உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆல்பர்ட்

விக்கிமூலம் இலிருந்து

ஆல்பர்ட் (1819-1861) ஜெர்மனியிலுள்ள கோபர்கில் பிறந்தவர். பிரிட்டிஷ் அரசியான விக்டோரியாவின் கணவர்; அவ்விருவரும் ஒரே ஆண்டில் பிறந்தவர்கள். 1840-ல் அவர்களுக்கு மணமாயிற்று. அவர் பிரிட்டிஷ் அரசியலில் அதிகமாக முன்னணிக்கு வரவில்லையாயினும், பிரிட்டிஷ் சமூக அலுவல்களில் ஈடுபட்டு வந்தார். 1851-ல் இங்கிலாந்தில் நடந்த கண்காட்சியின் வெற்றிக்கு அவரே பெரும்பாலும் காரணம். 1857-ல் பிரின்ஸ் கான்சர்ட் என்னும் பதவி அளிக்கப்பெற்றார். அவர் அயலாராதலின் பிரிட்டிஷ் மக்கள் முதலில் அவரை அதிகமாக விரும்பவில்லை; அவருடைய அரிய பண்புகளை அறிந்தபின் பேரன்பு பாராட்டினர். அவர் 1861 டிசம்பர் 14-ல் தமது 42ஆம் வயதில் இறந்தார்.

ஆல்பர்ட் I (1248-1308): இவன் ஒரு ஜெர்மன் அரசன். I-ம் ரூடால்பின் மகன்; இவன் ஆட்சித் தொடக்கக் காலத்தில் உள்நாட்டுப் போரை எதிர்த்து, எதிரியான அடால்ப் என்பவனை வென்று மன்னனானவன். போப் VIII-ம் பானிபேசுக்கும் இவனுக்கும் முதலில் மனவேறுபாடு இருந்ததாயினும் பிறகு இத்தாலியைக் கைப்பற்றச் செல்லும் எண்ணத்தை விட்டுவிட்டதால் போப்போடு நட்பு முறையில் இருந்தான். 1308 மே 1-ல் இவன் ஜான் என்பவனால் கொலை செய்யப்பட்டான்.

ஆல்பர்ட் I (1875-1934) பெல்ஜிய மன்னன். முதல் உலக யுத்தத்தின்போது இவன் சேனாதிபதியாயிருந்து தன் நாட்டின் பாதுகாப்பை மேற்கொண்டான். பெல்ஜியத்தில் விஞ்ஞானக் கல்வியைப் பரப்பப் பலவகையிலும் முயன்றான். இவன் மகன் II -ம் லியபால்டு இரண்டாம் உலக யுத்தத்தின் போது ஹிட்லரை எதிர்த்துப் பிறகு சரணடைந்தவன்.