கலைக்களஞ்சியம்/இத்தத்

விக்கிமூலம் இலிருந்து

இத்தத்: கணவன் மரணத்தின் காரணமாகவோ, விவாகரத்தின் காரணமாகவோ விவாக முரிவு ஏற்படுமானால், அந்த விதவையையோ, விவாகப் பந்தத்திலிருந்து விடுபட்ட பெண்ணையோ, மறு விவாகம் செய்துகொள்ள இஸ்லாமியச் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால், விவாக முரிவு ஏற்பட்டதிலிருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகே மறு விவாகம் நடைபெற வேண்டும் என்ற விதியையும் அந்தச் சட்டம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்தத் தடைக் காலத்துக்குத்தான் இத்தத் என்று பெயர். இந்த விதியின் முக்கியமான நோக்கம், மறு விவாகத்துக்குப் பின்னால் அந்தப் பெண்ணுக்குப் பிறக்கும் குழந்தைக்குத் தகப்பன் முந்தின கணவன் அல்லன். மறு கணவனே என்பதை உறுதி செய்து கொள்வதேயாகும். விவாக முரிவுச் சமயத்தில் பெண் கருத்தரித்திருந்து, வெளியில் தெரியாமல் இருக்கும் கட்டத்தில் மறு விவாகம் நடைபெறுமானால், பின்னர் பிறக்கும் குழந்தையின் தந்தை உண்மையில் முந்தின கணவனாகவே இருக்க, மறு கணவனே அக் குழந்தையின் தகப்பனாகக் கருதப்படுவான். இக் குழப்பத்தை நீக்குவதே இவ்விதியின் நோக்கம். அதற்கு ஏற்பவே இந்த இத்தத்காலமும் வகுக்கப்பட்டிருக்கிறது.விவாக முரிவுச் சமயத்தில் கணவன் மனைவிக்கிடையே புணர்ச்சி ஏற்பட்டிருக்காவிட்டால், பெண் இத்தத் அனுஷ்டிக்காமலேயே மறு விவாகம் செய்து கொள்ளலாம். விவாகரத்தினால் முரிவு ஏற்பட்டால் தான் இந்த நியதி; கணவனுடைய மரணத்தினால் முரிவு ஏற்படுமானால், எந்தச் சந்தர்ப்பத்திலும் விதவை இத்தத்தைக் கைக்கொண்டே ஆகவேண்டும்.

கணவனுடைய மரணத்தின் சமயத்தில், மனைவி கர்ப்பிணியாக இல்லாவிட்டால், அவள் 4 மாதம் 10 நாள் இத்தத் இருக்கவேண்டும்; கர்ப்பிணியாக இருந்தால், பிரசவம் வரையில் அல்லது 4 மாதம் 10 நாள் வரையில், இரண்டில் எது நீண்ட காலமோ அதுவரையில் இத்தத் இருக்கவேண்டும்.

விவாகரத்தினால் விவாக முரிவு ஏற்படும்போது பெண்ணுக்கு மாதவிடாய் நின்று போகாமலிருக்குமானால், மூன்று மாதவிடாய் முடியும் வரையில் இத்தத் இருக்க வேண்டுமென்று சுன்னி சட்டம் கூறுகிறது. ஷியா சட்டம் இதையே சற்று மாற்றி, மூன்று துஹ்ர் (ஒரு துஹ்ர் என்பது இரண்டு மாதவிடாய்க் கிடையிலுள்ள சுத்த காலத்தைக் குறிக்கிறது) பூர்த்தியாகிற வரையில் இத்தத் இருக்கவேண்டுமென்று ஏற்படுத்தியிருக்கிறது. கர்ப்பத்தின் காரணமாக மாதவிடாய் நின்றிருக்குமானால், பிரசவம் வரையில் இத்தத் இருக்கவேண்டும். வயதானதின் காரணமாக மாதவிடாய் நின்றுபோயிருக்குமானால், மூன்று மாதங்கள் இத்தத் இருக்க வேண்டுமென்று சுன்னி சட்டமும், 78 முழு நாட்கள் இருந்தால் போதுமென்று ஷியா சட்டமும் கூறுகின்றன. குழந்தை பெறும் பிராயம் கடந்திருந்தாலோ, பெண் புஷ்பவதியாகாமலிருந்திருந்தாலோ, அவள் இத்தத் இருக்கவேண்டியதில்லை என்பதும்பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஷியா விதியாகும்.

ஆனால் இத்தத் முடிவதற்கு முன்னால், மறு விவாகம் நடக்குமானால், அந்த விவாகம் சட்டத்திற்குப் புறம்பானது (Void) ஆகாது; ஒழுங்கற்றது (Irregular) என்றே கருதப்படும்.

கணவன் மனைவியர்க்கிடையே புணர்ச்சி ஏற்பட்டிராத விடத்தும், கணவனுடைய மரணத்துக்குப்பின் விதவை இத்தத் இருக்கவேண்டும் என்று விதிக்கப்படுவது, இறந்த கணவனிடத்துக் காட்டும் மரியாதையின் அறிகுறியாகும்.

கணவனுடைய மரண தினத்திலிருந்தோ, விவாகரத்தின் தினத்திலிருந்தோ இத்தத் ஆரம்பமாகிறது. கைக்கொள்ள வேண்டிய இத்தத் காலத்துக்குப் பின்னரே, கணவனின் மரணச் செய்தியோ, விவாகரத்தைப்பற்றிய செய்தியோ மனைவியை வந்து சேருமானால், அன்றிலிருந்து அவள் இன்னொரு இத்தத் காலத்தைத்தொடங்கி அனுஷ்டிக்க வேண்டிய அவசியமில்லை. விவாகரத்து செய்யும் கணவன், இத்தத் காலத்தில் மனைவிக்குப் போஷணை கொடுக்கவேண்டும்.

பிரதானமாக, இத்தத், பெண்ணின் மறு மணத்துக்குத் தற்காலிகத் தடையாக விதிக்கப்பட்டதாயினும், தன்னால் விவாகரத்து செய்யப்பட்ட மனைவியினுடைய இத்தத் காலம் முடிகிற வரையில், சிற்சில சந்தர்ப்பங்களில், புருஷனும் இன்னொரு மணம் செய்துகொள்வதினின்றும் தடுக்கப்படுகிறான். எம். எம். இ

"https://ta.wikisource.org/w/index.php?title=கலைக்களஞ்சியம்/இத்தத்&oldid=1463216" இலிருந்து மீள்விக்கப்பட்டது