களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/இணைப்பு - 2

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

இணைப்பு-2


வச்சிரநந்தியின் திரமிள சங்கம்

மூன்று வகையான சங்கங்கள்

களப்பிரர் ஆட்சிக்காலத்தில் கி.பி. 5-ம் நூற்றாண்டில் (கி.பி.470-ம் ஆண்டில்) மதுரை நகரத்தில் திரமிள (திராவிட தமிழ) சங்கத்தை வச்சிரநந்தி அமைத்தார் என்று அறிந்தோம். வச்சிரநந்தி ஏற்படுத்திய சங்கம் சைன மதத்தை வளப்பதற்கான சங்கமாகும். (சங்கம்-கூட்டம்) பௌத்த பிக்குகளின் கூட்டத்துக்குப் பௌத்த சங்கம் என்பது பெயர். பௌத்த பிக்குகளின் சங்கத்தலைவர் சங்கபாலர் என்று பெயர் கூறப்பெற்றார். பௌத்தர்களுடைய மும்மணிகளில் பௌத்த பிக்குகளின் சங்கமும் ஒன்று. ‘சங்கம் சரணம் கச்சாமி’ என்பது காண்க. இதன் பொருள் பௌத்த சங்கத்தைச் சரணம் அடைகிறேன் என்பது. சைனத் துறவிகளின் கூட்டத்துக்கும் சங்கம் என்பது பெயர். சங்கத்தைச் (கூட்டத்தை) சைனர் ‘கணம்’ என்றும் கூறுவர். கணம் என்றாலும் சங்கம் என்றாலும் ஒன்றே. களப்பிரர் ஆட்சிக்கு முன்னே பாண்டியர் தமிழ் மொழியை ஆராய்வதற்குப் புலவர்களின் கூட்டத்தை ஏற்படுத்தினார்கள். அந்தக் கூட்டத்துக்குத் தமிழ்ச் சங்கம் என்பது பிற்காலத்துப் பெயர். அதன் பழைய பெயர் தமிழ்க்கழகம் என்பது. பிற்காலத்துப் பாண்டியர் அமைத்திருந்த சங்கம் மதச்சார்பான சங்கம் அன்று, அது தமிழ் மொழியை ஆராய்வதற்கு ஏற்பட்ட சங்கம். அந்தச் சங்கத்தில் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழ் ஆராயப்பட்டது. சங்கப்புலவர்கள் முக்கியமாக அகத்தையும் (காதலையும்) புறத்தையும் (போர் அல்லது வீரத்தையும்) ஆராய்ந்து செய்யுட்களை இயற்றினார்கள்.

சைன சங்கம்

சைன சமயத்திலே பழங்காலத்தில் சைனத் துறவிகளின் கூட்டம் பெரிதாக இருத்தது. சைனத் துறவிகளின் சங்கத்தை அக்காலத்தில் நான்கு பிரிவாகப் பிரித்திருந்தார்கள். அந்தப் பிரிவுகளுக்கு நந்திகணம், சேனகணம், சிம்மகணம், தேவகணம் என்று பெயர். ஒவ்வொரு கணத்திலும் கச்சை என்றும் அன்வயம் என்றும் உட்பிரிவுகள் இருந்தன. இந்த நான்கு கணங்களிலே நந்திகணம் பேர் போனது. வச்சிரநந்தி ஆசாரியர் நந்திகணத்தை இரண்டாகப் பிரித்தார். புதிய பிரிவுக்குத் திராவிடகணம் (தமிழ சங்கம்) என்று பெயர் இட்டு அதனை மதுரையில் அமைத்து நிறுவினார். இது கி.பி. 470 ல் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் நடந்தது. இதுதான் வச்சிரநந்தி அமைத்த திரமிள சங்கம். இந்தத் திரமிள சங்கத்தில் சைன சமயத் துறவிகள் மட்டுமே இருந்தார்கள். இவர்களுடைய வேலை, முன்னமே சொல்லியது போல சைன சமயத்தைப் பரப்பியதாகும்.

வச்சிரநந்தியின் தமிழ்ச் சங்கம் கி.பி. 470ல் நிறுவப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர் எல்லோரும் ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால் ‘பழங்கால இந்திய வரலாற்றுக்குச் சைன மூலங்கள்’ என்றும் நூலை எழுதிய ஜியோதி பிரசாத் ஜெயின், வச்சிரநந்தி திராவிட சங்கத்தை அமைத்தது கி.பி.604-ம் ஆண்டு என்று கூறுகிறார்.[1] இவர் கூறுவது தவறு. விக்கிரம ஆண்டு 526 என்பதை சாலிவாகன ஆண்டு 526 என்று கணக்கிடுவதால் இவர் தவறுபடுகிறார். விக்கிரம ஆண்டு 526 என்பது கி.பி.470 அல்லது 469 ஆகும். சாலிவாகன சகம் 526 என்று கணக்கிட்டால் அது கி.பி. 604 ஆகிறது. வச்சிரநந்தி விக்கிரம ஆண்டு 526-ல் (கி.பி. 170] மதுரையில் தமிழச் சங்கத்தை நிறுவினார் என்பதே சரியாகும். களப்பிரர் ஆட்சி ஏறத்தாழ கி.பி.575-ல் முடிந்து விட்டது. களப்பிரர் ஆட்சிக்குப் பிறகு கி.பி. 604-ல் வச்சிரநந்தி மதுரையில் தமிழச் சங்கம் நிறுவியிருக்க முடியாது. எனவே வச்சிர நந்தி கி.பி.470- ல் திராவிட சங்கத்தை நிறுவினார் என்பதே சரி எனத் தோன்றுகிறது.

