களப்பிரர் ஆட்சியில் தமிழகம்/பௌத்த சமய வளர்ச்சி
பௌத்த சமய வளர்ச்சி
பௌத்தமதம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் அசோக சக்கரவர்த்தியின் ஆட்சிக்காலத்தில் தமிழகத்துக்கு வந்தது என்று கூறினோம்.[1] பௌத்தப் பிக்குகள் நாடெங்கும் பிரசாரஞ் செய்து பௌத்தமதத்தை வளர்த்தார்கள். ஆகவே பெளத்த மதம் பையப் பைய வளர்ந்து தமிழ்நாட்டில் சிறப்படைந்தது. களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பௌத்தம் தமிழ் நாட்டில் மேலும் பரவி வளர்த்தது. தமிழகத்துக்குப் பக்கத்தில் உள்ள இலங்கையிலும் பௌத்தமதம் பரவியிருந்தபடியால் அதன் காரணமாகவும் பௌத்தமதம் வலிவு பெற்றிருந்தது.
திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும் தங்களுடைய தேவாரப் பாடல்களில் பிண்டியர் போதியரையும் சாக்கியர் சமணரையும் கூறுகிறார்கள். (பிண்டியர் -சமணர், போதியர் - பௌத்தர், சாக்கியர்- பௌத்தர், சமணர் - ஜைனர்) தேவார காலத்துக்கு முன் (கி.பி.7-ம் நூற்றாண்டுக்கு முன்பு) களப்பிரர் காலத்தில் சமணசமயத்தைப் போலவே பௌத்தமதமும் செழித்திருந்தது. களப்பிரர் காலத்தில் இருந்த பௌத்தர்களின் ஊர்கள் சில தெரிகின்றன. காவிரிப் பூம்பட்டினம், உறையூர் (உரகபுரம்), பூதமங்கலம், சங்கமங்கை , நாகைப்பட்டினம், மயூரபட்டணம், மதுரை, பாண்டிநாட்டுத் தஞ்சை, காஞ்சிபுரம் முதலான ஊர்கள் பௌத்தமதம் வேரூன்றியிருந்த ஊர்களாகும்.
சாக்கிய நாயனார்
திருத்தொண்டர் புராணத்தில் (பெரிய புராணத்தில்) சாக்கிய தாயனார் புராணமும் ஒன்று. சாக்கிய நாயனார் பௌத்த மதத்தவர். (சாக்கியம் - பௌத்தம்) இவர் பழைய சிவனடியார்களில் ஒருவர். பௌத்தராக இருந்து கொண்டே சிவனை வழிபட்டவர். கி.பி.7-ம் நூற்றாண்டில் வாழ்த்திருந்த திருநாவுக்கரசருக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் இருந்தவர். சாக்கிய நாயனார், தொண்டை நாட்டில் சங்கமங்கை என்னும் ஊரில் பிறந்தார். பிறகு காஞ்சிபுரத்துக்குப் போய் அங்கு அக்காலத்தில் பேர்போன பௌத்த ஆசிரியர்களிடம் சென்று சமயக்கல்லி பயின்றார். வயது வந்த பிறகு துறவு பூண்ட இவர் ஆடையணிந்து பௌத்தப் பிக்கு ஆனார்.[2] சில காலஞ்சென்ற பிறகு சைவ சமயத்தை மேற்கொண்டார். சிவலிங்க வழிபாடலைச் செய்ய எண்ணினார். ஆனால், அக்காலத்தில் பௌத்த மதம் பலமாக இருந்த படியால், வெளிப்படையாகப் பௌத்த மதத்தை விட்டுச் சைவ சமயத்திற்கு வர இயலாமற்போயிற்று. சிவலிங்கப் பூசைசெய்த பிறகு உணவு கொள்ள வேண்டும் என்று அவர் உறுதி கொண்டார். இவர் அணிந்த பௌத்தத் தோற்றத்தை மாற்றாமலே ஒரு பொட்டலில் இருந்த சிவலிங்கத்தைச் சிறு கல்லால் எறிந்து, அக்கல்லை மலர் போலப் பாவித்துப் பூசை செய்தார். இவ்வாறு நாள்தோறும் தவறாமல் செய்து வந்தார். இச்செயலைக்கண்ட பௌத்தர் சிவலிங்கத்தைக் கல்லால் எறிகிறார் என்று எண்ணி மகிழ்ந்தனர். இதனால், அக்காலத்தில் பௌத்தமதம் ஆதிக்கம் பெற்றிருந்தது என்பதும், சைவசமயம் எளிய - நிலையில் இருந்ததென்பதும் தெரிகின்றன.
களப்பிரர் ஆட்சிக்காலத்தில் தமிழ் நாட்டில் பேர்போன பௌத்தர்கள் இருந்தார்கள். அவர்களுடைய முழுவரலாறு தெரியவில்லை . அங்குமிங்குமாகச் சில பௌத்தப் பெரியார்களுடைய வரலாறுகள் தெரிகின்றன.
சங்கமித்திரர்
இவர் சோழ நாட்டில் இருந்த தமிழ்ப் பௌத்தர். கி.பி.4-ம் நூற்றாண்டின் முற்பாதியில் இருந்தவர். மகாயான பௌத்த மதத்தைச் சேர்ந்த இவர் இலங்கைக்குக் சென்று தம்முடைய மகாயான பௌத்தக் கொள்கையை அங்குப் பிரசாரஞ்செய்தார். இவர் காலத்தில் இலங்கையில் கோதாபயன் (மேகவண்ணாபயன்) என்னும் அரசன் (கி.பி.302-315) அரசாண்டிருந்தான், அக்காலத்தில் இலங்கையில் தேரவாதப் பௌத்தம் (ஈனயானம்) நெடுங்காலமாக இருந்து வந்தது. அப்போது அநுராதபுரத்தில் அபயகிரி விகாரையில் இருந்த அறுபது பௌத்தப்பிக்குகள் வைதுல்ய மதத்தை (மகாயானபௌத்தத்தை) மேற்கொண்டனர். அதுகண்ட மகாவிகாரையில் இருந்த தேரவாத பௌத்தப்பிக்குகள் அரசனிடஞ்சென்று அபயகிரிலிகாரைப் பிக்குகள் மகாயான பௌத்தத்தை மேற்கொண்டதையும் பழைய தேரவாத பௌத்தத்தைத் கைவிட்டு விட்டதையும் கூறினார்கள். கோதாபய அரசன், மகாயான பௌத்தத்தைக் கைக்கொண்ட அறுபது பிக்குகளையும் நாடுகடத்திவிட்டான்.
நாடு கடத்தப்பட்ட பிக்குகள் சோழ நாட்டுக்கு வந்து சங்கமித்திரரைக் கண்டனர். சங்க மித்திரர், இலங்கைக்குப் போய்த் தம்முடைய மகாயான பௌத்தக் கொள்கையை நிலைநாட்ட உறுதி கொண்டார். அவர் இலங்கைக்குப் போய் தலைநகரமான அநுராதபுரத்தில் மகாயான பௌத்தத்தைப் போதித்தார். அப்போது தேரவாத பௌத்தப் பிக்குகள் இவரைப்பற்றி அரசனிடம் கூறினார்கள். அரசன் சங்கமித்திரரை அழைத்துத் தேரவாத பௌத்தரின் தலைவரான சங்கபாலருடன் சமயவாதம் செய்யும்படிக் கூறினான். சங்கபாலரும் சங்கமித்திரரும் அரச சபையில் வாதம் செய்தார்கள். வாதத்தில் மகாயான பௌத்தரான சங்கமித்திரர் வெற்றியடைந்தார். அரசன் இவருடைய ஆழ்ந்த புலமையையும் கல்வியையும் பாராட்டினான். தன்னுடைய பிள்ளைகனான ஜேட்டதிஸ்ஸன், மகாசேனன் என்பவர்கனை இவரிடம் கல்விகற்க மாணாக்கராகவிட்டான். இதனால், சங்கமித்திரரின் மகாயான பௌத்தம் இலங்கையில் பரவத் தொடங்கிற்று.
கோதாபயன் இறந்தபிறகு அவனுடைய மகனான ஜேட்ட திஸ்ஸன் முடி சூடி அரசாண்டான் (கி.பி. 323-333). அவன் காலத்தில் சங்கமித்திரர் சோழ நாட்டுக்கு வந்து விட்டார். ஜேட்டதிஸ்ஸனுக்குப் பிறகு அவனுடைய தம்பியான மகாசேனன் அரசனானான். (கி.பி.334-351) இந்த அரசன் காலத்தில் சங்கமித்திரர் சோழ நாட்டிலிருந்து இலங்கைக்குப் போய் மீண்டும் தம்முடைய மகாயான பௌத்த மதத்தைப் பிரசாரஞ்செய்து பரப்பினார். அரசனுடைய அமைச்சனான சோணன் என்பவுன் இவருக்கு உதவியாக இருந்தான். தேரவாத (ஈனயான) பௌத்தருக்கும் மகாயான பௌத்தருக்கும் சமயச் சார்பாகப் பகைமை முற்றிற்று. அதன் காரணமாக சங்கமித்திரர் கொல்லப்பட்டு இறந்தார்.[3]
புத்ததத்த மகாதேரர்
புத்ததத்த மகாதேரர் சோழநாட்டுத் தமிழர். பௌத்தமதத் துறவியாக வாழ்ந்தவர். பாலிமொழியில் எழுதப்பட்ட பௌத்த மத நூல்களையும் திரிபிடகங்களையும் நன்றாகக் கற்றவர். பாலி மொழியில் இனிமையாகக் கவி இயற்றும் ஆற்றல் பெற்றவர். கி.பி.5 ம் நூற்றாண்டின் முற்பாதியில் வாழ்த்திருந்தார். தேரர் என்பது பெனத்தப்பிக்குகளில் சிறந்தவருக்கு வழங்கும் பெயர். ஆசாரியர் என்றும் தேரர் என்றும் இவர் சிறப்புப் பெயர் பெற்று ஆசாரிய புத்ததத்ததேரர் என்று பெயர் கொண்டிருந்ததிலேயே இவருடைய சிறப்பும் உயர்வும் நன்கு தெரிகிறது. இலங்கையையாண்ட சிறிகுட்டன் (கி.பி.409 430) காலத்தில் இவர் இலங்கைக்குச் சென்று அநுராதபுரத்திலிருந்த மகாவிகாரை என்னும் பௌத்த விகாரையில் தங்கியிருந்தார். சிறிகுட்ட அரசனுக்கு மகாதாமன், ஸ்ரீநிவாகன் என்னும் பெயர்களும் இருந்தன.
புத்ததத்த மகாதேரர் கவீரபட்டினம் (காவிரிப்பூம்பட்டினம்) உரகபுரம் (உறையூர்) பூதமங்கலம், காஞ்சிபுரம் முதலான ஊர்களில் இருந்த பௌத்த விகாரைகளில் தங்கியிருந்தார். அநுராதபுரத்து மகாவிகாரையில் இருந்த போது அந்த விகாரையின் தலைவரான சங்கபால மகாதேரரின் வேண்டுகோளின்படி இவர் உத்தரவினிச்சயம் என்னும் நூலை எழுதினார். காவிரிப்பூம்பட்டினத்தில் களப்பிர அரசனுடைய அமைச்சனாக இருந்த கண்ணதாசன் கட்டின பௌத்த விகாரையில் இவர் தங்கியிருந்தபோது தம்முடைய மாணவரான புத்தசிகா என்பவரின் வேண்டுகோளின்படி இவர் மதுராந்த விலாசினி என்னும் நூலை எழுதினார். இது திரிபிடகத்தில் ஒன்றான சூத்திரபிடகத்தில் குட்டக நிகாயம் என்றும் பிரிவில் புத்தவம்சம் என்னும் உட்பிரிவுக்கு உரையாகும். ஆகையால் இந்த நூலுக்கு புத்தவம்சாட்டகதா (புத்தவம்சத்தின் அர்த்த கதை) என்றும் பெயர் உண்டு. இவர் தம்முடைய சீடரான புத்தசிகா என்பவரின் வேண்டுகோளின்படி விளயவிளிச்சயம் என்னும் நூலை எழுதினார். சோழ நாட்டில் பூதமங்கலம் என்னும் ஊரில் வேணு தாசர் என்பவர் கட்டிய பௌத்த விகாரையில் தங்கியிருந்த போது இவர் இந்த நூலை எழுதினார். இந்த நூல், களப்பிர அரசன் அச்சுத விக்கந்தன் ஆட்சிக் காலத்தில் எழுதப்பட்டது.[4]
புத்ததத்த மகாதேரர் தம்முடைய இன்னொரு மாணவரான சுமதி என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்கி அபிதம்மாவதாரம் என்னும் நூலையும் எழுதினார். இது, திரிபிடகங்களில் ஒன்றான அபிதம்ம பிடகத்துக்குப் பாயிரம் போன்றது. ரூபா ரூப விபாகம் என்னும் நூலையும் இவர் எழுதியுள்ளார். புத்த பெருமானைப் பற்றி ஜினாலங்காரம் என்னும் நூலையும் இவர் எழுதியதாகக் கூறுவர். இவர் எழுதிய இந்த நூல்கள் எல்லாம் பாலிமொழியில் எழுதப்பட்டவை. புத்ததத்த மகாதேரரும் புகழ்பெற்ற புத்தகோஷ மகாசாரியரும் சம காலத்தவர். இவர்கள் இருவரும் ஒருவரை யொருவர் சந்தித்துள்ளனர்.[5]
சுமதி, ஜோதிபாலர்
இவர்கள் இருவரும் தமிழப் பௌத்தப் பெரியார்கள். புத்ததத்த மகாதேரர் வாழ்ந்த கி.பி 5-ம் நூற்றாண்டில் இருந்தவர்கள். காஞ்சிபுரத்தில் ஒரு பௌத்த விகாரையில் இவர்கள் இருந்தனர். புத்தகோஷ ஆசாரியர் காஞ்சிபுரத்துக்கு வந்து இவர்கள் இருந்த விகாரையில் தங்கியிருந்தார். இவர்களின் விருப்பப்படி புத்த கோஷாசாரியர் ஸாரத்த பகாசினீ, மனோரத பூரணி என்னும் இரண்டு பௌத்தமத நூல்களைப் பாலி மொழியில் எழுதினார். சுமதியும் ஜோதிபாலரும் புத்தகோஷரை இலங்கைக்குப் போய் அநுராதபுரத்து மகாவிகாரையில் இருந்த பௌத்த மத நூல்களை ஆராயும்படி தூண்டினார்கள். அப்படியே அவர் அங்குப் போய்ப் பௌத்த மத நூல்களை எழுதினார். இந்தச் செய்தியை அவர் எழுதிய மனோரத பூரணீ என்னும் நூலில்,
ஆயாசிதோ ஸூமேதினாதேரேன பத்தந்த ஜோதிபாலேன
காஞ்சீபுரா திஸூ மயா புப்பே ஸத்திம் வலம்தேன
என்று கூறியுள்ளார்.[6]
புத்தமித்திரர்
புத்தமித்திரர் என்று பெயர் பெற்ற பௌத்த தேரர்கள் சிலர் இருந்தனர். அவர்களில் வீரசோழியம் என்னும் இலக்கண நூலை எழுதிய புத்தமித்திரர் களப்பிரர் காலத்தவர் அல்லர். பிற்காலத்தில் இருந்தவர். இங்குக் கூறப்படுகிற புத்தமித்திரர் மயூரப்பட்டணத்தில் ஒரு பௌத்த விகாரையில் இருந்தவர். மயூரப்பட்டணம் என்பது இப்போது 'மாயவரம்' என்று கூறப்படுகிற மாயூரமாக இருக்கலாம். புத்தகோஷாசாரியர் மயூர பட்டணத்துப் பௌத்த விகாரைக்கு வந்து தங்கியிருந்தபோது இந்தப் புத்த மித்தரரின் விருப்பப்படி 'பஞ்ச சூடானி' என்னும் நூலைப் பாலி மொழியில் எழுதினார். இந்த நூல் திரிபிடகத்தின் ஒரு பகுதியாகிய மஜ்ஜிம நிகாயத்துக்கு உரைநூல் ஆகும்.
ஆசாரிய திக்நாகர் இவரைத் தின்னாகர் என்றுங்கூறுவர். காஞ்சிபுரத்துக்குத் தெற்கே இருந்த சிம்மவக்தரம் என்னும் ஊரில் இவர் பிறந்தார். சிம்மவக்தரம் என்பது சீயமங்கலம் என்றும் ஊராக இருக்கலாம் என்று தோன்றுகிறது. (சிம்மம் - சிங்கம் - சீயம்) சீயமங்கலம் செங்கற்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் தாலுகாவில் உள்ளது. இவ்வூரில் பிராமண குலத்தில் பிறந்தவராகிய இவர் வைதிக நூல்களைக் கற்றுப் பிறகு காஞ்சிபுரத்தில் பௌத்த நூல்களைக் சுற்றுப் பௌத்தப் பிக்கு ஆனார். பிறகு வடஇந்தியாவுக்குப் போய் அங்குப் பேர் போன வசுபந்து என்னும் பௌத்த ஆசிரியரிடத்தில் மகாயான பௌத்த நூல்களைக்கற்றுத் தேர்ந்தார். பின்னர் நளாந்தா பல்கலைக் கழகத்துக்குச் சென்று பல நாள் தங்கி அங்குப் பல நூல்களைக் கற்றார். இவருடைய மாணவர்களில் காஞ்சிபுரத்திலிருந்த தருமபால ஆசாரியரும் ஒருவர்.
ஆசாரிய திக்தாகர் தர்க்க நூல்களை தன்கு கற்றவர். நியாயப் பிரவேசம், நியாயத்துவாரம் என்னும் இரண்டு தர்க்க நூல்களை இவர் வடமொழியில் எழுதினார். இவர், பௌத்த மதத்தில் விஞ்ஞானவாதப் பிரிவை உண்டாக்கினார் என்பர். வசுபந்து கி.பி.420 முதல் 500 வரையில் வாழ்ந்திருந்தார் என்று கூறப்படுகிறபடியால் அவரிடம் பயின்ற இவரும் கி.பி.5-ம் நூற்றாண்டில் வாழ்ந்தவராதல் வேண்டும். இவர், பற்பல நாடுகளுக்குச் சென்று பலரோடு தர்க்கவாதம் செய்து மீண்டும் காஞ்சிபுரத்துக்கு வந்தார் என்பர். காஞ்சிபுரத்துக்கு வருவதற்கு முன்பே ஒருயா நாட்டில் காலமானார் என்று சிலர் கூறுவர்.[7]
போதிதருமர்
இவர் காஞ்சிபுரத்தை யரசாண்ட ஓர் அரசனுடைய மகன். இவர் பௌத்தமதத்தைச் சேர்ந்த பௌத்தப்பிக்கு ஆனார்; பௌத்த மதத்தில் தியானமார்க்கம் என்னும் பிரிவைச் சேர்ந்தவர். கி.பி.520-ல் இவர் சீனநாட்டுக் காட்டன் பட்டினம் போய்ச் சேர்ந்தார். கி.பி.525-ல் சீனதேசத்துக்குப் போனார் என்று சிலர் கூறுவர். சீன நாட்டிலும் ஐப்பான் தேசத்திலும் இவர் தம்முடைய பெனத்தக் கொள்கையைப் பரப்பினார். இவர் போதித்த பௌத்தக் கொள்கையைச் சீனர் சா'ன் மதம் என்பர் ஜப்பானியர் ஜென்மதம் என்பர், போதிதருமரைச் சீனர் தமக்குரிய இருபத்தெட்டுச் சமய குரவர்களில் ஒருவராகப் போற்றுகிறார்கள். ஜப்பான் தேசத்திலும் சீனதேசத்திலும் இவருடைய நினைவாகக் கோயில்கள் உண்டு.[8]
காஞ்சி தருமபால ஆசாரியர்
இவர் காஞ்சிபுரத்தில் பிறந்து வாழ்ந்தவர். காஞ்சிபுரத்து அரசனுடைய அமைச்சராக இருந்த ஒருவரின் மகன். பெற்றோர் இவருக்குக் திருமணஞ்செய்யத் தொடங்கினபோது இவர் திருமணத்துக்கு உடன்படாமல் பௌத்த மதத்தைச் சேர்த்து பௌத்தத் துறவியானார். பல நாடுகளுக்குச் சென்று தம்முடைய கல்வியை வளர்த்துக் கொண்டார். திக்நாகரிடத்திலும் இவர் சமயக் கல்வி பயின்றார். வடநாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்தபோது கௌசாம்பி நகரத்தில் பௌத்தருக்கும் வேறு மதத்தாருக்கும் சமயவாதம் நடந்தபோது பௌத்தர் எதிர்வாதம் செய்ய முடியாத நிலையில் இருந்ததைக் கண்டு இவர் தனித்து நின்று எதிர்வாதம் செய்து வெற்றி பெற்றார். எதிர்வாதம் செய்தவர்களையும் தலைமை தாங்கிய அராசனையும் பௌத்தமதத்தை மேற்கொள்ளச் செய்தார். இவர் மகாயான பௌத்த மதத்தைச் சேர்ந்தவர். ஈனயான பௌத்தரோடு ஏழுநாட்கள் சமயவாதஞ் செய்து அவர்களை வென்று தம்முடைய மகாயான பௌத்தக் கொள்கையை நிலை நாட்டினார்.
தருமபால ஆசாரியர் பல நூல்களைக் கற்றுத் தேர்ந்து பேராசிரியராக விளங்கின படியால், அக்காலத்தில் புகழ் பெற்றிருந்த நாளாந்தாப் பல்கலைக்கழகத்தின் தலைமைப் பேராசிரியராக இவர் நியமிக்கப்பட்டார். இந்தப் பதவி எளிதில் வாய்ப்பது அன்று. துறைபோகக் கற்ற பேரறிஞர்கட்கே இந்தப் பதவி கிடைக்கும். இவர் இளமையிலேயே காலமானார் என்பர். கி.பி.528 முதல் 560 வரையில் இவர் உயிர்வாழ்ந்திருந்தார் என்று தெரிகிறது. இவருக்குப் பிறகு இவருடைய மாணாக்கரான சீல பத்திரர் நாளந்தாப் பல்கலைக் கழகத்தின் தலைவரானார்.[9]
தஞ்சை தருமபால ஆசாரியர்
இவர் பாண்டி நாட்டுத் தஞ்சாவூரில் இருந்தவர். தம்பரட்டே வசந்தேன நகரே தஞ்சா நாமகே' என்று கூறப்படுகிறபடியால், தம்பராட்டிரமான தாம்பிரபரணி பாய்கிற திருநெல்வேலியில் இருந்த தஞ்சை நகரத்தைச் சேர்ந்தவர் என்று தெரிகிறார். சோழ நாட்டுத் தஞ்சாவூரில் இவர் இருந்தார் என்று திரு.பி. ஸி.லா அவர்கள் கருதுவது தவறு.[10] தருமபால ஆசாரியர் பாலி மொழியிலுள்ள பௌத்தமத நூல்களை நன்குக் கற்றவர். தமிழ் சிங்களம் பாலி மொழிகளை நன்றாகக் கற்றவர், பௌத்த உரையாசிரியர்களில் சிறந்தவர். இலங்கையின் அநுராதபுரத்தில் இருந்த மகாவிகாரை என்னும் பௌத்தப் பள்ளிக்குப் போய் அங்குத் திரிபிடகங்களுக்குச் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்த உரைநூல்களைப் பயின்றார். பிறகு தமிழ்நாட்டுப் பௌத்தப் பள்ளிகளில் இருந்த பிடகநூல்களின் திராவிட (தமிழ்) உரைநூல்களைப் பயின்றார்.
சூத்திரபிடகத்தின் ஐந்தாவது பிரிவாகிய குட்டக நிகாயத்தைச் சேர்ந்த உதான, இதிவுக்தக, விமானவத்து, பேதவத்து, தேரகாதா, தேரிகாதா, சரியாபிடகம் என்னும் பகுதிகளுக்கு தரும் பால ஆசாரியர் பாலி மொழியில் சிறந்த உரை எழுதினார். இவர் எழுதின உரைக்குப் 'பரமார்த்த தீபனீ' என்று பெயர். மற்றும் பரமார்த்த மஞ்சுஸா, நெட்டிப கரணாட்டகதா என்னும் நூல்களையும் இவர் எழுதினார். 'இதிவுத்தோதான சரியாபிடக தேர தேர் விமானவத்து பேதவத்து நெட்டியட்டகதாயோ ஆசாரிய தம்மபால தேரோ அகாஸீ ஸோ ச ஆசாரிய தம்ம பால தேரோ ஸீஹௗ தீபஸ்ஸ ஸமீபே தமிள நாட்டே படராதித்தமிஹி நிவாஸித்தா ஸீஹௗதீபே ஏவ ஸங்கஹேத்வா வத்தபோ' என்று சாசனலம்சம் என்னும் நூல் இவரைப் பற்றிக் கூறுகிறது. இதன் கருத்து ஆசாரிய தம்ம பாலதேரர் சிங்களத் (இலங்கை ) தீவுக்கு அருகில் உள்ள தமிழ் நாட்டில் படராதித்த விகாரையில் இருந்தபோது இதிவுத்தகம், உதானம், சரியாபிடகம், தேரசாதா, தேரிசாதா, விமானவத்து, பேதவத்து, நெட்டியட்டகதா என்னும் உரை நூல்களை எழுதினார். இந்த ஆசாரியதம்ம பாலிதேரர் சிங்களத்தீவுக்கு அருகில் உள்ள தமிழ்தேசத்தில் படராதித்த விகாரையில் இருந்தபோது இவற்றை எழுதினார்' என்பது. இவர் கி.பி.6-ம் நூற்றாண்டின் முற்பாதியில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இருந்தவர் எனத் தெரிகிறது.
களப்பிரர் ஆட்சிக்காலத்தில், பௌத்தமதம் சமண சமயத்தைப் போலவே நாட்டில் பரவி வளர்த்திருந்தது. பௌத்த மத நூல்கள் பிற்காலத்தில் அழித்து போனபடியால் பௌத்த மதத்தின் முழு வரலாற்றையறிய முடியவில்லை.
முரண்பட்ட மூன்று மதங்கள்
கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே சமண சமயமும் பௌத்த மதமும் வடநாட்டிலிருந்து தென்னாட்டுக்கு வந்தன என்பதையறிவோம். அந்தக் காலத்திலேயே இன்னொரு மதமும் தமிழ் நாட்டுக்கு வந்தது. அது வடமொழி வேதத்தை முதன்மையாகக் கொண்டமதம். இருக்கு யஜுர் சாமம் அதர்வனம் என்னும் நான்கு வேதங்களை அடிப்படையாகக் கொண்ட வைதிகமதம் அக்காலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்தது. வைதிகமதத்தைப் பிராமணர் போற்றினார்கள். வேள்வி (யாகம்) செய்வதையே முதன்மையாகக் கொண்டது வைதிகமதம். பிராமணர் மிகச்சிறு தொகையினர். அன்றியும் சாதி வேறுபாட்டை அடிப்படையாகக் கொண்ட குறுகிய நோக்க முடையது. பிராமணரைத் தவிர வேறு சாதியர் வேதம் ஓதுவது கூடாது, பிராமணர்தான் உயர்ந்தசாதி, இவ்வாறு குறுகிய சிறிய கொள்கையுடைய வைதிகபிராமணர் மதம் நாட்டில் செல்வாக்கடையாமல் - மக்களிடையே பரவாமல் மூலையில் முடங்கிக் கிடந்தது.
