது பெனிசிலின் (த.க.) ஒருவகைப் பூஞ்சக் காளானிலிருந்து வெளிப்படும் இப்பொருள் பலவகை நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாவை அழிக்கும் திறனுள்ளது. இதைவிடத் திறனுள்ள வேறு பல பொருள்களும் இதன்பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புது ஆன்டிபயோடிக்குகள் இன்னும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

ஆன்டிபயோடிக்கு இயக்கம் கூட்டுப் பிழைப்பு (Symbiosis) என்ற உயிரியல் நிகழ்ச்சியின் எதிராகும். ஒருவகை நுண்ணுயிர் இன்னொருவகை உயிருக்கு எதிராக இயங்குகிறது. பல ஆன்டிபயோடிக்குகள் பாக்டீரியா வகைகள் சிலவற்றை மட்டும் அழிக்குமேயொழிய அவற்றுடன் தொடர்புள்ள வேறு வகைகளைப் பாதிப்பதில்லை. தாவர நோய்களைத் தோற்றுவிக்கும் நுண்மங்களை அழிக்கவல்ல ஆன்டிபயோடிக்குகளும் உண்டு. சில ஆன்டிபயோடிக்குகள் மண்ணிலும், நீரிலும், சீரணப் பாதையிலும் இருந்து நமக்கு நன்மைதரும் பாக்டீரியாவை அழித்துவிடும்.

பல நோய்களைக் கட்டுப்படுத்த மருத்துவரின் சிறந்த படைக்கலமாக விளங்கும் இப் பொருள்களைத் தீர ஆராயாமலும், அளவுக்கு மிஞ்சியும் பயன்படுத்துவதால் பல தீங்குகள் நேர்கின்றன என்பது தெளிவாகியுள்ளது. நல்ல மருத்துவப் பயிற்சி இல்லாதவர்கள் இவற்றைப் பயன்படுத்துவது விரும்பத் தக்கதன்று.