கலைக்களஞ்சியம்/இண்டியானா

விக்கிமூலம் இலிருந்து

இண்டியானா அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஓர் இராச்சியம். செவ்விந்தியர் வாழ்ந்த இடங்களை வெள்ளையர் கைப்பற்றியபொழுது, அவர்கள் இந்தப் பகுதியில் வந்து வாழத் தொடங்கினர். அதனால் இதற்கு இப்பெயர் உண்டாயிற்று. தலைநகரமான இண்டியனாபலிஸ் உலகில் மோட்டார் உற்பத்தித் தலங்களுள் ஒன்று. பரப்பு::6.291 ச. மைல். வாபாஷ் முக்கிய ஆறு. இந்த இராச்சியம் மிசிசிப்பி ஆற்றுப் பள்ளத்தாக்கிற்கும் பெரிய ஏரிகளின் வடிநிலத்திற்கும் இடையிலுள்ளது. பல சிறு ஏரிகள் உள்ளன. அனைத்தும் வடபகுதியிலேயே இருக்கின்றன. சில செயற்கை ஏரிகள் அமைக்கப்பட்டுள. விவசாயத்துக்குப் போதுமான மழை பெய்கிறது வடபகுதி மிகுந்த மண் வளமுடையது. 130 வகையான மரங்கள் வளர்கின்றன. ஆறுகளிலும் ஏரிகளிலும் மீன்கள் மிகுதி. மக்: 39,34,224 (1950). மக்காச்சோளம் முக்கியப் பயிர். பெரும்பாலும் பன்றிகட்கே தரப்படுகிறது. பன்றிகள் விற்பனை மிகுதி. இங்குக் கிடைக்கும் கனிப்பொருள்களுள் தலையாயது நிலக்கரி. கட்டடக்கற்களும், மிகுதியாகக் கிடைக்கின்றன. முக்கியமான கைத்தொழில் எஃகு உற்பத்தி செய்தல். காரி நகர் முக்கிய எஃகு உற்பத்தித் தலம் தலைநகரத்தில் இண்டியானாப் பல்கலைக் கழகம் இருக்கிறது.