கலைக்களஞ்சியம்/இணைப்பு

விக்கிமூலம் இலிருந்து

இணைப்பு (Joint): பொறியியலில் இரு பகுதிகளை இணைக்கும் அமைப்பு இணைப்பு என்று அழைக்கப்படுகிறது. இது கல், மரம், உலோகம் ஆகிய பொருள்களினால் செய்யப்படுகிறது. காற்றும், நீராவியும், நீரும் வெளியே கசியாது தடை செய்யவும், ஒரு பக்கத்திலிருந்து இன்னொன்றிற்கு விசையைக்கடத்தவும் இணைப்புக்கள் பயனாகின்றன. இவை ஒரே இடத்தில் நிலையாகவோ அல்லது இயங்குமாறோ அமைக்கப்படலாம்.கற்களைக்கொண்டு கட்டட வேலை செய்யும்போது கற்களினிடையே காரையையோ, சிமென்டைய இட்டு இணைக்கிறார்கள். முளைகளையும் ஆப்புக்களையும் கொண்டு மர உறுப்புக்கள் இணைக்கப்படுகின்றன. ஆணிகளையும் மரைகளையும் கொண்டும் மரங்களை இணைக்கலாம். இத்தகைய இணைப்பின் இழு வலிமை குறைவு. இணைப்பைச் சுற்றி இரும்புத் தகட்டினால் மூடி, மரத்தில் இணைத்து இதன் இழுவலிமையை அதிகமாக்கலாம். உலோகங்களைக்கொண்டு மிகச்சிறந்த இணைப்புக்களை அமைக்கலாம். இவற்றைத் தேவையான வடிவில் அமைக்க முடியும். முளைகளையும், மரைகளையும், தறையாணிகளையும் (Rivets) கொண்டு இந்த இணைப்புக்கள் அமைக்கப்படுகின்றன. இணைப்புக்களின் வழியே திரவமோ, வாயுவோ கசியாமல் இருக்க இறுக்கமான வளையங்களும் உருளைகளும் அவற்றில் பொருத்தப்படுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/இணைப்பு&oldid=1463193" இலிருந்து மீள்விக்கப்பட்டது