உள்ளடக்கத்துக்குச் செல்

கலைக்களஞ்சியம்/இசைநாடகம்

விக்கிமூலம் இலிருந்து

இசைநாடகம் (Opera): சாதாரண நாடகத்தில் பாட்டும் இசையும் இருக்கலாம்; ஆனால் அவை முக்கியமானவையல்ல. இசைநாடகத்தில் பாட்டும் இசையுமே முக்கியம். பழங் காலத்திலிருந்தே பாட்டுடன் கூடிய நாடகங்கள் நடிக்கப் பெற்றதுண்டு. ஆனால் பாத்திரங்களின் சம்பாஷணைக்குப் பதிலாக வேறு குரல் இசையையோ, கருவி இசையையோ பயன்படுத்தும் வழக்கம் இருந்ததில்லை. பழங்காலக் கிரேக்க நாடக அரங்கு உச்சநிலையை அடைந்திருந்த காலத்தில் மேற்கூறிய வகையில் அமைந்திருந்த இசைநாடகங்கள் பல இயற்றப்பட்டு நடிக்கப்பட்டு வந்தன. அம்முறையைப் பின்பற்றிப் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இத்தாலியில் இசைநாடகங்களை இயற்றி நடிக்கத் தொடங்கினார்கள். அக்காலத்தில் வெனிஸ் நகரில் நடிக்கப்பட்ட இசைநாடகங்களை ஐரோப்பாவின் பல பகுதிகளிலிருந்து மக்கள் வந்து காண்பது வழக்கம். முதன் முதலில் பழங்காலப் புராணக் கதைகளை இசைநாடகங்களாக அமைத்தார்கள். ஆனால் அவற்றைப் பொதுமக்களும் விரும்பத் தொடங்கியபின் வீரமும் காதலும் நிறைந்த கதைகள் இசை நாடகங்களாக உருப்பெற்றன. ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்கு இசைநாடகப் பகுதியைச் சேர்த்து நடித்தார்கள். 18ஆம் நூற்றாண்டின் இடையில் வேடிக்கைக் கதைகளை இசைநாடகமாக எழுதும் பழக்கம் தோன்றியது. இசைநாடகத்தின் கேலி வடிவமாக வாட்வில் (Vaudeville) என்ற நாடக வடிவம் தோன்றியது.

மேனாட்டு இசையாசிரியர்களில் புகழ்பெற்ற ஹாண்டல், மோசார்ட், வாக்னர், சாய்கோவ்ஸ்கி, முஸ்ஸார்ஸ்கி ஆகியோர் சிறந்த இசைநாடகங்களை எழுதியுள்ளனர். இசைநாடகத்திற்கு இசையின் தரத்தை விட நாடகப் பண்பே முக்கியமானது. இசை நாடக ஆசிரியர் இசை யொலிகளால் மக்களின் உள்ளத்தில் எவ்வாறான உணர்ச்சிகள் தோன்றும் என்பதை அறிந்திருப்பதோடு நாடகக் கலையின் நுணுக்கங்களையும் பயின்றிருக்கவேண்டும்.

கதையையும் சம்பாஷணைகளையும் இசை வடிவில் கொண்டு, இசைநாடகங்கள் போன்ற நாடகங்கள் இந்தியாவிலும் எழுதப்பட்டுள்ளன. இவற்றுட் சில நாட்டிய நாடகங்களாக நடிக்கப்பட்டன என்பதற்குச் சான்று உள்ளது. இவற்றுள் தியாகராஜரது நௌகா சரித்திரம், பிரகலாத பக்த விஜயம், கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தனார் சரித்திரம், அருணாசலக் கவிராயரின் இராம நாடகம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.