முற்காலத்தில் பாண்டியர் மதுரையில் மொழிவளர்ச்சிக்காக அமைத்த சங்கம் வேறு, பிற்காலத்தில் சைன சமய வளர்ச்சிக்காக வச்சிரநந்தி ஆசாரியர் ஏற்படுத்திய சங்கம் வேறு. வெவ்வேறான இரண்டு சங்கங்களையும் ஒன்று எனக் கருதுவது தவறு. திரு.பி.தி. சீனிவாச அய்யங்கார் ‘தமிழர் வரலாறு’ என்னும் நூலில் இது பற்றித் தெளிவாகவும் சரியாகவும் எழுதியுள்ளார். இது (வச்சிர நந்தியின் திரமிள சங்கம்) நாம் அறிந்துள்ள தமிழ்ச்சங்கம் (பாண்டியரின் தமிழ்ச்சங்கம்) அன்று, சாதாரண மக்களுக்கு சைன மதத்தைப் போதிப்பதற்காகத் தமிழ்நாட்டில் சைன சமயத்தாரால் அமைக்கப்பட்ட ஒரு நிறுவனம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர் எழுதியுள்ளார்.[2]

திரு.எம்.எஸ். இராமசாமி அய்யங்கார் இது சம்பந்தமாக வரலாற்றுக்கு மாறுபட்ட கருத்தைக் கூறுகிறார். களப்பிரர் ஆட்சிக்கு முன்பே, பாண்டியர் ஆட்சிக் காலத்திலேயே வச்சிரநந்தி மதுரையில் திராவிட சங்கத்தை அமைத்தார் என்று இவர் கூறுகிறார். இவர் கூறுவது வருமாறு:

"திகம்பர தர்சனம் என்னும் சைன சமய நூல் ஒரு பெரிய செய்தியைக் கூறுகிறது. விக்கிரம ஆண்டு 526-ல் (கி.பி.470) பூச்சிய பாதரின் மாணாக்கரான வச்சிரநந்தி என்பவர் தென் மதுரையிலே ஒரு திராவிட சங்கத்தை நிறுவினார் என்று அந்த நூல் கூறுகிறது. சைன சமயத்தைப் பரப்புவதற்காகத் தெற்கே வந்த திகம்பர சைனரின் கூட்டந்தான் அந்தச் சங்கம் என்று அந்த நூலிலிருந்து அறிகிறோம். பாண்டிய நாட்டை அரசாண்ட அரசர்களின் ஆதரவு இல்லாமற் போனால், சைன சமயத்தார் கொடுந்தண்டனை கொடுக்கப்பட்ட அந்த நாட்களிலே, ஒரு சங்கத்தை நிறுவியிருக்க மாட்டார்கள். இந்தச் சங்கம் அமைக்கப்பட்டதில் (பாண்டிய) அரசருடைய ஆதரவு சைனருக்கு இருந்தது என்பதை யறிகிறோம். இந்த ஆதரவு பிராமணியத்தின் தலைவர்களுக்குப் பொறாமையை உண்டாக்கியிருக்க வேண்டும். அதனால் சமயச் சண்டை உண்டாகித்தான் இருக்க வேண்டும்.ஆனால், தற்காலிகமாகச் சமயப் பூசல் தள்ளிவைக்கப்பட்டது. இந்த வச்சிர நந்தியின் சங்கம் கி.பி. 5-ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது என்பதை யறித்தோம். கி.பி. 6-ம் நூற்றாண்டு தொடங்கியபோது, தமிழகத்தின் அரசியலில் விரைவான மாறுதல்கள் ஏற்பட்டன. களப்பிரரின் படையெடுப்பும் அவர்கள் பாண்டி நாட்டைக் கைப்பற்றியதும் இந்தக் காலத்தில்தான் நேரிட்டன.[3]

பாண்டியருடைய ஆட்சிக்காலத்திலே வச்சிரநந்தி திராவிட சங்கத்தை அமைத்தார் என்றும் அதைப் பாண்டியரின் ஆதரவு பெற்று அமைத்தார் என்றும் வச்சிரநந்தி இந்தச் சங்கத்தை அமைத்த பிறகுதான் களப்பிரர் தமிழகத்தில் வந்து தங்களுடைய ஆட்சியை நிலைநிறுத்தினார்கள் என்றும் ஐயங்கார் கூறுகிறார். இவர் கூற்று வரலாற்றுக்கு முற்றிலும் மாறுபடுகிறது. கி.பி. 470-ல் வச்சிரநந்தி திராவிட சங்கத்தை ஏற்படுத்தினார். அந்தக் காலத்தில் பாண்டி நாட்டில் பாண்டியர் ஆட்சி இல்லை, களப்பிரர் ஆட்சிதான் இருந்தது. பாண்டிய சேர சோழர்களின் ஆட்சி கடைச்சங்க காலத்தின் இறுதியிலே, ஏறத்தாழக் கி.பி. 250-ல் முடிவடைந்து விட்டது. ஆகவே, பாண்டியர் ஆட்சிக்காலத்திலேயே வச்சிர நந்தி திராவிட சைன சங்கத்தை அமைத்தார் என்று இவர் கூறுவது தவறு.

