களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/இணைப்பு - 3

விக்கிமூலம் இலிருந்து

இணைப்பு-3

இறையனார் அகப்பொருள் - வரலாற்று ஆய்வு

களப்பிரர் ஆட்சிக் காலத்தில், பக்தி இயக்கம் தோன்றிய போது இறையனார் அகப்பொருள் என்னும் களவியல் நூல் எழுதப்பட்டது என்று கூறினோம். தொல்காப்பியப் பொருளதிகாரம் இருக்கும்போது இந்தப் புதிய அகப்பொருள் நூலை எழுதிய நோக்கம் என்ன? யாது காரணம் பற்றி இந்தப் புதிய நூல் எழுதப்பட்டது என்பதை ஆராய்வோம். களவியல் உரைப்பாயிரம் இந்த ஆராய்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. மூன்று தமிழ்ச் சங்கங்களின் வரலாற்றைக் கூறிய பிறகு கடைச் சங்கத்தின் இறுதியில் நிகழ்ந்ததைக் களவியல் உரைப்பாயிரம் கூறுகிறது 'அவர்க்கு நூல் அகத்தியமும் தொல்காப்பியமுமென்க. அவர்களைச் சங்கம் இரீஇயினார் கடல் கொள்ளப்பட்டுப் போத்திருந்த முடத்திருமாறன் முதலாக உக்கிரப் பெருவழுதியீறாக நாற்பத்தொன்பதின்மர் என்ப. அவருட் கலியரங்கேறினார் மூவர் பாண்டியர் என்ப. அவர் சங்கமிருந்து தமிழாராய்ந்தது உத்திர மதுரை (இப்போதைய மதுரை) என்ப" என்று உரைப்பாயிரங் கூறுகிறபடியால் கடைச்சங்க காலம் முடிந்த பிறகு இறையனார் அகப்பொருள் என்னும் நூல் இயற்றப்பட்டது என்பது தெரிகிறது. இறையனார் அகப்பொருள் எழுதப்பட்ட வரலாற்றை இந்நூல் உரைப்பாயிரம் கூறுகிறது. அதன் வாசகம் இது.

"அக்காலத்துப் பாண்டியநாடு பன்னீசியாண்டு வற்கடஞ் சென்றது. செல்லப் பசி கடுகுதலும், அரசன் சிட்டரையெல்லாங் கூவி வம்மின் யான் உங்களைப் புறந்தரகில்லேன்; என் தேயம் பெரிதும் வருந்துகின்றது. நீயிர் போய் நுமக்கறிந்தவாறு புக்கு, நாடு நாடாயின ஞான்று என்னை யுள்ளி வம்மின், என்றான், என, அரசனை விடுத்து எல்லாரும் போயினபின்றைக் கணக்கின்றிப் பன்னீரியாண்டு கழிந்தது. கழிந்த பின்னர், நாடு மலிய மழை பெய்தது. பெய்த பின்றை அரசன் இனி நாடு நாடாயிற்றாகலின் நூல் வல்லாரைக் கொணர்க வென்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க, எழுத்ததிகாரமுஞ் சொல்லதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்த்து பொருளதிகாரம் வல்லாரை எங்குந் தலைப்பட்டிலேமென்று வந்தார். வர, அரசனும் புடைபடக் கவன்று என்னை ? எழுத்துஞ் சொல்லும் ஆராய்வது பொருளதிகாரத்தின் பொருட்டன்றே! பொருளதிகாரம் பெறேமெனின் இவைபெற்றும் பெற்றிலேம் எனச் சொல்லா நிற்ப, மதுரை ஆலவாயில் அழனிறக்கடவுள் சித்திப்பான்: என்னை பாவம்! அரசற்குக் கவற்ச்சி பெரிதாயிற்று. அதுதாலும் ஞானத்திடை யதாகலான், என்று, இவ்வறுபது சூத்திரத்தையுஞ் செய்து மூன்று செப்பிதழகத்தெழுதிப் பீடத்தின் கீழிட்டாள்." இங்குப் பொருளதிகாரம் என்பது அகப்பொருளைச் சுட்டுகிறது. அகப்பொருள் கற்க. அது ஞானத்தைத் தரும் என்றும் கூறப்படுவது காண்க. மேலும் உரை கூறுகிறது:

