கலைக்களஞ்சியம்/ஆர்கன்

விக்கிமூலம் இலிருந்து

ஆர்கன் (Organ) : மேனாடுகளில் முக்கியமாக மாதாகோயில்களில் பயனாகும் ஓர் இசைக்கருவி. இது அழுத்தமான காற்றினால் இயக்கப்படும் பல குழாய்களைக் கொண்டது. இக்குழாய்கள் (Organ tubes) ஒவ்வொன்றும் ஒரு சுரத்தைத் தோற்றுவிக்கும். கி.மு. 2ஆம் நூற்றாண்டிலேயே எளிய வடிவுள்ள ஆர்கன் வழக்கத்தில் இருந்ததாகத் தெரிகிறது. இதில் காற்று நிறைந்த பெட்டியின்மேல் பல குழாய்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஒரு துருத்தியின் உதவியால் பெட்டிக்குள் காற்றைச் செலுத்தி, அது குழாய்களின் வழியே சென்று அவற்றை ஒலிக்குமாறு செய்தார்கள். ஏதாதொரு குழாயை ஒலிக்காமற் செய்ய அதன் வாயைக் கையினால் மூடிக்கொண்டு மற்றக் குழாய்கள் ஒலிக்குமாறு செய்வார்கள். ஓர் உலோகத் தகட்டின் உதவியால் குழாய்களை மூடும் வழக்கம் பின்னர்த் தோன்றியது. 5ஆம் நூற்றாண்டில் எருசலேம் நகரில் இருந்த ஆர்கன் பன்னிரண்டு குழாய்களும் பதினைந்து துருத்திகளும் கொண்டிருந்தது. இதன் ஒலி ஒரு மைல் தொலைவுவரை கேட்கும். மாதா கோயில்களில்

ஆர்கன்

கோஷ்டி கானத்திற்கு 7ஆம் நூற்றாண்டில் இதைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். குழாய்களின் நாதத்தையும் பண்பையும் மாற்றி அமைக்கும் வழக்கம் இப்போது தோன்றியது. கட்டைகளை அழுத்தித் தேவையான குழாய்களின் வழியே மட்டும் காற்றைச் செலுத்தி, அவற்றை ஒலிக்குமாறு செய்யும் வழக்கம் தோன்றியது. ஆனால் அக்காலத்தில் வழங்கிய கட்டைகள் நீண்ட நெம்பு கோல்களைப்போல் இருந்தன. ஒவ்வொரு கட்டைக்கும் இரண்டு அல்லது மூன்று குழாய்களை இணைத்துப் பல சுரங்களைப் பெற முடிந்தது. கையினால் இயக்கும் கட்டைகளைத் தவிரக் காலினால் இயக்கப்பட்ட மிதிகளையும் (Pedals) அமைத்துப் பல சுரங்களை ஒரே காலத்தில் எழுப்பும் முறை கண்டுபிடிக்கப்பட்டது. இத்தகைய சீர்திருத்தங்களால் ஆர்கன் அளவிற் பெரிதாகவே, கட்டைகளைச் சிறியனவாகவும், எளிதில் இயக்க ஏற்றவாறும் அமைக்கும் முறைகள் ஆராயப்பட்டன. ஜோசப் பூத் என்ற ஆங்கிலேயர் காற்றின் அழுத்தத்தினால் கட்டைகளை எளிதில் இயக்கும் முறையைக் கண்டுபிடித்தார். கட்டையை அழுத்தினால் அது ஒரு வால்வைத் திறந்து அழுத்தமான காற்றை ஒரு சிறு துருத்திக்குள் செலுத்துகிறது. இத்துருத்தியின் இயக்கத்தால் நெம்புகோல்கள் இயங்கிக் குழாய்களில் காற்றை விட்டும் கட்டுப்படுத்தியும் அவை ஒலிக்குமாறு செய்கின்றன. 19ஆம் நூற்றாண்டில் மின்சாரத்தினால் இயங்கும் கட்டைகள் கண்டுபிடிக்கப்பப்பட்டன. இம்முறையில் சாவியை அழுத்தினால் ஒரு மின்காந்தம் இயங்கத்தொடங்கிக் குழாய்கள் ஒலிக்குமாறு செய்கிறது. ஆர்கனைக்கொண்டு எழுப்பப்படும் சுரங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் மாறாது ஒலிக்குமாறு செய்யலாம். இதுவே இதன் தனிச் சிறப்பு.