இனி, திரு.எஸ்.வையாபுரிப் பிள்ளையவர்கள் வச்சிரநந்தியின் திராவிட சங்கத்தைப்பற்றிக் கூறுவதைப் பார்ப்போம். இவர் கூறுகிற சில கருத்துக்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம். தொல்காப்பியம் வச்சிர நந்தியின் திராவிட சங்கத்தில் எழுதி வெளியிடப்பட்ட நூல் என்று வையாபுரியார் எழுதுகிறார். இதற்குச் சான்று, தொல்காப்பியத்தில் ஓரை என்னுஞ்சொல் காணப்படுகிறதாம்! இவர் இதுபற்றி எழுதுவது வருமாறு:

"வச்சிர நந்தியின் பேர்போன சங்கம் கி.பி.470-ல் நிறுவப்பட்டது. தொல்காப்பியம் அந்தச் சங்கத்திலிருந்து வெளிவந்த முதல் இலக்கியமாக இருக்கக்கூடும். இதன் ஆசிரியர் ஓரை என்னும் சொல்லை (பொருள்135) ஆள்கிறார். ஓரை (சம்ஸ்கிருத ஹோரா) என்னும் சொல்லைக் கிரேக்க மொழியிலிருந்து கி.பி. 3-வது அல்லது 4-வது நூற்றாண்டில் சம்ஸ்கிருத வான நூற்புலவர்கள் கடனாகக் கொண்டார்கள். சம்ஸ்கிருத மொழிக்காரர் கிரேக்க மொழியிலிருந்து எடுத்துக் கொண்ட ஹோராவைத் தொல்காப்பியம் கூறுகிறபடியால் இந்நூல் கி.பி.4-ம் நூற்றாண்டில் எழுதப்பட்டிருக்க வேண்டும்.[4]

வையாபுரியார் கூறுகிற இந்தக் கருத்து இவருடைய சொந்தக் கருத்து அன்று. திரு.கே.என். சிவராசபிள்ளை இந்தத் தவறான கருத்தை முன்னமே வெளியிட்டுள்ளார். அவரிடமிருந்து எடுத்துக் கொண்ட இந்தத் தவறான கருத்தை வையாபுரியார், தான் எங்கிருந்து இக்கருத்தைப் பெற்றுக் கொண்டார் என்பதைக் கூறாமல் தன்னுடைய சொந்தக் கருத்தாகக் கூறுகிறார். சிவராச பிள்ளை கூறுயுள்ளது இது! ஹோரா என்னும் கிரேக்க மொழிச் சொல் கி.பி.5-ம் நூற்றாண்டில் சம்ஸ்கிருத மொழியில் சென்று பிறகு அந்தச் சொல் தொல்காப்பியத்தில் ஓரை என்று வழங்கப்பட்டது. ஆகவே அந்தச் சொல்லை வழங்குகிற தொல்காப்பியர் கி.பி.5-ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்ட காலத்தவர் என்று அவர் 1932-ம் ஆண்டில் எழுதிவைத்தார்.[5] சிவராசபிள்ளை கூறிய இந்தக் கருத்தை வையாபுரிப்பிள்ளை எடுத்துக் கொண்டு, ஓரையைக் கையாளும் தொல்காப்பியர் வச்சிரநந்தியின் திராவிடச் சங்கத்தில் இருந்தவர் என்று எழுதிவிட்டார்.

ஓரையும் ஹோராவும் ஒன்றா? ஒலிவடிவில் ஒன்றுபோலத் தோன்றுகிற இரண்டு சொற்களும் ஒன்றுதானா? கி.மு.ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன்பு இருந்த தொல்காப்பியர், கி.பி.5-ம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் வழங்கிய ஹோராவை எப்படி எடுத்திருக்க முடியும்? ஹோராதான் ஓரை ஆயிற்றா? ஓரை என்பது வேறு; ஹோரா என்பது வேறு அல்லவா? ‘குதிரைக்குக் குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம்’ என்று கூறினானாமே ஒரு மேதை, அது போன்றல்லவா இருக்கிறது இது!

ஓரை என்னும் தமிழ்சொல் வேறு, ஹோரா என்னும் கிரேக்கசம்ஸ்கிருதச் சொல் வேறு. ஒலி வடிவில் இரண்டும் ஒரே சொல்லைப் போல் காணப்பட்டாலும் இரண்டுக்கும் பொருள் வெவ்வேறு. ஹோரா என்னும் கிரேக்கச் சொல்லுக்கு இராசி அல்லது முகுத்தம் என்று வானநூலில் பொருள் கூறப்படுகிறது. ஓரை என்னும் தமிழ்ச் சொல்லுக்கு மகளிர் கூட்டம் (ஆயம்) என்பது பொருள், பழைய சொற்கள் சிலவற்றின் பொருள் மறைந்து போய் விட்டது போல ஓரையின் பொருளும் பிற்காலத்தில் மறைந்து போயிற்று. மிகப் பிற்காலத்தவரான உரையாசிரியர்கள் இச்சொல்லின் பழைய பொருளை (கருத்தை) அறியாமல், இதை ஹோராவின் திரிபு என்று கருதித் தவறான உரையை எழுதிவிட்டனர்.