“இட்ட பிற்றை ஞான்று, தேவர் குலம் வழிபடுவான் தேவர் கோட்டத்தை சாங்குந் துடைத்து, நீர் தெளித்துப், பூவிட்டுப் பீடத்தின் கீழ்ப் பண்டென்றும் அலகிடாதாள் அன்று தெய்வத் தவக் குறிப்பினான் அலகிடுவனென்று உள்ளங்குளிர அலகிட்டாள். இட்டாற்கு அவ்வலகினோடும் இதழ் போத்தன. போதரக் கொண்டு போந்து நோக்கினாற்கு வாய்ப்புடைத் தாயிற்றோர் பொருள திகாரமாய்க் காட்டிற்று. காட்டப் பார்ப்பான் சித்திப்பான்: அரசன் பொருளதிகாரம் இன்மையிற் கவல்கின்றானென்பது பட்டுச் செல்லா தின்ற துணர்ந்து நம்பெருமான் அருளிச் செய்தாலாகும் என்று தன் அகம்புகாதே கோயிற் றலைக்கடைச் சென்று நின்று கடைக் காப்பார்க்குணர்த்தக் கடைக்காப்பார் அரசர்க்குணர்த்த, அரசன் புகுதருகவென்று பார்ப்பானைக் கூவச் சென்று புக்குக் காட்டக் கொண்டு நோக்கி, இது பொருளதிகாரம்! நம்பெருமான் நமது இடுக்கண் கண்டு அருளிச் செய்தாளாகற்பாலது என்று, அத்திசை நோக்கித் தொழுது கொண்டு நின்று, சங்கத்தாரைக் கூவுவித்து நம்பெருமான் தமது இடுக்கண் கண்டு அருவிச்செய்த பொருளதிகாரம். இதனைக் கொண்டுபோய்ப் பொருள் காண்மின் என அவர்கள் அதனைக் கொண்டு போந்து கன்மாப்பலகை ஏறியிருந்தாராய்வுழி, எல்லாரும் தாந்தாம் உரைத்த உரையே நன்றென்று சில நாளெல்லாஞ் சென்றன. செல்ல நாம் இங்ஙனம் எத்துணையுரைப்பினும் ஒருதலைப்படாது. நாம் அரசலுழைச் சென்று நமக்கோர் காரணிகளைத் தரல் வேண்டும் என்று கொண்டு போந்து, அவனாற் பொருளெனப் பட்டது பொருளாய் அன்றெனப்பட்டது அன்றா யொழியக் காண்டுமென, எல்லாரும் ஒருப்பட்டு அரசலுழைச் சென்றார். செல்ல அரசனும் எதிர் எழுந்து சென்று, ‘என்னை? நூற்குப் பொருள் கண்டீரோ?’ என, ‘அது காணுமாறு மெக்கோர் காரணிகளைத் தரல் வேண்டும்’ எனப், 'போமின். துமக்கோர் காரணிகளை எங்ஙனம் நாடுவேன்? நீயிர் நாற்பத்தொன்பதின் மராயிற்று. நமக்கு நிகராவார் ஒருவர் இம்மையினின்றே' என்று அரசன் சொல்லப் போந்து பின்னையும் சுன்மாப்பலகை ஏறியிருந்து அரசனும் இது சொல்லினான் ‘யாங் காரணிகளைப் பெறுமாறு என்னைகொ’ வென்று சிந்தித் திருப்புழிச், சூத்திரஞ் செய்தான் ஆலவாயி லவிர்சடைக் கடவுளன்றே! அவளையே காரணிகளை யுந் தரல் வேண்டுமென்று சென்று வரங்கிடத்தும்' என்று சென்று வரங்கிடப்ப, இடையாமத்து, ‘இவ்வூர் உப்பூரிகுடி கிழார் மகனாவான் உருத்திரசன்மன் என்பான், பைங்கண்ணன் புன்மயிரான் ஜயாட்டைப் பிராயத்தான் ஒரு மூங்கைப் பிள்ளை உவன்; அவனை அன்னனென் றிகழாது கொண்டு போத்து ஆசனமேலிரீஇக் கீழிருந்து சூத்திரப் பொருளுரைத்தாற் கண்ணீர் வார்ந்து மெய்ம் மயிர் சிலிர்க்கும் மெய்யாயின உரை கேட்ட விடத்து; மெய்யல்லா உரைகேட்டவிடத்து வாளாஇருக்கும். அவன் குமார தெய்வம், அங்கோர் சாபத்தினாற் தோன்றினான்' என முக்காலிசைத்த குரல் எல்லார்க்கும் உடன் பாடாயிற்றாக, எழுந்திருந்து தேவர் குலத்தை வலங்கொண்டு போத்து, உப்பூரிகுடிகிழாருழைச் சங்கமெல்லாஞ் சென்று, இவ்வார்த்தை யெல்லாஞ் சொல்லி ஐயனாவான் உருத்திரசன்மனைத் தரல் வேண்டுமென்று வேண்டிக் கொடுபோத்து, வெளியதுடீஇ, வெண்பூச்சூட்டி, வெண்சாத்தணித்து, கன்மாப்பலகையேற்றி இரீஇக் கீழிருந்து சூத்திரப் பொருளுரைப்ப, எல்லாரும் முறையே உரைப்பக் கேட்டு வாளா இருந்து, மதுரை மருதனிளநாகனார் உரைத்த விடத்து ஒரே வழிக் கண்ணீர் வார்த்து மெய்ம்மயிர் நிறுத்திப் பின்னர்க் கணக்காயனார் மகனார் நக்கீரனார் உரைத்த விடத்துப் பதந்தோறுங் கண்ணீர் வார்த்து மெய்ம்மயிர் சிலிர்ப்ப இருந்தாள். இருப்ப, ஆர்ப்பெடுத்து மெய்யுரை பெற்றாம் இந்நூற்கென்றார்.

“அதனால் உப்பூரிகுடி கிழார் மகனாவான் உருத்திர சன்மனாவான் செய்தது இந்நூற்குரை யென்பாருமுளர்; அவர் செய்திலர், மெய்யுரை கேட்டாரென்க. மதுரை ஆலவாயிற் பெருமானடிகளாற் செய்யப்பட்ட நூற்கு நக்கீரனரால் உரைகண்டு. குமாரசுவாமியாற் கேட்கப்பட்ட தென்க.”[1]

இறையனார் அதன் உரையும் எழுதப்பட்ட வரலாற்றை அறிந்தோம். இனி இவைபற்றி ஆராய்வோம்.

முரண்பட்ட செய்திகள்

கடைச்சங்கத்தார்க்கு இலக்கண நூலாகத் தொல்காப்பியம் இருந்தது என்று உரைப்பாயிரம் கூறுகிறது. இன்னொரு இடத்தில் பொருளிலக்கணம் கிடைக்காமல் இடர்ப்பட்டனர் என்று கூறுகிறது. இது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. தொல்காப்பியப் பொருளதிகாரம் அக்காலத்தில் மறைந்து போயிற்றா? அப்படிக் கருதுவதற்கு இடமில்லை. ஏனென்றால் தொல்காப்பியம் பொருளதிகாரம் உட்பட முழுவதும் இப்போதும் இருக்கிறது. தொல்காப்பியப் பொருளதிகாரம் கிடைத்திருக்க ஆலவாயிற் கடவுள் அறுபது சூத்திரங்கள் அடங்கிய புதியதோர் அகப்பொருள் நூலை உண்டாக்கிக் கொடுத்த காரணம் என்ன?