தற்கால ஆர்கன் நான்கு கட்டைப்பலகைகளையும் (Key boards) ஒரு மிதி பலகையையும் கொண்டிருக்கலாம். கட்டைகளிலிருந்து 64 சுரங்களையும், மிதிகளின் உதவியால் 32 சுரங்களையும் பெறலாம். ஒரேவகையான பண்புகளும், பல சுருதிகளும் உள்ள பல குழாய்கள் ஒரு தொகுதியாக அமைந்திருக்கும். பல்லிய கானத்தில் பயன்படும் இசைக்கருவிகள் வெவ்வேறு பண்புகள் கொண்டிருப்பதுபோல் ஒரு தொகுதியைச் சேர்ந்த குழாய்களும் வெவ்வேறு பண்புகளுள்ள ஒலியைத் தரும். ஒரே தொகுதியிலுள்ள குழாய்கள் அனைத்தும் ஒரு பிடியினால் இயக்க ஏற்றவாறு அமைந்திருக்கும். வெவ்வேறு கட்டைப்பலகைகளிலுள்ள கட்டைகளை ஒரே சமயத்தில் இயக்க ஏற்றவாறு அவற்றை இணைப்பதுண்டு. இத்தகைய முறைகளால் ஆர்கனிலிருந்து பெறும் சுரத்தொகுதிகளையும் ஒலியின் நாதத்தையும் உரப்பையும் (Loudness) ஏற்றவாறு மாற்ற முடிகிறது. இங்கிலாந்திலுள்ள ஆல்பர்ட்-ஹால் என்னும் அரங்கிலுள்ள ஆர்கன் 9,723 குழாய்களையும், 146 குழாய்த்தொகுதிகளையும் கொண்டது. இதைவிடப் பெரிய ஆர்கன் ஒன்று லிவர்ப்பூல் மாதா கோயிலில் அமைக்கப்பட்டு வருகிறது. இது 13,236 குழாய்களை உடையதாக இருக்கும். இத்தகைய ஆர்கன்களில் உள்ள குழாய்களின் நீளம் 64 அடியிலிருந்து அங்குலம்வரை வேறுபடும். இக்கருவிகளின் இசை பல மைல் தொலைவு கேட்கும்.

ஆதியில் மாதாகோயில் கோஷ்டிகானத்திற்கு மட்டும் ஆர்கன் பயன்பட்டது. தற்காலத்திலோ இது வீடுகளிலும், இசை அரங்குகளிலும், சினிமா அல்லது நாடகக் கொட்டகைகளிலும் பயன்படுகிறது. இவ்வாறு பயனாகும் ஆர்கன்களில் மணிகளும், ஜாலராக்களும், சைலோபோன் போன்ற இசைக்கருவிகளும் இயங்குமாறு அமைத்து, வேறு பல புதிய இசை ஒலிகளையும் தோற்றுவிக்கிறார்கள்.

ரேடியோக் குழாய்களையும் வலிபெருக்கிகளையும் (Amplifiers) கொண்டு மிகப் பெரிய ஆர்கன் தரும் சுரங்களையும் நாதங்களையும் சிறிய கருவியின் உதவியால் பெற முடிகிறது. இதில் காற்றின் அழுத்தத்திற்குப் பதிலாக மின்சார அதிர்வுகளால் ஒலி தோற்றுவிக்கப்படுகிறது. சாவியை அழுத்தினால் இதற்கேற்ற மின்சார அலை தோன்றி, இதன் வலி பெருக்கப்பட்டு ஒலியாக மாற்றப்படுகிறது. வீட்டில் உள்ள சாதாரண மின்சாரச் சுற்றில் இணைத்து இதை இயக்கலாம். ஆனால் பெரிய ஆர்கன்களின் இசையையே இதைக் கொண்டு பெற முடிந்தாலும், அவற்றின் இசையின் நாதத்திலுள்ள மேன்மையும் கம்பீரமும் இதில் இல்லை என்றே கூறவேண்டும். இதைத் தனிப்பட்ட இசைக் கருவி என்று கருதுவது நல்லது.

ஒன்பது ஸ்தாயிகள்வரை சுருதியுள்ள சுரங்களை ஆர்கனில் எழுப்பலாம். வேறெந்த இசைக் கருவியிலும் இவ்வளவு அதிகமான வேறுபாடுகள் கொண்ட நாதங்களைத் தோற்றுவிக்க முடியாது ஆகையால் இதைப் பயிலவும், இதற்கேற்ற இசையை அமைக்கவும் தனிப்பட்ட பயிற்சியும் அனுபவமும் தேவை. ஆர்கனுக்கேற்ற இசையை இயற்றிய பாட்டாசிரியருள் பாக் (Bach) என்பவர் தலைசிறந்து விளங்குகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/ஆர்கன்&oldid=1456942" இலிருந்து மீள்விக்கப்பட்டது