மறைந்த ஒழுக்கத்து ஓரையும் நாளும்

துறந்த ஒழுக்கம் கிழவோற்க் கில்லை

(தொல், பொருள் 1:25) என்னும் தொல்காப்பியச் சூத்திரத்தில் வருகிற ஓரை என்பதற்குப் பிற்காலத்தவரான உரையாசிரியர்கள் எழுதிய பிழையான உரைகளைக் காண்க. உரையாசிரியர்கள் காட்டிய தவறான வழியில் சென்ற சிவராசரும் வையாபுரியாரும் இவ்வாறு தவறான கருத்துக் கொண்டதில் வியப்பொன்றும் இல்லை. இதற்குப் பேராசிரியர் சோமசுந்தர பாரதியார் அவர்கள் எழுதியுள்ள நேரான உரை காண்க.[6] ஓரை என்னும் சொல்லுக்குப் பேராசிரியர் பாரதியார் அவர்கள் கூறும் விளக்கம் வருமாறு:

ஓரை விளையாட்டென்பது, சங்க இலக்கியம் முழுவதும் அச்சொல்லுக்கு அப்பொருளாட்சியுண்மையால் விளங்கும். ஓரைக்கு இராசி அல்லது முகூர்த்தம் எனும் பொருளுண்மைக்குத் தொல்காப்பியத்திலேனும் சங்க இலக்கியம் எதிலேனும் சான்று காணுதலரிது. மிகவகன்ற பிற்காலப் புலவர் சிலர் முகூர்த்தம் (அதாவது ஒரு நாளிறுன் நன்மை தீமைகளுக் குரியதாகப் பிரித்துக் கொள்ளப்படும் உட்பிரிவு) என்ற பொருளில் இசொல்லைப் பிரயோகிக்கலானார். அக்கொள்கைக்கே சான்றில்லாத சங்க இலக்கியத்தில், ‘ஓரை’ என்னுந் தனித் தமிழ்ச் சொல்லுக்கு, அக்காலத்திலக்கியங்களால் அதற்குரிய பொருளாகக் காணப்பெறும் விளையாட்டையே அச்சொல் குறிப்பதாகக் கொள்ளுவதே முறையாகும். அதை விட்டுப் பிற்கால ஆசிரியர் கொள்கையான இராசி அல்லது முகூர்த்தம் எனும் பொருளை இத்தமிழ்ச் சொல்லுக்கு ஏற்றுவதே தவறாகும். அதற்கு மேல் அச்சொல்லைக் கொண்டு தொல்காப்பியம் அடையப் பிற்காலத்து நூலென்று வாதிப்பது அறிவுக்கும் ஆராய்ச்சியறத்திற்கும் பொருந்தாது.

ஓரை என்னும் தமிழ்ச் சொல்லுக்குப் பேராசிரியர் சோமசுந்தர பாரதியாரவர்கள் விளையாட்டு என்று பொருள் கூறியுள்ளார். இது அச்சொல்லுக்கு மிக அண்மையான பொருளே. இதற்குச் சரியான பொருள் சிறுவர் சிறுமியர் வாழும் இடம் என்று தோன்றுகிறது. பழங்காலத்துத் திராவிட இனத்தார் தாங்கள் வாழ்ந்த கிராமத்திலுள்ள சிறுவர் கூட்டத்தையும் சிறுமியர் கூட்டத்தையும் வெவ்வேறாகப் பிரித்து அவர்களைத் தனித்தனியே வெவ்வேறு இடங்களில் வைத்து வளர்த்தார்கள். வட இந்தியாவில் வாழ்ந்த திராவிடர்களும் இவ்வாறு சிறுவர் சிறுமியரை வெவ்வேறு இடங்களில் பிரித்து வைத்து வளர்த்தார்கள். சிறுவர் சிறுமியரை வெவ்வேறாகப் பிரித்து வைத்துள்ள இடத்துக்கு ஓரை என்று பெயர் கூறினார்கள் என்று தெரிகிறது.

வடஇந்தியாவிலும் ஆதிகாலத்தில் திராவிட இனமக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்தார்கள். அந்தத் திராவிடர் இக்காலத்தில் ஆரியரோடு கலந்து மொழி, கலை, பண்பாடுகளில் மாறிப் போனார்கள். அவர்களில் சில இனத்தார் இன்றும் உள்ளனர். அவர்கள் தங்கள் பழைய இடங்களிலிருந்து துரத்தப்பட்டு வேறு இடங்களில் போய் வாழ்கிறார்கள். அவர்களில் முண்டா என்னும் திராவிட இனத்தார் சோட்டா நாகப்பூரில் இருக்கிறார்கள். அவர்களுடைய திராவிட மொழியில் இக்காலத்தில் மைதிலி, வங்காளி, இந்தி முதலான மொழிகளின் சொற்களும் கலந்து விட்டன. ஆனாலும், பழைய திராவிட இனத்தவரின் முண்டாரி மொழியில் ஓரை என்னும் சொல் இன்றும் வழங்குகிறது. இது ஹோரா என்னும் சொல்லின் திரிபு அன்று, பழைய திராவிடச் சொல்லாகும். முண்டா இனத்து மணமாகாத இளைஞர்களும் மணமாகாத இளம் பெண்களும் தங்கள் வீடுகளில் படுத்து உறங்குவதில்லை. அவர்களுக்கென்று தனித்தனியே பெரிய கொட்டகை அமைக்கப்பட்டு அந்தக் கொட்டகையில் போய்ப் படுத்து உறங்குகிறார்கள், இந்தக் கொட்டகைகளுக்கு கிதிஓரா என்று அவர்கள் பெயர் கூறுகிறார்கள். ஆண் மக்களுக்குத் தனியாகக் கிதி ஓராவும் பெண் மகளிர்க்குத் தனியாகக் இதிஓராவும் இருக்கின்றன. முண்டாரி மொழியின்கிதிஓராவுடன் தமிழ் மொழியின் ஓரையை ஒப்பிட்டு நோக்குக. கிதிஓரா என்பதில் கிதி என்பதன் பொருள் தெரியவில்லை. ஓரா என்பது ஒரை என்பதில் சற்றும் ஐயமில்லை, எனவே ஓரை என்பது திராவிட இனமொழிச் சொல் என்பது தெளிவாகத் தெரிகிறது. தொல்காப்பியர் இந்த ஓரையைத்தான் கூறியுள்ளார். இந்த ஓரை கிரேக்க சம்ஸ்கிருத ஓரை அன்று.