ஒரு விளக்கம்

இந்த முரண்பாட்டுக்கு வினக்கங் கூறுவது போல உரைப்பாயிரம் இன்னொரு இடத்தில் இவ்வாறு கூறுகிறது: “அரசன் இனி நாடு நாடாயிற்றாகலின் நூல்வல்லாரைக் கொணர்கவென்று எல்லாப் பக்கமும் ஆட்போக்க, எழுத்ததிகாரமும் சொல்லதிகாரமும் வல்லாரைத் தலைப்பட்டுக் கொணர்ந்து பொருளதிகாரம் வல்லாரை எங்குந்தலைப் பட்டிலே மென்று வந்தார்,” என்று உரைப் பாயிரம் கூறுவதிலிருந்து தொல்காப்பியப் பொருளதிகாரம் கிடைத்திருந்தும் அதற்குப் பொருள் கூற வல்லார் கிடைக்கவில்லை என்பது தெரிகிறது. மீண்டும் ஓர் ஐயம்

தொல்காப்பியப் பொருளதிகாரத்துக்குப் பொருள் கூறவல்லார் கிடைக்காமற்போனார்கள் என்று உரைப்பாயிரம் கூறுவது வியப்பாக இருக்கிறது. இருக்கட்டும். பொருளதிகாரத்துக்கு உரை காணவல்லார் கிடைக்காமற்போனபோது ஆலவாயிற்கடவுள், பொருள்கூற வல்லவரை அளித்திருக்க வேண்டும் அல்லது தொல்காப்பியப் பொருளதிகாரத்துக்கு உரை எழுதிக் கொடுத்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாமல் அறுபது சூத்திரங்களைக் கொண்ட ஒரு புதிய நூலைக் களவியல் என்றும் பெயர் கொடுத்து ஆக்கித் தந்தார். இப்படிச் செய்ததேன்? தொல்காப்பியப் பொருளதிகாரச் சூத்திரங்கள் இருக்கும்போது, புதிய அகப்பொருள் சூத்திரங்களை எழுதித் தந்ததேன்?

இந்தப் புதிய அகப்பொருள் நூலுக்குச் சங்கப்புலவர் பொருள் கண்டார்களா என்றால் காணவில்லை. தங்களுக்கோர் காரணிகளைத் தரவேண்டும் என்று தவங்கிடந்து சிவபெருமானை வேண்டினார்கள். அவரும் ஒரு காரணிகளைக் காட்டினார். அந்தக் காரணிகளும் ஊமைப்பிள்ளை! இந்தக் காரணிகள், இந்தப் புதிய அகப்பொருளுக்கு நக்கீரர் உரைத்த உரைதான் உண்மையான உரை என்று மெய்ம்மயிர் சிலிர்த்துக் கண்ணீர் வடித்ததன் மூலம் மெய்யுரைக்குச் சான்று தந்தார்.

களவியல் சூத்திரங்களும் அகப்பொருள் சூத்திரங்களும்

மேற்கொண்டு ஆராய்ச்சியைச் செலுத்துவதற்கு முன்பு இறையனார் அகப்பொருள் (களவியல்) சூத்திரங்களைப் பற்றிக் காண்போம். இறையனார் புதிதாகச் செய்து கொடுத்த களவியல்ல அறுபது சூத்திரங்கள் முழுவதும் புதியவை அல்ல. அவர் தொல்காப்பியத்திலிருந்தும் சில சூத்திரங்களை எடுத்துத் தம்முடைய புதிய களவியலில் சேர்த்துக் கொண்டார். அவை: (1) தொல், வேற்றுமை 114. இறையனார் அகம் 59 (3)தொல், வேற்றுமை 174-இறையனார் அகம் 54 (3) தொல்கற்பியல் 187-இறையனார் அகம்43 (4) தொல். களவியல் 139- இறைனார் அகம் 18 (5) தொல். களவியல் 133 - இறையனார் அகம் 17 (6) தொல். களவியல் 27இறையனார் அகம்.7

தொல்காப்பிய அகப்பொருள் இருக்கும்போதே இறையனார் அகப்பொருளைப் புதிதாகச் செய்தார். ஏன்? தொல்காப்பிய அகப் பொருளுக்கும் இறையனார் அகப்பொருளுக்கும் வேறு பொருள்கள் உண்டா ? பழைய கருத்துகளுக்குப் பதிலாகப் புதிய கருத்துகள் கூறப்பட்டுள்ளனவா? ஒன்றும் இல்லை.

இறையனார் அகப்பொருளின் காலம்

இறையனார் அகப்பொருளின் உரையாசிரியர் அதனுடைய உரைப்பாயிரத்தில் இந்நூல் இயற்றப்பட்ட காலம் கடைச்சங்கக் காலம் என்று கூறுகிறார். "இனிக் காலமென்பது கடைச் சங்கத்தார் காலத்துச் செய்யப்பட்டது. இனிக் களமென்பது உக்கிரப் பெருவழுதியார் அவைக்களமென்பது. காரணமென்பது அக்காலத்துப் பாண்டியனாருஞ் சங்கத்தாரும் பொருளிலக்கணம் பெறாது இடர்ப்படுவாரைக்கண்டு ஆலவாயிற் பெருமானடிகளால் வெளியிடப்பட்டது, என்று பாயிரம் கூறுகிறது.

இங்கும் முரண்பாடு காணப்படுகிறது. கடைச்சங்கத்தார்க்குத் தொல்காப்பியம் இலக்கண நூலாக இருந்தது என்பதைக் கூறி, அத்தொல்காப்பியத்தில் பொருளதிகாரமும் இருந்தது என்று கூறிய பிறகு 'காரணம் என்பது அக்காலத்துப் பாண்டியனாரும் சங்கத்தாரும் பொருளிலக்கணம் பெறாது இடர்ப்படுவாரைக் கண்டு வெளியிடப்பட்டது' என்று கூறுவது முன்னுக்குப் பின் முரண்படுகிறது. பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கடைச்சங்க காலத்தின் இறுதியில் இருந்த பாண்டியன். அவன் ஏறத்தாழக் கி.பி. 200-ல் இருந்தவன், தொல்காப்பியம் முழுவதும் அகப்பொருள் இலக்கணம் உட்பட இன்றளவும் நின்று நிலவுகிறது. ஆனால், உரைப்பாயிர ஆசிரியர் முன்னுக்குப் பின் முரணாக, உக்கிரப்பெருவழுதியும் சங்கத்தாரும் பொருளிலக்கணம் பெறாது இடர்ப்பட்டனர் என்றும் அந்த இடர்ப்பாட்டை நீக்குவதற்கு இறையானர் களவியலை உண்டாக்கினார் என்றும் எழுதுகிறார். தொல்காப்பியப் பொருளதிகாரத்துக்குப் பொருள் காண வல்லார் கிடைத்திலர் என்று முன்பு கூறிய இவர், பிறகு 'பொருளதிகாரம், பெறாது இடர்ப்பட்டனர் என்று கூறுகிறார். இங்கும் முன்னுக்குப் பின் முரண்படுகிறார்.

