உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/ஆல்பர்ட்டா

விக்கிமூலம் இலிருந்து

ஆல்பர்ட்டா (Alberta) கானடாவிலுள்ள ஒரு மாகாணம். விக்டோரியா அரசியின் மகள் ஆல்பர்ட்டா என்பவளது பெயரால் இப் பெயர் பெற்றது. வடபகுதி பெரும்பாலும் காடாகவே இருக்கிறது. மற்றப் பகுதியில் கானடாவில் விளையும் தானியங்களுள் பெரும்பகுதி விளைகிறது. தென் பகுதியில் கால் நடைகள் மிகுதி. இயற்கை வளங்கள் ஏராளம். கானடாவில் உண்டாகும் மண்ணெண்ணெயில் 90% இங்குக் கிடைக்கிறது தென் மேற்குப் பகுதியிலுள்ள மலைகள் மிகுந்த எழிலுடையவை. ஆயிரக்கணக்கான மக்கள் மலைவளங் காண வருவர். பரப்பு : 2,55,285 ச. மைல். உச்ச நீளம் : 750 மைல். உச்ச அகலம் : 420 மைல். கொலம்பியா சிகரம் 12,740 அடி. ஆதபாஸ்கா, சாஸ்காட்சிவான் முக்கிய ஆறுகள். நூற்றுக் கணக்கான ஏரிகள் இருக்கின்றன. இம் மாகாணம் ஏராளமான நிலக்கரிச் சாதனங்கள் கொண்டது. ஆதபாஸ்கா ஏரியே பெரியது. ஓர் அடி ஆழமுள்ள கரிசல் மண் இப் பிரதேசத்தை மிகவும் செழிப்பான தாக்குகிறது. மக்: 7,96,169 (1941). தலைநகரம் எட்மன்டன். மக்:93,817 (1941). இது மிகப் பெரிய ஆகாய விமான நிலையம். மக்களுள் 60% பிரிட்டிஷ் இனத்தைச் சேர்ந்தவர். சுமார் 30% கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து குடியேறியவர் 5% கானடாவில் குடியேறிய பிரெஞ்சுக்காரர் ; 3% செவ்விந்தியர். எட்மன்டனில் ஆல்பர்ட்டா பல்கலைக் கழகம் இருக்கிறது. ஆறு வயது முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகள் கட்டாயமாகக் கல்வி கற்கவேண்டும். எட்மன்டனில் மூன்று பெரிய நூல் நிலையங்கள் உள்ளன. செவ்விந்தியருடைய கைத்தொழிற் பொருள்கள் மிகுந்த அழகுடையன.