மிகப் பழங்காலத்திலேயே திராவிட இனமக்கள் வாழ்ந்த ஊர்களில் சிறுவர்களுக்குத் தனியாகவும் சிறுமிகளுக்குத் தனியாகவும் ஓரா (ஓரை) என்னும் பெரிய கொட்டகைகளை அமைத்திருந்தனர் என்பது தெரிகிறது. இக்காலத்தில் பழங்குடி மக்களைப் பற்றி ஆராய்ச்சி செய்கிறவர்கள் இதுபற்றியும் ஆராய்ந்தால் உண்மை கிடைக்கும். தொல்காப்பியர் காலத்திலும் தமிழ்த் திராவிடர்கள் தங்கள் இளைஞர்களுக்கும் மகளிர்க்கும் தனித் தனி ஓரைகளைக் கட்டிவைத்திருந்தனர் என்பதைத் தொல்காப்பியர் கூறுகிற ஓரை என்னுஞ் சொல்லிலிருந்து ஊகிக்கலாம். சங்கச் செய்யுட்களில் ஓரை (ஓரா) என்னுஞ்சொல் காணப்படுகிறது. சங்கப் புலவரான உலோச்சனாரும் ஓரை என்னுஞ் சொல்லை ஆள்கிறார். “ஓரை மகளிரும் ஊரெய் தினரே” (நற்றிணை.398:5) என்று அவர் கூறுவது காண்க. ஆகவே, சிவராசபிள்ளையும் வையாபுரிப்பிள்ளையும் மற்றவர்களும் தவறாகக் கருதுகிறபடி ஓரை என்னுஞ்சொல் கிரேக்க-சம்ஸ்கிருதச் சொல் அன்று. அது தூய திராவிட மொழிச் சொல் என்பதை அறிகிறோம். ஓரை என்னும் திராவிடச் சொல்லின் பழமையை அறியாத சிவராசர்களும் வையாபுரியார்களும் ஓரையைக் கூறுகிற தொல்காப்பியரை மிகமிகப் பிற்காலத்து வச்சிரநந்தி சங்கத்தில் இருந்தவர் என்று கூறுவது வரலாறு அறியாத போலிவாதம் ஆகும். திராவிட இனத்து மக்கள் பழங்காலத்தில் வழங்கிவந்த ஓரா-ஓரையைக் கூறுகிற தொல்காப்பியர் மிகமிகப் பழங்காலத்தில் இருந்தவர் என்பது இதிலிருந்து நன்றாகத் தெரிகிறது.