முதல்நூல்

இறையனார் அகப்பொருள் முதல் நூலா வழி நூலா என்னும் கேள்வி எழுகிறது. தொல்காப்பியம் பொருளதிகாரம் இருக்கும் போதே இறையனார் இந்தக் களவியல் நூலைப் (அகப்பொருளை) புதியதாகப் பிற்காலத்தில் எழுதினார். இதனால் இது வழிநூல் எனப்படும் என்று கூறுவார்க்கு விடையாக உரைப்பாயிரம் எழுதியவர் இது முதல் நூல் என்று கூறுகிறார். "வழியென்பது இந்நூல் இன்னதன் வழித்து என்பது. இது வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவனாற் செய்யப்பட்டமையால் வழி நூலென்று சொல்லப் படாது, முதனூல் எனப்படுமென்பது.

இறைவனே செய்த நூலாகையினால், பிற்காலத்து வழி நூலானாலும், இது முதல் நூல் என்று கூறுகிறார். முதல் நூல் இருக்கும்போது வழிநூல் (அல்லது இன்னொரு முதல் நூல்) செய்யப்பட்ட காரணம் என்ன? தொல்காப்பியம் பொருளதிகாரத்துக்கு உரை கூறுவோர் இல்லாமற் போனார்கள் என்று ஓரிடத்திலும் அது {பொருளிலக்கணம்) கிடைக்காமற் போயிற்று என்று இன்னொரு இடத்திலும் எழுதுகிற உரைப்பாயிரம் இந்த இடத்தில் குழப்புகிறது.

தொல்காப்பிய அகப்பொருளும்
இறையனார் அகப்பொருளும்

தொல்காப்பியப் பொருளதிகாரத்தின் அகத்திணை இயல், களவியல், கற்பியல் ஆகிய மூன்று இயல்களும் உலகில் வாழ்கிற மாந்தரின் காதல் வாழ்க்கையைக் கூறுகின்றன; மாந்தருக்கும் கடவுளுக்கும் உள்ள தெய்வீகக் காதலைக் கூறவில்லை. இறையனார் அகப்பொருளும் மாந்தரின் உலகக் காதலைத்தான் கூறுகிறது. மாந்தருக்கும் தெய்வத்துக்கும் காதல் உண்டென்று இறையனார் அகப்பொருள் கூறவே இல்லை. ஆனால், அதனுடைய உரை மட்டும், மாந்தருக்கும் தேவருக்கும் உள்ள காதலைக் (பக்தியை) கூறுகிறது. உரை கூறுகிறதேயல்லாமல் நூல் கூறவில்லை. பழைய தொல்காப்பியம் மனிதக் காதலை மட்டும் கூறுகிறபடியால் அது பக்தி இயக்கத்தைச் சேர்ந்த பேரின்பக் காதலுக்கு ஓர் ஆதார நூலாகக் கொள்ளப்படவில்லை. பேரின்பக் காதலுக்கு ஆதார நூல் ஒன்று தேவைப்பட்டபடியால் இறையனார் அகப்பொருள் நூல் புதிதாக உண்டாக்கப்பட்டது. இந்த நூலை மக்கள் நம்பிக்கையோடு ஏற்றுக் கொள்வதற்காக இறைவனே இந்த நூலை இயற்றினார் என்று கதை கற்பிக்கப்பட்டது.

தமிழ்- அகப்பொருள்

தமிழ் என்னுஞ் சொல்லுக்குத் தமிழ் மொழி, இனிமை, அழகு என்னும் பொருள்கள் உண்டு. இச்சொல்லுக்கு அகப் பொருள் என்றும் இன்னொரு பொருளும் உண்டு. ஆனால் இக்காலத்தில் இந்தச் சொல்லும் பொருளும் மறைந்து போயின. பழங்காலத்தில் இந்தப் பொருளில் தமிழ் என்னும் சொல்லாட்சி இருந்தது. கடைச் சங்க காலத்தில் வாழ்ந்த கபிலர், ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் (அகப்பொருள்) கற்பிக்கக் குறிஞ்சிப் பாட்டைப் (பெருங்குறிஞ்சி) பாடினார். இச்செய்யுளின் அடிக்குறிப்பு ‘ஆரியவரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்குப் பாடியது’ என்று கூறுகிறது. இங்குத் தமிழ் என்பதன் பொருள் அகப்பொருள் என்பது.

பரிபாடல் 9-ம் பாடலைப் பாடிய குன்றம்பூதனார் இச்செய்யுளில் அகப்பொருளைத் தண்தமிழ் என்று கூறுகிறார்.[2] இதற்கு உரை எழுதிய பரிமேலழகர் ‘தமிழ்’ என்பதற்கு அகப்பொருள் என்று உரை எழுதியுள்ளார்.

சீவக சிந்தாமணி பதுமையார் இலம்பகம் 163-ம் செய்யுளில் அகப்பொருள் தெண்தமிழ் என்று கூறப்படுகிறது. இதற்கு நச்சினார்க்கினியார் எழுதிய உரை காண்க.

