உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆர்க்கிடு

விக்கிமூலம் இலிருந்து

ஆர்க்கிடு: இது ஆர்க்கிடேசீ என்னும் மிகப்

யூலோபியா தரை ஆர்க்கிடு
முழுச்செடி: வேர்களும் பொய்க்கிழங்கும். 1. பூ. 2. புறவிதழ்களும் அகளிதழ்களும். 3. உதட்டிதழும் தம்பமும், பக்கப் பார்வை. 4. தம்பம் முன்பார்வை . 5. கேசரம். 6. மகரந்தத் திரள்கள். 7. கனி.8. கனியின் குறுக்கு வெட்டு.
பெரிய ஒற்றை விதையிலைக் குடும்பத்துச் செடிகளுக்குப் பொதுப் பெயர். இந்தச் செடிகளைத் தோட்டங்களில் மிகவும் அருமையாக வைத்து வளர்க்கின்றனர். இவற்றின் பூ விசித்திர அழகும் வினோத உயிரியற் சிறப்பும் உள்ளது. பலவகைகள் நறுமணமுள்ளவை. ஆர்க்கிடுகள் எல்லாம் சிறு செடிகள். ஆயினும் பல பருவங்கள் வரை தொடர்ந்து வாழ்பவை. மட்டத்தண்டுக் கிழங்கு முதலிய உறுப்புக்களின் உதவியினாலே இவற்றின் ஆயுள் நீடித்திருக்கும். பழைய தண்டுக்கிளை மடிந்து போனாலும், அடுத்த பருவத்தில் புதிய தண்டு கிழங்கிலிருந்து முளைத்தெழும். இவை வளரும் விதமும் பலதிறப்பட்டது. சில நிலத்தின் மேல் வளரும் தரையார்க்கிடுகள். பல மரங்களின்மேல் தொற்றுச் செடிகளாக இருக்கும் தொற்றார்க்கிடுகள். இவை வெப்பவலயத் தாவரங்களில் சிறப்பான ஒரு பகுதி, மற்றுஞ் சில மட்கியழுகும் பொருளிலே வளரும். நிலத்திலும் மரத்தின்மீதும் வளர்பவைகளுள் பாலைச்செடித் தன்மையுள்ளவை. அவற்றில் கணுவிடைகள் பருத்துப் போலிக்கிழங்குகள் (Pseudo bulb) ஆகும். இந்தப் போலிக் கிழங்குகளில் நீர் சேமித்து வைக்கப்படும். மற்றுஞ் சிலவற்றில் இலையே நீரைச் சேர்த்து வைத்துக் கொள்ளும். அம்மாதிரி இலை தடிப்பாக இருக்கும். அயனமண்டலத்தில் பல பல வகையான தொற்றார்க்கிடுகள் மிகுதியாக வளர்கின்றன.
வாண்டா
தொற்று ஆர்க்கிடு

அவற்றின் அமைப்பைக் கவனித்தால் மிகுந்த சுவையுடையதாக இருக்கும். அவற்றின் தண்டுகளிலிருந்து புதிதாகத் தோன்றும் வேர்களினாலே அவை மரத்தில் தொற்றிக் கொண்டிருக்கும். இந்தத் தொற்று வேர்களிலிருந்து உறிஞ்சு வேர்கள் புறப்படும். இந்த உறிஞ்சு வேர்கள் தொற்று வேர்களுக்கும் மரத்துக்கும் இடையே சேரும் இலை முதலியவற்றின் மட்குக்கு உள்ளே நுழைந்து நீர் முதலியவற்றைச் சேகரிக்கும். இவை தொற்று ஆர்க்கிடுயன்றி இன்னும் ஒருவித வேர் இவற்றிற்குண்டு. அது இந்த காற்றில் தொங்கிக்கொண்டிருக்கும் விழுது. இந்த விழுதைச் சுற்றிலும் கடற் பஞ்சு போன்ற உறை வளர்கின்றது. இதில் உள்ளீடில்லாத அணுக்கள் பல அடுக்குக்களாக இருக்கும். இந்த உறைக்குப் போர்வை அல்லது வெலாமென் (Velamen) என்று பெயர். இது மேலே விழும் நீரை விரைவில் மையுறிஞ்சுதாள் போல உள்ளிழுத்துக் கொள்ளும். காற்றில் ஆவியாக இருக்கும் நீரையும் இது கிரகித்துக்கொள்ளும் அமைப்புள்ளது. வெலாமென் உறைக்கு அடியிலிருக்கும் திசு பச்சையாக இருக்கும். அதில் ஒளிச் சேர்க்கை நடக்கும். இந்த வேரை நனைத்துப் பார்த்தால் பச்சை நிறம் நன்றாகக் காணும்.

