கலைக்களஞ்சியம்/இந்துச் சட்டம்

விக்கிமூலம் இலிருந்து

இந்துச் சட்டம் என்பது இந்துக்கள் அனுசரிக்க வேண்டிய சட்டம் என்று பொருள்படும். அது பிரமாண நூல்கள் என்று கருதப்பெறும் சில சமஸ்கிருத நூல்களில் உள்ள விதிகளே என்று பொதுவாக எண்ணப் பெறுகிறது. ஆனால் இன்று நியாய மன்றங்கள் அமல் நடத்தும் இந்துச் சட்டத்தின் மூலங்கள் வருமாறு:

1. சுருதி, முனிவர்கள் கேட்டு வகுத்தது என்பது பொருள். அதில் இருக்கு, யசுர், சாம, அதர்வண வேதங்களும் அடங்கும்.

2. ஸ்மிருதி, முனிவர்கள் நினைவு கூர்ந்து, சூத்திரங்கள் என்றும், தரும சாஸ்திரங்கள் என்றும் பாகுபாடு செய்தவை என்று பொருள்படும். சூத்திரங்கள் எழுதியவர்களுள் தலையாயவர்கள் கௌதமர், போதாயனர், ஆபஸ்தம்பர், வசிஷ்டர், விஷ்ணு ஆகியோரும், தரும சாஸ்திரங்கள் எழுதியவர்களுள் தலையாயவர் மனு, யாஞ்ஞவல்கியர், நாரதர், பராசரர் ஆகியோரும் ஆவர்.

3. உரைகள்: இவற்றுள் தலையாயது விஞ்ஞானேசுவரருடைய மிதாட்சரமும், ஜீமூதவாகனருடைய தாயபாகமும் ஆகும்.

4. சட்டங்கள்: இந்திய யூனியன் சட்டப்புத்தகத்தில் காணப்படும் இந்து விதவா விவாகச் சட்டம், மெஜாரிட்டிச் சட்டம், இந்துப் பெண்கள் சொத்துரிமைச் சட்டம் போன்றவை.

5. நீதிமன்றத் தீர்ப்புக்கள் : இவை நீதிமன்றங்கள் நியாயத்தையும் மனச்சான்றையும் ஆதாரமாகக் கொண்டு, சமஸ்கிருத நூல் விதிகளை மாற்றியும் கூட்டியும் செய்திருப்பவை.

6. வழக்கங்கள் : இவை நாட்பட்டவையாயும் நிச்சயமானவையாயும், தொடர்ந்துள்ளவையாயும், மாறாதவையாயும் உண்டு என்று மெய்ப்பிக்கப் பட்டவையாயும் உள்ளவையானால் சாஸ்திர, சட்ட விதிகளை மாற்றக்கூடிய ஆற்றல் உடையன என்று நீதிமன்றங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. ஆனால் அறநெறிக்கு முரண்பட்டோ, அல்லது துரைத்தனத்தார் கொள்கைக்கு முரண்பட்டோ, அல்லது சட்டத்தால் தடை செய்யப்பட்டோ உள்ள வழக்கம் செல்லுபடியாகாது.