ஐந்திணை ஐம்பது என்னும் நூல் அகப்பொருளைச் செந்தமிழ் என்று கூறுகிறது. திணைமாலை நூற்றைம்பதின் பாயிரம் அகப் பொருளை இன்தமிழ் என்று கூறுகிறது. பாண்டிக் கோவை 25-ம் செய்யுள் அகப்பொருளைக் கொழுத்தமிழின் ஒண்துறை என்று கூறுகிறது. திருக்கோவையார் 20-ம் செய்யுள் அகப்பொருளைத் தீந்தமிழின்துறை என்று கூறுகிறது.[3]

இறையனார் அகப்பொருள் உரையும் அகப்பொருளைத் தமிழ் என்றும் கூறுகிறது. “இனி நுதலிய பொருள் என்பது நூற்பொருளைச் சொல்லுதலென்பது. இந்நூல் என்னுதலிற்றோவெனின் தமிழ் நுதலிய தென்பது” என்றும், “இனி நூனுதவியதூஉம் உரைக்கற்பாற்று. அது பாயிரத்துள்ளே உரைத்தாம்; தமிழ் நுதலிய தென்பது” என்றும் அகப்பொருள் உரை கூறுகிறது.

அகப்பொருளின் பயன்

இறையனார் அகப்பொருளைக் கற்பதனால் உண்டாகும் பயன் என்ன என்பதை இந்நூலின் உரை கூறுகிறது. “இனிப் பயன் என்பது இது கற்க இன்னது பயக்கும் என்பது......... என்பயக்குமோ இது கற்க வெனின் வீடுபேறு (மோட்சம்) பயக்கும் என்பது” என்றும், “இங்குப் பிறவுங் களவுண்மை சொல்லி அக்களவுகட் கெல்லாம் இக்களவு சிறப்புடைமை சொல்லும், துறக்கம் வீடு பேறுகளை முடிக்குமாகலான்” என்றும் உரை கூறுகிறது. அதாவது பக்திக் காதல் மறுமையில் வீடுபேற்றை அளிக்கிறது என்று உரை கூறுகிறது. இறையனார் அகப்பொருள் ஞான நூல் என்றும் கூறப்படுகிறது. “மதுரை ஆலவாயில் அழனிறக் கடவுள் சிந்திப்பாள்: என்னை பாவம்” அரசற்குக் கவற்சி பெரிதாயிற்று அதுதானும் ஞானத்திடையாகலான், யாம் அதனைத் தீர்க்கற் பாலம்” என்று கூறியது காண்க. இந்த உரையின் கருத்துப்படி, இறையனார் அகப்பொருள் நூலைக் கற்றால் ஞானமும் அதன் பயனாகிய வீடுபேறும் பெறலாம் என்பது தெரிகிறது.

இறையனார் களவியல் தோன்றியதேன்?

தொல்காப்பிய அகப்பொருள் இலக்கணம் இருக்கும் போது இறையனார் அகப்பொருள் (களவியல்) என்னும் பேரால் ஒரு புதிய அகப்பொருள் இலக்கணம் எழுதப்பட்டதேன்? பிற்காலத்தில், களப்பிரர் ஆட்சிக்காலத்தில் பக்தி இயக்கம் தோன்றியபோது அகப்பொருளுக்குப் பக்திக் காதல் என்ற புதிய பொருள் கற்பிக்கப்பட்டது. தொல்காப்பிய அகப்பொருள் உலகியம் காதலை மட்டும் கூறுகிறபடியால், அது புதிய பக்திக் காதல் கருத்துக்கு உரிய ஆதார நூலாகப் பயன்படவில்லை. ஆகவே பக்திக் காதலாகிய பேரின்பக் காதலுக்கு ஆதாரமான ஓர் இலக்கணநூல் தேவைப்பட்டது. இந்தத் தேவையை நிறைவு செய்ய இறையனார் அகப்பொருள் என்னும் களவியல் புதிதாக உண்டாக்கப்பட்டது. ஆனால் இறையனார் அகப்பொருள் சூத்திரங்கள் பக்திக் காதலைப்பற்றி ஒன்றுமே கூறவில்லை. ஆனால் அதனுடைய உரைமட்டும் பக்திக் காதலைப் பற்றி எழுதிக்கொண்டு போகிறது. இந்த உரையைக் கேட்டுத்தாள் உப்பூரிகுடி கிழான் மகன் உருத்திரசன்மன் மெய்ம்மயிர் சிலிர்த்துக் கண்ணீர் வடித்தார் என்று கூறப்படுகிறது. களவியல் உரை கூறுவதைப் பார்ப்போம்:

“அஃதேயெனின்.. அவ்வெட்டும் (எண்வகை மணமும்) உலகினுள்ளன; இஃது (இறையனார் அகப்பொருள்) அன்னதன்று. இல்லது இனியது நல்லதென்று புலவரால் நாட்டப்பட்டதோர் ஒழுக்கமாகலின், இதனை (இறையனார் அகப்பொருளை) உலகவழக்கிலோடு இயையானென்பது.”[4]

15-ம் சூத்திர உரையில் “எனவே, இவ்வாற்றாறும் உலகக் களவு (களவியல்) அன்று என்பது பெற்றாம்” என்றும், 31 வது சூத்திர உரையில் “இல்லதனையே இல்லை என்றார்; இவன் உலகத்துத் தலைமகன் அல்லன் புலவரால் நாட்டப்பட்ட தலைமகன் என்பதனை யாப்புறுத்தற்கு” என்றும் உரை கூறிச்செல்கிறது.

