கலைக்களஞ்சியம்/ஆற்றுப்படை
ஆற்றுப்படை : பாணர், கூத்தர் முதலியோர்களில் ஒருவர், தாம் ஒரு வள்ளலிடம் பெற்ற பெருஞ்செல்வத்தை எதிர் வந்த புலவர், கூத்தர் முதலியோர்க்கு அறிவுறுத்தி, அவரும் அவ்வள்ளலிடஞ் சென்று, தாம் பெற்றவற்றையெல்லாம் பெறுமாறு வழிப்படுத்துதல் ஆற்றுப்படையாகும். இங்ஙனம் எல்லோருமே கூறலாமெனினும் கூத்தர், பொருநர்,பாணர், விறலியர் போன் றோரே கூறுவதாகச் செய்யுள் செய்தல் மரபு (தொல். புறம் 36). இங்ஙனம் கூறினும் திருமுருகாற்றுப்படை யைப் புலவராற்றுப் படையெனவும் வழங்குவதால் புலவரை ஆற்றுப்படுத்தலும் உண்டு எனக் கொள்ளலாம். 'புலவராற்றுப்படை புத்தேட்கும் உரித்தே என்பதனால் பன்னிருபாட்டியல் என்னும் நூல் (204) மக்களுக்கும் தேவருக்கும் உரியதாகப் புலவராற்றுப் படையைக் கூறுவதை அறியலாம்.
இவ்வகை ஆற்றுப்படைகள் பத்துப்பாட்டிலே திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, மலைபடுகடாம் அல்லது கூத்தராற்றுப்படை யெனத் தனி நூல்களாக வந்துள்ளன. பதிற்றுப்பத்து, புறநானூறு, புறப்பொருள் வெண்பாமாலை முதலிய புறப்பொருள் சார்பான நூல்களிலும் கலம்பகங்களிலும் தனிப்பாடல்களிலும் தனிச் செய்யுட்களாகவும் வந்துள்ளன. பிற்காலத்தும் வேறொரு புலவராற்றுப்படை, திருத்தணிகையாற்றுப்படை, திருப்பாணாற்றுப்படை முதலியன இயற்றப்பட்டுள்ளன.