பூ வளர்நுனி மஞ்சரியாகப் பெரும்பாலும் கதிராகவே உண்டாகும். ஒற்றை விதையிலை வகுப்பின் அமைப்புள்ளது. மூன்றடுக்கு வட்டமுறையுள்ளதாயினும் சில பாகங்கள் உண்டாவதில்லை; சில ஒன்று சேர்ந்து கொள்ளும். சில அளவு கடந்து வளரும். இவ்வாறு வியக்கத்தக்க பல வேறுபாடுகள் இந்தப் பூக்களில் காணும். இதழ்கள் எல்லாம் அல்லியிதழ்கள் போலவே இருக்கும். ஆறு இதழ்கள் இரண்டு வட்டமாக, ஒரு தளச்சமச்சீரில் அமைந்திருக்கும். உள் வட்டத்தின் மேலிதழ் மற்றெல்லா இதழ்களையும்விட மிகப் பெரிதாகவும் பலமாகவும் வளர்ந்திருக்கும். அதற்கு உதடு (Labellum) என்று பெயர். பூவின் மற்றப் பாகங்களுக்கு அடியில் இருக்கும் கீழ்ச்சூலறையானது (Inferior ovary) அரைவட்ட அளவு அதாவது 180° முறுக்கிக் கொள்வதனாலே, பிறப்பின்படி மேற்பாகத்தில் இருக்கவேண்டிய இந்த உதட்டிதழானது பூவின் கீழ்ப்பாகத்திற்கு வந்து விடுகிறது. இது பூந்தேனைப் பருகப் பறந்துவரும் பூச்சி இறங்கும் இடமாக உதவுகிறது. சில சாதி ஆர்க்கிடுகளிலே உதட்டின் கீழிருந்து ஒரு பூந்தேன் குழாய் வளர்ந்திருக்கும்.

தொற்று ஆர்க்கிடு வேர்
(மேலே) தொற்றார்க்கிடு விழுதின் குறுக்குவெட்டு. 1. வெலாமென். 2. வெளிப்புறத் தோற்படை. 3. புறணி. 4. நடுவுருளை. (கீழே) விழுதின் குறுக்குவெட்டு வெளிப்பகுதியின் ஒரு சிறு பாகம் பெரிதாகக் காட்டியிருக்கிறது. 1. வெலாமென் ஆறு, ஏழு அடுக்குக்கள் உள்ளது. 2. வெளிப்புறத் தோற்படை யணுக்கள் நான்கு தெரிகின்றன. 3. வெலாமென் உறிஞ்சும் நீரை வேரினுள்ளே கடத்தும் மெல்லிய சுவருள்ள வழியணு.

