கலைக்களஞ்சியம்/ஆர்க்கியாப்டெரிக்ஸ்
ஆர்க்கியாப்டெரிக்ஸ் ஆர்க்கியாப்டெரிக்ஸ் பதினைந்து கோடி ஆண்டுகட்கு முன் வாழ்ந்திருந்த பறவை. இதன் பாசில்களே இதுவரையிலும் அறிந்துள்ள பறவைகளின் பாசில்களிலெல்லாம் மிகப் பழையவை. ஜெர்மனியிலுள்ள பவேரியாவில் சோலென்ஹோபென் என்னும் ஊருக்கு அருகிலுள்ள லித்தொகிராபிக் சுண்ணக்கல் அடுக்குக்களில் அகப்பட்டவை. அடுக்குக்கள் மேலை ஜுராசிக் காலத்தவை. இதுவரையிலும் மூன்றே பாசில்கள் அகப்பட்டிருக்கின்றன. 1861-ல் ஓர் இறகின் அழகிய பதிவு கிடைத்தது. அதே ஆண்டில் தலையில்லாத எலும்புக் கூடு, இறக்கை யிறகுகள், வால் இறகுகளுடன் கிடைத்தது. 1877-ல் இன்னொன்று தலையோட்டுடன் கிடைத்தது. மிக நொய்ம்மையான களிமண் படிவாகையால் இப்பதிவுகளில் நுட்பமான அமைப்புக்கள்கூட நன்றாகக் காண்கின்றன. பின்சொன்ன இரண்டு பாசில்களும் இருவேறு இனங்கள் எனக் கருதுகின்றனர். முந்தினது ஆர்க்கியாப்டெரிக்ஸ் என்றும், மற்றது ஆர்க்கியார்னிஸ் என்றும் பெயர் பெறும். ஆர்க்கியாப்டெரிக்ஸ் பாசில் பிரிட்டிஷ் பொருட்காட்சிச் சாலையிலும், ஆர்க்கியார்னிஸ் பாசில் பெர்லின் பொருட்காட்சிச் சாலையிலும் இருக்கின்றன. இவை யிரண்டையும் பொதுவாக ஆர்க்கியாப்டெரிக்ஸ் என்றே வழங்குவார்கள். ஆர்க்கியாப்டெரிக்ஸ் என்றால் பழஞ் சிறகி யென்றும், ஆர்க்கியார்னிஸ் என்றால் பழம் பறவை என்றும் பொருள்படும்.
ஆர்க்கியாப்டெரிக்ஸ் ஒரு காகத்தின் அளவு உள்ளது. இதற்கு 20, 21 முள்ளெலும்புகளுள்ள நீண்ட வாலுண்டு. வால் நெடுகிலும் முள்ளெலும்புக்கு ஒரு ஜதையாக இறகுகள் உண்டு. வாலின் நுனியிலும் இறகுகள் காணப்படுகின்றன. காலில் பலமான விரல்கள் உண்டு. இவை மரக்கிளைகளைப் பற்றிக் கொண்டு உட்காருவதற்கும் தரையில் நடப்பதற்கும் ஓடுவதற்கும் ஏற்றவை. இறக்கைகளில் பெரிய இறகுகள் உண்டு. நன்றாகப் பதிந்துள்ள இறக்கை யிறகு 6 அங்குல நீளமும் 1 அங்குல அகலமுமுள்ளது. உடம்பின் பக்கங்களை மூடியிருக்கும் சிறிய உடலிறகுகளும் இருக்கின்றன.
இறக்கை யெலும்புகள் சாதாரணப் பறவைகளில் மேற்கை யெலும்பு ஒன்று, முன் கை யெலும்புகள் இரண்டு, மணிக்கட்டு எலும்புகள் இரண்டு தெரியும். அகங்கை யெலும்புகள் மூன்றே உண்டு ; அவையும் ஒன்றாகக் கூடியிருக்கும்; மூன்று விரல்கள் உண்டு. ஆர்க்கியாப்டெரிக்ஸில் அகங்கை யெலும்புகள் தனித்தனியாக இருக்கின்றன. நான்கு விரல்கள் காண்கின்றன. அவற்றில் இரண்டிற்கு உகிர்கள் உண்டு. இரண்டிற்கு விரல்களின் நுனியைக் காணோம். மார்பு
எலும்பு இன்னதென்று தெளிவாக தெரியவில்லை. எலும்புகள் கட்டியாக இருக்கின்றன. இக்காலப் பறவைகளில் பல எலும்புகள் குழாயாக இருக்கும்.
ஆர்க்கியாப்டெரிக்ஸ் நன்றாகப் பறக்க முடியாது. மரத்துக்கு மரம் தாவிப் போயிருக்கலாம். இரக்கையின் விரல்களிலுள்ள உகிர்களால் மரக்கிளைகளைப் பற்றி ஏறி இருக்கலாம். தரையில் நடந்தும் நன்றாக ஓடியும் இருக்கலாம். இக்காலப் பறவைகளுக்குப் பல் இல்லை. ஆர்க்கியாப்டெரிக்ஸின் தாடைகளில் கூர்மையான முனையுள்ள கூம்பு வடிவப் பற்கள் இருக்கின்றன. தாடையெலும்பிலுள்ள குழிகளிலிருந்து அவை எழுகின்றன.
தலையோட்டின் வடிவம், தாடையில் அலகுகளில்லாமல் பற்கள் இருத்தல், எலும்புகள் சிலவற்றின் இயைபு, அங்கை எலும்புகள் தனித்தனியாகப் பிரிந்திருத்தல், எலும்புத் தொடராலான நீண்ட வால் ஆகிய பண்புகளில் ஆர்க்கியாப்ரெடிக்ஸ் ஊர்வனவற்றை ஒத்திருப்பினும் இறகுகளின் அமைப்பு, இறக்கையிறகுகள் முன்கை எலும்புகளோடு பொருந்தியிருத்தல் காலடியின் அமைப்பு ஆகிய தன்மைகளால் இது பறவையே எனத் தெளிவாகின்றது. இறகு பறவையின் முக்கியக் குறி, ஆகவே ஆர்க்கியாப்ரெடிக்ஸ் எல்லாப் பறவைகளிலும் மிகப் பழையதாகும். ஊர்வனவற்றிற்கும் இக்காலப் பறவைகளுக்கும் உள்ள பரிணாமத் தொடர்பைக் காட்டும் அடையாளமாக இந்தப் பறவை விளங்குகிறது.