32-வது சூத்திர உரையில் “இவ்வாற்றானும் இஃது (இறையனார் களவியல்) உலகத்து இயல்பள்றென்பது பெற்றாம்.....மூப்புப்பிணி உள்வழிச் சாக்காடும் உண்மையாம் என்பது கடா. அதற்கு விடை எங்கனமோ வெனின், இருதிங்கட் புக இவளும் பன்னீராட்டைப் பிராயத்தனாய் இவனும் பதினாறாட்டைப் பிராயத்தனாய்ச் செல்வதல்லது, மற்றைய நிகழா; உலகத்தினோடு இத்துணை மாத்திரையே ஒத்து மற்றை விகற்பமெல்லாம் ஒவ்வாவெனக் கொள்க” என்றும், 39 வது சூத்திர உரையில், “இந்நூல் (களவியல்) உலகினோடு ஒத்தும் ஒவ்வாதும் நடக்கின்றதாகலின், உலகியல் தோக்கிச் சாதிவரையான் இழிந்தாரெனப்பட்டது” என்றும், 60- வது சூத்திர உரையில், “அஃது இவ்வுலகினும் இயற்கையான் நிலைபெறாது புலவரான் இல்லது இனியது நல்லதென தாட்டப்பட்டதோர் ஒழுக்கமென்பார் ‘கண்ணிய’ என்றார்” என்றும் களவியல் உரை கூறுகிறது.

இதனால், புதிதாக உண்டாக்கப்பட்ட களவியல், உலகியல் அல்லாத இல்லது இனியது நல்லது என்று புலவரால் புனைந்துரைக்கப்பட்ட காதலைக் கூறுகிறதென்பது தெரிகிறது.

சமண சமயமும் பௌத்த சமயமும் தமிழகத்தில் பெருகி வளர்ந்து சைவ வைணவ சமயங்கள் தாழ்ந்து குன்றியிருந்த களப்பிரர் ஆட்சிக் காலத்தில் (கி.பி.5-ம் 6-ம் நூற்றாண்டுகளில்) சைவரும் வைணவரும் தங்கள் சமயங்களை வளர்ப்பதற்காகப் புதிய பக்தி இயக்கத்தை உண்டாக்கினார்கள்ழ அதன் காரணமாக அகப்பொருளுக்குப் புதிய கருத்துக்களைக் கற்பித்தார்கள். கடவுளுக்கும் உயிர்களுக்கும் தலைவன் - தலைவி முறையைக் கற்பித்தார்கள். சிவபெருமானை அல்லது திருமாலைத் தலைவனாகவும் பக்தனாகிய உயிரைத் தலைவியாகவும் கற்பித்து நாயகன் நாயகி பாவத்தையமைத்தார்கள். இந்த முறையில் செய்யுள் பாடுவதற்கு இலக்கணச் சான்று உண்டா என்ற கேள்வி எழுந்திருக்க வேண்டும். இக்கேள்விக்கு விடையாக இறையனார் அகப்பொருள் என்னும் நூலைப் புதிதாக உண்டாக்கி அதற்குத் தெய்வத்தன்மை கற்பித்தார்கள் போலும். இந்த நூலில் பேரின்பக் காதலைப்பற்றி வெளிப்படையாகவோ மறை முகமாகவோ சான்றுகள் இல்லையானாலும் உரையாசிரியர்கள் உரையில் சான்று காட்டினார்கள். ஆனால் அந்த உரை ஏட்டில் எழுதப்படாமல் பத்துத் தலைமுறை வரையில் மந்திரம் போல மறைபொருளாகவே வைக்கப்பட்ட ஆசிரிய மாணவர் பரம்பரையாகச் செவி வழியாக வந்தது. இதற்குள்ளாகப் புலவர்கள் களவியல் துறையமைத்துப் பாடல்களை இயற்றினார்கள். களவியல் துறையமைந்த பக்தித் தோத்திரப் பாடல்கள் வெளிவந்து வழக்கத்தில் ஒன்றினபிறகு களவியல் நூலையும் அதன் உரையையும் எழுதினார்கள். அதாவது கி.பி. 8-ம் நூற்றாண்டில், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர் ஆகியோரின் தேவாரப்பாடல்கள் தோன்றிய பிறகுதான் இந்நூலையும் உரையையும் ஏட்டில் எழுதினார்கள்.

பத்தாவது தலைமுறையில் வந்த முசிறியாசிரியர் நீலகண்டனார் இறையனார் களவியலையும் அதன் உரையையும் ஏட்டில் எழுதி வெளியிட்டார். அந்த உரையின் இடையிடையே மாறவர்மன் பராங்குசன் என்னும் பாண்டியன்மேல் பாடப்பட்ட ‘பாண்டிக் கோவை’ செய்யுட்கள் (ஏறத்தாழ 350 செய்யுட்கள்) மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. மாறவர்மன் பராங்குசன் கி.பி.770-ல் பாண்டி நாட்டை யரசாண்டான். எனவே கி.பி. 8-ம் நூற்றாண்டில் இவன் இருந்தான் என்பது தெரிகிறது. இவனுக்கு முன் பத்துத் தலைமுறைக்கு முன்பு இறையனார் களவியல் உண்டாயிற்று என்று கூறப்படுவதால், தலை முறையொன்றுக்கு 30 ஆண்டுகள் என்று கணக்கிட்டால் 30 x 10 = 300 ஆண்டுகள் ஆகின்றன. எனவே கி.பி.8-ம் நூற்றாண்டுக்கு 30 ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.பி. 5-ம் நூற்றாண்டில் இறையனார் அகப்பொருளும் அதன் உரையும் எழுதப்பட்டன என்பது தெரிகிறது. கி.பி. 5-ம் நூற்றாண்டில் தமிழகத்தைக் களப்பிர அரசர்கள் அரசாண்டார்கள். களப்பிரர் ஆட்சிக் காலத்துக்கு முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு கி.பி.2-ம் நூற்றாண்டில் கடைச்சங்க காலத்தில் நக்கீரர் வாழ்ந்திருந்தார். அந்த நக்கீரர் இறையனார் களவியலுக்கு உரை கண்டிருக்க முடியாது. கி.பி. 2-ம் நூற்றாண்டில் இருந்தவர் கி.பி.3- ம் நூற்றாண்டில் எப்படி இருக்கமுடியும்? ஆனால் இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம் சங்ககாலத்து நக்கீரர் இந்நூலுக்கு உரை கண்டார் என்றும் அவ்வுரையைக் கேட்டவர் காரணிகள் உருத்திரசன்மன் என்றும் கூறுகிறது!