ஆண்பாகம் மூன்றடுக்கு வட்ட முறைப்படி மூன்று கேசரங்கள் உள்ளதாக இருக்கவேண்டும். ஆனால் இந்தப் பூக்களில் சாதாரணமாக நன்றாக வளர்ந்த கேசரம் ஒன்றும், வளராத போலிக்கேசரங்கள் இரண்டும் இருக்கின்றன. உதாரணமாக ஆர்க்கிஸ். சைப்பிரிபீடியம் சாதியிலும் அதைச் சேர்ந்த சிலவற்றிலும் இரண்டு கேசரங்களும் ஒரு போலிக் கேசரமும் உண்டு. இந்தப் பண்பினாலே ஆர்க்கிடுகள் ஒரு கேசரமுள்ளவை, இரு கேசரமுள்ளவை என்னும் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. ஆர்க்கிஸ் பூவின் ஆதானம் பூவின் நடுவே மேலே நீண்டு வளர்ந்திருக்கிறது. அதற்குத் தம்பம் என்று பெயர். கேசரங்கள் அந்தத் தம்பத்துக்கு இணைந்து வளர்ந்திருக்கின்றன. இதே தம்பத்தின் உச்சியில்தான் இந்தப் பூவின் மூன்று சூல்முடிகளும் இருக்கின்றன. ஆகவே ஆர்க்கிடுகளில் கேசரம் சூலகத்துடன் ஒட்டியிருக்கிறது. கேசரம் அப்படி நிற்கும் நிலை சூலணைகேசரநிலை எனப்படும். ஆர்க்கிடுகளில் பெரும்பாலும் மகரந்தப் பையறையிலுள்ள தூள்கள் ஒன்று சேர்ந்து மகரந்தத் திரள்களாகின்றன. பிசின் போன்ற நுண்மையான இழைகள் இந்த மகரந்தத் தூள்களை ஒட்ட வைக்கின்றன. இந்த இழைகள் கூடித் திரளின் அடியில் ஒரு காம்பு போல ஆகின்றன. ஒவ்வொரு காம்பும் சற்று அகன்று ஒட்டிக் கொள்ளும் வில்லையில் முடிகிறது. ஒரு கேசரத்தின் மகரந்தப் பையின் இரண்டு அறைகளிலும் அறைக்கு ஒன்றாக இரண்டு திரள்கள் இருக்கின்றன. இரண்டு திரள்களின்

ஆர்க்கிஸ் சாதி
A. ஆர்க்கிஸ் மாஸ்குலா : பூவின் பக்கப் பார்வை: உதட்டிதழ் தவிர மற்றப் புறவிதழ் அகவிதழ்களையெல்லாம் நீக்கியிருக்கிறது. உதட்டிதழின் அரைப்பாகமும், தேன் குழாயின் மேற்பாகமும் கத்தரித்திருக்கின்றன. 1. மகரந்தப்பை இரண்டு அறைகளும் அவற்றுள் இரண்டு மகரந்தத் திரள்களும். 2. ராஸ்டெல்லம். 3. உதட்டிதழ். 4. தேன் குழாய் 5. உள்ளடங்கிய சூலகம். 6. சூல்முடி

B. ஆர்க்கிஸ் மாக்குலேற்று : பூவின் முன் பார்வை. 1,4,5, புறவிதழ்கள். 2,3,6. அகவிதழ்கள். அவற்றில் 6. உதட்டிதழ். 7. உதட்டிதழிலிருந்து வளர்ந்திருக்கும் தேன் குழாயின் வாய். 8. மகரந்தப்பை : இரண்டு அறைகளும் அவற்றுள் மகரந்தத் திரள்களும் தெரிகின்றன. 9,9. சூல் முடிகள்.

C. ஒரு மகரந்தத்திரள். 1. திரள். 2. காம்பு. 3. ஒட்டிக் கொள்ளும் வில்லை.

D. ஆர்க்கிஸ் மாஸ்குலா மகரந்தத்திரள். 1. பென்சில் முனையால் அதையெடுத்தவுடன் அது நிமிர்ந்து நிற்கும் நிலை. 2. சற்று நேரம் சென்றதும் காற்றுப்படுவதால் உலர்ந்து முன்னுக்கு வளைந்து நிற்கும் நிலை.

E. பூ வெட்டுப் படம் : பூ முறுக்கிக்கொண்டு மேல்கீழாகத் திரும்புவதற்கு முன்னுள்ளது போலக் காட்டியிருப்பது. கரும் புள்ளி மேல்பாகத்தைக் குறிக்கிறது. வெளியிலிருந்து உள்ளுக்கு முறையே பூக்காம்பிலை ஒன்று. புறவிதழ் மூன்று, அகவிதழ் மூன்று. மேற்பக்கத்திலுள்ளது உதட்டிதழ். கேசரச் சுற்றில் ஒரு கேசரம் நன்றாக வளர்ந்திருக்கிறது. அதன் இருபுறமும் வளராத போலிக் கேசரங்கள். நடுவில் மூன்று சூலிலைகளாலான ஒரே சூலறையுள்ள சூலகம். மூன்று சுவரொட்டுச் சூலடுக்குக்கள்.