வையாபுரியார், தொல்காப்பியரைப் பிற்காலத்து வச்சிரநந்தி சங்கத்தில் இருந்தவர் என்று அறியாமல் கூறியது போலவே வேறு சில சங்கப் புலவர்களையும் பிற்காலத்து வச்சிரதந்தி சங்கத்தில் இருந்தவர்கள் என்று போலிக் காரணங்காட்டிக் கூறுகிறார். ஆழ்ந்த பாராமல் மேற்போக்காகக் கூறுகிற இவருடைய கருத்து இதிலும் போலிவாதமாகக் காணப்படுகிறது. கடைச் சங்க காலத்துப் புலவர்களான உலோகச்சனார், மாதீர்த்தனார் முதலானவர்களைப் பிற்காலத்து வச்சிரநந்தியின் திராவிடச் சங்கத்தோடு இவர் இணைக்கிறார். "தமிழ் மொழி தமிழ் இலக்கிய வரலாற்றிலே முதல் தரமான முக்கிய நிகழ்ச்சியொன்று கி.பி.470-ல் நிகழ்ந்தது. அதுதான் மதுரையிலே வச்சிரநந்தியின் மேற்பார்வையில் நிறுவப்பட்ட தமிழ்ச்சங்கம், பழைய புலவர்களிலே உலோச்சனார், மாதிர்த்தனார் முதலான ஜைனப் புலவர்களைப் பார்க்கிறோம். புறதானூறு 175-ஆம் பாடலிலும் அகநானூறு 59ம் பாடலிலும் மறுபிறப்பும் புராணக்கதையும் கூறப்படுகின்றன. அகம் 193-ல் மதக்கொள்கையைப் பற்றின குறிப்பைக் காண்கிறோம். ஆனால், தமிழ் மொழி தமிழ் இலக்கியங்களை ஆராயும் பழைய ஜைன நிறுவனத்தைப்பற்றி தெற்கு முன்பு கேள்விப்படவில்லை.[7] (வச்சிரதந்தியின் ஜைன நிறுவனத்தைத்தான் முதல் முதலாகக் கேள்விப்படுகிறோம்). இவருடைய இந்தக் கூற்றையும் அலசி ஆராய்வோம். உலோச்சனாரும் மாதீர்த்தனாரும் சைன சமயப் புலவராகையால் அவர்கள் வச்சிரநந்தியின் சைன சங்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது இவர் கூறும் காரணமாகும். உலோச்சனாரும் மாதீர்த்தனாரும் சைனரா அல்லரா என்னும் ஆராய்ச்சியில் நுழையவேண்டியதில்லை. அவர்கள்சைன சமயத்தவர் என்றே வைத்துக் கொள்வோம். அவர்கள் சைனர் என்ற காரணத்தினாலே அவர்கள் வச்சிரநந்தியின்சைனத் திராவிட சங்கத்தில்தான் இருந்தார்கள் என்று கூறுவது உண்மை இல்லாத போலிக் காரணமாகும். பாண்டியரின் தமிழ்ச் சங்கத்தில் சைன பௌத்த மதத்தவர் உட்பட எல்லாச் சமயத்துப் புலவர்களும் தமிழ் ஆராய்ந்தார்கள். வச்சிர நந்தியின் தமிழ்ச்சங்க காலத்திலேதான் சைனமதம் தமிழ்நாட்டுக்கு வரவில்லை. கி.மு.மூன்றாம் நூற்றாண்டிலேயே சந்திரகுப்த மௌரியன், அசோகச் சக்கரவர்த்தி காலத்திலேயே சைன மதமும் பௌத்த சமயமும் தமிழகத்துக்கு வந்து விட்டதை வரலாறு கூறுகிறது. ஆகவே, பாண்டியரின் கடைச் சங்கத்திலே சைனப்புலவரும் இருந்தனர் என்பதில் ஐயமில்லை . இந்த வரலாற்று உண்மையை அறியாமல் வையாபுரியார் வச்சிரநந்தியின் தமிழ்ச்சங்கத்தில்தான் உலோச்சனார், மாதீர்தனார் போன்ற சைனசமயப் புலவர்கள் இருத்திருக்க வேண்டும் என்று கூறுவது ஆதாரமற்றப் போலிக் கூற்றாகும்.

வச்சிரநந்தியின் தமிழ சைனச் சங்கம் சைன சமயத்தாருக்கே உரியது. அதில் சைனத் துறவிகள் மட்டுமே இருந்தார்கள். வேறு சமயத்தவர்க்கு அதில் இடம் இல்லை . வச்சிர தந்தியின் சங்கத்துச் சைனத் துறவிகள் சிற்றின்பத்தில் (அகப்பொருளில்) ஈடுபடக் கூடாது. கள், இறைச்சி உண்ணக்கூடாது. கொலை செய்வது கூடாது. இவையெல்லாம் சைன சமயத்தின் அடிப்படையான கண்டிப்பான கொள்கைகள். ஆனால், வையாபுரியார், வச்சிரநந்தி சைனத் தமிழச்சங்கத்தில் இருந்தவர் என்று கூறுகிற உலோச்சனார் எதையெதைப்பாடினார் என்பதைப் பார்ப்போம்.

அகதானூற்றில் எட்டுப் பாடல்களும் குறுந்தொகையில் நான்கு செய்யுட்களும் நற்றிணையில் இருபது பாடல்களும் ஆக முப்பத்திரண்டு செய்யுட்களை உலோச்சனார் பாடியுள்ளார். இந்தப் பாடல்கள் எல்லாம் அகப்பொருள் துறையமைந்த காதற்பாட்டுகள். சைனமுனிவர் எதைப் பாடக் கூடாதோ அந்த அகப்பொருள் காதற்பாட்டுகளை இவர் பாடியுள்ளார். இந்தப் புலவர் சைனராக இருக்க முடியுமா? அதிலும் துறவிகள் மட்டும் உள்ள வச்சிரநந்தியின் திரமினச் சைன சங்கத்தில் இவர் இருந்திருக்க முடியுமா? மேலும், இந்தக் காதற்பாட்டுகளிலே கொலையையும் இறைச்சியையும் சிறப்பித்துப்பாடுகிறார் இந்த சைனத் துறவி!