நக்கீரர், தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் காலத்தில் இருந்தவர். இந்த நெடுஞ்செழியன் காலத்துக்குப் பிறகு பாண்டியன் உக்கிரப் பெருவழுதி இருந்தான். இந்தப் பாண்டியன் அகநானூற்றைத் (நெடுந்தொகையை) தொகுப்பித்தான். தொகுத்தவர் உருத்திரசன்மன். இவர்கள் எல்லாரும் கி.பி.250 -க்கு முன்பு இருந்தவர்கள். நக்கீரர் உருத்திரசன்மனுக்கு முன்பு இருந்தவர். உருத்திரசன்மன், இறையனார் அகப்பொருளுக்கு உரை கேட்டார் என்றும் நக்கீரர் உரை கூறினார் என்றும் களவியல் உரைப்பாயிரம் கூறுவது வரலாற்றுக்குப் பொருந்தாது. உருத்திரசன்மருக்கு, முன்பே நக்கீரர் காலமாய் விட்டார். நக்கீரர், உருத்திரசன்மர், உக்கிரப் பெருவழுதி ஆகியோர் ஒரே காலத்தில் இருந்தவர்கள் என்று கொண்டாலும், கடைச்சங்க காலத்தில் இருந்த இவர்கள், களப்பிரர் காலத்தில், கி.பி.5- ம் நூற்றாண்டில் வெளிவந்த இறையனார் அகப்பொருளுக்கு எப்படி உரை கண்டிருக்க முடியும்? ஆகவே, உரைப்பாயிரம் கூறுகிற செய்திகள் நம்பத்தக்கனவல்ல. பக்தி இயக்கக் காலத்தில் இருந்த நக்கீரதேவநாயனாரைக் கடைச்சங்ககாலத்தில் இருந்த நக்கீரரோடு தவறாக இணைத்துக் கூறுகிறது உரைப்பாயிரம்.[5]

பக்தி இயக்கக் காலத்தில் கீரன் என்றும் நக்கீரதேவ நாயனார் என்றும் பெயர் கூறப்பட்ட ஒரு சிவபக்தர் இருந்தார். அவருடைய பாடல்கள் பதினோராம் திருமுறையில் தொகுக்கப்பட்டுள்ளன. இந்த நக்கீரனாரையும் இவருக்கு முன்பு சங்க காலத்தில் இருந்த நக்கீரனாரையும் பொருத்திக் கூறுகிறது இறையனார் அகப்பொருள் உரைப்பாயிரம். ஆனால் இது வரலாற்றுக்குப் பொருந்தாத கற்பனையாகும்.

✽✽✽

முடிவுரை

றையனார் அகப்பொருள் உரைப்பாயிரம் கூறுகிற முரண்பட்ட செய்திகள், விழிப்புடன் படிக்கிறவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துகின்றன என்பதைக் கண்டோம். இதன் காரணத்தை விளக்குவோம்.

களப்பிரர் காலத்துக்கு முன்பு, சங்ககாலத்தில் அகப்பொருள் புறப்பொருள் என்று இரண்டு கொள்கைகள் நாட்டிலும் ஏட்டிலும் இருந்தன. இவைப்பற்றிப் புலவர்கள் பாடிய செய்யுட்கள் தற்காலமாக இப்போதும் நமக்குக் கிடைத்திருக்கின்றன. இவற்றிக்கு இலக்கனமாக இருந்தது தொல்காப்பியம் (தொல். பொருளதிகாரம்- புறப்பொருளியல், அகப்பொருளியல்)

சங்ககாலத்துக்குப் பிறகு களப்பிரர் ஆட்சி ஏற்பட்ட பின்னர் முத்தமிழை ஆராய்வதற்காகப் பாண்டியர் அமைத்த தமிழ்ச் சங்கம் கலைந்து விட்டது. பௌத்த சைன சமயங்கள் களப்பிரர் காலத்தில், முன்னைவிடச் செல்வாக்கும் சிறப்பும் பெற்றுவளர்ந்தன. அப்போது புறப்பொருளைப் பற்றிய புதிய கருத்துச் செல்வாக்கடைந்தது. அதாவது போரில் புறப்பகைவரை வென்று வெற்றி பெறுவதை விட, அகப்பகையான மனமாசுகளையும் ஐம்புலன்களையும் அடக்கி பெருகின்ற வெற்றியே சிறந்த வெற்றியென்னும் சைன பௌத்த மதக்கொள்கை பரவிற்று (அகப்பகையை வென்று வீரராக விளங்கிய புத்த பெருமானுக்கும் அருகக்கடவுளுக்கும் ஜீனன் - வெற்றி கொண்டவன் என்று பெயர் உண்டு) புலன்களையும் மனத்தையும் அடக்கி அகப்பகையை வெல்லும் கொள்கை சைனருக்கும் பௌத்தருக்கும் புதியவையன்று இக்கொள்கை அவர்களுக்குப் பழமையானது. ஆனால், அந்தக் கொள்கை சங்ககாலத்தில் தமிழகத்தில் சிறப்புப் பெறவில்லை. புற வெற்றியே- போர்க்கள வெற்றியே பெரிதும் போற்றப்பட்டது.

களப்பிரர் ஆட்சிக் காலத்தில், சைன பௌத்த சமயங்கள் சிறப்பும் செல்வாக்கும் பெற்ற காலத்தில், அகப்பகையை வென்று வீரனாகும் சமயக்கொள்கை வலுப்பெற்றுப் பரவிற்று. இது புறப் பொருளுக்குப் புதிதாக ஏற்பட்ட புது மாற்றம் ஆகும். அந்தக் காலத்திலே சைவ-வைணவ சமயங்கள் சமயப் பிரசாரத்துக்காகப் பக்திக் கொள்கையைப் புத்தம் புதிதாக உண்டாக்கின. இக்கொள்கைக்கு ஆதரவாக அகப்பொருளில் புதிய கொள்கையைப் புகுத்தினார்கள். புறப்பகையை வென்று வெற்றி வீரனாகத் திகழ்வதைவிட அகப்பகையை வென்று வீரனாவதே சிறந்தது என்று சைனரும் பௌத்தரும் புறப்பொருளுக்குப் புதிய கருத்துக் கூறியது போல, சைவரும் வைணவரும் உலகியல் அகப்பொருள் பற்றிச் சிற்றின்பக் காதலைப் பாடுவதை விடக் கடவுளுக்கும் பக்தருக்கும் உள்ள தெய்வீகக் காதலைப் (பேரின்பக் காதலை) பாடுவது சிறந்தது என்று அகப்பொருளுக்குப் புதிய பொருள் கற்பித்தார்கள். அதாவது கடவுளைக் காதலனாகவும் (தலைமகனாகவும்] பக்தர்களைக் காதலியாகவும் (தலைவிகளாகவும்) கற்பித்துப் பாடுகிற பேரின்பப் பக்திப் பாடல்களைப் புதிதாகத் தோற்றுவித்தார்கள். இந்தப் பக்திக் காதலைச் சைனரும்- பௌத்தரும் ஏற்றுக்கொள்ளவில்லை. தெய்வத்துக்கும் மனிதருக்கும் காதல் உறவு கற்பிப்பது சரியன்று என்பது அவர்களது கொள்கை.

ஆனால், சைவ-வைணவர், சமணருக்கும் பௌத்தருக்கும் மாறுபாடான பக்திக் காதலை வற்புறுத்தி அகப்பொருள் துறையமைந்த பக்திப் பாடல்களைப் பரப்பினார்கள். தொடக்கக் காலத்தில் இந்தக் கொள்கை தமிழர்களால் ஏற்றக்கொள்ளப் படவில்லை என்று தோன்றுகிறது. பொதுமக்கள், முக்கியமாகப் புலவர்கள், தொல்காப்பிய இலக்கணம் கூறுகிற உலகியல் அகப்பொருளையே பின்பற்றினார்கள். ஆகவே, தெய்வீகக் காதலுக்கு இலக்கணச் சான்று பக்தி இயக்கத்தாருக்குத் தேவைப்பட்டது. ஆகவே, ‘இறையனார் அகப்பொருள்’ அல்லது ‘களவியல்’ என்னும் புதிய நூலை எழுதி அதை இலக்கணச் சான்றாகக் காட்டினார்கள். இதற்குத் தெய்வீகமும் பழமையும் கற்பிப்பதற்காகக் கதைகளைக் கற்பித்துக் கூறினார்கள்.

இது இறைவனால் (சிவபெருமானால்) உண்டாக்கப்பட்ட நூல் என்றும், தொல்காப்பியத்துக்குப் பின்னர் இயற்றப்பட்ட நூலானாலும் இது முதல்வனால் செய்யப்பட்டபடியால் ‘முதல் நூல்’ என்றும் இது பேரின்பக் காதலைக் கூறுகிறபடியால் ‘ஞானநூல்’ என்றும் கூறினார்கள். இதற்குப் பழமை கற்பிப்பதற்காக இந்த நூலுக்கு உரை கேட்ட காரணிகள், கடைச்சங்க காலத்தில் இருந்தவரும் அகநானூறு என்னும் அகப்பொருள் செய்யுட்களைத் தொகுத்தவரும் ஆன உருத்திரசன்மன் என்றும், இதற்கு ‘மெய்யுரை’ கண்டவர் சங்கப்புலவர் என்றும், ஆனால் சங்கப்புலவரான நக்கீரர் கூறிய உரையே இதற்கு ‘மெய்யான உரை’ என்றும் கற்பித்தார்கள். ஆனால் இந்த உரை உடனே ஏட்டில் எழுதப்படாமல், மந்திர உபதேசம் செய்வதுபோல, பரம்பரை பரம்பரையாகப் பத்துத் தலைமுறைவரையில் ஆசிரியர் மாணவர் வழியில் ஓதப்பெற்றது என்றும் பத்தாவது தலைமுறையில் முசிறியாசிரியர் நீலகண்டனாரால் இவ்வுரை ஏட்டில் எழுதப்பட்டது என்றும் கதைகள் கற்பிக்கப்பட்டன. இவ்வாறு, புதிய கருத்துக்கும் பழமையும் சிறப்பும் கற்பிப்பதற்காகவும் புதிய கொள்கைக்கு இலக்கணச்சான்று காட்டுவதற்காவும் இறையனார் அகப்பொருளும் அதுபற்றிய கதைகளும் கற்பிக்கப்பட்டன என்று தோன்றுகிறது. இவர்கள் புதிதாக உண்டாக்கிய பேரின்ப அகப்பொருள் கொள்கை நாட்டில் மான்றிப் பரவுவதற்கு ஒரு நூற்றாண்டு சென்றிருக்க வேண்டும். ஏனென்றால் கி.பி.7-ம் நூற்றாண்டில் தாள் அப்பர், சம்பந்தர் ஆகிய சைவ நாயன்மார்களும் ஆழ்வார்களும் அகப்பொருள் துறையமைந்த பக்திப் பாடல்களைப் பாடினார்கள் என்பதை அறிக்றோம். பக்தி இயக்கமும் பேரின்பமான அகப்பொருள் கொள்கையும் தோன்றிய பிறகே இத்தகைய பாடல்களைக் காண்கிறோம். இதற்கு முன்பு, கடவுளுக்கும் பக்தனுக்கும் உண்டான பேரின்பக் காதல் பற்றிய செய்யுள் ஒன்றேனும் கிடையாது. இது தமிழிலக்கிய வரலாற்றில் முக்கியமான செய்தியாகும்.


  1. இறையனாரகப் பொருள், முதற் சூத்திர உரைப்பாயிரம்
  2. பரிபாடல் 9: 25-25
  3. மயிலை சீனிவேங்கடசாமி, தமிழ் அகம். Journal al Tamil Studies, No-3, September 1973, bp.1-3.
  4. களவியல் முதலாம் சூத்திர உரை
  5. இணைப்பு 4 காண்க