A.C.D. டார்வினையும், B. மக்லியோடையும். E. ஐக்லரையும் தழுவியவை.

காம்புகளின் நுனியிலுள்ள இரண்டு வில்லைகளும் சூல் முடிகள் மூன்றில் மலடான ஒரு சூல்மூடியின் மேலே ஒட்டிக்கொண்டிருக்கின்றன. இந்த மலட்டுச் சூல் முடியானது ஒரு தடுக்குப்போல முன்னுக்கு நீட்டிக் கொண்டு, மகரந்தத்திரள் இருக்கும் மேல்பாகத்தையும், பக்குவமாகக்கூடிய இரண்டு சூல்மூடிகள் இருக்கும் கீழ்ப்பாகத்தையும் நன்றாகப் பிரித்து நிற்கின்றது. இதற்கு ராஸ்டெல்லம் என்று பெயர்.

சூலகமானது மூன்று சூலிலைகள் கூடி உண்டானது. ஒரு சாதி ஆர்க்கிடு தவிர மற்ற எல்லாச் சாதி ஆர்க்கிடுகளிலும் உள்ளே ஒரே அறைதான் உண்டு. சூல்கள் மூன்று நெடுவரிசையாகச் சுவரொட்டுச் சூலடுக்க முறையில் அமைந்திருக்கின்றன. மகரந்தச் சேர்க்கையும் கருவுறலும் ஆன பிறகே சூல் வளரத் தொடங்கும்.

கனி உலர்கனி. நுண்ணிய இலேசான பெருந்தொகையான விதைகளுள்ளது. விதையில் முளைசூழ்தசை இல்லை. அதன் கருவில், முளையோ, முளைக்குருத்து, விதையிலை என்னும் வேறுபாடுகளோ தோன்றுவதில்லை.

மகரந்தச் சேர்க்கை பூச்சிகளால் நடக்கிறது. தேன் சுரந்து குழாயில் நிற்பதில்லை. பூச்சி அந்தக் குழாயின் திசுவைக் குத்தித் தேனை உறிஞ்சவேண்டும். இந்தச் சேர்க்கைக்காக இருக்கும் ஏற்பாடுகள் பலவிதமானவை, அசாதாரணமானவை. ஆர்க்கிஸ் சாதிப் பூவில் நடப்பதை ஓர் உதாரணமாகப் பார்க்கலாம். பூச்சி உதட்டிதழில் வந்து உட்காருகிறது. அதன் பூந்தேன் குழாயில் தேனுக்காகத் தேடுகிறது. அப்போது பூச்சியின் தலை மலட்டுச் சூல்முடியில் படுகிறது. அப்போது அங்குள்ள மகரந்தத்திரட் காம்பையும் வில்லையையும் மூடிக்கொண்டிருக்கின்ற மெல்லிய படலத்தை ஒரு புறம் தள்ளிவிடுகிறது. பூச்சி அந்தக் காம்பு வில்லைகளை அழுத்துகிறது. அவை அதன் தலையில் ஒட்டிக் கொள்கின்றன. பூச்சி பூந்தேன் குழாயைத் தொளைத்துக்கொண்டிருக்கும் நேரத்திற்குள், வில்லையின் பிசு பிசுப்புக் காய்ந்து, திரள்கள் பூச்சியின் தலையில் நன்றாகப் பிடித்துக்கொள்கின்றன. பூவிலிருந்து பூச்சி வெளியே வரும்போது மகரந்தத் திரள்கள் அறைகளிலிருந்து உருவிக்கொண்டு பூச்சியோடு வந்துவிடுகின்றன. முதலில் அவை பூச்சியின் தலைமேலே நேராக நிமிர்ந்து நிற்கின்றன. பிறகு காம்பிலுள்ள ஈரம் காயக் காய அவை மெல்ல மெல்ல முன்னுக்கு வளைகின்றன. அப்போது இந்தப் பூச்சி இன்னொரு பூவில் நுழையுமானால் அந்த இரண்டு திரள்களும் நேராகச் சென்று, பக்குவமடைந்து ஈரமாக இருக்கும் சூல்முடிகளில் படுகின்றன. இவ்வாறு அயல் மகரந்தச் சேர்க்கை நிகழ்கின்றது. தன் மகரந்தச் சேர்க்கை நடப்பதேயில்லை. ஆர்க்கிடுகளில் நடக்கும் மகரந்தச் சேர்க்கையைப்பற்றிச் சார்லஸ் டார்வின் ஆராய்ந்து, ஆர்க்கிடு கருவுறல் (The Fertilisation of Orchids) என்னும் அரிய நூலை எழுதியிருக்கிறார்.

