கலைக்களஞ்சியம்/இந்திய நூல்நிலையச் சங்கம்

விக்கிமூலம் இலிருந்து

இந்திய நூல்நிலையச் சங்கம் (Indian Library Association) நாடு முழுவதும் நூல்நிலையங்கள் நிறுவுதல், நூல்நிலையப் பணிப் பயிற்சி அளித்தல், நூல்நிலைய வியல் பற்றிய ஆராய்ச்சியை வளர்த்தல் என்னும் நோக்கங்களுடன் 1933-ல் டெல்லியில் நிறுவப்பெற்றது. இதன் உறுப்புக்களாக இராச்சிய நூல்நிலையச் சங்கங்களும் நூல்நிலையங்களுமிருக்கின்றன ; தனிப்பட்ட உறுப்பினர்களும் இருக்கிறார்கள். இது அப்கிலா என்ற பெயரால் ஓர் இதழ் வெளியிடுகிறது. இது உலகத்திலுள்ள சிறந்த நூல்நிலைய இதழ்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆங்கிலத்திலும் இந்தியிலும் நூல்கள் வெளியிடப்படுகின்றன. நூல்நிலையவியல் உரைகள் பற்றிய ஆங்கில நூல்களைச் சமஸ்கிருத சூத்திரங்களாக மொழிபெயர்த்து, அவற்றிற்கு இந்தியில் எழுதி வெளியிடுகிறார்கள். இப்படிச் செய்வதால் எல்லா இந்திய மொழிகளிலும் ஒரேவிதமான நூல்நிலையக் கலைச்சொற்கள் எழ முடியும் என்று கருதுகிறார்கள். இந்திய நூல்நிலையச் சங்கம் சர்வதேச நூல்நிலையச் சங்கங்கள் பலவற்றுடன் இணைந்துள்ளது. இதன் ஆதரவில் இரண்டு ஆராய்ச்சிப் பகுதிகள் நூல்நிலைய ஆராய்ச்சி செய்துவருகின்றன.