கலைக்களஞ்சியம்/ஆல்பேனிய மொழி
ஆல்பேனிய மொழி இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. அதை ஆல்பேனிய நாட்டில் 10 இலட்சம் மக்களும், இத்தாலியின் கீழ்க் கரையிலும் சிசிலியிலும் குடியேறியுள்ள 4 இலட்சம் மக்களும், யூகோஸ்லாவியாவிலும் கிரீசிலும் அங்கங்கே வாழும் சில இலட்ச மக்களும் பேசி வருகிறார்கள். இந்த மொழி தென் ஆல்பேனியாவில் டோஸ்க் (Toske) என்னும் உருவமும், வடக்கு ஆல்பேனியாவில் கெக் (Gheg) என்னும் உருவமும் உடையது. நானூறு ஆண்டுகளாக ஆண்டுவந்த துருக்கியர் ஆல்பேனிய நூல்களை வெளியிடலாகாது என்று தடுத்து, ஆல்பேனிய மொழி வளர்ச்சியைக் கெடுத்து வந்ததாலும், இப்போது அங்குள்ள மக்கள் முகம்மதியராகவும் கிறிஸ்தவராகவும் பிரிந்திருப்பதாலும் மொழி யொற்றுமை உண்டாக்குவது கடினமாக இருக்கிறது. ஆல்பேனிய மொழியில் நாடோடிப் பாடல்கள் ஏராளமாக உள்ளன. ஆல்பேனிய சட்ட கர்த்தா லெக் (Lek) என்பவரைப் பற்றிப் பல இதிகாசங்களும் வரலாற்றுப் பாடல்களும் காணப்படுகின்றன. ஆனால், மக்கள் பெரிதும் விரும்புவது ஸ்கான்டர்பெக் (Skanderbeg, 1410-1467) என்பவருடைய வாழ்க்கை வரலாறு பற்றியவைகளே யாகும். அவர்தாம் துருக்கியரை நாட்டுக்குள் நுழைய வொட்டாமல் பல்லாண்டுகளாகச் சண்டையிட்டவர். பண்டைய கவிகளும் இக்காலக் கவிகளும் அவரையே தேசியப் பெருவீரராகக் கருதுகின்றனர்.
பிரான்சிஸ்கர் என்னும் மத போதகர்கள் ஆல்பேனிய மொழியில் எழுதிய மத நூல்களை அச்சிடத் துருக்கிய அரசர்களிடம் இசைவுபெற்ற பிறகே புத்தகங்கள் ஆல்பேனிய மொழியில் எழுதப்படலாயின. 1841ஆம் ஆண்டில் இயேசு சங்கத்தார் (Jesuits) மற்ற நூல்களை அச்சிட அனுமதி பெறும்வரை தோன்றியவை அனைத்தும் மத நூல்களாகவே இருந்தன.
கிரோலாமா டி. ராடா (Girolama De Rada. 1813-1903) என்பவர் இத்தாலியில் வாழ்ந்த ஆல்பேனியர். அவர் முதலில் நாடோடிப் பாடல்களைச் சேகரித்து வெளியிட்டார். பிறகு தாமே கவிதைகள் வரைந்தார். அவரைப் போலவே முதலில் நாடோடிப் பாடல்களும், பிறகு சொந்தக் கவிதையும் வெளியிட்ட மற்றொருவர் கியேர்கி பிஷ்ட்டா (Gjergi Fishta. 1856-1941) ஆதிமுதல் ஆல்பேனிய மக்கள் சுதந்திரத்துக்காகப் பாடுபட்டவர்கள் என்பதை அவர் தம் நூல்களில் அழகாக எழுதியுள்ளார். பாசிஸ்ட் இத்தாலியர்கள் ஆல்பேனியாவை 1939-ல் கைப்பற்றிய காலத்தில் அவர் அவர்களுக்கு உதவி செய்ய மறுத்து விட்டார். அவருடன் சேர்ந்த வின்சென்க் ப்ரெனுஷி வெளியிட்டுள்ள நாடோடிப் பாடல் தொகுதி புகழ் பெற்றதாகும்.
பெர்லின் கவுன்சிலில் ஆல்பேனியாவைப் பிரித்த பொழுது எழுத்தாளருள் பெரும்பாலோர் நாட்டை விட்டு வெளியே ஓடவேண்டியவர்களானார்கள். அவர்கள் தங்கள் நூல்களைச் சோபியா (Sofia)வில் அச்சிட்டு மறைவாகத் தம் நாட்டுக்கு அனுப்பி வந்தனர்.
இவ்வாறு செய்தவர்களுள் ஒருவரான சாமி பே பிராசேரி (Sami Bey Frasheri) என்பலர் எழுதிய பேஸா (Besa) என்னும் நாடகம் சுதந்திரப் பற்றுடைய பாமர மக்களுடைய வீரத்தையும் அதிகாரத்துக்கு அடங்கி நடக்கும் மக்களுடைய கோழைத்தனத்தையும் உணர்ச்சி ததும்பச் சித்திரிக்கின்றது. அவருடைய சகோதரன் நெயிம் பிராஷேரி (Naim Frasheri 1846-1901) பல கவிதைகள் இயற்றினார். அவர் அயல் நாட்டிலேயே வறுமை நோயால் மாண்டார். பாஸ்கோ வாசா பாஷா (Pasko Vasa Pasha) என்பவர் தாம் 'என் ஆல்பேனியா' என்னும் ஆல்பேனிய சுதந்திர கீதத்தை இயற்றியவர்.
ஆல்பேனிய சுதந்திரத்துக்காக வெளிநாடுகளில் இருந்துகொண்டு உழைத்த எழுத்தாளர்களுள் சிறந்தவர்கள் பயிக் கொனிட்ஜா (Faik Konitze) என்பவரும், பான் எஸ். நோலி (Fan S. Noli) என்பவரும் ஆவர். பான் எஸ். நோலி, ஷேக்ஸ்பியர், இப்சன் முதலியோர் எழுதிய காவியங்களை மொழிபெயர்த்தும், சிறந்த மொழித்தொண்டு செய்து ஆல்பேனிய மொழியின் சொல் வளத்தைப் பெருக்கியும் அம்மொழியை இலக்கியச் சிருஷ்டிக்கு ஏற்ற மொழியாக ஆக்கியும் உள்ளார். இப்போ துள்ள கவிஞர்களுள் சிறந்தவர்கள் அலிஅஸ் லானி, ஸ்கெண்டர் பார்தி (Skender Bardhi) ஆகிய வர்கள். பேஸா என்னும் நாடகத்தைப் பார்தி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இதுதான் ஆல்பேனிய நூலின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு.