களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/சைவ சமயம்
சைவ சமயம்
களப்பிரர் ஆட்சிக் காலத்தில் தமிழ் நாட்டில் சைவ சமயம் குன்றிக் குறைந்திருந்தது என்பதை அறிகிறோம். களப்பிர அரசர்கள் சைவ சமயத்துக்கு மாறுபட்டவர் என்றும் சமண சமயத்துச் சார்புடையவர் என்றும் பொதுவாகக் கருதப்படுகின்றனர். ஒரு களப்பிர அரசன், பாண்டி நாட்டில் சிவன் கோயிலில் வழிபாடு நடைபெறாதபடிச் செய்தான் என்பதைப் பெரிய புராணம் மூர்த்தி நாயனார் புராணத்தில் அறிகிறோம் என்றாலும் சைவ சமயத்தைச் சார்ந்த கூற்றுவன் என்னும் களப்பிர அரசன் சிவன் கோயில்களுக்குச் சிறப்புச் செய்து வழிபட்டதைக் கூற்றுவ நாயனார் புராணத்தில் அறிகிறோம். ஏதோ ஒரு களப்பிர அரசன் சைவ சமயத்துக்கு மாறுபாடாக இருந்தான் என்பது பற்றி எல்லாக் களப்பிர அரசர்களும் சைவ சமயத்துக்கு மாறுபட்டவர் என்று கருதுவது கூடாது. களப்பிரர் ஆட்சிக்காலத்தில் சைவ சமயம் பொதுவாக மங்கி மறையும் நிலையில் இருந்ததற்குக் காரணம் பௌத்த சமண சமயங்களின் பிரசாரமே என்று கருதலாம். தத்தம் மதங்களைப் பிரசாரஞ் செய்து வளர்த்த சமண பௌத்தப் பிரசாரகர் தங்கள் மதங்களை உயர்த்திப்பேசி அதே சமயத்தில் சைவத்தைத் தாழ்த்திக் குறைத்துப் பேசிப் பிரசாரம் செய்தார்கள். இதனால் சைவ சமயம் செல்வாக்குப் பெறாமலும் உயர்வு அடையாமலும் குன்றிக் குறைவதாயிற்று. பௌத்த சமண சமயத்தாரைப் போலச் சைவ சமயத்தார் சைவ சமயத்தைப் பற்றிப் பிரசாரஞ் செய்யாததும் சைவ சமய வீழ்ச்சிக்கு இன்னொரு காரணமாகும்.
கி.மு. நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து சைவ சமயத்தைப் பௌத்தரும் சமணரும் தாக்கினார்கள் என்பது தெரிகிறது. அக்காலத்தில் இலங்கையை யரசாண்ட மகாசேனன் என்னும் சிங்கள அரசன், இலங்கையில் அக்காலத்தில் பேர்போன சிவன் கோயில்களை இடித்து அழித்து அந்த இடங்களில் பௌத்த விகாரைகளைக் கட்டினான். கோகள்ள (கோகர்ண) விகாரை, எரகாவில்ல விகாரை, கலந்த விகாரை, மிக்காம விகாரைகளைக் கட்டினாள் என்று மகாவம்சம் கூறுகிறது.[1] கோகர்ண விகாரை இலங்கையின் கிழக்குக் கரையோரமாக இருந்தது என்றும் மற்ற இரண்டு விகாரைகள் இலங்கையின் தென்கிழக்கே உரோகண நாட்டில் இருந்தன என்றும் இதனுடைய டீகை (உரை) கூறுகிறது. மற்றும் இந்த உரை இதனைக் கீழ் வருமாறு வினக்குகிறது. 'ஏவம் ஸப்பத்த லங்க தீபமிஹி குதிட்டகானம் ஆலயம் வித்தம்ஸேத்வர ஸிவலிங்காயதோ நாஸேத்வர புத்த ஸாஸனம் ஏவ பதிட்டபேஸி' இதன் பொருள் 'இலங்கைத் தீவெங்கும் ஆலயங்களை அழித்துச் சிவலிங்கம் முதலானவைகளை நாசஞ் செய்து புத்த சாசனத்தை நிறுவினான்' என்பது.
இதனால், அக்காலத்தில் மதப்பூசல்கள் இருந்தது தெரிகிறது.
- ↑ மகாவம்சம், 37-ம் பரிச்சேதம், 40 41