கலைக்களஞ்சியம்/ஆரல்
ஆரல் (ஆரால்) நன்னீரிலும் சற்று உவர்ப்பான நீரிலும் வாழும் சிறுமீன். இது நீரின் அடியில் மணலில் அல்லது சேற்றில் புதைந்து கிடக்கும். முகத்தை மட்டும் அல்லது தலை முழுவதையும் மணலுக்கு மேலே மூச்சுவிடுவதற்காக வைத்துக் கொள்ளும். ஏதாவது சிறிது கலக்கம் ஏற்பட்டாலும் அந்தப் பாகத்தையும் உள்ளிழுத்துக் கொண்டு மறைந்து விடும். இதன் தலை கூம்பு வடிவானது. முகம் கூரியது. மீன்களின் வயிற்று நடுக்கோட்டிலுள்ள துடுப்பு இதில் இல்லை. தோள் துடுப்புக்களும் நன்றாக வளர்வதில்லை. இந்தப் பண்புகளெல்லாம் இந்த மீன் மணலில் புதைந்து வாழ்வதற்கு ஏற்ற அமைப்புக்கள். முதுகின் நடுக்கோட்டிலுள்ள முள்போன்ற துடுப்புக்கதிர்கள் தற்காப்புக்குதவும் இதன் நீண்ட படைக்கலங்கள். மூன்று பிரிவான முகத்தின் முனைகள் தொட்டுணர் கருவியாகப் பயன்படும். இது இரவில் மணலைவிட்டு நீருள் வந்து இரை தேடும். ஆரல் நீரைவிட்டு வெளியே காற்றில் நெடுநேரம் உயிருடன் இருக்கவல்லது. நீரில்லாத காலங்களில் ஆறு அல்லது குளங்களின் சேற்றினுள்ளே புகுந்து ஒடுங்கிக் கிடக்கும். இது அவ்வப்போது நீரின் மேல் மட்டத்துக்கு வந்து காற்றையும் சுவாசிகின்றது; நீருக்குள்ளேயே இதை வைத்திருந்தால் செத்துப்போகிறது.
இது உண்பதற்கு நல்ல மீன். இதன் விஞ்ஞானப் பெயர் ரிங்கோப்டெல்லா அக்கூலியேட்டா.
கல்லாரல், சேற்றாரல், பேராரல் என்று பல பெயர்களுள்ளது அரலைப் போன்ற வேறொரு மீன். அது பெரிய குளங்களில் சாதாரணமாக மிகுதியாக இருக்கும். நீரில் கல், பாறை முதலியன கிடக்குமானால் அவற்றருகே அது வசிக்கும். ஆரலை விட மிகப்பெரிதாக இரண்டடி நீளம் வரையில் வளரும். உணவுக்கு நல்ல மீன், மாஸ்டசெம்பிலஸ் ஆர்மேட்டஸ் விஞ்ஞானப்பெயர்.
புல்லாரல் (மாஸ்டசெம்பிலஸ் பான்கலாஸ்) மீன் ஆறு, ஏழு அங்குலம் வளரும். குளங்களிலும் ஆறுகளிலும் மிகுதியாக உண்டு. கடல்நீர் புகும் ஆற்று வாய்களில் இது இருப்பதில்லை. நீரின் ஓரத்தில்புல், பாசி முதலியவற்றில் சேர்ந்து கொண்டிருக்கும். புல்லையும் சேற்றையும் வழித்துக்கரையில் போட்டு இந்த மீனைப் பொறுக்குவார்கள். இதன் உடம்பின் குறுக்கே பட்டைகள் விழுந்திருக்கும்; இளமீன்களில் இவை நன்றாகத் தெரியும்.