ஜைனமதமும் பௌத்த மதமும் தத்தம் மதக்கொள்கையை நாடெங்கும் பிரசாரஞ் செய்து மக்களைத் தங்கள் மதத்தில் சேரும்படி அழைத்தன. தங்கள் மதக்கொள்கைகளை நாடெங்கும் பரப்பின. எந்தச் சாதியரானாலும் இந்த மதங்களைச் சேர்த்து ஒழுகினால் அவர்களைச் சிறப்புச் செய்து போற்றின. சமய நூல்களை நன்கு கற்று அதன்படி ஒழுகுகிறவர்களை சமய காரியர்களாக உயர்த்தி வைத்தன. ஆகவே பௌத்த மதமும் சமண சமயமும் நாட்டில் செல்வாக்குப் பெற்றுப்பரவிவளர்ந்தன. வைதிக மதமாகிய பிராமணமதமோ வேதத்தைப் பிறருக்குப் போதிக்கவில்லை. பிறர் வேதத்தைப் படிக்கவும் விடவில்லை. பிராமணப்பதவி என்னும் பதவியை அமைக்காமல் பிராமணப் பிறப்பு என்று ஜாதிக்கு ஏற்றம் தந்தது. ஆகவே வைதிகப் பிராமணமதம் தாழ்ந்து மங்கி மூலையில் கிடந்தது.
பௌத்தம் சமணம் வைதிகம் என்னும் இந்த மூன்று மதங்கள் ஆதிகாலம் முதல் பிறவிப்பகைமையுடைய மதங்கள். பிராமணர் பௌத்த சமண சமயங்களைப் பகைத்து வெறுத்து விஷம் போலக் கருதினார்கள். பிராமணர் பௌத்த சமண சமயங்களைத் தாக்கிப் பிரசாரஞ் செய்தார்கள். அது போலவே பௌத்தமதம் வைதிகமதத்தையும் சமணமதத்தையும் கண்டித்து ஒதுக்கியது. வைதிகம் சமணசமயக் கொள்கைகளைத்தாக்கிக் கண்டித்தது. சமண சமயமும் வைதிகமதத்தையும் பௌத்த மதத்தையும் பகைத்து அந்த மதக்கொள்கைகளை வெறுத்துப் பிரசாரஞ்செய்தது. இவ்வாறு வைதிகமதம் சமண சமயம் பௌத்தமதம் ஆகிய மூன்று மதங்களும் ஒன்றையொன்று பகைத்துக் கண்டித்து முரண்பட்டு இருந்தன. வட நாட்டிலும் சரி தென்னாட்டிலும் சரி இந்த மூன்று மதங்களும் ஒன்றை யொன்று வெறுத்துப் பகைத்து வந்தன. களப்பிரர் ஆட்சிக்காலத்திலும் இந்த நிலைமதான் இருந்தது. பௌத்தமும் சமணமும் விரிந்து பரந்த கருத்துள்ள மதங்களாகையால் நாட்டில் செழித்து வளர்த்தன. வைதிக மதமான பிராமணமதம் குறுகிய கொள்கையும் சுருங்கிய கருத்தும் கொண்டிருந்தபடியால் நாட்டில் செல்வாக்குப் பெறாமலும் வளர்ச்சியடையாமலும் முடங்கிக் கிடந்தது.
- ↑ மயிலை சீனிவேங்கடசாமி, பௌத்தமும் தமிழும்.
- ↑ சாக்கியநாயனர் புராணம் 3, 3, 4
- ↑ மகாவம்சம், 37-பரிச்சேதம் 36
- ↑ பௌத்தமும் தமிழும் என்னும் நூலைக்காண்க,
- ↑ Ibid
- ↑ Ibid
- ↑ பொத்தமும் தமிழும் என்னும் நூலின் தமிழ் நாட்டுப் பொத்தப் பெரியார் என்றும் தலைப்புக் காண்க
- ↑ Ibid
- ↑ Ibid
- ↑ B.C.Law, Geography of Early Buddhism.