பல ஆர்க்கிடுகளில் பூக்கள் மிகவும் சிறப்பான அமைப்புடையனவாய் ஏதோ குறித்த ஒருவகைப் பூச்சி வருவதற்கும், தேனைப் பருகுவதற்கும், மகரந்தச் சேர்க்கை நிகழ்த்துவதற்கும் தக்கவையாக இருக்கின்றன. மடகாஸ்கார் தீவில் ஆங்கிரீக்கம் செஸ்குபிடேல் (Angraecum sesquipedale) என்னும் அழகிய ஒருவகை ஆர்க்கிடு இருக்கிறது. இதன் பூந்தேன் குழாய் சுமார் பதினொன்றரை அங்குல நீளமிருக்கிறது. தேன் கடைசி 1½ அங்குலத்தில் மட்டும் இருக்கும். இந்தப் பூவைப் பார்த்த டார்வின் 10-11 அங்குல நீளம் உறிஞ்சுகுழலுள்ள ஒரு பூச்சி இதில் மகரந்தச் சேர்க்கை யுண்டாக்குவது அந்தத்தீவில் இருக்கலாம் என்று 1862-ல் தமது நூலில் எழுதினார். அப்படிப்பட்ட ஆர்க்கிடு பூச்சியைப் போர்ப்ஸ் என்பவர் கண்டுபிடித்து 1873-ல் அதைப்பற்றி எழுதினார்.

ஆர்க்கிடு வாழ்க்கையில் மற்றோர் உயிரியற் சிறப்பும் உண்டு. ஆர்க்கிடுகளின் வேரைச் சுற்றிலும் காளான் இழைகள் பொருந்தியிருக்கும். இந்த இழைகள் ஆர்க்கிடு வேரின் புறணிக்குள்ளே புகுந்து, அங்குள்ள உயிரணுக்குள்ளேயும் வாழும். இந்தக் காளானுக்கும் ஆர்க்கிடுக்கும் கூட்டுயிர் வாழ்க்கை ஏற்பட்டிருக்கிறது. இந்தக் காளானுக்கும் வேருக்கும் உள்ள சம்பந்தத்தைக்

நியோட்டியா ஆர்க்கிடு வேர்
(மேலே) வேரின் குறுக்குவெட்டு. 1. காளான் வேர் அகவலயம். 2.நடுவுருளை.
(கீழே) காளான்வேர் அகவலயத்தின் ஒரு சிறு பாகம் பெரிதாகக் காட்டியிருக்கிறது. 1. நலத்துடன் இருக்கும் காளான் இழைகள். 2. செரிமானமாய்விட்ட காளான் இழையின் சிதைவு. 3. ஸ்டார்ச்சு மணிகள் உள்ள அணு.

