கலைக்களஞ்சியம்/ஆர்க்ரைட்டு, சர் ரிச்சர்டு

விக்கிமூலம் இலிருந்து

ஆர்க்ரைட்டு, சர் ரிச்சர்டு (Arkwright, Sir Richard 1732-92) புதுப்பொருள் ஆக்கிய அறிஞர். இவர் இங்கிலாந்திலுள்ள பிரஸ்டன் என்னுமிடத்தில் ஏழைக் குடும்பத்தில் பிறந்தார். அதிகமாகக் கல்வி பெற வசதியற்ற இவர் நாவிதரானார். தமது முப்பத்தைந்தாவது வயதில் தற்செயலாக ஒரு நாள் இவர் ஹார்கிரீவ்ஸ் (த. க.) என்ற அறிஞரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் அமைத்திருந்த நூற்கும் ஜென்னி என்ற பொறியைப்பற்றி இவர் அறிந்தார். அதைத் திருத்தியமைக்க வேண்டும் என்ற ஆவல் மேலிட இவர் தமது தொழிலைவிட்டுப் புதுப்பொருள் ஆக்கத்தில் இறங்கினார். அதன் பயனாக இவர் 1769-ல் நூற்கும் சட்டம் என்ற அமைப்பைக் கண்டுபிடித்தார். அதை ஹார்கிரீவ்ஸின் பொறியில் பொருத்திவிட்டால் அதைக் கொண்டு தேவையான தடிப்புள்ள பல நூல்களை ஒரே சமயத்தில் நூற்கலாம். தாம் கண்டுபிடித்த அமைப்பைச் செய்து விற்கப் போதிய மூலதனம் இல்லாமல் இவர் தொல்லைப்பட்டார். எந்திரங்களுக்கு எதிராக நடந்த கலகங்களிலும் இவர் அவதியுற்று ஊரையே விட்டுப்போக நேர்ந்தது. தம் உரிமைகளுக்காகப் பல வழக்குக்கள் நடத்தி, அவற்றை நிலை நாட்டிய பின்னர் இவர் பணக்காரரானார்.