மீன்களை மணலில் பரப்பி வெயிலில் உலர்த்துவதைக் கூறுகிறார். (அகம் 20, நற்றிணை,63,331) மீன்பிடிக்கும் வலையைப் பாடுகிறார் (அகம் 300) மீனைச் சுடுகிற நெருப்பிலிருந்து வருகிற புகையைப் பாடுகிறார்! {நற்றிணை 311) பனங்கள்ளைப் பாடுகிறார்! (நற்றினை 18) மதுபானம் செய்து மகிழ்ந்திருக்கும் பெரியன் என்பவனைப் பாடுகிறார்! (நற்றிணை 13!) பனைத்தின்ற எச்சிற்கையில் உள்ள இறைச்சியின் கொழுப்பை வீட்டுச்சுவரில் தேய்த்துவிட்டுப் போர்க்கூத்துக்குச் சென்ற வீரனையும், அவன் திரும்பிவந்து குடிப்பதற்காக வைத்துள்ள கட்சாடியையும் பாடுகிறார். (புறம் 258) மற்றும் இவர் பாடியுள்ள காதற் செய்திப்பாட்டுக்கள் பல உள்ளன. சைனத் துறவிக்கு விலக்கப்பட்டவைகளை யெல்லாம் பாடுகிற உலோச்சனாரை வையாபுரிப்பிள்ளை, வச்சிரநந்தியின் சைனத்துறவிகளின் சங்கத்தில் இருந்தவர் என்று கூறுகிறார். இவர் கூற்று நம்பத்தக்கதா? இதை ஒப்புக்கொள்ள முடியுமா? களப்பிரர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 5-ம் நூற்றாண்டில் வச்சிர நந்தியின் சைனமுனிவர் சங்கத்தில் இருந்தவர் என்று வையாபுரிப் பிள்ளை கூறுகிற உலோச்சனார், களப்பிரர் காலத்துக்கு சில நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்திருந்த சோழன் இராசசூயம் வேட்ட பெருநற் கிள்ளியைப் பாடுகிறார். (புறம்377) கி.பி. 5-ம் நூற்றாண்டில் வச்சிரநந்தியின் சங்கத்தில் உலோச்சனார் இருந்தவர் என்றால், அவருடைய செய்யுட்கள் கடைச்சங்க காலத்துத் தொகை நூல்களில் எப்படி இடம் பெற்றிருக்கக்கூடும்?

மாதீர்த்தன் என்னும் கடைச்சங்கப் புலவரையும் வையாபுரியார் வச்சிரநந்தியின் தமிழச் சைன சங்கத்தவர் என்று கூறுகிறார். மாதீர்த்தனார் குறுந்தொகை 113-ம் செய்யுளைப் பாடியவர். இந்தப் பாட்டு அகப்பொருனைப் பற்றிய காதற்பாட்டு. இந்தக் காதற்பாட்டைப் பாடிய மாதீர்த்தனார் வச்சிரநந்தி சங்கத்தைச் சேர்ந்த சைன முனிவராக இருக்க முடியுமா? இவற்றையெல்லாம் கருதாமல், பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை இவர்களைச் சைன முனிவர்களின் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறுகிறார்! பகுத்தறிவு உள்ளவர் இவர் கூற்றை ஏற்றுக் கொள்ள முடியுமா?

புறம் 175-ம் செய்யுளிலும் அகம் 59-ம் செய்யுளிலும் அகம் 193-ம் செய்யுளிலும் சைனரின் மதக்கொள்கைகள் கூறப்படுகின்றன என்றும் ஆகவே அந்தச் செய்யுட்களைப் பாடிய புலவர்கள் வச்சிர நந்தியின் வனத் தமிழச் சங்கத்தைச் சார்ந்தவர்கள் என்றும் வையாபுரியார் குறிப்பாகக் கூறுகிறார் “புறம் 175- ம் பாட்டிலும் அகம் 59-ம் பாட்டிலும் மறுபிறப்புப் பற்றியும் ஒரு புராணக்கதையைப் பற்றியும் அகம் 103-ல் சைனருடைய சமயக் கொள்கை பற்றியும் குறிப்புகள் காணப்படுகின்றன. தமிழ் மொழி தமிழ் இலக்கிய வளர்ச்சியைப் பற்றின பழைய சைன நிறுவனத்தைப் பற்றி நாம் கேள்விப் படவில்லை”. (வச்சிரநந்தியின் சங்கத்தைத்தான் கேள்விப்படுகிறோம்) என்று வையாபுரியார் எழுதுகிறார்.[8] அதாவது புறம் 175, அகம் 59, 193 ஆகிய செய்யுட்களைப் பாடியவர்களும் சைன சமயத்தார் என்றும் அவர்கள் வச்சிரநந்தியின் தமிழ்ச் சைன சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் வையாபுரியார் கூறுகிறார். இவர் கூறுவதை ஆராய்ந்து உண்மை காண்போம்.

புறம் 175-ம் செய்யுளைப் பாடியவர்களில் ஆத்திரையனார். இவருடைய பெயரே இவர் பிராமணர் என்பதைத் தெரிவிக்கிறது. இவருக்கு உதவி செய்த ஆதனுங்கன் என்பவனை இவர் இச்செய்யுளில் பாடுகிறார். என் உயிர் போமளவும் என் மனம் உன்னை மறக்காது என்று இவர் கூறுகிறார். இதில் சைன சமயக் கொள்கை என்ன இருக்கிறது? இது எல்லாச் சமயத்தாருக்கும் உரிய கருத்துத்தானே! வையாபுரியார் சுட்டிக் காட்டுகிற இன்னொரு செய்யுள் (அகம்59) மருதன் இளநாகனார் பாடியது. யமுனை யாற்றில் நீராடிய மகளிரின் ஆடைகளைக் கண்ணன் ஒளித்து வைத்ததை இச்செய்யுள் குறிப்பிடுகிறது.

