களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/பக்தி இயக்கம்

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search

பக்தி இயக்கம்

சைவ சமயம் நாளுக்கு நாள் நலிவடைந்து குன்றிக் குறைத்து மங்கிவருவதைக் கண்ட சைவ சமயத்தார் விழிப்படைந்தனர். சைவ சமயத்தை வளர்த்து ஓங்கச் செய்வதற்கு முயன்றார்கள். நாட்டில் பொது மக்களின் ஆதரவு பெற வழிவகைகளைத் தேடினார்கள். தேடி நல்லதோர் கொள்கையைக் கண்டார்கள். அதுதான் பக்தி இயக்கம். செல்வாக்குப் பெற்று வளர்ந்து கொண்டிருந்த பௌத்த சமண சமயங்களை வீழ்த்தவும் சைவசமயத்தை ஓங்கச் செய்யவும் பக்தி இயக்கம் அரியதோர் சாதனமாக அமைந்தது. பக்தி இயக்கம் களப்பிரர் ஆட்சிக்காலத்தில் கி.பி.6-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் (வச்சிர தந்தியின் திராவிட ஜைனசங்கம் ஏற்பட்ட பிறகு) தோன்றியது. பக்தி இயக்கத்தில் வைணவரும் சேர்த்து தங்கள் வைணவ மதத்தை வளர்க்க முயன்றார்கள். பக்தியால் முக்தி எளிதாகும், பக்தியினால் இம்மை மறுமைப் பயன்களை எளிதில் பெறலாம் என்பதே பக்தி இயக்கத்தின் அறைகூவலாக இருந்தது. பக்தி இயக்கம் நாட்டு மக்களின் மனத்தைக் கவர்ந்தது. இந்த இயக்கம் நாளடைவில் பௌத்த சமணசமயங்களை வீழ்த்துவதற்கும் சைவ வைணவ மதங்களை வளர்ப்பதற்கும் ஏற்றதோர் கருவியாக அமைத்தது. அடுத்த நூற்றாண்டில் சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் தோன்றிப் பௌத்த சமணசமயங்களை அழிக்கவும் சைவ வைணவ மதங்களை வளர்க்கவும் பக்தி இயக்கம் காரணமாக இருந்தது. பக்தி இயக்கம் நாட்டில் மக்களிடையில் செல்வாக்குப் பெற்று சைவ வைணவ மதங்களின் வளர்ச்சிக்கும் பௌத்த சமண சமயங்களின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருந்தது. தெய்வ வழிபாட்டில் நாயகநாயகி பாவக் கொள்கை ஏற்படுவதற்கும் பக்தி இயக்கம் காரணமாக இருந்தது. அதாவது சிவனை நாயகனாகவும் (தலைவனாகவும்) அவனை வழிபடும் அடியார்களை நாயகிகளாகவும் (தலைவிகளாகவும்) பாவிக்கும் வழிபாட்டுமுறை ஏற்பட்டது. வைணவர்களும் நாயக நாயகி பாவத்தை ஏற்றுக்கொண்டனர்.

ஆனால், சைன சமயத்தவரும் பௌத்த மதத்தவரும் நாயக நாயகி பாவத்தை (பேரின்பக் காதலை) ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் இந்தக் கொள்கைக்கு மாறுபட்டிருந்தனர். சைவவைணவ பக்தர்கள் தங்கள் கடவுளை நாயகனாகவும் தங்களை நாயகியாகவும் பாவித்து அகத்துறையமைந்த பாடல்களைப் பாடியது போல சைன பௌத்த மதத்தினர் நாயக நாயகி பாவம் அமைந்த பாடல்களைப் பாடவே இல்லை. ஆகையால்தான் சைவ வைணவ சமய இலக்கியங்களில் காணப்படுகிற அகத்துறைப் பாடல்களைப் போன்ற பாடல்கள் சைன பௌத்தச் சமய இலக்கியங்களில் காணப்படவில்லை.

பக்தி இயக்கம் தோன்றுவதற்கு முன்புள்ள அகப்பொருள் இலக்கண இலக்கிய நூல்கள் மனிதக்காதலைக் கூறுகின்றனவே யல்லாமல் தெய்வ மனிதக்காதலைக் கூறவில்லை. சைன பௌத்த மதத்தவர் நாயகநாயகி பக்திக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாதது போலவே சைன பௌத்தரல்லாத ஏனைய தமிழர்களும் இந்தப்புதிய நாயக. நாயகிக் கொள்கையை ஏற்றுக் கொள்ளத் தயங்கினார்கள். ஆகையால் இந்தக் கொள்கைக்கு ஆதாரமான நூல் வேண்டியிருந்தது. அந்த ஆதாரநூல்தான் 'இறையனார் அகப்பொருள்' என்னும் களவியல் நூல், (இந்த இறையனார் அகப்பொருள் என்னும் களவியல் நூலைப் பற்றி இந்நூலில் இணைப்பு 3-ல் காண்க)

பக்தி இயக்கமும் பேரின்பக்காதல் (நாயக நாயகி பாவம்) கொள்கையும் சைன பௌத்த மதங்களை வீழ்த்திச் சைவ வைணவ மதங்களை வளர்ப்பதற்குப் பேருதவியாக இருந்தன. சைவ நாயன்மார்களும் வைணவ ஆழ்வார்களும் சைவ வைணவ மதங்களை ஓங்கி வளரச் செய்யவும் சைன - பௌத்த மதங்களைத் தாழ்த்தொஉம் செய்ததற்கு முதற்காரணமாக இருந்தது பக்தி இயக்கத்தான் என்பதில் சற்றும் ஐயமில்லை.