கலைக்களஞ்சியம்/இந்திய அரசாங்கத் தொல்பொருள் இலாகா
இந்திய அரசாங்கத் தொல்பொருள் இலாகா (Department of Archaeology, Government of India) : இந்திய அரசாங்கம் இந்தியத் தொல்பொருள் சர்வேயை 1870-ல் அமைத்தது. ஜெனரல் அலெக்சாண்டர் கன்னிங்காம் முதல் தலைவராயிருந்தார். ஆயினும் கர்சன் பிரபுகாலத்திலேயே தொல் பொருட் சின்னங்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. தொல்பொருள்களைப் பாதுகாக்கவும், பண்டை நகரங்கள் இருந்த இடங்களைத் தோண்டிப் பார்க்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்பின் தட்சசீலம். பாடலிபுத்திரம், சாஞ்சி, சாரநாத், நாலந்தா, பகர்ப்பூர், நாகார்ஜுனகொண்டா, ராம்நகர், ஹாரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களைத் தோண்டி ஆராயும் வேலைகள் நடந்தன. 1944-ல் தட்சசீலத்தில் இவ்வேலைகளைச் செய்வதற்கு வேண்டிய திறமையுடையவர்களைப் பயிற்றுவதற்கான சாலை ஒன்று நிறுவப்பெற்றது. அதன்பின் புதுச்சேரி அருகில் அரிக்கமேடு என்ற இடம் தோண்டப்பெற்றது. இந்த இலாகா நாலந்தாவிலும் சாரநாத்திலும் பொருட்காட்சிச் சாலைகள் அமைத்துள்ளது. இவை தவிர, கல்கத்தா பொருட்காட்சிச் சாலையிலும் டெல்லிக் கோட்டையிலும் காட்சிப் பகுதிகள் நிறுவியுள்ளது. இந்திய அரசாங்க இலாகாவைத் தவிர, சுதேச சமஸ்தானங்களாயிருந்தவற்றிலும் தொல்பொருள் இலாகா இருந்து வந்தது. அவற்றுள் முக்கியமானவை மைசூர், ஐதராபாத், குவாலியர், பரோடா, ஜயப்பூர். இந்தச் சமஸ்தான இலாகாக்களும் சிறப்பான தொண்டுகள் செய்துள்ளன.