வண்புனல் தொழுதை வார்மணல் அகன்றுறை
அண்டர் மகளிர் தண்டழை உடீஇயர்
மரஞ்செல மிதித்த மாஅல் போல[9]

இது சைன சமயக் கருத்து என்று வையாபுரியார் கூறுகிறார். இது தமிழ் நாட்டில் அக்காலத்தில் வழங்கிவந்த எல்லாச் சமயத்தாருக்கும் உரிய பொதுக் கருத்து. இதை வையாபுரியார் சைனரின் புராணக் கதை என்று கூறுகிறார். இதைப் பாடியவர் மருதானிளநாகனார். இவர் சைனர் அல்லர் கடைச் சங்கப் புலவரான இவர் எப்படி வச்சிரநந்தியின் சைன சங்கத்தில் (கி.பி.5-ம் நூற்றாண்டில்) இருக்க முடியும்? வையாபுரியார் சுட்டிக் காட்டுகிற இன்னொரு அகம் 193-ம் செய்யுளும் மருதன் இளநாகனார் பாடியதே. பருந்து ஒன்று இறைச்சித் துண்டைக் கொண்டுபோய் மலையுச்சியில் மரத்தின்மேல் இருந்த தன்னுடைய குஞ்சுக்கு ஊட்ட, அவ்விறைச்சி தழுவிக் கீழே விழுந்ததை அங்கிருந்த நரி கவ்விக் கொண்டு ஓடியது என்னும் இயற்கை நிகழ்ச்சியை இப்புலவர் இப்பாடலில் கூறுகிறார்.

செஞ்செவி எருவை
குறும்பொறை எழுந்த நெடுந்தான் மராஅத்து
அருட்கவட் டுயர்சினை பிள்ளை யூட்ட
விரைந்துவாய் வழுக்கிய கொழுங்கண் ஊன்றடி
கொல்பசி முதுநரி வல்சி யாகும்[10]

இது எப்படிச் சைனருக்கு மட்டும் சிறப்பானது? எல்லாச் சமயத்தாருக்கும் இந்த நிகழ்ச்சி பொதுவன்றோ? இந்தச் செய்யுட்களைப் பாடிய மருதனிளநாகனார் சைனரல்லர். அவர் சைவ சமயத்தவர். அன்றியும் கடைச்சங்கப் புலவர். இவரைச் சைனர் என்றும் வச்சிரநந்தி அமைத்த பிற்காலத்துச் சைன சமயச் சங்கத்தைச் சேர்ந்தவர் என்றும் வையாபுரியார் எழுதுகிறார். களப்பிரர் ஆட்சிக்காலத்தில் கி.பி. 5-ம் நூற்றாண்டில் வச்சிர நந்தியின் சைனத் தமிழ்ச் சங்கத்தில் இவர் இருந்தார் என்று, ஆராயாமல் வையாபுரியார் கூறுகிறார். ஆனால், மருதனிளநாகனார் வச்சிரநந்தி சங்கம் ஏற்படுவதற்குப்பல நாற்றாண்டுக்கு முன்பு கடைச்சங்க காலத்தில் இருந்தவர் என்பதை அவர் பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியையும் (புறம்52), பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன் மாறனையும் (புறம் 55) நாஞ்சில் வள்ளுவனையும் (புறம் 138, 19) பாடிய செய்யுட்கள் வெள்ளிடைமலை போலவும் உள்ளங்கை நெல்லிக்கனி போலவும் தெரிவிக்கின்றன. ஆனால், இவற்றை யெல்லாம் பாராமல் வையாபுரியார், மயிலை சீனி வேங்கடசாமி கடைச்சங்க காலத்தில் இருந்த புலவர்களை இழுத்துக்கொண்டுவந்து பல நூற்றாண்டுகளுக்குப் பின் இருந்த வச்சிரநத்திச் சங்கத்தில் விடுகிறார்,

வையாபுரிப் பிள்ளை தாம் எழுதிய தமிழ்மொழி தமிழ் இலக்கிய வரலாற்றில் கூறுகிற இவை போன்ற வேறு பல போலிச் செய்திகளை இங்கு ஆராயாமல் இதனோடு நிறுத்துகிறோம்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

✽✽✽

  1. 1. Jyoti Prasid Jain, Thenia Sources of the History of Ancient India (100 B.C. 900A.D.), 19:54. pp. 160, 167.
  2. 2. P.T.Srinivasa tyangar, History of the Tamils, 1923. p.247,
  3. 3, M.S. Ramaswami Ayyangar, Studies in South indian Jainism, 1927, pp. 52-53.
  4. 4. S.Vaiyapuri Paal, History of Tamil Language and Literature 1956, p.14
  5. SKN Sara Pa, The Chronology of the Earty Tamis, 1992, pp. 263-264
  6. 6. சோமசுந்தர பாரதியார், தொல்காப்பிய ஆராய்ச்சி, அண்ணாமலைப் பல்கலைகழகம் இதழ் ஆறாம் தொகுதி, பக். 142-143. இதே கருத்தை அவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள கட்டுரையிலும் காணலாம். oumal of te Annamalai Univer ayal, V, p.18
  7. 7.S Vaiyapuri Pral, History of Tamil Language and Literature pp. 58-59.
  8. 8. S.Valyapuri Pia, History of Tamil Language and Literature p5
  9. 9. அகம் 59:4-5
  10. 10. அகம் 193: 6-10