உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆல்டிரொவாண்டா

விக்கிமூலம் இலிருந்து

ஆல்டிரொவாண்டா புலால் உண்ணும் ஒரு சிறு நன்னீர்ப் பூண்டு. 4-6 அங்குல நீளமுள்ளது. அமைதியான நீர் நிலைகளில் நீர் மட்டத்திற்குச் சற்றுக் கீழே மிதப்பது. இதற்கு வேரில்லை. தண்டு மிகவும் மெல்லியது. அதிகமாகக் கிளை விடுவதில்லை. இலைகள் ஒவ்வொரு கணுவிலும் எட்டு ஒரு வட்டமாக இருக்கும். பூக்களுக்குச் சிறு காம்புகளுண்டு. இது முதன் முதல்

ஆல்டிரொவாண்டா
(i) செடி (ii) இலை

இந்தியாவிலேதான் கண்டு பிடித்து வருணிக்கப்பட்டது. கிழக்கே ஜப்பானிலிருந்து, மேற்கே பிரான்ஸ் வரையில் யூரேஷியாவிலும், ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இந்தச் சாதி வளர்கிறது.

இதன் இலையின் அலகு நடு நரம்பின் நீளத்தில் இரண்டாக மடியக் கூடும். இலை நுனியில் நீண்ட மயிர்கள் சில உண்டு. அவற்றைத் தொட்டால், அலகின் இரு பாகங்களும் ஒரு வகை எலிப்பொறியின் இரண்டு வட்டமான இரும்புகளும் எப்படிச் சேர்கின்றனவோ, அப்படி நெருங்கி வருகின்றன. முற்றிலும் ஒன்றாகச் சேர்ந்து கொள்வதில்லை, சற்று இடைவெளியிருக்கும். இவ்வாறு சேர்கின்ற இரு பாகங்களுக்கும் இடையே நீரில் வாழும் சிறு பிராணிகள் அகப்பட்டுக் கொள்ளும். இலையிலுள்ள சுரப்பிகளிலிருந்து உண்டாகும் திரவத்தில் அவை செரிமானமாகி விடும். செரித்த உணவுப் பொருள் இலைக்குள் உறிஞ்சிக் கொள்ளப்படும்.