இந்துச் சட்டத்தை அமல் நடத்தும்போது முதன் முதலாகக் கவனிக்க வேண்டியது அதை அனுசரிப்போர் யார் என்ற கேள்வியேயாம். இந்து மதத்தைத் தழுவியோர் அனைவரும் இதை அனுசரிக்க வேண்டியவர் என்று பொதுவாகக் கூறலாம். இந்து மதத்தில் மூட நம்பிக்கை முதல், உயர்ந்த ஆன்ம விசாரணை வரை பலதிறப்பட்ட கொள்கைகளும் அடங்கும். இந்துக்கள் பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என நான்கு சாதியினராகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுள் இந்து மதத்தைத் தழுவும் ஆரியப் பரம்பரையினராயினும், ஆரியரல்லாத பரம்பரையினராயினும், இந்துக்கள் என்று கூறிக்கொள்வோரும், அவைதிக இந்துக்களும், இந்து மதத்தில் குறை காண்போரும், இந்துக்களுடைய சோரக் குழந்தைகளும், பிற மதங்களினின்றும் இந்து மதத்துக்கு வந்தவர்களும் அடங்குவர். இந்துச் சட்டத்தின் அமலுக்கு உட்பட்டவர்கள் இந்திய யூனியனில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் உளர். சமஸ்கிருத நூல்களில் காணும் விதிகள் எல்லோருக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுகின்றது. பொதுவாகப் பார்த்தால் இந்துச் சட்டத்தின் ஆதி மூலங்கள் சுருதியும் ஸ்மிருதியுமேயாகும். ஆனால் ஒவ்வோர் இராச்சியமும் உரைகளையும் நிபந்தங்களையும் பிரமாண வியாக்கியானங்களாக ஏற்றுக்கொள்வதோடு, சாஸ்திரங்களில் முரண்பாடுகள் காணப்பட்டால் அவற்றைத் தெளிவுபடுத்துவதற்காகத்தானே புது வியாக்கியானங்கள் செய்தும், ஆதிமூலங்களில் மாறுதல்களைச் செய்தும் உள்ளது. அதனால் பல இந்துச் சட்ட முறைகள் தோன்றின.

இந்த முறைகள் கீழ்க்கண்டவாறு தோன்றி வந்திருக்கின்றன : அனைவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட விதிகளுக்குப் பல உரைகள் எழுந்தன. ஓர் உரையின் கருத்தை ஓர் இராச்சியம் ஏற்றுக் கொள்ளும்; ஓர் இராச்சியம் ஏற்றுக் கொள்ளாது. இவ்வாறுதான் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல சட்ட முறைகள் தோன்றியிருக்கின்றன. உதாரணமாக மிதாட்சரமும் தாயபாகமும் யாஞ்ஞவல்கியரைப் பின்பற்றுவனவாகவே கூறினும், இவற்றுள் பல முக்கியமான வேறுபாடுகள் காணப்படுகின்றன. மிதாட்சரத்தை ஏற்றுக்கொள்ளும் முறைகள்கூட, அதன் உரைகளிலுள்ள விதிகளை வெவ்வேறு விதமாகவே ஏற்றுக் கொள்ளுகின்றன. இவ்வாறு பல சட்டமுறைகள் எழுந்திருப்பது, சாஸ்திரங்கள் காலதேச வர்த்தமானத்துக்குத் தக்கவாறு மாறி இசையும் தன்மையன என்றும், சமூக வளர்ச்சிக்கும் முன்னேற்றத்துக்கும் தடையாக நிற்பனவல்ல என்றும் காட்டுகின்றது. இந்துச் சட்ட முறைகள் பல இருப்பனவாகக் கூறினும், உண்மையாகவுள்ள முறைகள் தாயபாகம், மிதாட்சரம் என்னும் இரண்டு மட்டுமே. திராவிடம், மிதிலை, வாரணாசி, மகாராஷ்டிரம் ஆகிய முறைகள் எல்லாம் மிதாட்சரத்தின் கிளைகளேயாம். அவற்றிடையே சிறு சிறு விஷயங்களிலேயே இரண்டொரு வேறுபாடுகள் காணப்படுகின்றன. ஒரு முறையானது ஏதேனும் ஒரு பொருள் பற்றி எதுவும் கூறாதிருப்பின், அந்தப் பொருள் பற்றிப் பிற முறைகள் கூறுவதை ஏற்றுக்கொள்ளலாம்.

இந்துச் சட்டத்தின் முக்கியமான பகுதிகள் மணம், சுவீகாரம் ஏக குடும்பம், வாரிசுமுறை, வாரிசுரிமை, பெண்கள் சொத்துரிமை என்பனவாகும். இவற்றைப் பற்றித் தனிக் கட்டுரைகள் பார்க்க. என். ஆர். ரா.