உள்ளடக்கத்துக்குச் செல்

களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/வைணவ சமயம்

விக்கிமூலம் இலிருந்து

வைணவ சமயம்

சைவ சமயத்தைப்போலவே வைணவ சமயமும் மிகப் பழமையானது. களப்பிர அரசர் வைணவ சமயத்தவர் என்பதை முன்னமே கூறினோம். திருமாலுக்கு அச்சுதன் என்னும் பெயரும் உண்டு. களப்பிர அரசர் தங்களை அச்சுத குலத்தவர் என்று கூறிக்கொண்டனர். அதாவது திருமாலின் வழிவந்தவர் என்பது பொருள். அவர்கள் திருமாலை (விஷ்ணுவை) வழிபட்டு திருமாலின் அருளினால் பெரிய இராச்சியத்தைப் பெற்றார்கள் என்பதை முன்னமே கூறினோம்.

இருளறு திகிரியொடு வலம்புரித் தடக்கை
ஒருவனை வேண்ட இருநிலம் கொடுத்த நந்திமால்வரை சிலம்பு நத்தி

என்று களப்பிர அரசர் கூறப்பட்டதைக் கூறினோம். திகிரி (சக்கரம்)யையும் வலம்புரியையும் (வலம்புரிச்சங்கு) கையில் ஏந்தியுள்ள திருமாலை வேண்ட அவர் இவனுக்குப் பெரிய நிலத்தைக் (இராச்சியத்தை) கொடுத்தார் என்பதை அதித்தோம். இதனால் களப்பிரர் அச்சுதனை (திருமாலை) வழிபட்டவர் என்பது தெரிகிறது.

களப்பிரர் சமண சமயச் சார்புடையவர் என்று வரலாற்றாசிரியர் பலரும் எழுதியுள்ளனர். அது தவறான கருத்து என்று தோன்றுகிறது. கன்னட நாட்டில் களபப்பு (சிரவணபௌகொள) என்னும் நாட்டைக் களப்பிரர் ஆதிகாலம் முதல் அரசாண்டவர் ஆனபடியாலும், களபப்பு நாட்டைச் சேர்ந்த சிரவண பௌகொளத்தில் பத்திரபாகு முனிவரும் சந்திர குப்த மௌரிய அரசரும் ஜைன முனிவர்களோடு வந்து தங்கின இடமாகையால் ஜைன மதச் சூழலில் நெடுங்காலம் இருந்த படியாலும் களப்பிரர் சமண சமயச் சார்பு கொண்டிருந்தனர் என்று கருதுவது தவறாகாது. ஆனால், அவர்களின் சொத்த சமயம் வைணவம் என்பது ஐயமில்லாமல் தெரிகிறது.

ஆனால், வைணவ மதம், பௌத்த சமண சமயங்களின் வளர்ச்சியினால் சிறப்புப் பெறாமல் தாழ்த்த நிலையை யடைத்திருந்தது என்பதை அறிகிறோம்.