காளான் வேர் அல்லது மைக்கோரைசா என்பர். காளான் நிலத்திலுள்ள மட்கைச் சிதைத்துக் கரிமப் பொருள்களாக மாற்றி, அவற்றையும், நிலத்திலுள்ள தாது உப்புக்களையும், நீரையும் உறிஞ்சி, அவற்றை ஆர்க்கிடுக்கு உதவுகின்றதென்றும், ஆர்க்கிடின் உடலிலிருந்து காளான் சர்க்கரையை எடுத்துக் கொள்ளுகிறதென்றும் அறிஞர் கருதுகின்றனர். மேலும் ஆர்க்கிடின் புறணியணுக்களிலே காளான் இரண்டுவகையாக இருக்கிறது. சில அணுக்களிலே இருப்பது உயிருள்ள காளான்; உடல் நலத்துடன் இருக்கிறது; சுறுசுறுப்பாக வாழ்க்கை நடத்துகிறது. இழைகள் நன்றாகக் காணும். சிக்கலான நூல்போலத் தோன்றும். மற்றுஞ் சில அணுக்களில் காளான் சிதைந்து, அதன் சத்தெல்லாம் செரிமானமாகிவிட்டு, எஞ்சியிருக்கும் பாகம் மட்டும் கிடக்கும். செரிமானமான பொருள்கள் ஆர்க்கிடுக்கு உணவாகிவிடுகின்றன என்று எண்ணவேண்டும். இன்னும் காளான் வேர் காற்றிலுள்ள நைட்டிரஜனையும் உறிஞ்சி, அது சம்பந்தமான உப்பாகச் சமைத்து, அந்த உப்பையும் ஆர்க்கிடுக்கு உதவுகிறது என்றும் நினைக்கின்றார்கள். மற்றும் காளான் இல்லாமல் ஆர்க்கிடு விதை முளைப்பதில்லை. நாற்று வளர்வதுமில்லை. காளான்வேர் மட்கு மிகுந்த சதுப்பு, காடு, வெப்ப வலய மழைக்காடு இவற்றிலுள்ள ஆர்க்கிடுகளில் மிகுதியாக உண்டு. இலையும் பச்சையமும் இல்லாத ஆர்க்கிடுகளில் இந்தக் கூட்டுறவு சிறந்து காண்கிறது.

ஆர்க்கிடுகள் துருவப் பிரதேசம் தவிர மற்ற எல்லாத் தட்ப வெப்பப் பகுதிகளிலும் வளர்கின்றன. ஆயினும் அவை ஈரப்பதமிக்க வெப்ப வலயக்காடுகளில் வகையிலும் தொகையிலும் எண்ணிறந்து மலிந்திருக்கின்றன.

இந்தியாவில் பல ஆக்கிடுகள் இருக்கின்றன. சம பூமிகளில் தரையில் சில வகைகள் சாதாரணமாக வளர்கின்றன. ஆயினும் மலைகளிலும் காடுகளிலும் தான் ஏராளமான வகைகள் இருக்கின்றன. தரையில் சாதாரணமாக வளர்பவை சியூக்சின், யூலோபியா, ஹாபனேரியா என்னும் சாதிகளில் சில இனங்கள். தொற்றுச்செடிகளில் சில டென்ட்ரோபியம், சீலோகைனி, வாண்டா (நாக நல்லறு) என்பவை. இரண்டொன்று அழுகு பொருளில் வாழ்பவை. இவற்றிற்கு இலையுமில்லை; பச்சை நிறமுமில்லை. உதாரணம் எபிபோகம், நியோட்டியா.

ஆர்க்கிடுகளைப் பூவுக்காகத்தான் பெரும்பாலும் வளர்க்கிறார்கள். ஒரே ஒரு வகைதான் சற்று வாசனைப் பண்டமாக உபயோகப்படுகிறது. அது வானில்லா என்பது. அதன் கனிகளை உலர்த்தி மிட்டாய்க்கு வாசனையாக இந்தியாவில் பயன்படுத்துகிறார்கள். யூலோபியா, ஆர்க்கிஸ், ஹாபனேரியா முதலிய ஆர்க்கிடுகளின் கிழங்கு சாலேப்மிசிரி என்னும் உணவுப் பண்டமாகவும் காதுபுஷ்டிப் பொருளாகவும் விற்கப்படுகிறது.